
முக நூலில் கவலையைப் பகிர்ந்தவர், உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நிற்காமல் ‘ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ கோவிட் 19’என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் ஃபிட்னெஸ் என்றாலே கதாநாயகிகள்தான். அதுவும் இன்ஸ்டாவில் வொர்க் அவுட், உணவுகள் எனக் கலக்குகிறார்கள். பழங்கள் நிறைந்த பேன் கேக்தான் ராஷ்மிகா மந்தனாவின் ஆரோக்கிய உணவாம். மற்றபடி ஆசையாய் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிடலாம் என்றால் சாக்லேட் கேக், ஐஸ்கிரீம் எனக் களமிறங்கிவிடுவாராம். சாப்பிடுற விஷயத்துல எதுக்கு கவலை?

அமெரிக்கா-சீனா வர்த்தக உறவு நாளுக்கு நாள் மோசமாகி வர, அமெரிக்க நிறுவனங்கள் பலவும் சீனாவிலிருந்து அமைதியாகத் தொழிற்சாலைகளை மற்ற நாடுகளுக்கு மாற்றிவருகின்றன. இப்படித்தான் அதன் ஐபோன் தயாரிப்பை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறது ஆப்பிள். சமீபத்தில்தான் அதன் உயர் ரக ஐபோன் 11 சீரிஸ் போன்களை சென்னையில் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருந்தது. இப்போது அக்டோபர் மாதம் அறிமுகமாகவிருக்கும் ஐபோன் 12 சீரிஸ் போன்களும் இந்தியாவில், பெங்களூரில் தயாரிக்கப்படவுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 10,000 இந்தியர்களுக்கு வேலை தரப்போகிறது. 2021-ன் முதல் பாதியில் இந்தத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதனால் இந்தியாவில் ஐபோன்களின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதானாம். போங்கு பாஸ்!
கொரோனா வைரஸால் சின்னத்திரையில் நிறுத்தப்பட்ட சீரியல்களில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘நாச்சியார் புரம்’ சீரியலும் ஒன்று. `சரவணன் மீனாட்சி’ ரச்சிதா-தினேஷ் ஜோடி தயாரித்த சீரியல். தினேஷின் சொந்த ஊரான வில்லிபுத்தூரைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடரில் ஹீரோ ஹீரோயினாகவும் அவர்கள் இருவருமே நடித்தனர். இந்த சீரியலுக்காகவே தான் நடித்து வந்த பிரைம் டைம் சீரியலையும் விட்டு வந்த தினேஷ். சீரியல் நிறுத்தப்பட்டதில் ரொம்பவே அப்செட். முக நூலில் கவலையைப் பகிர்ந்தவர், உடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நிற்காமல் ‘ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ கோவிட் 19’என்றும் குறிப்பிட்டுள்ளார். சார்ந்தோருக்கு அனுதாபங்கள்!
அமெரிக்காவின் கொரோனா எண்ணிக்கையைப் பற்றிக் கவலைகொள்ளாது டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள். “வெளிப்படையாகவே சொல்கிறேன். இந்தத் தேசத்துக்கான அதிபர் பதவிக்குத் தகுதியானவர் இல்லை டொனால்டு ட்ரம்ப். அவரிடம் குறைந்தபட்ச பரிவுணர்வுகூட இல்லை. தேர்தல் முடிந்தபின், உங்கள் குழந்தைகளின் முகங்களில் நீங்கள் விழிக்க வேண்டுமென்றால் நல்லதொரு முடிவை எடுங்கள்” எனச் சீறியிருக்கிறார் ஒபாமாவின் மனைவி மிச்சல். அங்கேயுமா?
மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸில் விரைவில் இன்னொரு பெண் சூப்பர்ஹீரோ கதாபாத்திரமும் இணையவிருக்கிறது. இது சோனி உரிமம் வைத்திருக்கும் ஒரு சூப்பர்ஹீரோதான் என்றும் சத்தமில்லாமல் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தைப் பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா வைல்டு இயக்கப்போகிறார். இந்தக் கதாபாத்திரம் ‘ஸ்பைடர் வுமன்’தான் எனப் பிரபல பொழுதுபோக்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட அதற்குப் பதிலாக ஸ்பைடர் எமோஜியைப் பதிவுசெய்திருக்கிறார் ஒலிவியா. என்னமோ நடக்குது!

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘அண்ணாத்த’ திரைப்படமும் 2021 தேர்தலும்் காரணங்கள். இந்த இடைவெளியில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இருமொழிப் படமொன்றை லோகேஷ் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ராம் சரண் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆந்திர அண்ணாத்த!

ஜெயில் படத்தில் தனுஷுடன் டூயட் பாடியதிலிருந்து, `அட இந்தப் பொண்ணு செமயா பாடுதுல்ல’ எனப் பெயரெடுத்திருக்கிறார் அதிதி ராவ். சினிமாவில் இதுதான் முதல் பாடல் என்றாலும், ரஹ்மான் இசையில் லண்டன் மேடையில் `வான் வருவான்’ பாடலைப் பாடி ஆச்சர்யப்படுத்தியிருந்தார் அதிதி. நடிப்பிலும் விஜய் சேதுபதியுடன் `துக்ளக் தர்பார்.’ துல்கருடன் `ஹே சினாமிகா’, நானியுடன் V, இந்தியில் ஓர் ஆங்கிலப் படத்தின் (The girl on The train) ரீமேக் என மொழிவாரியாக ஒரு படம் கைவசம் வைத்திருக்கிறார். ஆல்ரவுண்டர்!
எப்பாடுபட்டாவது திரையரங்குகளைத் திறந்துவிடலாம் என்ற நம்பிக்கையிலிருந்த கோலிவுட் வட்டாரம், தற்போது பேக் அடிக்க முடிவு செய்திருக்கிறதாம். தமிழக அரசின் பண விநியோகத்துக்குப் பெரும் பங்காற்றுவார்கள் மதுப்பிரியர்கள் என நம்பி டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஆனால், ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட டாஸ்மாக், கோலிவுட்டை யோசிக்க வைக்கிறதாம். திரையரங்குகள் திறக்கும் அனுமதி கிடைத்தாலும் அடுத்த ஆண்டே படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்கிறது கோலிவுட். மெதுவா வாங்கப்பா!
அவ்வப்போது எழுந்து அடங்கும் அ.தி.மு.க - பா.ஜ.க பிரச்னை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. ஹெச்.ராஜாவின் அட்மின் போகிற போக்கில், ‘விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கொடுத்த கர்நாடக அரசுதான் ஆண்மையான அரசு’ என ட்வீட் செய்ய, உக்கிரதாண்டவமாடியது அ.தி.மு.க ஐடி விங். சாரணர் தேர்தல், நோட்டாவைக்கூட முந்த முடியாத கட்சி என ஆரம்பித்து, தனித்து நின்று டெபாசிட் வாங்கி உங்கள் கட்சியின் ஆண்மையை நிரூபிக்கவும் எனத் திட்டித் தீர்த்தது அ.தி.மு.க. பொறுத்திருந்து பாப்போம்!