சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனால், அவரை அங்கே ஐசியுவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றிய அன்று, அவரை நலம் விசாரிக்க இளையராஜா வந்திருந்தார்

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஓணம் பண்டிகையைக்கூட குடும்பத்தோடு கொண்டாடாமல் ‘மாமன்னன்’ படப்பிடிப்பிற்கு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். அவருடைய தொழில் பக்தியை மெச்சி செட்டிலேயே கேக் வெட்டி, ஸ்பெஷலாக கேரளாவின் பாரம்பர்ய உணவு வகைகளைக் கீர்த்திக்கு விருந்தே படைத்துவிட்டார்கள். ஏக கலகலப்பாக அந்த இடத்தையே வடிவேலு தன் உடல்மொழியால் சிரிப்பு மழையால் நனைக்க, அவ்வளவு கலாட்டாவாம். கூடவே உதயநிதி, மாரி செல்வராஜ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் எனச் சேர்ந்துகொள்ள அன்று படப்பிடிப்புக்கு அரை நாள் லீவாம். வைகைப்புயல் ஓணம்!

பெரிய பட்ஜெட், பேன் இந்தியா சினிமாக்கள் என்றாலே பீதியாகும் அளவுக்கு அடுத்தடுத்த பெரிய படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன. விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கிய ‘லைகர்’ படம் எடுக்கப்பட்டதே இந்தியில்தான். சில நடிகர்களின் காட்சிகளை மட்டும் தெலுங்கில் எடுத்திருக்கிறார்கள். பேன் இந்தியா பில்டப், கரன் ஜோஹர் தயாரிப்பு, பாலிவுட் கதாநாயகி, பிரமாண்ட விளம்பரங்கள் என எதுவும் படத்தைக் காப்பாற்றவில்லை. இந்தப் படத்தில் தனக்குக் கிடைத்த 60 கோடி ரூபாய் லாபத்தை விநியோகஸ்தர்களுக்கே திருப்பித் தர முடிவு செய்திருக்கிறாராம் இயக்குநர் பூரி ஜெகன்னாத். லைகர் படம் வெளியாவதற்கு முன்பே, தன் அடுத்த படமான ‘ஜன கண மன’வின் முதல் ஷெட்யூலை எடுத்து முடித்துவிட்டார் பூரி. அதிலும் ஹீரோ, விஜய் தேவரகொண்டா. ஆனால் இப்போது அந்தப் படம் டிராப்பாகிவிட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன. பாவத்த!

‘சூதுகவ்வும்’ நலன் குமாரசாமி, அடுத்து ஆர்யாவை வைத்துப் படம் பண்ணுவதாகப் பேச்சு எழுந்தது. இப்போது கார்த்தியிடம் ஒரு கதை சொல்லி, ஓகே வாங்கிவிட்டார். ‘சர்தார்’ படத்தை முடித்துவிட்ட கார்த்தி, ராஜுமுருகன் படத்திற்கு ரெடியாகிவிட்டார். அதன் ஷூட்டிங்கை முடித்த பிறகே நலனின் படத்தை ஆரம்பிக்கிறார் கார்த்தி. மகிழ்ச்சியில் இருக்கிறார் நலன். வாங்க வாங்க!

இன்பாக்ஸ்

‘பருத்திவீரன்’ நாள்களில் அமீருக்கும் கார்த்திக்கும் மனத்தாங்கல் வந்துவிட்டது. அது சற்று முன்புவரை நீடித்தது. கொஞ்ச நாளைக்கு முன்னால் அமீரின் தாயார் காலமாக, உடனே அவரது மதுரை வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்தார் கார்த்தி. மனம்விட்டுப் பேசியதில் மனப்பளு குறைந்தது. எதிர்காலத்தில் அமீரின் படத்தில் கார்த்தி நடிக்கலாம் என்கிறார்கள். இப்போது சூர்யாவின் வாடிவாசல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அமீர். கலைஞர்கள் சேரட்டும்!

