
பிறந்த நாள் என்றால் கரிஷ்மா கபூர் குடும்பத்துடன் வெளிநாடு பறந்திடுவார். இந்த வருடம் லாக்டெளன் என்பதால் பர்த்டே இன் ஹோம்தான்.
* ஒடிஷா மாநிலம் பூரியில், கொரோனா கலவரத்திலும் நடந்து முடிந்திருக்கிறது பூரி ஜெகநாதர் தேர்த்திருவிழா. இந்தியா முழுக்க அனைத்து மத நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது. முதலில், இந்தத் திருவிழாவை நடத்த அனுமதித்தால் பூரி ஜெகநாதரே மன்னிக்கமாட்டார் என்று தடை விதித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. பின்னர் தேர்த் திருவிழா நடத்த அனுமதித்ததுடன் கடுமையான விதிகளைப் பின்பற்றவும் சொன்னார். அதன்படி,1,143 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்து தேர்த் திருவிழாவை நடத்தியிருக்கிறது கோயில் கமிட்டி. நெஜம்மாவே ஊர்கூடி....
* ஜெஸ்ஸி கோம்ப்ஸ். உலகின் அதிவேகமான பெண் ஓட்டுநர் (Fastest female land-speed record-holder) என கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். ஆனால் அந்தப் பாராட்டைப் பெற அவர் உயிரோடு இல்லை. 2019ஆம் ஆண்டு இந்தச் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போதே விபத்தில் இறந்துவிட்டார் 39 வயதான ஜெஸ்ஸி. 522.783 mph வேகத்தில் பறந்த அவரது காரின் முன் சக்கரங்கள் எதன்மீதோ மோதிச் செயலிழந்ததில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அவர் மறைந்து பத்து மாதங்களுக்குப் பின்னர் அவரின் இந்தச் சாதனையை அங்கீகரித்து விருது வழங்கியிருக்கிறது கின்னஸ். வருத்தங்கள்

* பெங்களூரில் கோவிட்-19 சிறப்பு மருத்துவமனை ஆகியிருக்கிறது கர்நாடக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டல். குமரகிருபா கெஸ்ட் ஹவுஸ் எனும் பிரமாண்ட ஹோட்டலில் 100 அறைகள் அரசியல்வாதிகளின் கொரோனா சிகிச்சைக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த 100 அறைகள் தவிர மற்ற பகுதியில் இருக்கும் அறைகளில் 33 சதவிகிதம் வரை ஹோட்டல் இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ரணகளத்துலயும்...
* சன்னி லியோன் இன்ஸ்டாவில் சமீபத்திய ரிலீஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிற பேல்போ (Balboa) ஏரிக்கரைக்குக் குடும்பத்துடன் அடித்த விசிட்தான். ‘புது இடம், எங்களை அறியாத மக்கள். அதனால் அந்த ஏரிக்கரையில் எங்கள் மூன்று குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பண்ணையில் பறித்த ஃப்ரெஷ் காய்கறிகளை, பழங்களைச் சாப்பிட்டோம்’ என்று சன்னி லியோன் சிலிர்க்க, கணவர் டேனியல் ‘பறவைகள், குழந்தைகள், படகு சவாரி, கூடவே என் மனைவி... மகிழ்ச்சி’ என்று ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். ஹேப்பி ஃபேமிலி
* பிறந்த நாள் என்றால் கரிஷ்மா கபூர் குடும்பத்துடன் வெளிநாடு பறந்திடுவார். இந்த வருடம் லாக்டெளன் என்பதால் பர்த்டே இன் ஹோம்தான். அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்திருக்கிறார் ஹெல்தி டயட், ஏரியல் ஃபிட்னஸ் என்று 46 வயதிலும் ஸ்லிம்மாக வலம் வரும் கரிஷ்மா. ‘கண்களையல்ல, மனங்களை மயக்கும் அழகி’, ‘எல்லா ஹீரோஸுடனும் பொருந்திய பர்ஃபெக்ட் ஹீரோயின்’ என்று கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். ‘என்னுடன் நடனமாடிய இந்தப் பொண்ணு...’ என்று மாதுரி தீக்ஷித் ஹார்ட்டின் விட, சல்மான் கான் ‘லாட்ஸ் ஆஃப் லவ் கரிஷ்’ என்று வாழ்த்தியிருக்கிறார். 90’ஸ் ஸ்டார்ஸ்!
