சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

`பண்டிகை நாள்களில் திரைப்படங்களுக்கு வேலை செய்வதென்பது நரக வேதனையான விஷயம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இன்பாக்ஸ்

வாழ்க்கைவரலாற்று நூல்களில் எப்போதும் சர்ச்சைகள் இருக்கும். ஆனால், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் எழுதியிருக்கும் `Will' புத்தகம் நேர்மையானதாக இருக்கிறது என்கிற பாராட்டைப் பெற்றுவருகிறது. ``நான் ஒரு மிகப்பெரிய நடிகர், பாடகர் என்றெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஆனால், நான் ஒரு கோழை. என் தந்தை என் அம்மாவை அடித்தபோது, அம்மா ரத்தக்காயம் ஏற்பட்டுத் துடித்தபோது, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதைத் தடுக்கக்கூடிய தைரியம் என்னிடம் இல்லை'' எனப் புத்தகத்தில் முதல் எபிசோடில் சொல்கிறார். திருமண வாழ்க்கை, பாக்ஸ் ஆபீஸ் வசூல் எனப் பலவற்றைப் பற்றி எவ்விதச் செயற்கைப் பூச்சும் இன்றி வெளிப்படையாக எழுதியிருக்கிறார். பெஸ்ட் செல்லர் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கும் மார்க் மான்சனுடன் இணைந்து இந்தப் புத்தகத்தை வில் ஸ்மித் எழுதியிருக்கிறார். வாய்மையே வெல்லும்

இன்பாக்ஸ்

இஸ்லாமியப் பெண்களின் கல்வி உரிமைக்காகப் பேசி, 15 வயதிலேயே தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்து, பாகிஸ்தானிலிருந்து குடும்பத்துடன் இங்கிலாந்து வந்து தஞ்சமடைந்தவர் மலாலா. 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்று `மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்' என்ற சாதனையைப் படைத்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த மலாலா, இப்போது 24 வயதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மேலாளர் அசெர் மாலிக்கைத் திருமணம் செய்திருக்கிறார். உலகப் பிரபலங்கள் பலரும் மலாலாவுக்கு வாழ்த்து சொல்ல, சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஐந்து மாதங்களுக்கு முன்புதான் `வோக்' இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார் மலாலா. ``ஒருவருக்கு வாழ்வில் இடம் அளிக்க விரும்பினால், பார்ட்னர்களாகச் சேர்ந்து வாழலாமே, எதற்குத் திருமணம்?'' என்று அப்போது கேட்டிருந்தார். இதை வைத்துப் பலரும் அவரைக் கேள்வி கேட்கிறார்கள். இன்னொரு பக்கம் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், `இவ்வளவு படித்தும் கடைசியில் ஒரு பாகிஸ்தானி ஆணைத் திருமணம் செய்துகொண்டாயே' என்று கேட்டு வைக்க, பாகிஸ்தானியர்கள் அவரை வறுத்தெடுக்கிறார்கள். பாகிஸ்தான் Vs பங்களாதேஷ்

`பண்டிகை நாள்களில் திரைப்படங்களுக்கு வேலை செய்வதென்பது நரக வேதனையான விஷயம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த ரஹ்மான், ``நான் பொதுவாக மார்ச் மாதத்தில்தான் திரைப்படங்களுக்கான பணியைத் தொடங்குவேன். எல்லாப் படங்களும் தீபாவளியை ரிலீஸ் தேதியாகக் கொண்டிருக்கும். ரஜினி படங்களும் அதே தேதியில் ரிலீஸாகும். அந்தக் காலத்தில் என் ஸ்டூடியோவில் மின்சார வசதியும் சரியாக இருக்காது. பொங்கல், தீபாவளி என விழாக்காலங்கள் வந்தாலே நரக வேதனைதான் எனக்கு'' என்றார். ஆனால், `ரஜினி படங்களுக்கு வேலை செய்வது நரக வேதனை தரும்' என ரஹ்மான் சொன்னதாகப் பல மீடியாக்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பழைய பன்னீர்செல்வமாக மாறி சினிமாவில் அதிரடி காட்டத் தொடங்கிவிட்டார், கமல்ஹாசன். அடுத்தடுத்து இவர் நடிக்கவிருக்கும் படங்களின் இயக்குநர்களின் பெயர்கள் அசத்துகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `விக்ரம்' நடித்துக்கொண்டிருக்கிறார். இதனை முடித்துவிட்டு, மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணின் படம், அதன்பிறகு, வெற்றிமாறன், பா.இரஞ்சித் என லிஸ்ட் நீள்கிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம், ஒரு உண்மைச் சம்பவத்தின் தழுவல் என்கிறார்கள். `சார்பட்டா'வில் இம்ப்ரஸான கமல், இரஞ்சித் சொன்ன களம் மிகவும் பிடித்திருந்ததால் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம்.

