
‘ராஷ்மிகா மந்தனா போட்டோஷூட் செய்தால் இன்ஸ்டா பரபரக்கிறது. குட்டிக் குட்டி ரியாக்ஷன்கள் கொடுத்தால் ஃபேஸ்புக் பற்றிக்கொள்கிறது.
‘‘சூரரைப் போற்று’ படத்தை முடித்தபிறகு இன்னும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் இருக்கும் சூர்யா, ஏப்ரல் மாதத்திலிருந்து ஹரி இயக்கும் `அருவா’ படத்தில் நடக்கவிருக்கிறார். இடைவெளியே இல்லாமல் ஒரே ஷெட்யூலில் முடிக்கப்படவுள்ள ‘அருவா’ திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். `அருவா’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னர், `கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம், சூர்யா. இருளர் சமூகத்தினர்கள் எதிர்கொண்ட உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. பிஸி சூர்யா!

‘ராஷ்மிகா மந்தனா போட்டோஷூட் செய்தால் இன்ஸ்டா பரபரக்கிறது. குட்டிக் குட்டி ரியாக்ஷன்கள் கொடுத்தால் ஃபேஸ்புக் பற்றிக்கொள்கிறது. இந்த சோஷியல் மீடியா டார்லிங்கின் லேட்டஸ்ட் வைரல் ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இவர் போட்ட க்யூட் ஆட்டம். ஏர்போர்ட்டுக்குள் நுழைபவர் பாட்டு கேட்டபடி ஸ்டைலாய் ஒரு ஆட்டம் ஆட, அது யாரோ ஒருவரின் கேமராக் கண்களில் சிக்கி எகிடுதகிடு வைரலாகியிருக்கிறது. அழகிய லைலா!
‘உலகமெங்கும் இப்போது கொரோனாதான் தலைப்புச் செய்தி. சீனாவில் பள்ளிகளில், கல்லூரிகள் எல்லாம் மூடப்பட DingTalk என்னும் செயலியை உருவாக்குகிறார் ஒருவர். மாணவர்கள் இந்தச் செயலியிலேயே வீட்டுப்பாடம் செய்து அப்லோடு செய்யலாம். ஆசிரியர்களும் ஆன்லைனிலேயே பாடம் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடுப்பான மாணவர்கள், செயலியின் ரேட்டிங்கை 4.9-லிருந்து தரதரவென இழுத்து 1.4 ஆக மாற்றிவிட்டார்கள். இப்போது செயலியின் நிறுவனம் மாணவர்களிடம் கதறிக்கொண்டிருக்கிறது. விபரீத சுட்டீஸ்
‘அ.ம.மு.க கட்சி அலுவலகத் திறப்பு விழா மார்ச் 12-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. நல்லநேரம் தொடங்கியவுடன் பின்வாசல் வழியாக வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். கிழக்கு முகமாக உள்ள பின்வாசல் வழியாக நுழைந்தால் சுபிட்சம் ஏற்படுமென ஜோதிடர்கள் கூறிய அறிவுரையின்படி, பின் கேட் வழியாக வந்த தினகரன், அலுவலகத்தை வாகனத்தில் இருந்தபடியே ஒரு ரவுண்டு கிரிவலம் அடித்துவிட்டுத் திறந்து வைத்ததாக நிர்வாகிகள் கூறுகின்றனர். இதிலும் பின்வழியா?

ஆஷா போஸ்லே முன்பு சிறுவயதில் ஸ்ருதிஹாசன் பாடிய புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர். அதைப் பார்த்த ஸ்ருதி உற்சாகமாகி அதைப் பகிர்ந்ததுடன், ஆஷா முன் பாடிய அன்றைக்கு மிகவும் பதற்றமாக இருந்ததை நினைவு கூர்ந்திருக்கிறார். சுருதி பிசகாமப் பாடினீங்களா?
‘‘நளதமயந்தி’யில் இலங்கைத் தமிழ் பேசி அசத்திய கீது மோகன்தாஸ், அப்பா பிரியை. ‘இந்த உலகத்தில் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் என்னை நேசித்த ஓர் ஆண் நீங்கள்தான் அச்சா. அப்படிப்பட்ட உங்களை நான் இழந்து 5 வருடங்கள் கடந்துவிட்டன. உங்கள் குரலை மெல்ல மெல்ல மறந்துகொண்டிருக்கிறேன் அச்சா. ஆனால், உங்கள் வார்த்தைகளை எப்போதும் மறக்கமாட்டேன்’ என்று இன்ஸ்டாவில் நெகிழ்ந்திருக்கிறார் கீது. அப்பாவைப் பெற்ற மகள்களுக்குத்தான் தெரியும்!

