சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

ஆலியா பட் - ரன்பீர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலியா பட் - ரன்பீர்

தன் பயணத்திட்டங்களைத் தாண்டி இன்னும் கமல்ஹாசன் அமெரிக்காவிலேயே இருக்கிறார்.

இன்பாக்ஸ்

கோடம்பாக்கத்தில் மீண்டும் ரகுல் ப்ரீத் சிங் கொடி பறக்கப் போகிறது. மாலத்தீவுக்கு ரிலாக்ஸ் ட்ரிப் அடித்து வந்திருக்கும் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘அயலான்’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். தவிர ‘இந்தியன் 2’-ல் அவரது போர்ஷன் இன்னும் மிச்சம் இருக்கிறது. ‘`படப்பிடிப்பு எப்போது ஆரம்பித்தாலும் சொல்லுங்கள். அடுத்த பிளைட்டைப் பிடித்து வந்துவிடுகிறேன்’’ எனத் தயாரிப்புத் தரப்புக்குச் சொல்லி வைத்துவிட்டார் ரகுல். அநேகமாக ஹெச்.வினோத் இயக்கும் ‘அஜித் 61’-ல் ரகுல் இருந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

இன்பாக்ஸ்
Rajanish Kakade

ஆலியா பட் தன் பல ஆண்டுக்கனவை நிறைவேற்றியிருக்கிறார். ‘சிறுவயதில் என்னுடைய கிரஷ் ரன்பீர்’ என ஆலியா சொன்னபோது, அது வெறும் பாலினக் கவர்ச்சி என்றது பாலிவுட். சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் உதவி இயக்குநராக இருந்த ரன்பீரைப் பார்த்துக் காதல் கொண்ட தருணத்தில் இருந்து, தற்போது ரன்பீரைக் கரம்பிடித்த தருணம் வரை டைம்லைன் போட்டு ரன்பீர்-ஆலியா காதலைப் பட்டியலிடுகின்றன வட இந்திய ஊடகங்கள். இருவருமே இதுகுறித்துக் கேள்வியே கேட்கக்கூடாது என்கிற கட்டளையுடன்தான் பேட்டியே தருவார்கள். அப்படியிருந்தும் RRR புரோமோஷனின் போது, ‘R உங்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா?’ என ரன்பீரை மனதில் வைத்து சூசகமாய்க் கேட்க, வெட்கத்தில் மூழ்கினார் ஆலியா. தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘பிரம்மாஸ்திரா’ படத்திலும் இருவரும் ஜோடி என்பதால், காதல் இன்னும் கிளை பரப்பிப் பூத்துக் குலுங்கியது. பல ஆண்டுக் காதலை க்யூட் கல்யாணமாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் ஆலியா பட். வாழ்த்துகள் RA!

இன்பாக்ஸ்

மார்க்சிய ஆய்வறிஞரும் கலை இலக்கியப் படைப்பாளியுமான எஸ்.வி.ராஜதுரை 82 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘இதுதான் என்னுடைய கடைசிப் பிறந்தநாளாக இருக்கும்’ என அதிர்ச்சி தரும் வகையில் நண்பர்களுக்குப் பிறந்த நாள் அழைப்பு விடுத்திருந்தார். பார்வைக் குறைபாடு, இதய பலவீனம் என அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு தாங்கமுடியாத உபாதைகளால் அவதிப்பட்டுவருகிறார். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை வாசிக்கவும் எழுதவும் ஒதுக்கிய எஸ்.வி.ராஜதுரை, இந்த நிலையிலும் அதைக் கைவிடவில்லை. மார்செல்லோ முஸ்ட்டோ எழுதிய War and the left என்ற நூலை ‘போரும் இடதுசாரிகளும்’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்து அச்சுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். படைப்பிலக்கியத்தின் மீதான தீராத வேட்கையே தன்னை இயங்க வைப்பதாகக் கூறுகிறார் எஸ்.வி.ஆர். நூற்றாண்டைக் கடப்பீர்கள் தோழர்!

