கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

 ஹாலே பெர்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாலே பெர்ரி

அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அலா வைகுந்தபுரமுலோ அதிரி புதிரி ஹிட்.

  • சன் + விஜய் கூட்டணியின் அடுத்த படம் துப்பாக்கி - 2 என்பது உறுதியாகிவிட்டது. முதலில் வேறொரு பெயரில் இதே கதையை எடுக்கலாம் என்ற முடிவில் இருந்த சன் பிக்சர்ஸ், தற்போது ‘துப்பாக்கி - 2’ என்பதையே முடிவு செய்திருக்கிறதாம். டைட்டில் ஜெமினி நிறுவனத்திடம் இருப்பதால் அவர்களை அணுகியிருக்கிறது சன் பிக்சர்ஸ். வீ ஆர் வெயிட்டிங்!

  • வீரப்பன் என்கவுண்டர் புகழ் விஜயகுமார் இப்போது மத்திய அரசின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸர். அவரது குழுவில் இருந்த மருத்துவர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பதாக சாம்பிள்கள் சோதனைக்குச் சென்றன. இதன் அடிப்படையில் விஜயகுமாரும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். உடனிருந்த அந்த மருத்துவருக்கு நெகட்டிவ் என்று வந்துவிட்டது. இருந்தாலும் முக்கியஸ்தர்களைச் சந்திப்பதும் அலுவல் வேலைகளைத் தொடர்வதும் இப்போதைக்கு வேண்டாம் என்று தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார் விஜயகுமார். ஆல் இஸ் வெல்.

  • அமிதாப் பச்சனின் குடும்பம் மும்பையில் இருக்க, லாக் டௌன் காரணமாக மனைவி ஜெயா பச்சன் மட்டும் டெல்லியில் இருக்கிறார். இந்த நேரத்தில் ஜெயா பச்சனின் 72-வது பிறந்தநாள் வந்திருக்கிறது. மகன் அபிஷேக்பச்சன் “எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு சொல்லைச் சொன்னால் மனம் குளிரும்... அது அம்மா. நானும் அப்படித்தான் மா. உங்கள் பிறந்தநாளில் நீங்கள் எங்களை விட்டுத் தள்ளி இருந்தாலும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறோம்... லவ் யூமா” என்றும், மகள் சுவேதா பச்சன் “நான் எப்போதும் உங்களை நெஞ்சில் சுமந்துகொண்டேயிருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் நீங்களும் அங்கே என் மனதுக்குள் பத்திரமாக இருப்பீர்கள்” என்றும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். நெகிழ்ந்துபோன பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்துவிட்டனர். கொரோனா விழிப்புணர்வுக் குறும்படப் பணிகளில் பிஸியாக இருக்கிற அமிதாப், மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்திருக்கிறார். வாழ்த்துகள்ங்க

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்
  • அல்லு அர்ஜுன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அலா வைகுந்தபுரமுலோ அதிரி புதிரி ஹிட். அவரின் அடுத்த படம் ரங்கஸ்தலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் சுகுமாரோடு. இதுவும் இன்னொரு பீரியட் படமாகத்தான் இருக்குமென எதிர்பார்த்ததை ஃபர்ஸ்ட் லுக் உறுதி செய்திருக்கிறது. அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியான இந்த ‘புஷ்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்தான் அன்றைய டிரெண்டிங். இதில் அல்லுவோடு நம்ம விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்பது ஹைலைட். “அல்லு அர்ஜுனை இப்படிலாம் பாப்போம்னு நினைச்சுக்கூடப் பாக்கல” என இப்போதே ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள் அவர் ரசிகர்கள். சால பாக உந்தி பாபு

  • கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் மோடி கருஞ்சீரகத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கபசுரக் குடிநீரையும் எடுத்துக்கொள்கின்றனர். இயற்கை உணவு முறையைக் கடைப்பிடிக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், காலை எழுந்தவுடன் தனது தோட்டத்தில் இருந்து பிரண்டை நாரை எடுத்து, அதில் சாறு பிழிந்து நோய் எதிர்ப்புச் சக்திக்காக உட்கொள்கிறார். விஜயகாந்துக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அவரது குடும்பம் எச்சரிக்கையாக இருக்கிறது. சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுவாசலை மாட்டுச் சாணியுடன் மஞ்சள் பொடியைக் கலந்து தினமும் தெளித்துக் கூட்டுகின்றனர். வேப்பிலை ப்ளஸ் மஞ்சள் கலந்த நீரில் தினமும் இருவேளை வீட்டைத் துடைக்கிறார்கள். வெயில் சீசன் என்பதால் தினமும் இரண்டு இளிநீரோடு, ஒரு டம்ளர் கபசுரக் குடிநீரையும் குடிக்கிறார் கேப்டன். பத்திரமா பாத்துக்கோங்க.