அல்லு அர்ஜுனுடைய `ஆஹா' ஓடிடி தளம் டோலிவுட் நட்சத்திரங்களுடைய ஆதரவோடு பிரமாண்டமாகக் களமிறங்கியது. புதுப்புது ஷோக்கள், ஓடிடிக்காகவே படங்கள் தயாரித்தல், பல தமிழ், மலையாளப் படங்களின் தெலுங்கு டப் வெர்ஷன்களின் அணிவகுப்பு எனக் கலக்கலாக இயங்கிவருகிறது. அதில் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் `Unstoppable' எனும் புது ஷோவிற்கு பயங்கர வரவேற்பு. சினிமாவில் பன்ச் டயலாக், ஸ்டன்ட் என மக்களைக் கவர்ந்த பாலகிருஷ்ணாவின் வேறொரு முகமாக இந்த ஷோ இருக்கிறது. அவரும் செம ஜாலியாக அதகளம் செய்துவருகிறார்.

இன்பாக்ஸ்

ஒடுக்கப்படுவது காலம் காலமாக இருந்தாலும், எளிய மக்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கோவை ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் வசித்து வரும் காடர் பழங்குடி மக்களின் கல்லார் கிராமம், கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையில் சேதமடைந்துவிட்டது. இதனால், அருகில் உள்ள ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் குடிசை போட்டனர் காடர்கள். வனத்துறை அவர்களை வலுக்கட்டாயமாக வனத்தை விட்டு விரட்டி, எஸ்டேட் லைன் வீட்டில் தங்க வைத்தது. ஆனால், காடர்கள் தங்களது உரிமைகளை விட்டுக்கொடுப்பதாக இல்லை. இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடினார்கள், அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை. வன உரிமைச் சட்டம் அடிப்படையில் அவர்களாகவே அந்தப் பகுதிக்குக் குடியேறினார்கள். சட்டரீதியாகவும், போராட்டத்திலும் வலுவாக இருந்ததால், அரசாங்கம் தற்போது காடர் பழங்குடிகளுக்கு பட்டா கொடுத்துள்ளது. நிலம் எங்கள் உரிமை..!

அன்டார்க்டிக் பகுதியில் மட்டுமே வசிக்கும் அடேலி இனப் பெங்குயின் ஒன்று சுமார் 3,000 கி.மீ பயணம் செய்து நியூசிலாந்து நாட்டின் கடற்கரைக்கு வந்திருப்பது மிக அரிதான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. வரலாற்றிலேயே இப்படி நடந்திருப்பது இது மூன்றாவது முறை. `பிங்கு' என்று பெயரிடப்பட்ட அந்தப் பெங்குயின் உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் சோர்ந்துபோயிருந்தது. அதற்கு உணவு கொடுத்து, வேட்டை விலங்குகள் எதுவும் கொன்றுவிடாமல் பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர் நியூசிலாந்து விலங்கியல் அதிகாரிகள். அன்டார்க்டிக் பனிப்பகுதியில் கடல்கள் சூடாவதுதான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மேற்பரப்பு சூடேறுவதால் மீன்கள் கடலின் ஆழத்துக்குச் செல்கின்றன. இதனால் உணவு கிடைக்காமல் பெங்குயின்கள் பட்டினியில் வாட நேர்கின்றன. ``காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் நேரக்கூடும் என்பதை எடுத்துச் சொல்லும் எச்சரிக்கை மணியே இந்தப் பெங்குயின் பயணம்'' என்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். புவியைப் பேணுவோம்