இன்பாக்ஸ்

தன் பயணத்திட்டங்களைத் தாண்டி இன்னும் கமல்ஹாசன் அமெரிக்காவிலேயே இருக்கிறார். தன்னுடைய கனவுப்படைப்பான ‘மருதநாயகம்’ படத்தை எப்படியும் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக தீவிர நிதி திரட்டலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தியா திரும்புவதை மேலும் ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கிறார். அப்போ கட்சியோட நிலைமை?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது பள்ளிப்பருவத்தில் முதன்முதலில் இந்தித் திணிப்பை எதிர்த்து, ‘தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டு அரசியல் பயணத்தைத் தொடங்கிய இடம், திருவாரூர் தெற்கு வீதி. இப்போது திருவாரூர் தெற்கு வீதிக்கு, ‘டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் சூட்டியுள்ளது திருவாரூர் நகராட்சி. இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசும் திருவாரூர் தி.மு.க-வினர் ‘`தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கலைஞர் கருணாநிதி சாலை, கலைஞர் கருணாநிதி நகர் உள்ளன. ஆனால், அதையெல்லாம்விட திருவாரூர் தெற்கு வீதிக்கு அவர் பெயரை வைத்ததே பொருத்தமாக உள்ளது’’ என்கிறார்கள்.முகவரி ஆனார் மு.க!

இன்பாக்ஸ்

திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் இருக்கிறார் மகேந்திரன். இலங்கையைச் சேர்ந்தவர். இயற்கை ஆர்வலரான இவர், சிறைக்குள்ளேயே மரக்கன்றுகளை வளர்ப்பது, விதைகளைச் சேகரிப்பது போன்றவற்றைச் செய்துவருகிறார். சமீபத்தில் மகேந்திரன் தான் வளர்த்து வைத்திருந்த புங்கன், பாதாம், அத்தி, கொய்யா, வேம்பு என 1,500 மரக்கன்றுகளையும், 6 மூட்டைகளில் சேகரித்து வைத்திருந்த 5,000 புங்கன் மர விதைகளையும் அதிகாரிகள் முன்னிலையில் திருச்சியைச் சேர்ந்த தண்ணீர் அமைப்பிற்கு வழங்கியிருக்கிறார். சிறையில் கிடைத்த பால் பாக்கெட்டுகள், எண்ணெய் பாக்கெட்டுகளில் விதைகளைச் சேகரித்து வைத்திருந்த மகேந்திரனைப் பார்த்து அதிகாரிகளே நெகிழ்ந்துபோயிருக்கின்றனர். இந்த மரக்கன்றுகள் மற்றும் விதைகள் அனைத்தும் பள்ளி, கல்லூரிகளுக்குக் கொடுக்கப்பட உள்ளன. சிறை என்ன செய்யும்?

இன்பாக்ஸ்

மத்தியத் தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடைப் பராமரிப்பு, மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், விருதுநகர் மாவட்டத்தில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது சின்னமூப்பன்பட்டியில் பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த அவருக்கு, காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஜோதிடம் கூறினார். ‘`இன்னும் மூணு மாசத்துல உங்களுக்கு நல்லது நடக்கும். ஏற்கெனவே ரெண்டு கண்டத்துல இருந்து நீங்க தப்பிச்சிட்டீங்க. உங்க அப்பா வழியில இருக்குற பெண் தெய்வம் உங்களுக்குத் துணையா இருந்து வழிநடத்தும்’’ என்று ஜோசியம் சொல்லியிருக்கிறார். ஹெச்.ராஜாவுக்கும் இப்படித்தான் ஒரு ஜோசியர் சொன்னாரு..!

எழுத்தாளர் ஜெயமோகன் சொந்தமாக ‘விஷ்ணுபுரம் பதிப்பகம்’ தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் தன் எல்லாப் புத்தகங்களையும் ஒருசேரக் கொண்டு வருகிறார். வெண்முரசு தொடரில் மீதி வெளியாக வேண்டிய புத்தகங்களும் அவருடைய புத்தகங்களும் இனி இந்த அடையாளத்துடன் வெளிவரும். எல்லாம் பெரிசு பெரிசா இருக்குமே!