இன்பாக்ஸ்

‘ராதே ஷ்யாம்’ படத்திற்குப் பிறகு ‘சலார்’, ‘ஸ்பிரிட்’, ‘புராஜெக்ட் கே’ உள்ளிட்ட படங்களில் செம பிஸியாக நடித்துவருகிறார் பிரபாஸ். பொதுவாக, முன்னணி நடிகர்கள் என்றாலே ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் பிஸியாவார்கள். ஆனால், பிரபாஸ் ஒரே நேரத்தில் பல்வேறு படங்களில் நடித்துவருவதால், ‘சலார்’ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல், பிரபாஸ் மீது வருத்தத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘கே.ஜி.எஃப் 2’ பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு வெளியாகும் பிரஷாந்த் நீல் படம் என்பதால் ‘சலார்’ படத்திற்கு இந்தியா தாண்டியும் எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன. ஒரே நேரத்தில் பல்வேறு படங்களில் நடித்துவருவதால் ‘சலார்’ ஷூட்டிங்கிற்கு வெவ்வேறு கெட்டப்புகளில் பிரபாஸ் வருகிறார் என்பதால் பிரஷாந்த் நீல் சங்கடத்தில் தவிக்கிறாராம். சங்கட சலார்!

இன்பாக்ஸ்

ஹ்ரித்திக் ரோஷன் ‘கிரிஷ் 4' படத்தைக் கையில் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கு முன்பு ‘கிரிஷ் 3' கடந்த 2013-ல் வந்தது. அதனை ஹ்ரித்திக் ரோஷன் தந்தை இயக்கித் தயாரித்தார். ஆனால் இப்போது தொழில்நுட்பம் உட்பட ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்குத் தக்கபடி படத்தைத் தயாரிக்கவேண்டும் என்பதில் ஹ்ரித்திக் ரோஷன் உறுதியாக இருக்கிறார். எனவே ‘கிரிஷ் 4' படத்தை இயக்கும் பொறுப்பை வேறொரு இயக்குநரிடம் கொடுக்க ஹ்ரித்திக் முடிவு செய்துள்ளார். ‘கிரிஷ் 3' படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். வாய்ப்பில்ல ராஜா!

இன்பாக்ஸ்

மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஆகியோரை வைத்து ‘October 31st Ladies Night’ என்ற படத்தை முடித்து ரெடியாக வைத்திருக்கிறார், இயக்குநர் விஜய். அடுத்ததாக, அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் கங்கனா ரணாவத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகின்றன. இந்த முறை யாருடைய பயோபிக்காக இருக்கும்?

இன்பாக்ஸ்

பாலாஜி மோகன் ‘மாரி 2’ படத்திற்குப் பிறகு தனுஷை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் அமேசான் ப்ரைமில் வெளியான ‘புத்தம் புதுக் காலை விடியாதா’ ஆந்தாலஜியில் ‘முகக்கவச முத்தம்’ என்ற போர்ஷனை இயக்கியிருந்தார். அடுத்ததாக, காளிதாஸ் ஜெயராமை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். காதலில் சொதப்புவது எப்படி 2?

இன்பாக்ஸ்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் தமிழக தொல்லியல் துறையின் சார்பில் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு மட்டும்தான் தமிழ் மன்னர்கள் பற்றியும், அவர்களின் மாளிகையைப் பற்றியுமான தேடல்கள் தொடர்ந்துவருகிறது. தோண்டத் தோண்ட மண்சுவர், கல் கட்டடச் சுவர்கள், யானைத்தந்தத்தால் ஆன மனித உருவச் சிற்பம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் யானையின் தந்தத்தால் ஆன மனித உருவச் சிற்பத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘‘சோழர்களின் கலை பாணியில் இந்தச் சிலை கலைநயத்துடன் அணிகலன்கள், ஆடை அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சிறிய மண்குடுவை, புகையுறிஞ்சி, கூரை ஓடுகள், பானை ஓடுகள், ஆணி வகைகள், கத்தி உள்ளிட்ட இரும்புப் பொருள்கள் மற்றும் சீனக் கலைப்பொருள்கள் எனப் பல இங்கு கிடைத்துள்ளன’’ என்கிறார்கள் அகழாய்வாளர்கள். தொன்மம்!

இன்பாக்ஸ்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் பிரசித்திபெற்ற சனிபகவான் வீற்றிருக்கும் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சனிதோஷ நிவர்த்திக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். அப்படி வருபவர்கள் நளன் குளத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி, பழைய ஆடைகளைக் குளக்கரையில் விட்டுவிட்டு, புத்தாடை அணிந்து சனி பகவானை வழிபடுவது வழக்கம். பல ஆண்டுகளாக இக்குளத்து நீர் அப்புறப்படுத்தப்படாமலும், புதுநீர் பாய்ச்சப்படாமலும், எண்ணெய்க் கசடு படிந்து பச்சை நிறமாய்க் காட்சியளிக்கிறது. மறுசுழற்சி முறையில் நீரைச் சுத்திகரிப்பு செய்ய கடந்த ஆட்சியில் சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டு, அப்பணிகள் முழுமையடையவில்லை. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடியே புனித நீராடவேண்டியுள்ளது. சுத்தம் முக்கியம் பிகிலு!

