கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியில் தாயைப் பிரிந்து பசியில் வாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை பரிவுடன் பாதுகாத்து, பாலூட்டிக்கொண்டிருக்கிறது ஒரு தாய்க்குரங்கு

இன்பாக்ஸ்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று ‘ஜெயிலர்' படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் தீர்மானித்திருக்கிறார்கள். எனவே அசுரவேகத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடந்துவருகிறது. பிப்ரவரிக்குள் ரஜினி படத்தை முடித்துக் கொடுத்துவிடுவார் என்கிறார்கள். சென்னையில் தினம் ஒரு லொகேஷனில் படப்பிடிப்பு போய் க்கொண்டிருந்தாலும்கூட இயக்குநர் நெல்சனின் வேகத்தைக் கண்டு ரஜினியும், சிவராஜ்குமாருமே ஆச்சரியப் பட்டிகிறார்களாம். திரை தீப்பிடிக்கும்!

விஜய்யின் ‘வாரிசு' படத்தின் இசை வெளியீடு டிசம்பர் கடைசியில் சென்னையில் நடக்கிறது. விஜய் உட்பட படத்தின் நட்சத்திரங்கள் அத்தனை பேரும் அதில் ஆஜராகவிருக்கிறார்கள். தயாரிப்பாளர் தில்ராஜுக்கு நெருக்கமான டோலிவுட் திரைப் பிரபலங்களையும் விழாவிற்கு அழைக்கும் ஐடியாவில் இருக்கிறார்கள். விழாவில் விஜய், சில விஷயங்களை மனம்திறந்து பேசவுள்ளதாகவும் சொல்கிறார்கள். சென்டிமென்ட் கலந்த குட்டிக்கதையா?

இன்பாக்ஸ்

ஷங்கர் இப்போது ராம்சரணை வைத்து இயக்கும் படமும், கமலோடு இணைந்திருக்கும் ‘இந்தியன் 2'-ம் ஒரே நேரத்தில் சேர்ந்தே வளர்ந்துவருகின்றன. இது மாதிரி ஒரே சமயத்தில் இயக்குவது அவருக்கு வழக்கமான ஒன்றல்ல. இதோடு கிடைக்கும் நேரங்களில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும், ஷங்கரும் இணைந்து அடுத்த திட்டத்துக்கான திரைவடிவ வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள். ஹாட்ரிக் அடிங்க...

மீண்டும் தமிழுக்கு வருகிறார் எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய், அருண்விஜய்யை வைத்து இயக்கிவரும் ‘அச்சம் என்பது இல்லையே' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் எமி. அதன் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடந்திருக்கிறது. அங்கேதான் எமி ஜாக்சனும் வசித்துவருகிறார் என்பதால் இயக்குநர் விஜய்யே, எமியிடம் பேசி படத்தில் அவரைக் கொண்டு வந்திருக்கிறார். வெல்கம் துரையம்மா!

இன்பாக்ஸ்

இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷண் பெற்றிருக்கிறார், கூகுளின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து இதை அமெரிக்காவில் வைத்தே அவருக்கு வழங்கினார். ‘‘என்னை உருவாக்கிய தேசம் இப்படி அர்த்தமுள்ள விதத்தில் என்னை அங்கீகரிப்பதில் மகிழ்ச்சி. எனக்குள் ஓர் அங்கமாக இந்தியா இருக்கிறது. எங்கு சென்றாலும், நான் ஓர் இந்தியன் என்ற உணர்வை மனதில் சுமந்திருப்பேன்'' என்று பெருமிதப்பட்டார் சுந்தர் பிச்சை. கூகுள் இந்த ஆண்டில் 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதில் இந்திய மொழிகள் எட்டு. பெருமித இந்தியன்!

