
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் எனக் கையில் ஏற்கெனவே ஒரு டஜன் படங்களை வைத்திருக்கும் தனுஷ் பம்பரமாகச் சுழன்றுவருகிறார்
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி மற்றும் குற்றாலம் போன்ற சுற்றுலாப் பகுதிகளுக்கு அவசிய காரணங்களுக்காக மட்டுமே வருவதற்கு இ-பதிவு அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாவுக்கு அனுமதி இல்லை. ஆனால், ‘`இந்த ரணகளத்திலும் குதூகலத்தைத் தேடும் சுற்றுலாப் பிரியர்கள் உள்ளனர். உயர் மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ வசதிகளே இல்லாத நீலகிரிக்கு மருத்துவத் தேவைக்கு வருகிறோம் என அனுமதி கேட்கிறார்கள். போலி ஆவணங்களைப் பதிவேற்றுகின்றனர். அவர்களின் நோக்கம் சுற்றுலாதான். 90 சதவிகித விண்ணப்பங்கள் இப்படித்தான் உள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்து நிராகரிப்பதில் நிறைய நேரம் வீணாகிறது’’ என்று புலம்புகிறார் ஊட்டியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். என்ன கொடுமை சார்!

‘ஆலா வைகுந்தபுரமுலோ’ வெற்றிக்குப் பிறகு ஆள் ஏரியாவிலும் அமோகமான எதிர்பாப்பில் இருப்பது அல்லு அர்ஜுன் - சுகுமார் கூட்டணியில் உருவாகும் ‘புஷ்பா.’ லாக்டௌனில் ஸ்க்ரிப்ட்டை கூடுதலாகப் பட்டை தீட்டிய சுகுமார், படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என்ற ஐடியாவை அல்லு அர்ஜுனிடம் கூறி அதற்கான வேலைகளைப் பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படத்தின் ஷூட்டிங், ஜூலை 5-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. முதல் பாகத்தை இவ்வாண்டு முடித்துவிட்டு இடையில் ஸ்ரீராம் வேணு இயக்கும் ‘ஐக்கான்’ படத்தை முடித்த பிறகு ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ம்ம்..கிளப்புங்கள்!
ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் எனக் கையில் ஏற்கெனவே ஒரு டஜன் படங்களை வைத்திருக்கும் தனுஷ் பம்பரமாகச் சுழன்றுவருகிறார். ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு சென்று வரும் நேரத்தில் புதிதாக ஒரு ட்ரைலிங்குவல் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தை தேசிய விருது வென்ற பிரபல இயக்குநரான சேகர் கம்முல்லா இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் உருவாக உள்ளது. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் நாளிதழ், ‘ஆப்பிள் டெய்லி.’ சீனாவில் சிறிதளவேனும் ஜனநாயகம் இருக்கும் ஹாங்காங் சுயாட்சிப் பகுதியில், அந்த ஜனநாயக உரிமைக்காகத் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததாக ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளைக் கைது செய்தது சீன அரசு. நாளிதழின் சொத்துகளையும் முடக்கியது. ‘ஆப்பிள் டெய்லிக்கு ஆதரவளிப்போம்’ என ஹாங்காங் மக்கள் களத்தில் குதிக்க, தினம் ஒரு லட்சம் பிரதிகள் விற்ற அந்த நாளிதழின் விற்பனை தற்போது ஐந்து லட்சமாக உயர்ந்துள்ளது. கற்பி, புரட்சி செய்!
ரவுண்டு கட்டிய அப்டேட்டுகளால் லாலேட்டன் ரசிகர்கள் செம ஹேப்பி! ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான ‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்மம்’ படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ‘லூசிஃபர்’ இயக்குநர் ப்ரித்திவ் ராஜுடன் ‘ப்ரோ டாடி’ படத்தில் மீண்டும் இணைகிறார் மோகன்லால். படத்தில் மீனா, கல்யாணி ப்ரியதர்ஷன் என ஒரு பெரிய பட்டாளமே நடிக்கவிருக்கிறது. இதுபோக, ‘லூசிஃபர் 2’ படத்திற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது சாரே... கொல மாஸு!
`தூம்’ வரிசையில் வெளியான படங்களுக்கு பாலிவுட்டில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. இறுதியாக கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘தூம் 3’-யில் அமீர்கான் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். ‘தூம் 4’ படத்தில் சல்மான் நடிக்கிறார், அக்ஷய் குமார் நடிக்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், ‘நான் நடிக்கல. நீங்க நம்புலன்னாலும் இதான் நெசம்’ என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அக்ஷய் குமார். பட்சி பறந்துபோச்சு!
காங்கிரஸிலிருந்து பல மாதங்களுக்கு முன்பு விலகிய ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட சுமார் 50 பேரை ட்விட்டரில் அன்ஃபாலோ செய்திருக்கிறார் ராகுல் காந்தி. சர்ச்சைக்குரிய சில பத்திரிகையாளர்களும் இதில் அடக்கம். சுமார் 19 மில்லியன் பேர் ராகுலை ட்விட்டரில் ஃபாலோ செய்கிறார்கள். ராகுல் ஃபாலோ செய்வது வெறும் 269 பேரை! தமிழகத்தில் ஸ்டாலின், கனிமொழி, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, மோகன் குமாரமங்கலம் ஆகியோர் மட்டுமே இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். கூல் ராகுல்!
