கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகார்த்திகேயன்

படம்: அருண் டைட்டன்

  • அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.91,000) நிவாரணம் வழங்கப்பட உள்ளது. அதற்காக வழங்கப்படும் காசோலை போன்ற அனுமதிச்சீட்டில் தன் பெயரை அச்சடிக்க உத்தரவிட்டுள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அவரது இந்த அறிவிப்பு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் ஒரு நிவாரணத் தொகையில் அதிபர் தன் பெயரைப் போட்டுக்கொள்வது இதுதான் முதல்முறை. இந்த விளம்பரம் நமக்குத் தேவையா?

  • டெக் உலகில் எதிர் எதிர் துருவங்களான ஆப்பிளும் கூகுளும் கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கைகோத்திருக்கின்றன. கொரோனா பாதித்த நபருடன் தொடர்பு ஏற்படுவது தெரியாமல் இருப்பதாலேயே பரவும் வேகமும் அதிகமாக இருக்கிறது. புளூடூத் மூலம், கொரோனா பாதித்த நபர் அருகில் நாம் சென்றால் எச்சரிக்கும் வகையிலான செயலியை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வடிவமைத்து வருகின்றன. அந்தச் செயலியைப் பொதுச் சுகாதார அமைப்புடன் சேர்ந்து செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளன. உலகில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் 99% ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் இரண்டின் கீழ் வந்துவிடும். எனவே இது நல்ல பலனைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இணைந்த கைகள்

  • ஹோமோ எரக்டஸ், லோபஸ்டஸ், ஆஸ்ட்ரலோபிதெகஸ் செடிபா... பெயர்களே உச்சரிக்க முடியவில்லையா? இவையனைத்தும் நம் மூதாதையர்களுடைய இனப் பெயர்கள். சமீபத்தில் ஆண்டி ஹெர்ரீஸ் மற்றும் அவரது குழுவினர்கள் செய்த ஆராய்ச்சியில் இந்த மூன்று இனத்தைச் சேர்ந்தவர்களும் ஆப்பிரிக்காவின் டிரைமோலென் குகையில் ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வாழ்ந்ததற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். நியான்டர்தால், ஹோமோ சேப்பியன்ஸ் உள்ளிட்ட இனங்கள்தான் மனிதர்களின் மூதாதையர்களாகக் கருதப்பட்டு வந்தன. தற்போது நம் மூதாதையர்களின் மூதாதையர்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம். அதற்கான தொடக்கப்புள்ளியாக இந்த டிரைமோலென் குகை ஆராய்ச்சி இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் இந்த ஆராய்ச்சியின் குழுத்தலைவர் ஆண்டி ஹெர்ரீஸ். ஹலோ தாத்தாஸ்!

  • கங்கனா ரனாவத்தின் அக்கா ரங்கோலி சண்டேலின் ட்விட்டர் அக்கவுன்ட், அவரின் சர்ச்சைக்குரிய பதிவால் நீக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மொரதாபாத்தில் கொரோனா பாசிட்டிவ்வாக சந்தேகிக்கப்பட்ட இருவரை அழைத்துவரச் சென்ற ஆம்புலன்ஸ், மருத்துவர்கள், காவலர்கள்மீது கும்பல் ஒன்று கல்லெறிந்த சம்பவம் குறித்து, குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரைக் குற்றம் சுமத்தி வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பதிவிட்டார் ரங்கோலி. ஃபாரா கான் உள்ளிட்ட பல செலிபிரிட்டிகளும் அவர் அக்கவுன்ட்டை ரிப்போர்ட் செய்ய, ட்விட்டரும் அதை அதிரடியாக நீக்கியது. ‘அமெரிக்க பிளாட்பாரமான ட்விட்டர், பாரபட்சத்துடன் செயல்படுகிறது. இந்த ஆன்டி இண்டியா தளத்தில் என் அக்கவுன்ட்டை நான் புதுப்பிக்கப்போவதில்லை’ என்றிருக்கிறார் ரங்கோலி. அலங்`கோலம்!’

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
  • க்வாரன்டீன் சீசனில் இணையம் முழுக்க டிரெண்டிங் நெட்ஃபிளிக்ஸில் தொடராக வெளிவரும் மணி ஹெய்ஸ்ட் தான். நான்கு சீசன்களில், பல லட்சம் ரசிகர்களைப் பெற்றிருக்கும் இந்த ஸ்பானிஷ் தொடரின் இந்திய ரீமேக் உரிமத்தை ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொடரில் வரும் புரொபஸர் கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என பெரிய விவாதமே நடக்கிறது! கோலிவுட்டில் சிவகார்த்திகேயன்தான் பொருத்தமாக இருப்பார் என இணையத்தில் அவர் ரசிகர்களிடையே பேச்சு ஓடுகிறது! இந்நிலையில் பாலிவுட்டின் தற்போதைய சென்சேஷனான ஆயுஷ்மான் குரானாவும் இதில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். மணி ஹெய்ஸ்ட் தொடரில் வரும் ‘பெல்லா சியோ’ என்னும் புரட்சிப் பாடலை கீபோர்டில் இசைத்தபடி, இப்படியானதொரு வாய்ப்பை எனக்குத் தாருங்கள் என அன்புக் கட்டளை விடுத்திருக்கிறார். எல்லாமே கத்து வெச்சிருக்கீங்க சார்!