இன்பாக்ஸ்

மதுரைக்காரர்கள் சினிமாவையும், கலைஞர்களையும் கொண்டாடுகிறவர்கள் என்பது உலகத்துக்கே தெரியும். தங்கள் அபிமான நடிகர்களின் படங்களுக்கு விழா கொண்டாடவும் மறக்கமாட்டார்கள். சிவாஜி-ஜெயலலிதா நடித்து சோழவந்தானில் எடுக்கப்பட்டு 1972-ல் வெளியான ‘பட்டிக்காடா பட்டணமா' படத்துக்கு சமீபத்தில் பொன் விழா கொண்டாடினார்கள். ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர். படமும் திரையிடப்பட்டது. சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் ஒய்.ஜி.மகேந்திராவை அழைத்து வந்து சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். பட்டிக்காடு கலந்த பட்டணம் மதுரை!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கோவை மாநகரின் மிகவும் பிஸியான சிக்னல், லட்சுமி மில்ஸ் சிக்னல்தான். அதைக் கடக்க வேண்டும் என்றாலே கோவை மக்கள் கடுப்பாவார்கள். சமீபகாலமாக அந்த சிக்னலை உற்சாகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார், போக்குவரத்துத் தலைமைக் காவலர் அல்லிதுரை. “ஹேய் தம்பி ஹெல்மெட் போடு... முதியோர்களைத் தொந்தரவு பன்ற மாதிரி வண்டி ஓட்டாதீங்க. ஹாரன் அடிக்காதீங்க... எதுக்கய்யா அவசரம். 5 நிமிஷம் லேட் ஆனாலும் பரவாயில்லை... பொறுமையா பாதுகாப்பா போய்க்கலாம்” என்று தன் கனிவான குரலால் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு. கோவை கலெக்டர் அவரைக் கூப்பிட்டுப் பாராட்ட, மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், போக்குவரத்துக் காவலர்களுக்கு சிரித்தபடியே பணி செய்வது எப்படி என்ற பயிற்சியை வழங்கும் பொறுப்பை அல்லிதுரைக்குக் கொடுத்துள்ளார். கடமை, கண்ணியம், கனிவு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்' மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தனது 18-வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடியிருக்கிறார். ‘இனி நான் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன்' என பிறந்த நாள் சபதமும் எடுத்திருக்கிறாராம் அனிகா. இப்போதே அனிகா ‘ஓ மை டார்லிங்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும்வருவது குறிப்பிடத்தக்கது. வழக்கமாகவே கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து கிறங்கடிப்பார் அனிகா. இனி இன்ஸ்டாகிராம் கதறும் என கமென்டுகளைத் தெறிக்க விடுகிறார்கள் ரசிகர்கள். நடிச்சா ஹீரோயின்தான் சார்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

வைகோ கழுத்தில் கறுப்புத் துண்டு இல்லாமல், ஒரு கோயிலில் பவ்யமாக நின்று திருநீறு வாங்கிப் பூசிக் கொள்வதுடன், தீர்த்தத்தையும் வாங்கிப் பருகும் வீடியோ வைரலாகப் பரவியது. இது அவரது சொந்த ஊரான கலிங்கபட்டியில் உள்ள கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழிபட்டபோது எடுத்த வீடியோ. வைகோவின் தாத்தா கோபால்சாமி நாயக்கர் கட்டிய அந்தக் கோயிலில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன. அதை வைகோ தனது சொந்தச் செலவிலேயே மேற்கொண்டு வருகிறார். விரைவில் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், கோயிலின் திருப்பணிகளைப் பார்வையிடச் சென்றபோது கறுப்புத் துண்டை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று வழிபட்டுள்ளார். அந்த வீடியோதான் வைரலாகியிருக்கிறது. வைகோ எப்போது கோயிலுக்குள் சென்றாலும் கறுப்புத் துண்டைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் செல்வாராம். வித்தியாச பக்தர்!

இன்பாக்ஸ்

75-வது சுதந்திர தின விழாவையொட்டி 75 கலைஞர்களுக்கு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி ‘அமிர்த விருது'களை அறிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த கலைஞர்களில் இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக, இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழகத்தில் இந்த விருதைப் பெறும் ஒரே கலைஞர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நாகஸ்வரக் கலைஞர் 94 வயது சின்னத்தம்பி பிள்ளை. இவர் தில்லை சபாநாயகர் திருக்கோயில் மற்றும் காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வானாகவும், திருவண்ணாமலை அருணகிரிநாதர் விழா நாகஸ்வரக் கமிட்டி தலைவராகவும் இருந்து வருகிறார். மரபு போற்று!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியில் தாயைப் பிரிந்து பசியில் வாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை பரிவுடன் பாதுகாத்து, பாலூட்டிக்கொண்டிருக்கிறது ஒரு தாய்க்குரங்கு. தனது குட்டிகளைப் பறிகொடுத்த அந்தக் குரங்கு, இந்த நாய்க்குட்டி தாய்ப்பாலுக்கு ஏங்குவதைக் கண்டு கலங்கியது. உடல் நலிவுற்றுக் கிடந்த நாய்க்குட்டியை குரங்கு அரவணைத்துப் பாலூட்டுவதால், இப்போது நாய்க்குட்டி உடல் தேறியிருக்கிறது. குரங்கின் தாய்மைப் பண்பும், அதனிடம் அளவற்ற பாசம் காட்டும் நாய்க்குட்டியின் அழகும் வியக்கவைக்கிறது. தாய்மை ஒன்றே!