  • கொரோனாவை விடவும் அதைப் பற்றிய வதந்திகள் உலகமெங்கும் மின்னல் வேகத்தில் பரவிவருகின்றன. அப்படியான ஒரு சதிக்கோட்பாடுதான் ‘5G நெட்வொர்க்குகள்தான் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம்’ என்பதும். 5G மொபைல் டவர்களுக்குத் தீ வைத்துக் கொளுத்தும் சம்பவங்கள் இங்கிலாந்தில் நடந்தேறியுள்ளன. இந்த கான்ஸ்பிரஸி தியரியை உருவாக்கியவர்கள் முன்வைக்கும் ஆய்வு நூலே இந்தச் சம்பவங்களுக்கு முக்கிய காரணம். ஒரு பாக்டீரியா மற்றுமொரு பாக்டீரியாவுடன் தகவல்களை மின்காந்த (electro-magnetic) கதிர்வீச்சு சமிக்ஞைகள் மூலமே பரிமாறிக்கொள்கிறது என்கிறது அந்த ஆய்வு. இந்த அனுமானமே சர்ச்சையானது என வல்லுநர்கள் பலரும் இதை நிராகரித்துள்ளனர். எல்லாம் சரி, இந்த ஆய்வே பாக்டீரியா பற்றியது, வைரஸுக்கும் பாக்டீரியாவிற்கும்கூட வித்தியாசம் தெரியாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு

  • மறைந்த சிதார் மேதை பண்டிட் ரவிசங்கரின் நூறாவது பிறந்த நாள் சில தினங்களுக்கு (ஏப்ரல் 7) முன்னால்தான் வந்தது. தந்தையின் பிறந்த நாளை உலகின் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டாட வேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்த மகள் அனோஷ்காவின் ஆசை, கொரோனாவால் தடைப்பட்டுவிட, ரவிசங்கரின் மனைவி சுகன்யா அதை வீட்டிலேயே சிம்பிளாகக் கொண்டாடியிருக்கிறார். “என் கணவர் வாழ்ந்த வீடுதான் எனக்குக் கோயில். அவர் இப்போது எங்களுடன் இல்லையென்றாலும், எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் அவர் இருப்பை உணர்கிறார்கள். அனோஷ்கா ஆசைப்பட்டது நடந்திருந்தால் அதுவொரு வரலாற்று நிகழ்வாக இருந்திருக்கும். அது நடக்காதது கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் வீட்டிலேயே அவருக்குப் பிடித்த இசை மற்றும் சமையலுடன் பூஜை செய்துவிட்டேன்” என்கிறார் காதலுடன். இசை அஞ்சலி

  • ‘மிஸ் இங்கிலாந்து 2019’ பட்டம் வென்ற மருத்துவர் பாஷா முகர்ஜி இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மீண்டும் மருத்துவராக இங்கிலாந்தில் பணியில் இணைந்திருக்கிறார். 23 வயதாகும் பாஷா, தன் ஒன்பதாவது வயதில் இங்கிலாந்தில் செட்டிலானவர். இரண்டு மருத்துவப் பட்டப்படிப்பு, ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய திறன் எனக் கலக்கும் இவரின் ஐ.க்யூ 146. எல்லோராலும் ‘ஜீனியஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் ‘மிஸ் இங்கிலாந்து’ பட்டம் வென்ற பிறகு, இந்தியாவில் தொண்டுப் பணியில் ஈடுபட்டுவந்தார். தற்போது மீண்டும் இங்கிலாந்துக்குச் சென்று மருத்துவப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். ‘என் பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு இதைவிடச் சரியான தருணம் இல்லை. இங்கிலாந்துக்குத் தேவைப்படும் நேரத்தில் உதவவில்லை என்றால் ‘மிஸ் இங்கிலாந்து’ பட்டம் எதற்கு?’ என்று அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார் மருத்துவர் பாஷா. டாக்டர் பியூட்டி

  • ஃபேஸ்புக் நிறுவனம் சென்ற வருடம் புதிய முயற்சிகளைச் சோதித்துப் பார்க்கத் தனிக்குழு ஒன்றை அமைத்தது. New Experimentation Team (NPE) என்றழைக்கப்படும் அந்தக் குழு இளஞ்ஜோடிகளுக்காக ‘Tuned’என்றொரு அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. IOS செயலிகளில் மட்டும் கிடைக்கும் இதன் சோதனை ஓட்டம் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் இப்போதைக்குக் கிடைக்கிறதாம். ஜோடிகளுக்குள் பாடல், உரையாடல், ஆல்பம் என்று தனி டைம்லைனில் இவை நடக்கும் என்கிறது அந்தக் குழு. காதலுக்கு மரியாதையா?

ஹாலே பெர்ரி
ஹாலே பெர்ரி
  • அதிரடிக்கு பெயர் பெற்ற ஜான் விக் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்திருந்தார் நடிகை ஹாலே பெர்ரி. ‘‘அந்தப் படத்தின் கதையைக் கூட கேட்கவில்லை. நான் ஜான் விக் படங்களின் மிகப்பெரிய ரசிகை. ஆக்‌ஷன் படங்கலில் நடிக்க வயது தடையில்லை எனக் காட்டுவதற்காகவே அதில் நடித்தேன்’’ என இப்போது சொல்லியிருக்கிறார். உங்களுக்கு வயசே ஆகல!