இன்பாக்ஸ்

வேலூரைச் சேர்ந்த இன்னிசைக் கவிஞர் இரா.நக்கீரன். இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி, கவிஞர் சுரதா உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகியவர். கவிஞர், பாடகர், நடிகர், நாடக இயக்குநர், ஜோதிட ஆராய்ச்சியாளர் எனப் பன்முகத் திறமையுடைய இரா.நக்கீரனுக்கு ‘இன்னிசைக் கவிஞர்’ எனச் சிறப்புப் பெயர் சூட்டியவரே கவிஞர் கண்ணதாசன்தான். 16 வயதிலிருந்தே நாடகங்களை அரங்கேற்றியவர். 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அகவை முதிர்ந்த இரா.நக்கீரன் செப்டம்பர் 7-ம் தேதி காலமானார். அவரின் உடல், சி.எம்.சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. அஞ்சலி!

இன்பாக்ஸ்

திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவந்தவர் ராமகிருஷ்ணன். கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்திற்குப் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ராமகிருஷ்ணன், பணி முடிந்து ஸ்டேஷனுக்குத் திரும்பும் வழியில், மாரடைப்பு ஏற்பட்டு டூவிலரிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்துபோனார். உயிரிழந்த ராமகிருஷ்ணன், திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தரிடம் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக துடிப்புடன் பணியாற்றியிருக்கிறார். ராமகிருஷ்ணன் இறந்த செய்தி கேட்டு இறுதிச்சடங்கிற்கு வந்த டி.ஐ.ஜி சரவண சுந்தர், போலீஸாருடன் சேர்ந்து ராமகிருஷ்ணனின் உடலை மயானம் வரை தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார். சமீபத்தில்தான் ராமகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்வதற்காக பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். சோகம்!

இன்பாக்ஸ்

பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனால், அவரை அங்கே ஐசியுவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றிய அன்று, அவரை நலம் விசாரிக்க இளையராஜா வந்திருந்தார். பாரதிராஜா அசந்து தூங்கிக் கொண்டிருக்க.. அவரிடம் எதுவும் பேசமுடியாத சூழல். அன்று தான் இளையராஜா வெளிநாடு கிளம்ப வேண்டிய அவசரமும் என்பதால், ‘பாரதி சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவார். அவருக்கு திருக்கடையூரில் எண்பது கொண்டாடிடலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனார். இப்போது நண்பன் நலம் பெற்று வீடு வந்த மகிழ்ச்சியில் திருக்கடையூரில் சதாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லியிருக்கிறார் இளையராஜா. தலைமுறைகளாய் தொடரும் நட்பு!

இன்பாக்ஸ்

கேரளாவுக்கும் யானைக்குமான பந்தம் அலாதியானது. அங்கிருக்கும் வளர்ப்பு யானைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் சமீபகாலமாக தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்திருப்பது கோச்சயப்பன். சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க அந்த யானைக்கன்று, பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கொன்னி யானைகள் முகாமில் உள்ளது. கடந்த ஆண்டு தண்ணீரில் அடித்து வரப்பட்ட அந்த யானைக்கன்றை, வனத்துறையினர் போராடி மீட்டனர். ஆரம்பத்தில் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், தற்போது யானை ஆரோக்கியமாகிவிட்டது. தனக்கு மிகவும் பிடித்த அரிசிச் சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடுவது, சேட்டையுடன் விளையாடிக் குளிப்பது என கோச்சயப்பனின் ஒவ்வொரு நகர்வும் அத்தனை அழகு. இதன் காரணமாக அதைக் காண தினசரி ஏராளமான மக்கள், அந்த முகாமுக்குப் படையெடுத்து வருகின்றனர். சமீபத்தில் கோச்சயப்பனுக்கு, முதல் பிறந்தநாளையும் அங்கு கொண்டாடியுள்ளனர். நினைவில் காடுள்ள மிருகம்!