* சென்னை நகர் முழுவதும் காய்ச்சல் முகாம்களை சென்னை மாநகராட்சி நடத்திவருகிறது. இம்முகாம்களில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்களை உடனடியாக அருகிலிருக்கும் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். பரிசோதனை முடிந்த பின்னர் இவர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆட்டோ, டாக்ஸிகள் ஓடாததால் வயதானவர்கள், வாகனம் இல்லாதவர்களுக்குத்தான் மிகச் சிரமமாக இருந்தது. இதைக் களைவதற்காக ‘கொரோனா தடுப்பு ஆட்டோ சேவை’யை மாநகராட்சியின் தென்பகுதி துணை ஆணையர் ஆல்பி ஜான் ஐ.ஏ.எஸ். அறிமுகப்படுத்தியுள்ளார். காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைப் பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு கையோடு வீட்டிலும் பத்திரமாக விடுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்குக் கவச உடைகள், மாஸ்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. சென்னை நகர மக்களிடம் இந்த சேவை. ஆபத்தில் விடமாட்டோம்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் வலது கையில் எப்போதும் ஒரு சிவப்பு நிறக் கயிறு இருக்கும். ரசமணி வைத்து தயாரிக்கப்பட்ட கயிற்றை ராசிக்காக கட்டியிருந்தார். எந்தச் சூழலிலும் அதை அவிழ்க்காதவரை கொரோனா கழற்ற வைத்துவிட்டது. கயிறு அணிந்திருப்பதால் கையுறை மாட்டும்போது சிரமமாக இருந்ததாம். கொரோனா பயத்தில் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு கையுறையோடுதான் பவனி வருகிறார். சில சமயங்களில் வாட்ச்கூடக் கட்டுவதில்லை. கை கழுவிட்டாரோ
சீனப் பொருள்களுக்கு இந்திய மண்ணில் இடம் இல்லை என நரம்பு புடைக்கப் பேசிக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு நற்செய்தி. இந்தியாவில் வெளியான சில நிமிடங்களிலேயே சீன நிறுவனமான ஒன் பிளஸ்ஸின் 8, 8 ப்ரோ மொபைல்கள் அமேசான் தளத்தில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்திருக்கின்றன. அடுத்தடுத்த விற்பனைகளுக்கு இந்தியாவில் படு ஜோர் என்கிறார்கள். 20,000 ரூபாய் செக்மென்ட்டில் மொபைல் விற்பனையை ஆரம்பித்த ஒன் பிளஸ் படிப்படியாய் முன்னேறி 60,000 ரூபாய் வரை சென்றுவிட்டனர். விட்டுப்போன மிடில் கிளாஸ் மார்க்கெட்டை மீட்டெடுக்க , மீண்டும் கம்மி விலைக்கு ஒன் பிளஸ் Z என்னும் மொபைலை இறக்கவிருக்கிறார்கள். வாருமய்யா வாருமய்யா
* ஆந்திர தளபதி மகேஷ் பாபுவும் அவர் மகள் சித்தாராவும் லாக்டெளனில் ஆட்ச் ஒரு விளையாட்டு வைத்திருக்கிறார்கள். நாக்கைக் குழறச் செய்யும் சொற்களைக் கொண்ட வாக்கியத்தை வேகமாகச் சொல்லும் டங் ட்விஸ்டர்தான் அந்த கேம். ஒவ்வொரு மொழியிலும் பல டங் ட்விஸ்டர்கள் உண்டு. மகேஷும் மகளும் சொன்னது "how much wood would a woodchuck chuck if a woodchuck could chuck wood". இருவரும் இதைச் சொல்ல முயலும் க்யூட் வீடியோ தெறி வைரல். `அப்பா சொல்லல. நாந்தான் ஜெயிச்சேன்' என சித்தாரா சொல்ல, வேற வழியின்றித் தோற்றிருக்கிறார் டாடி மகேஷ். தங்கமீனா ப்ரோ

* உலக அளவில் நோலனின் TENET படம் என்றால், இந்தியாவுக்கு ராஜ மௌலியின் RRR தான். பாகுபலிக்குப் பின்னர் வெளியாகும் ராஜமௌலியின் படம் என்பதால், எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறி யிருக்கிறது. இதில் `மகதீரா' ராம் சரணும், யமதொங்கா `ஜூனியர் NTRம் கலக்க விருக்கிறார்கள். இன்னும் பிரமாண்டம் கூட்ட பாலிவுட்டின் அலியா பட், அஜய் தேவ்கன் என இந்தியா முழுமைக்கான படமாகத் தயாராகிவருகிறது RRR. சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சித்தாராம ராஜு, கொமாரம் பீம் இருவரது வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில், இருவரின் மானசீக குருவாக நடிக்கிறார் அஜய் தேவ்கன். டெனட்டின் ரிலீஸ் ஆகஸ்டுக்குத் தள்ளிப் போக, ஆர் ஆர் ஆர் அடுத்த ஜனவரி என்கிறார்கள். அடப்பாவி கொரோனா