
கொரோனா காரணமாக வாழ்க்கையே இனிமேல் சமூக இடைவெளியுடன்தான் பயணிக்கப் போகிறது.
அனுஷ்கா கோலியின் காதலி மட்டுமல்ல; பெரிய ரசிகையும்கூட. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோது கோலி கிரிக்கெட் விளையாடுவதை கேரவனில் அமர்ந்தபடி பார்த்து ரசிக்கிற புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார் அனுஷ்கா. அந்தப் புகைப்படங்களில், கோலி விளையாடுவதை தன் செல்போனில் பார்த்து ரசித்தபடி அனுஷ்கா அமர்ந்திருக்க, மேக்கப் உமன் அனுஷ்காவுக்கு மேக்கப் போடுகிறார். கணவர் கிரவுண்டில் அதிரடித்த போது அனுஷ்காவின் முகத்தில் தெரிகிற வெற்றிக்களிப்பும், பதற்றமும் அவர் எந்த அளவுக்கு ‘டைஹார்டு கோலி ஃபேன்’ என்பதைச் சொல்கின்றன. லக்கி கோலி

கொரோனாத் தாக்கம் காரணமாக உலக நாடுகளிலிருந்து இந்தியர்கள் ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கேரளாவில் மட்டும் டிசம்பர் மாதத்துக்குள் மூன்று லட்சம் பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தாய்நாடு திரும்புபவர்கள் வெளிநாடுகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக மீண்டும் அங்கே செல்ல விரும்பவில்லையாம். கேரளாவிலேயே தங்கள் பணத்தை முதலீடு செய்து செட்டிலாகும் முடிவில் இருக்கின்றனராம். ஒரு லட்சம் பேர் மட்டுமே மீண்டும் தாங்கள் பணிபுரிந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்லும் முடிவில் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. விடைகொடு எங்கள் (வெளி)நாடே
நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருங்க, நாங்க வேலைய பாக்குறோம் எனக் களத்தில் இறங்கிவிட்டனர் ஸ்டிரீமிங் தளங்கள். ஆம், ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்துக்கே, ரெட் கார்டு, எல்லோ கார்டு எனத் திரையரங்குகள் மிரட்டிக்கொண்டிருக்க, அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன ஸ்டிரீமிங் தளங்கள். இதன்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பென் குயின்; அமிதாப், ஆயுஷ்மான் குரானா இருவரின் நடிப்பில் குலாபோ சிதாபோ, வித்யா பாலனின் சகுந்தலா தேவி எனப் பல படங்களை நேரடியாக வெளியிடவிருக்கிறார்களாம். தீபாவளி ரிலீஸுக்கும் வீடுதான் போலயே
கொரோனா காரணமாக வாழ்க்கையே இனிமேல் சமூக இடைவெளியுடன்தான் பயணிக்கப் போகிறது. பஸ் போக்குவரத்திலும் இனிமேல் சமூக இடைவெளிதான். ஆந்திர, கர்நாடக மாநிலப் பேருந்துகள் ஒரு வரிசைக்கு மூன்று இருக்கைகள் கொண்டதாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழக அரசுப் பேருந்துகளிலும் விரைவில் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம். எப்போது டிக்கெட் விலையை ஏற்றலாம் என்று காத்திருக்கும் ஆம்னி பேருந்துகளும் தற்போது டிக்கெட் விலையை இரண்டு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. அதன்படி, இனிமேல் சென்னையிலிருந்து நெல்லைக்கு ஆம்னி பேருந்தில் செல்ல நபர் ஒருவர் ரூ. 1,500 வரை டிக்கெட் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆம்னி பேருந்து ஒன்றில் இருபது இருக்கைகள் மட்டுமே இருக்குமாம். போலாம் ரைட்னு சொல்ல முடியாதுபோல!
அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ளோரா யங் என்ற 73 வயதுப் பாட்டி வெளியிடும் டிக்டாக் வீடியோக்கள் உலக ஃபேமஸ் . இவை பொழுதுபோக்கு வீடியோக்கள் அல்ல. பெண்களுக்கு எதிரான வன்முறைகள், உறவுச்சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டவை. ‘தங்கள் மீது வன்முறையைத் திணிக்கும் உறவுகளிலிருந்து பெண்கள் வெளியேறி சுதந்திரமாக வாழவேண்டும்’ என்பதே இவரது வீடியோக்கள் ஆழமாகப் பதிவு செய்யும் கருத்து. தன் பேத்தி ஒலிவியா சவோய்யின் உதவியுடன் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டுவரும் பாட்டிக்கு 77,000 ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். டிக்டாக் பாட்டி
பிரியங்கா சோப்ராவும் அவர் கணவர் நிக் ஜொனாஸும் லாஸ் வேகாஸில் வாங்கிய பிரமாண்ட பங்களாதான் அமெரிக்க ரியல் எஸ்டேட்டின் சென்ற ஆண்டு ஆச்சர்யம். நிக்கின் சகோதரரும் அவர் மனைவி `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நடிகை சோஃபி டர்னரும் அதே பகுதியில் இன்னொரு வீடும் வாங்கியிருந்தார்கள். இந்தக் கொரோனா காலத்தில் பிரியங்கா வீட்டில்தான் அனைவரும் லாக்டு. நண்பர்களுடன் ஜாலியாக நேரம் கழிக்கும் பிரியங்காவின் படங்கள் இணையத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட். நல்லாருங்க நண்பாஸ்
இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்த நாட்டுக் குடிமக்கள் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டும் என்கிற விதி உள்ளது. இந்தியக் குடிமக்களுக்கு ராணுவத்தில் பணிபுரிய வேண்டுமென்கிற கட்டாய நிலை இல்லை. தற்போது, இந்திய ராணுவத்தில் பொதுமக்களை இன்னும் அதிக அளவில் பணிபுரியவைக்க ஆலோசனை நடந்துவருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருகிறது. ‘டூர் டூட்டி’ என்ற இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் குடிமக்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சேவை புரியவேண்டும். ராணுவத்தில் நிரந்தரமாகப் பணிபுரிய விரும்பாதவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதலில் அர்ஜுனை வேலைக்குச் சேருங்க!
கேரளாவில் வளைகுடா நாட்டுப் பணம் குவிவதால், கட்டுமானப்பணிக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தேவை. இதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த 35 லட்சம் தொழிலாளர்கள் இந்த மாநிலத்தில் வசித்தனர். வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் சில கேரளத்தவர்கள் தங்கள் உறவினர்களை அந்த நாட்டுக்கு, வீட்டு வேலைக்கும் அழைத்துக்கொள்வார்கள். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் கேரளா மனதுக்கு நெருக்கம். உறவினர்கள், நண்பர்கள் எனச் சேர்ந்து ஆண்டுக்கு 2.35 லட்சம் வட மாநிலத்தவர்கள் கேரளாவில் குடியேறிக்கொண்டிருந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வடமாநிலத்தவர்கள் கேரளாவிலலிருந்து வெளியேறி வருகின்றனர். வெளியேறும்போது பல இடங்களில் தங்களுக்கு வாழ்வளித்த தாய்மண் என மண்ணை முத்தமிட்டுச் செல்கின்றனர். மண்ணுக்கு நன்றி

காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்க முடியாத இந்த இணைய சூழலில், காதலியைக் கரம்பிடித்திருக்கிறார் பல்வாள்தேவன். அட நம்ம ராணா தான் பாஸ். இன்டீரியர் டிசைனரான மிஹீக்கா பஜாஜைத் திருமணம் செய்யவிருக்கிறார் ராணா. “அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்’’ என இன்ஸ்டாவில் ராணா ஃபோட்டோ பகிர, ஹார்ட் இன்களை அள்ளிவீசிக்கொண்டு இருக்கிறார்கள் பிரபலங்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் என அறிவித்திருக்கிறார் ராணாவின் தந்தை சுரேஷ்பாபு. அப்ப அடுத்த டார்கெட் பாகுபலி தான்