சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

என அறிவித்த ரஜினி, மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

யோகிபாபு காட்டில் அடைமழை. லாக்டௌனுக்குப் பிறகு 25 படங்களுக்கு டேட்ஸ் கொடுத்து வடிவேலு ரெக்கார்டை நெருங்கிவிட்டார். பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷான் இயக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தில் முதன்முறையாக காமெடி அல்லாத ஹீரோ பாத்திரத்தில் நடிக்கிறார். டீக்கடை மாஸ்டராக இருக்கும் யோகிபாபுவின் குடும்பம் ஒரு வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட, அவர் நீதிக்காகப் போராடும் கதைதான் படம். ‘‘கதை கேட்குறப்பவே அழுதேன். நிச்சயம் இந்தப்படம் பார்த்தா என்மேல உங்களுக்குப் பரிதாபம் வரும்’’ என்கிறார் யோகி. அவார்டு பார்சேல்..!

‘களவாணி’ வெற்றிக் கூட்டணி இயக்குநர் சற்குணம்-நடிகர் விமல் இணையும் மூன்றாவது படம், தஞ்சாவூர் ஏரியாவில் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. படத்துக்கு ‘எங்கள் பாட்டன் சொத்து’ என வில்லங்கமான பெயரை வைத்திருக்கிறார்கள். இதில் என்ன பிரச்னை என்கிறீர்களா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இ.பி.எஸ் என ஷார்ட்டாக அழைப்பது வழக்கம். அதையே படத்தின் `ஷார்ட்’ தலைப்பாக புரமோட் செய்யப்போகிறார்களாம். இப்போ என்ன பண்ணுவீங்க?

இன்பாக்ஸ்

தூத்துக்குடி நகரின் திரேஸ்புரம் கடற்கரை அருகில் உள்ளது வாடித்தெரு. வீதியின் நுழைவு வாயிலில் 270 ஆண்டுகள் பழைமையான ஆர்ச் உள்ளது. சமீபத்தில் இது வ.உ.சிதம்பரனார் இளைஞர் அணியினரின் முயற்சியாலும், பொறியாளர் நரேனின் சொந்தச் செலவிலும் புதுப்பிக்கப்பட்டது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் கம்பெனியைத் தொடங்குவதற்கு இதே வாடித்தெருவில் வசித்த முத்தாட்சி அம்மாள் பங்குதாரராய்ச் சேர்ந்து கையெழுத்திட்டது இந்த ஆர்ச்சின் முன்புதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழில் கையெழுத்திட்ட எம்.சி.வீரபாகு, சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான ஏ.பி.சி.வீரபாகு ஆகியோர் வாழ்ந்ததும் இதே வாடித்தெருவில்தான். எம்.சி.வீரபாகுவின் வீட்டில் காந்தியடிகள் இரண்டு முறை தங்கியுள்ளார். வாடித் தெருவில் இருந்த முத்தாட்சி அம்மாள் பள்ளி வளாகத்தில்தான் வ.உ.சிதம்பரனாரின் கப்பல் கம்பெனி சம்பந்தமாகப் பல கூட்டங்கள் நடந்தன. வரலாறாய் வாழும் வாடித்தெரு!

மேற்கு வங்காளத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி என இரண்டு தரப்புமே நேதாஜியை உரிமை கொண்டாடி உக்கிரம் காட்டுகின்றன. சமீபத்தில் நேதாஜி பிறந்த நாள் விழாவுக்காக கொல்கத்தா வந்து போனார் பிரதமர் மோடி. இந்நிலையில், மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் நேதாஜி பெயரில் நினைவிடங்கள் அமைப்பதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார் மம்தா. அடுத்து என்ன செய்வார்களோ!

இன்பாக்ஸ்

கொரோனாவால் பாதியில் நிற்கும் ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்குகிறது. ‘இப்போதைக்கு அரசியல் வருகை இல்லை’ என அறிவித்த ரஜினி, மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ ரிலீஸ் என அறிவித்திருக்கும் நிலையில், அடுத்த படத்துக்கான கதையைக் கேட்டுவருகிறாராம் ரஜினி. பலரும் கதை சொல்லியிருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜின் கதையை ரஜினி டிக் அடித்திருக்கிறாராம். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். ‘பேட்ட’ கேட் திறந்தாச்சு!

ந்தியாவின் 51வது புலிகள் சரணாலயமாக மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பில் உள்ள இந்த வனப்பகுதியில் 14 புலிகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் சரணாலயம் இது!

