
சல்மான்கானுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் பரத்.
பிரபுதேவா அடுத்து பாலிவுட்டில் இயக்கும் `ராதே : யுவர் மோஸ்ட் வான்டட் பாய்’ படத்தில் சல்மானை மிரட்டும் வில்லன் பாத்திரமாம் பரத்துக்கு. சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டவர் சல்மானைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது எடுத்த படத்தைத் தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பரத் ``நல்லதை யோசிக்கிற வர்களுக்கு நல்லதே நடக்கும்’’ என்று ராதே குறித்த அறிவிப்பையும் பகிர்ந்திருக்கிறார்! சூப்பர் புரொமோஷன்!

ஏழை மக்களுக்காக சென்னையில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இதுவரை அம்மா உணவகங்களில் 64 கோடி இட்லிகள் விற்பனையாகியிருக்கின்றன. 30 கோடி சப்பாத்தியும் 22 கோடி வெரைட்டி சாதமும் விற்கப்பட்டுள்ளன. அம்மா உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அறக்கட்டளை ஒன்றை நிறுவி அம்மா உணவகத்தைத் தொடர்ந்து நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைக்கு மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். அம்மா உணவகத்தில் டீ, காபி விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் முன் நியான் போர்டுகள் வைத்து விளம்பரம் செய்து வருமானம் ஈட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தை நடத்த ஆண்டுக்கு ரூ.130 கோடி செலவாகிறது. வருவாய் ரூ. 30 கோடி மட்டுமே! அம்மாவையும் இட்லியையும் மறக்க முடியுமா!

லண்டனைச் சேர்ந்த தமிழரான சாதனா சுப்ரமணியம் இயக்கிய ‘இன்டியாஸ் பார்பிட்டன் லவ் - ஏ ஹானர் கில்லிங் ஆன் லவ்’ திரைப்படம் சர்வதேச யம்மி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உடுமலைப்பேட்டை கௌசல்யா-சங்கர் ஆணவக்கொலை விவகாரத்தைப் பற்றியது இந்த ஆவணப்படம். இந்த ஆவணப்படத்தை அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கென இயக்கியிருக்கிறார் சாதனா. ‘‘நாட்டில் எத்தனையோ ஆணவக்கொலைகள் தொடர்ச்சியாக நடந்தாலும் அதைப்பற்றிப் பேசுகிற தயக்கம் நம்மிடம் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பேசவேண்டும். அதற்கான முயற்சிதான் இந்த ஆவணப்படம்’’ என்கிறார் சாதனா. ஆணவத்தை ஆவணப்படுத்துவோம்!

ஹாரிபாட்டரில் ‘ஹெர்மாயினி’ கேரக்டரில் நம் மனங்களைக் கொள்ளைகொண்ட எம்மா வாட்சனுக்கு 30 வயதாகிவிட்டது. ‘இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?’ என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்விகளால் துளைத்தெடுக்க, ‘‘நான் சிங்கிளாக இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனக்கு நானே துணை என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்’’ என்றி ருக்கிறார் தடாலடியாக. சிங்கிள் சிங்கப்பெண்ணே!

சென்னையில் இருக்கும்போது, கே.கே.நகர் பிள்ளையார் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் என தினசரி ஒரு கோயிலுக்குப் போய்விடுவது தமிழிசையின் வழக்கம். தெலங்கானா கவர்னரான பிறகு, அதைத்தான் மிஸ் செய்கிறாராம் தமிழிசை. பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக வெளியில் கோயிலுக்குச் செல்வதற்கு அதிக வாய்ப்பில்லாமல் போகவே, மாளிகை வளாகத்தில் இருக்கும் ‘ரேணுகாதேவி’யையே முருகனாவும், பிள்ளையாராகவும், அம்மனாகவும் நினைத்து வழிபட்டு வருகிறாம் தமிழிசை. தமிழ்நாடு மிஸ் யூ அக்கா!
நாடாளுமன்றமோ தி.மு.க பொதுக்கூட்ட மேடையோ, திருச்சி சிவா எம்.பி பேச்சில் கில்லி. யார் மனதையும் புண்படுத்தாது அவர் முன்வைக்கும் தரவுகளாகட்டும் சுவாரஸ்யமான மொழியாகட்டும் கேட்போரைச் சிலிர்க்கவைக்கும். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின், திருச்சி சிவாவின் வேறொரு விஷயத்துக்குத் தீவிர ரசிகர். அது... பாட்டு! பாடுவதிலும் படு கில்லாடியான திருச்சி சிவா பாடும், ‘பட்டு மணல் தொட்டிலிலே பூ மணக்கும் தென்றலிலே’ எனத் தொடங்கும் அண்ணா குறித்த பாடலை, சந்திக்கும்போதெல்லாம் பாடச் சொல்லிக் கேட்பார் ஸ்டாலின். இசையால் வசமாகா...
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சென்ற மாதம் ஜப்பான் கிளையில் புதுமையான ஒரு முயற்சி செய்துள்ளது. வாரத்தில் நான்கு நாள் வேலை, மூன்றுநாள் விடுமுறை என்கிற இந்தப் புதுத்திட்டத்தை ஒருமாதத்திற்குச் செயல்படுத்திப் பார்த்துள்ளது. 2018லேயே நியூசிலாந்தைச் சேர்ந்த முன்னணி நிதி நிறுவனம் ஒன்று இந்த FourDayWorkWeek முயற்சியைப் பரிசோதனை செய்துபார்த்து வெற்றிபெற்றது. அதைப்பார்த்து மைக்ரோசாஃப்டும் செய்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. 40% அளவுக்கு பணியாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகவும் நிர்வாகச் செலவும் பெருமளவு குறைந்திருப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. அநேகமாக உலகெங்கும் இந்தமுறையை அந்நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தக்கூடும். கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு!
2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 20லட்சம் பேருக்கு இலவசமாக இன்டர்நெட் வசதியை வழங்க முடிவு செய்திருக்கிறது கேரள அரசு. சமீபத்தில், அம்மாநிலத்தின் மின்சாரவாரியமும் தகவல்தொழில்நுட்பக் கட்டுமானத்துறையும் இணைந்து ‘கேரள பைபர் ஆப்டிக் நெட்வொர்க்’ என்ற அரசு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளன. 1,548 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டத்தின் மூலம் கேரளாவின் அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி கிடைக்குமாம். இதோடு, அரசே தயாரித்திருக்கும் குறைந்த விலை `கோகோனிக்ஸ்’ என்கிற லேப்டாப்பையும் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது கேரள அரசு. ஹைடெக் கவர்ன்மென்ட்!

இந்தியாவில் எந்தப் புதுக் கார் வந்தாலும் முந்திக்கொண்டு முதலில் வாங்குகிற கார் பிரியர், பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. சமீபத்தில் அவர் வாங்கியுள்ள கார், பாலிவுட்டையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. லம்போர்கினி வெளியிட்டிருக்கும் URUS Super SUV காரை 3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் ரோகித். ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினியின் முதல் SUV இந்த உருஸ். இதுதான் உலகிலேயே மிக வேகமாகச் செல்லக்கூடிய எஸ்யூவி மாடல். போலாம் ரைட்!