
`விஞ்ஞானிகள் சொல்வதைக் கேளுங்கள்... உடனே செயலாற்றுங்கள்’’
2019-ம் ஆண்டின் சிறந்த நபராக டைம் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கிரேட்டா துன்பெர்க். பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி இந்த ஆண்டு முழுக்கப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் 16 வயது கிரேட்டா. சென்ற ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் ஒற்றை ஆளாகப் போராட்டத்தில் இறங்கிய கிரேட்டாவுக்கு உலகெங்கும் இருந்து ஆதரவுகள் குவிய...

இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாட்டுச் சிறுவர் சிறுமிகளும் இளைஞர்களும் ஆதரவுக்கரம் நீட்டினர். டைம்ஸ் இதழ் செய்திருக்கும் மரியாதை குறித்துப் பேசியிருக்கும் கிரேட்டா ``விஞ்ஞானிகள் சொல்வதைக் கேளுங்கள்... உடனே செயலாற்றுங்கள்’’ என்று உலக அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். செவிமடுக்கட்டும் புவி!
ரஜினி - இயக்குநர் சிவா இணையும் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் எனப் பல நடிகர்களில் கமிட்டாகியிருக்கிறார்கள். இதில் சூரி, சதீஸ், கீர்த்தி சுரேஷுக்கு இதுதான் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம். பிரகாஷ் ராஜ் `படையப்பா’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பார். மீனாவின் கேரக்டர்தான் இந்தப் படத்திற்கான கலகலப்புப் பகுதியை நிரப்பவிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். குஷ்புவுக்கு என்ன ரோல்?
மாரி செல்வராஜ் படத்துக்கு அடுத்து தனுஷ், மீண்டும் இந்தியில் ஒரு படம் நடிக்கிறார். 'ராஞ்சனா' இயக்கிய ஆனந்த்.எல்.ராய்தான் இயக்கம். தனுஷுடன் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கிறார் என்பது கூடுதல் ஹேப்பி நியூஸ். டபுள் பட்டாஸ்!
உலகிற்கே வழிகாட்டும்படி டாடா ஸ்டீல் நிறுவனம் ஒரு முன்னோடி விஷயத்தைச் செய்திருக்கிறது. தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் தங்களுடைய ஒருபால் உறவுகள் குறித்துச் சொல்லி, திருமணமான ஒருவர் பெறும் எல்லாச் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள ஹெச்ஆர் கொள்கையில் மாற்றங்கள் செய்திருக்கிறது. டாடா நிறுவனத்தின் இந்த மாற்றத்திற்கு இந்தியா முழுக்கவும் இருக்கிற ஒருபால் ஈர்ப்பாளர்கள் அமோக வரவேற்பையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர். வாழ்த்துகள்!

`லிங்கா’வில் ரஜினியுடன் டூயட் பாடிய சோனாக்ஷி சின்ஹா, புடவைப் பிரியை. “என் அம்மாவுக்குப் புடவை கட்டுவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். சின்ன வயதில் அவரைப்போலவே அழகாக மடிப்புகள் வைத்துப் புடவைகட்ட முயற்சி செய்திருக்கிறேன். இந்த அனுபவம்தான் என்னுடைய முதல் பட கேரக்டருக்குக் கொஞ்சம் உதவியது. இந்திய உடைகளில் புடவைதான் அழகான ஆடையாக எனக்குத் தோன்றுகிறது. புடவை, வயதான பெண்களின் ஆடை என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’’ என்கிறார். ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு’ ரஜினி பாட்டு பார்த்திருக்கீங்களா?
சென்ற ஆண்டு நிபா வைரஸ் கேரளாவைத் தாக்கியபோது, நோயாளிகளைக் காக்க உயிர் துறந்தவர் நர்ஸ் லினி புதுசெரி. அவருக்கு இந்திய அளவில் நர்ஸ்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு. 30 வயதே ஆகியிருந்த லினியின் மரணம்தான் நிபா வைரஸ் பரவியதைக் கண்டறியவும் உடனடியாகச் செயலாற்றி அதைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உதவியது. மரணத்தில் உயிர்த்தவர்!