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் லதா. தந்தையால் கைவிடப்பட்ட வறிய நிலையில் உள்ள இந்த மாணவி, சங்ககிரியில் ஒரு பெண்கள் கல்லூரியில் படித்துவருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக கட்டண பாக்கி உள்ளதால், கல்லூரிக்குச் செல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். இதனை அறிந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரான `தமிழ்' ராஜேந்திரன் என்பவர், நண்பர்கள் பலரிடமும் உதவி கேட்டிருந்தார். அதோடு தன் நண்பரான நடிகர் சத்யராஜுக்கு இந்தத் தகவலைக் கொண்டுபோயிருக்கிறார். கேரளாவில் ஷூட்டிங்கில் இருந்த சத்யராஜ், உடனடியாக அந்த மாணவிக்கு 10,000 ரூபாய் அனுப்பி உதவியிருக்கிறார்.

மனநலம் பாதித்து குணமடைந்தவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளித்து, சமுதாயத்தில் ஒன்றிணைப்பதற்கு ஏதுவாக ‘இடைநிலை பராமரிப்பு இல்லம்’ தொடங்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குத் தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில், எஸ்.ஆர்.டி.பி.எஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் பராமரிப்பு இல்லம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்ற பலர், ‘‘குடும்பத்துடன் மாதம் ஒரு நாள் இந்த இல்லத்துக்கு வந்து மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொடுப்போம்’’ என்று தெரிவித்தது, கூடியிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மறுவாழ்வு இல்லத்தில், தையல் பயிற்சி, ஒயர்க்கூடை பின்னுதல், கைவினைப் பொருள்கள் செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, சுயதொழில் தொடங்கவும் வழி செய்யப்படுகிறது.

போதை மருந்து விவகாரத்தில் கைதான பிறகு நடிகர் ஷாருக்கான் தன் மகன் ஆர்யன் கானின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். இவ்வளவு நாள் ஷூட்டிங் போகாத ஷாருக், தற்போது ஆர்யன் ஜாமீனில் விடுதலையாகியிருப்பதால் `பதான்' படத்தின் ஷூட்டிங்கிற்காக ஸ்பெயின் போகிறார். அதற்கு முன்பு தன் மகனுக்குப் புதிய பாதுகாவலர் ஒருவரை நியமிக்க ஷாருக்கான் முடிவு செய்தார். புதிய பாதுகாவலரைத் தேட நேரமில்லாததால், தனது பாதுகாவலர் ரவி சிங்கை ஆர்யனின் பாதுகாப்புக்கு நியமிக்க முடிவு செய்துள்ளார். ரவி சிங் கிட்டத்தட்ட ஷாருக்கானின் குடும்பத்தில் ஒருவர் போலவே இருப்பவர்.

`இறுதிச்சுற்று' படத்தின் இந்தி வெர்ஷனில் பிசியாகிவிட்ட இயக்குநர் சுதா கொங்கரா, தனது அலுவலகத்தை செம மாடர்னாக மாற்றியிருக்கிறார். ஹாலில் விருதுகள், ஷீல்டுகளுக்கென தனி ஷோ கேஸ் மிளிர்கிறது. தனது அறையில் ஆங்கில நூல்கள் கொண்ட மினி லைப்ரரி ஒன்றையும் வைத்திருக்கிறார்.