ந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்கட்சிகளைவிட மோசமாகக் கிண்டல் செய்தவர், சுப்பிரமணியன் சுவாமி. ஆளுங்கட்சி வரிசையில் இருக்கும் அதிரடி விமர்சகரான இவர், விவசாயிகள் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடிக்கு யோசனை தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார். ‘வேளாண் சட்டங்களை விரும்பும் மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்த வேண்டும்; குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்ய வேண்டும்; விவசாயம் சார்ந்த தொழில் தவிர வேறு எந்தத் தொழிலிலும் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே விளைபொருள்களை வாங்க வேண்டும்... இந்த மூன்று விதிகளைச் சேர்த்தால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்’ என்பது சுவாமியின் யோசனை. பரிசீலிங்கப்பா

இன்பாக்ஸ்

வித்யா பாலன் நடித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த ‘நட்கத்’, சிறந்த குறும்படப் பட்டியலில் இந்த ஆண்டு ஆஸ்கர் ரேஸில் இணைந்துள்ளது. அம்மா - மகன் இருவருக்குமிடையில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படம், பாலின சமத்துவம் குறித்துப் பேசுகிறது. அன்னுகம்ப்பா ஹர்ஷ் & ஷான் வியாஸ் எழுதி இயக்கியுள்ள இப்படம் பல்வேறு திரை விழாக்களிலும் விருதுகளைக் குவித்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளாா் வித்யா பாலன். கிரேட் சல்யூட் சிங்கப்பெண்ணே!

‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில் வெளியான 16 நாள்களிலேயே ஓ.டி.டி-யில் வெளியாகி தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமேசான் ப்ரைமில் வெளியான படத்தை, முதல் வாரத்தில் மட்டுமே 2 கோடிக்கும் அதிகமானோா் பாா்த்துள்ளனர். இதேபோல் தெலுங்கில் வெளியான ரவி தேஜாவின் ‘க்ராக்’ திரைப்படமும் ரிலீஸான சில நாள்களிலேயே ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ளது. என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா..?!

வானதி சீனிவாசன், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் பதவி கிடைத்தபிறகு ரொம்பவே பிஸி. டெல்லி, ஒடிசா, மேற்கு வங்காளம் எனப் பல மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தவர், பிறகு ஓர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு சற்று ஓய்வில் இருந்தார். இப்போது மீண்டும் களத்துக்குத் திரும்பிவிட்டார். இந்தமுறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். தேசிய அரசியலுக்குச் சென்றாலும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார் அவர். அதனால் தொகுதிக்கும் அடிக்கடி விசிட் அடிக்கிறார். வட இந்தியாவில் நிறைய பயணம் செய்வதால், ‘‘இந்தி கத்துக்கோங்க மேடம் ஜி’’ என்று சொல்லியுள்ளனர். எனவே, இந்தப் பணிகளுக்கு நடுவே இந்தியும் கற்றுவருகிறார். ஏக் காவ் மே...

பிரமாண்ட ‘பாகுபலி’க்குப் பின்னர் பிரபாஸ் நடித்த ‘சாகோ’ திரைப்படம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. தற்போது மீண்டும் பான் இந்தியா சினிமாவாக ‘சலார்’ என்னும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பிரபாஸ். பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தின் நாயகி, ஸ்ருதி ஹாசன். கே.ஜி.எஃப்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியிருக்கிறது. ‘கே.ஜி.எஃப் 2’ ரிலீஸுக்குப் பிறகு இதில் கவனம் செலுத்தவிருக்கிறார் பிரசாந்த். கலக்குங்க பிரபாஸ்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

சிவகங்கை மாவட்டம், வில்லிப்பட்டி கிராமத்தில் பழைமையான நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. இதன் அடிப்பக்கத்தில் பாதாள சுரங்கம் போல காற்று வெளியிடும் அமைப்பு உள்ளது. இதனால் இந்த நெற்களஞ்சியத்தில் வைக்கப்படும் தானியங்கள் வெயில், மழை, குளிர் என எல்லாச் சூழலையும் கடந்து, பல ஆண்டுகள் தாக்குப்பிடிக்குமாம். முன்பு இப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் இங்கு சேமிக்கப்பட்ட நெல்லே 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் பஞ்சத்தைப் போக்கியுள்ளது. மேலும், நெற்களஞ்சியத்தை ஒட்டியுள்ள திண்ணைப்பகுதியில் ஏட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றும் இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான இந்திரனின் புதிய நூலின் பெயர் ‘உலகிலேயே சிறந்த புத்தகம்.’ 15 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய புத்தகம் என்ற முன்னுரையுடன் அமைந்துள்ள இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? அட்டைப்படம், முன்னுரை, பின்னட்டையில் இந்திரனின் புகைப்படத்தைத் தவிர்த்து உள்ளே இருப்பவை, எழுதப்படாத வெற்றுக் காகிதங்கள் மட்டுமே. இதன்மூலம் ‘உள்ளடக்கமே வடிவமாகிறது’ என்று சொல்லும் இந்திரன் ‘ இந்தநூல் உலகிலேயே சிறந்த புத்தகம் என்பது நீங்கள் எழுதப்போகும் புத்தகம்தான் என்பதைக் குறிப்பிடுகிறது’ என்கிறார். மேலும் இந்த வெள்ளைத்தாள்களில் எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு முதல் பரிசு 5,000, இரண்டாம் பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் என்றும், அதைப் புத்தகமாக வெளியிடவும் தயார் என்றும் சொல்கிறார் இந்திரன். புத்தம் புதிய புத்தகமே...