இன்பாக்ஸ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருக்கும் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கும் ‘மகள்’ ஏப்ரல் 28 அன்று ரிலீஸ் ஆகிறது. ஜெயராமுடன் ஜோடியாக மீரா நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. டிரெய்லரைப் பார்த்துவிட்டு ‘கஸ்தூரிமான் படத்தில் பார்த்த அதே அழகுடன் இருக்கிறீங்க மீரா’ என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். காதல் பிசாசே...

இன்பாக்ஸ்

இப்போது கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவரும் சூர்யாவும் கார்த்தியும் வருடத்திற்கு ஒருமுறை ஒட்டுமொத்தக் குடும்பமாக எங்காவது டூர் சென்று வருவது வழக்கம். இரண்டு ஆண்டுகளாக கொரோனோ சூழலால் இதற்கு பிரேக் விட்டிருந்தனர். இந்த ஆண்டு டூர் சென்று வர அவர்களின் குழந்தைகளும் விரும்புகின்றனராம். அதனால் இந்த ஆண்டு ஃபேமிலி ட்ரிப் நிச்சயம் என்கிறார்கள். இது ஜோடிவீடு... நம் மாடி வீடு!

இன்பாக்ஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா கிராமங்களை உருவாக்குவதற்குப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மக்கள், தாங்கள் அன்றாடப் பயன்பாட்டிற்குப் பிறகு பால் கவர், எண்ணெய் கவர் போன்ற பிளாஸ்டிக் பொருள்களைக் குப்பையில் போடாமல், தரம் பிரித்து சேகரித்து வைத்திருந்து துப்புரவுப் பணியாளர்களிடம் கொடுத்தால், 1 கிலோவுக்கு 10 ரூபாய் தருகிறார்கள். முயற்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகின்றனர் அதிகாரிகள். மாவட்டத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், ஓங்கூர் ஊராட்சியில் நடத்தப்பட்ட முதற்கட்ட முன்னெடுப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரவேற்போம்!

இன்பாக்ஸ்

தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, சலூன் கடைக்குள் நூலகத்தை அமைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் மாரியப்பன். இங்கு 350-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் மாரியப்பன், தன் கடை வருவாயின் ஒரு பகுதியிலிருந்து வாங்கியவை. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். ‘புத்தங்களே வலிமை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையைக் கேட்ட பிறகே இந்த நூலகத்தை அமைத்தாராம் மாரியப்பன். எஸ்.ரா-வின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, தூத்துக்குடியில் இவர் ஒட்டியுள்ள போஸ்டர்கள், `பீஸ்ட்’ திரைப்பட ரிலீஸுக்கு ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களைப் போலவே கவனம் பெற்றன. மாரியப்பனுக்கு போன் செய்து நன்றி சொன்ன எஸ்.ரா., “உங்கள் நூலகத்தைப் பார்க்க சர்ப்ரைஸா ஒருநாள் வருவேன்” எனச் சொல்லியிருக்கிறார். வாசிப்பே வலிமை!

ஷில்பா ஷெட்டி ரியாலிட்டி ஷோ, ரேடியோ நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி என அனைத்திலும் கவனம் செலுத்திவருகிறார். கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப்பட சர்ச்சையில் சிக்கிய பிறகு, சம்பாதிப்பதில் ஷில்பா தீவிரம் காட்டிவருகிறார். இப்போது ஷில்பா ஓ.டி.டி தளத்திலும் தடம் பதிக்கவிருக்கிறார். சில தயாரிப் பாளர்கள் கொடுத்திருக்கும் ஷோ கான்செப்ட்களைப் பரிசீலிக்கும் அவர், மீண்டும் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். மேக்ரினா மேக்ரினா