ஹைதராபாத்தில் ராபின் முகேஷ் என்பவர் ஜோமடோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். 20 நிமிடங்களில் உணவு தன் கைகளுக்குக் கிடைக்க ‘ஆஹா’ என்றவருக்கு மேலும் அதிர்ச்சி. ஏனென்றால், உணவு டெலிவிரி செய்ய முகமது அகில் என்ற டெலிவிரி பாய் சைக்கிளில் வந்துள்ளார். ‘இருந்தும் அவர் இவ்வளவு விரைவாக வந்தது ஆச்சர்யமாக உள்ளது’ என்று அவரைப் புகைப்படம் எடுத்து நடந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் முகேஷ். சுமார் 73,000 நிதி கிடைக்க, முகமது அகிலுக்குப் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளார். பொறியியல் படித்து வரும் அகிலுக்கு மீதமிருந்த தொகையைக் கல்விச்செலவுகளுக்காக அளித்துள்ளார். அன்பு மகத்தானது!
‘இதெல்லாம் எப்படிங்க சாத்தியம்?’ எனப் பலரும் நினைத்து ஆச்சர்யப்பட்டது கேரளா ரஹ்மான் - சஜிதா தம்பதி குறித்துதான். தன் காதலியை, தங்களது சிறிய ஓட்டு வீட்டில் உள்ள தனது மிகச் சிறிய அறையில் 10 ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் பொக்கிஷம்போல வைத்துப் பாதுகாத்துள்ளார். ஊரடங்கும், வறுமையும் இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவர, ‘ஆஹா... இது அதுல்ல...’ என நம் ஊர் 90’s கிட்ஸ்கள் ‘கில்லி’ படத்தை நினைவுகூறி, ‘நல்லாருங்க மக்கா...’ என ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். நீதிமன்றம் இந்தத் தம்பதிக்கு கிரீன் சிக்னல் கொடுத்தும் அடுத்தடுத்த பிரச்னைகள் வரிசை கட்டுகின்றன. ஏற்கெனவே மகளிர் ஆணையம், வழக்கு பதிந்து தம்பதியிடம் நேரில் விசாரித்தது. அடுத்ததாக மனித உரிமை ஆணையமும் நேரடியாக விசாரணை செய்தனர். இதுகுறித்து மேற்கொண்டு விசாரிக்கவும் அனுமதி கேட்டுள்ளனர். ‘`எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.. எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்’’ என்று சஜிதா கோரிக்கை வைத்துள்ளார். கில்லி மக்கா நீங்க!
மேலூர் அருகேயுள்ள அரிட்டாப்பட்டிதான் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ புகழ் ராமரின் சொந்த ஊர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானதும், குடும்பத்துடன் சென்னையிலேயே செட்டிலாகி முழுநேர நடிகராக நினைத்தார். இதற்காகத்தான் பார்த்து வந்த வி.ஏ.ஓ வேலையை ராஜினாமா செய்ய முயன்றார். அப்போது அவருடன் நடித்துக்கொண்டிருந்த சகாக்கள் ‘`அண்ணே, அவசரப்படாதீங்க. கவர்மென்ட் வேலை எப்போதும் பாதுகாப்பானது. கலைத்துறையில நிரந்தரமா காலை ஊண்டுற வரைக்கும் பார்த்து வந்த வேலைய விட்டுறக் கூடாது” என்று ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அதனால் அவ்வப்போது லீவு போட்டு, திரைப்படம், டிவியில் நடித்து வந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் சிறிய நடிகர்கள், படைப்பாளிகள் பலர் கஷ்டப்படும் இன்றைய சூழலில், கிராம நிர்வாக அதிகாரியாக மக்கள் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார் ராமர். நல்லவேளைப்பே!
சிங்கப்பூர் வாழ் தமிழரான மன்னார்குடியைச் சேர்ந்த இராஜேஷ் மோகன் என்பவர், ரோபோ தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். அதன் மூலம் வீடுகளைத் தூய்மைப்படுத்தும் ரோபோக்கள் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். கொரோனா இரண்டாவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை உணர்ந்து உருகிய அவர், அதைத் தடுக்க தன்னால் முடிந்த உதவியைச் செய்ய முன் வந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியிருக்கிறார். தர்மம் உயிர்காக்கும்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தில் ‘கைபா கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்’ என்ற அமைப்பின் சார்பில் கொரோனாப் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் நினைவாக அவர்களது பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம், மறைந்தவர்களின் பெயர்களைச் சேகரித்து, அவர்களின் பெயரில் சுமார் 1,000 மரக்கன்றுகள் வரை ஊன்றியுள்ளனர். எதிர்காலத்தில் இதனைக் குறுங்காடாக மாற்ற முடியும். ‘மறைந்தாலும் மரமாக வாழ்வார்கள்’ என்ற உன்னத நோக்கத்தோடு மரக்கன்றுகள் நடப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரமாய் வளரட்டும் மனிதம்!


யூரோ கோப்பை 2020 கால்பந்துப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. ஆட்டத்தைவிட, போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நகர்த்தி வைத்த இரண்டு பாட்டில்கள்தான் கடந்த வார சர்வதேச வைரஸ் மெட்டீரியல். போட்டிக்கு முன்பாக நடக்கும் சம்பிரதாய பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மேஜையின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் பாட்டில்களை நகர்த்தி வைத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை உயர்த்திக்காட்டினார். போட்டியின் முக்கிய ஸ்பான்சரான கோக் பாட்டில்களை ரொனால்டோ இப்படிச் செய்ததால், அந்நிறுவனத்துக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் இழப்பாம். ‘`என் மகன் கோக கோலா குடிப்பதைப் பார்த்து எனக்கு எரிச்சலாக வருகிறது’’ என்று கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ரொனால்டோ. போச்சே போச்சே!