ஜெர்மனியின் பிரபல DW தொலைக்காட்சியின் Eco இந்தியா என்ற நிகழ்ச்சி புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஜெர்மனி தேசத்திலிருந்து கடந்த 75 ஆண்டுகளாக ஒளிபரப்பபுப்பணியை நடத்திவரும் DW உலகம் முழுக்க 32 மொழிகளை உள்ளடக்கிய ஊடகவியலாளர்களைக் கொண்ட முன்னணி பன்னாட்டு ஊடகமாகச் செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் தங்களுக்கான பிரிவைக்கொண்டிருக்கும் DW முதல் முதலாக ஈகோ இந்தியா என்ற சுற்றுச்சூழல் பிரச்னையை மையமாகக்கொண்ட ஆவணநிகழ்ச்சியைத் தமிழில் வழங்க முன்வந்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பாக ஆசிரியர்குழு இயக்குநர் ஸ்ரீநிவாசன், தலைமைச் செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் பங்கேற்கின்றனர்.

இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், தான் புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து, ``என் வீட்டு வேலைக்காரப் பெண் புடவையில் உங்களைவிட அழகாக இருப்பார்'' என்று ஒருவர் கிண்டல் செய்திருந்தார். ``உங்கள் வீட்டுப் பணிப்பெண் நிச்சயம் அழகாக இருப்பார். அவரை நீங்கள் கண்ணியத்துடன் நடத்துவீர்கள் என்றும், அவரின் உழைப்பை மதிப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அவரிடம் அதிகாரத்தைக் காட்டி வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளாதீர்கள்'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்வரா. நெத்தியடி

இன்பாக்ஸ்

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகள் நடக்கின்றன. இதனால் சாலைகள் அனைத்தும் மிக மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தினமும் வேதனையைச் சந்தித்துவருகிறார்கள். அடிக்கடி விபத்துகளில் சிக்கி எலும்பு முறிவு உள்ளிட்ட சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். தற்போதைய மழைக்காலத்திலும் சாலைகளைச் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வராததால், கடுப்படைந்த நெல்லை பேட்டைப் பகுதி இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், ``சாலைகளைச் சீரமைக்காமல் அதில் விபத்து அல்லது அசாதாரண சம்பவங்கள் நடந்தால், அதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்படும்” என அதிரடியாகத் தெரிவித்துப் பரபரப்பைக் கிளப்பினார். ஆனாலும் சாலையைச் சரிசெய்வதற்கு அதிகாரிகள் முன்வராததால், தானே தன்னார்வலர்களின் துணையோடு சாலையில் இருந்த பள்ளங்களைச் சீர்செய்தார். “நல்லவேளையாக இதுவரை உயிரிழப்பு எதுவும் நடக்கவில்லை. இனியும் அப்படி ஆகிவிடக் கூடாது என்பதால், எனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளைச் சரிசெய்தேன்” என்கிறார்.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

1995-ம் ஆண்டு ஊட்டியில் நடத்தப்பட்ட 100-வது மலர்க் கண்காட்சியின் நினைவாக, ஊட்டி விஜயநகரம் பகுதியில் தோட்டக் கலைத்துறை மூலம் சுமார் 40,000 ரோஜாச் செடிகள் நட்டு பிரமாண்டமான நூற்றாண்டு ரோஜாப் பூங்கா உருவாக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ரோஜா செடிகளைத் தருவித்து உருவாக்கிய இது, ஆசியாவின் சிறந்த ரோஜாப் பூங்காக்களில் ஒன்று. இங்கு நான்காயிரத்திற்கும் அதிகமான ரகங்களில் ரோஜாக்கள் இருந்தாலும், பூங்கா நுழைவாயில் பராமரிக்கப்பட்டு வரும் பச்சை நிற ரோஜாவுக்கு எப்போதுமே மவுசு அதிகம். ரோஜாக்களில் அரியவகையாகக் கருதப்படும் இந்தப் பச்சை ரோஜாக்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இதனை ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பியாக இருக்கும் ரவளிப்ரியா, குற்றச் செயல்களில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறு வாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். சுயதொழில் தொடங்குவதற்கு மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் அவர்களுக்கு வங்கிகளில் கடன் பெற்றுத் தருகிறார். மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் முதல்கட்டமாக 14 நபர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெற்றுத் தந்துள்ளது திருந்தி வாழும் நபர்களை நெகிழ வைத்துள்ளது. ரவளிப்ரியாவின் இந்தச் செயல் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.