எனக்குத் திருமணம் சீக்கிரமே நடக்கவேண்டும் என என்னைவிட என் குடும்பம்தான் நிறைய கவலைப்படுகிறது. சீக்கிரம் செட்டிலாகச் சொல்லி என்னை வற்புறுத்துகிறார்கள். ஆனால் என்ன செய்வது, எனக்கு யாரைப் பார்த்தாலும் லவ் வரவில்லையே! இதுவரை என்னைக் காதலில் விழவைக்கும்படியான ஆணை நான் சந்திக்கவே இல்லை. அதனாலேயே சிங்கிளாக இருக்கிறேன்’ என லேட்டஸ்ட்டாக மனம் திறந்திருக்கிறார் கேத்தரின் தெரசா. வீட்டுக்கு வீடு...!
‘மார்ச் 8 மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணியை ஆஸி அணி வென்றது. விஷயம் அதுவல்ல. அந்தப் போட்டியைக் காணவந்த 86,174 ரசிகர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்புக்கு இதை அறிவித்த மருத்துவத்துறையினர் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அமர்ந்து கண்டுரசித்த அனைவரையும் பரிசோதனைக்கு உட்பட அறிவுறுத்தியுள்ளது. அவர் யார் என்பது வெளிப்படவில்லை. எனினும் அந்த ரசிகர் மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டின் லெவல் 2-ல் இருந்து போட்டியைக் கண்டுரசித்திருக்கிறார் என்பதை அறிந்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் நிர்வாகம், மைதானம் முழுவதையும் தொற்று வராமலிருக்கத் தீவிரமாக சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது. நோ பால்!
‘`மீ டூ’ சர்ச்சைக்கு ஆளான ஹாலிவுட்டின் ஹார்வி வெய்ன்ஸ்டென் வழக்கில் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது நியூயார்க் உச்சநீதிமன்றம். 23 வருடங்கள் சிறை என்று தீர்ப்பு எழுதிய நீதிபதிகள், இவ்வழக்கைத் தொடர்ந்த பெண்களைப் பாராட்டியதோடு இதுபோன்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்படுபவர்களின் சமூக அந்தஸ்து ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்துள்ளார்கள். தர்மம் வெல்லும்...
‘டெல்லி கலவரங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டதோடு, “52 இந்தியர்கள் பலியாகியுள்ளனர்: 526 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்: 371 இந்தியர்களின் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன; 142 இந்தியர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. நான் அப்படித்தான் பார்க்கிறேன். இதில் இந்து, முஸ்லிம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றிருக்கிறார். அப்புறம் எதுக்குங்க அந்தச் சட்டம்?
‘தன்னைப்பற்றி வெளிவரும் செய்திகளைவிடவும், மீம்ஸ்களை அதிகம் விரும்பி ரசிப்பவர் பொன்.ராதாகிருஷ்ணன்! வெளியூர்ப் பயணங்களில் பழைய சினிமாப் பாடல்களைக் கேட்பதோடு, அரசியல் குறித்த மீம்ஸ்களையும் கைப்பேசியில் தேடித்தேடிப் பார்த்துவிடுகிறார். சிலசமயங்களில், தன்னை மிகக் கடுமையாகத் தாக்கிவரும் மீம்ஸ்கள் குறித்து, காவல்துறையில் புகார் கொடுக்கக் கிளம்பும் கட்சிக்காரர்களைக்கூட, பேசி சமாதானப்படுத்தி, ‘அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். நம் வேலையை நாம் செய்வோம்’ என்று அட்வைஸ் செய்து சாந்தப்படுத்திவிடுகிறாராம்! ஒட்டுமொத்தக் கட்சியும் மீம் மெட்டீரியல்!