இன்பாக்ஸ்
  • உலக அளவில் அதிகம் விற்ற சயின்ஸ் பிக்ஷன் நாவலான டியூன் திரைக்கு வரவிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் முதல் பாகம் வெளியாகவிருக்க, படத்தின் ஸ்டில்கள்தான் தற்போதைய வைரல். அரைவல், சிகாரியோ, பிளேடு ரன்னர் 2049 போன்ற படங்களின் மூலம் தனக்கெனத் தனி ரசிகர்களைப் பெற்றிருக்கும் டென்னிஸ் வில்லெநியூவ் (dennis villeneuve) படத்தை இயக்கிவருகிறார். பலமுறை பல இயக்குநர்கள் எடுக்க முயற்சி செய்து கைவிடப்பட்ட நாவல் டியூன். ஏற்கெனவே ஒருமுறை படமாகவும், மினி தொடராகவும் வந்திருந்தாலும், ஹான்ஸ் ஜிம்மர் இசையில், த்மோத்தி , ரெபெக்கா ஃபெர்கஸன், ஆஸ்கர் நடிப்பில் இப்படத்தினைக் காண உலகமே வெயிட்டிங். அவங்க ஊரு பொன்னியன் செல்வன் போல!

  • அம்பேத்கரின் பேத்தி ரமாவின் கணவரும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.என் நிறுவனங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் சிந்தனையாளருமாகிய ஆனந்த் டெல்டும்டே, அம்பேத்கரின் 129வது பிறந்தநாளின்போது கைது செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2018-ம் ஆண்டு மகாராஷ்ராவின் பீமா கோரேகன் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறைக்கு, ஆனந்த் டெல்டும்டேவின் தூண்டுதல்தான் காரணம் என்பதே வழக்கு. 26 புத்தகங்கள் எழுதியுள்ள அவர், பல பத்திரிகைகளில் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதிவந்தார். தற்போது உபா (UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே ஹைதராபாத்தைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ், தானேவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஃபெரெய்ரா, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெர்னன் கோன்சல்வ்ஸ் ஆகியோர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். “இனி எப்போது உங்களுடன் பேசுவேன் என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் முறை வருமுன் பேசிவிடுங்கள்” என்று மக்களுக்கு உருக்கமான ஒரு வேண்டுகோள் கடிதத்தை எழுதிவிட்டுச் சிறை சென்றிருக்கிறார் ஆனந்த். கண்டனங்கள்!

  • நீண்ட நாள்கள் இடைவெளிக்குப் பிறகு, கொரோனா குறித்த அப்டேட்களை, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அமைச்சருக்கும் முதல்வருக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டதால்தான் அவர் ஒதுக்கிவைக்கப்பட்டதாகப் பேச்சு எழுந்த நிலையில், திடீரென விஜயபாஸ்கரே அப்டேட்களை அளிக்கத் தொடங்கியது கோட்டையில் ஆச்சர்ய அலையை ஏற்படுத்தியது. 30 நிமிடங்களுக்குக் குறையாமல் தான் அளித்த பேட்டியில், 49 முறை மாண்புமிகு முதல்வர் என எடப்பாடியை அழைத்த விஜயபாஸ்கர், மூன்று முறை இது அம்மாவின் அரசு என்றும் கூறினார். அருகிலிருந்த சுகாதாரத்துறை உயரதிகாரிகள், ‘இன்னும் ஒரே ஒரு மாண்புமிகு முதல்வர் அழைச்சிருந்தா அரை செஞ்சுரி போட்டிருக்கலாமே. ஒதுக்கிவெச்சும் திரும்ப வந்து ஒட்டிக்கிட்டாரு, வெவரமான மனுஷன்தான்’ என முணுமுணுத்தபடியே நகர்ந்தனர். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

  • சென்னை மாவட்டத்தில் தி.மு.க-வின் கொரோனா நிவாரண உதவி நடவடிக்கைகளை அக்கட்சியின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் இருவரும் முனைப்பாகச் செய்துவருகின்றனர். இதில் மருத்துவம் படித்தவரான சேகர்பாபுவின் மகள் ஜெயா, தன் அப்பாவின் தொகுதியான துறைமுகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் விடுதிகளுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை முகாமைத் தனியாக நடத்தி வருகிறார். ‘இப்பவே வாரிசை எம்.எல்.ஏ. ஆக்க சேகர்பாபு ரெடி பண்றாருப்பா’ என எதிர்க்கட்சிகள் அடிக்கும் கமென்ட்டுகளை அப்பா-மகள் இருவருமே கண்டுகொள்வதில்லை. ஜெயாவும், “எனக்கு அரசியல் ஆசையெல்லாம் இல்லைங்க. எங்க ஜனங்க கஷ்டப்படுறத பார்க்க முடியாமத்தான், மருத்துவ முகாமை நடத்துறேன். இதுல அரசியல் எதுவுமில்ல” என, கூலாகச் சொல்லிவிட்டு நழுவுகிறார். சேவைக்கு சல்யூட்

  • லாக் டௌன் நாள்களிலும் ஹரியானாவின் ரோடாக் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்று ஏப்ரல் 13-ம் தேதி இரவு திறந்து ஒரு திருமணத்தைப் பதிவு செய்திருக்கிறது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன் காஷ்யப்புக்கும் மெக்சிகோவைச் சேர்ந்த டான ஜொஹோரி என்பவருக்கும் மூன்று வருடக் காதல். நிரஞ்சனின் பிறந்தநாளையொட்டி இந்தியா வந்தவருக்கு, திருமணமும் செய்ய ஏற்பாடு ஆகியிருக்கிறது. வெளிநாட்டவர் என்பதால் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பிப்ரவரியிலேயே விண்ணப்பம் அளித்திருந்தனர். விண்ணப்பக்காலம் முடிவடைந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர், மாவட்ட ஆட்சியர் மூலம் சிறப்பு அனுமதி பெற்று இத்திருமணத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். கொரோனா கல்யாணம்