கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இந்தக் கொரோனா சீசனில் ரிலீஸுக்குக் காத்திருக்கும் இன்னொரு படம் ஜெயம் ரவியின் ‘பூமி.’

  • கடந்த வாரத்தின் மிகப்பெரிய சோகம், லெபனானின் பெய்ரூட் சம்பவம். பெய்ரூட்டின் துறைமுகத்தில் இருந்த 12வது கிடங்கில் பல ஆண்டுகளாகக் கைப்பற்றி வைக்கப்பட்டிருந்த 2750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்துச் சிதறியது. உரங்களுக்கும், வெடிகுண்டுகளுக்கும் பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளின் விபரீதம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும், இத்தகைய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன், வெளியான வெடிப்புக்கு முன், பின் படங்கள் இந்தக் குரூரத்தின் பேராபத்தை நமக்குக் கண் முன் காட்டுகின்றது. அணு ஆட்டம் அடங்கட்டும்.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
  • கொரோனாவால் உலகமெங்கும் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் வார்னர் பிரதர்ஸின் ‘டெனட்’, டிஸ்னியின் ‘மூலன்’ ஆகிய ஹை-பட்ஜெட் படங்கள்தான் மீண்டும் மக்களை திரையரங்குகள் பக்கம் ஈர்க்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தன திரையரங்கங்கள். ஆனால் பல இடங்களிலும் இன்னும் கொரோனாவின் வீரியம் குறையவில்லை, குறிப்பாக அமெரிக்காவில் நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதால் ‘டெனட்’ வெளியீடு இந்த மாத இறுதிக்கு தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. அதுவும் லிமிடெட் ரிலீஸாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிஸ்னி ‘மூலன்’ திரைப்படத்தை நேரடியாக டிஸ்னி+ தளத்திலேயே வெளியிட முடிவெடுத்திருக்கிறது. சாதாரண சந்தா இல்லாமல் இந்தப் படத்தை மட்டும் பார்ப்பதற்கு 30 அமெரிக்க டாலர்கள் கட்ட வேண்டுமாம். இந்த விஷப் பரீட்சை மொத்தமாகத் திரையரங்குகளை காலி செய்துவிடும் என அமெரிக்காவில் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாஸ்டருக்கு அப்படியே எதுனா பண்ணுங்கப்பா!

  • ‘கபாலி’ படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும், இந்தப் பொண்ணு செமல்ல எனப் பெயர் வாங்கியவர் ராதிகா ஆப்தே. கார்த்திக்கு ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்ததையெல்லாம் அவரே மறந்திருப்பார் என்பதால், தமிழுக்கு குட்பை சொல்லியிருந்தார் ராதிகா. விழித்திரு விலகியிரு’ என இணையத்தில் இருக்கும் எல்லா பாலிவுட் படங்களையும் பார்த்த தமிழக மக்களுக்கு தற்போது ராதிகா ஆப்தே ஃபேவரைட் நடிகை ஆகிவிட்டார். அதனால் தமிழிலேயே ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். ஆவோஜி!

  • ஹீரோ, அயலான், டாக்டர் எனத் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் ஆர்வம் காட்டிவந்த சிவகார்த்திகேயன், தற்போது மீண்டும் சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தவிருக்கிறார். அடுத்தடுத்து, இரு சிறிய பட்ஜெட் படங்களை ஃப்ரஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து நடித்துக்கொடுக்க, ஒரு பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார் சிவா. டபுள் ஹீரோவா ப்ரோ?

  • எல்லா ஹீரோக்களின் படங்களும் ரிலீஸுக்குக் காத்திருக்க, சிம்பு சற்று வருத்தத்தில் இருக்கிறாராம். ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் அதிக அளவில் எடுக்கவேண்டியதிருக்கிறது. மிஷ்கின் படத்தின் பட்ஜெட்டும் அதிகமென்பதால் தயாரிப்பாளர் வேட்டையில் ஈடுபட்டுவருகிறார்களாம். அதைத்தவிர எந்தப் படமும் இல்லை என்பதால், கதை கேட்க ரெடியாக இருக்கிறார் சிம்பு. கொரோனா மாற்றம்.

  • இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டார்க் நைட் போன்ற பிரமாண்ட ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் எடுத்திருந்தாலும் தன் படங்களில் அதிக அளவில் VFX பயன்படுத்துவதை விரும்பாதவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். முடிந்த அளவு பிராக்டிக்கல் எஃபக்ட்ஸ் மூலமே அனைத்தையும் படமாக்கிவருகிறார். கடந்த ஆண்டு வந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ படத்தில் மொத்தமாக 2000-க்கும் அதிகமான VFX ஷாட்ஸ் இருந்தன. ஆனால் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நோலனின் ‘டெனட்’ திரைப்படத்தில் மொத்தமாகவே 300-க்கும் குறைவான VFX ஷாட்ஸ்தான் இருக்கின்றனவாம். இந்தப் படத்திற்காக நிஜ போயிங் 747 விமானம் ஒன்றை வாங்கி வெடிக்க வைத்திருக்கிறார் நோலன். தற்போது ஹாலிவுட்டில் எடுக்கப்படும் ரொமான்டிக் காமெடி படங்களில் கூட டெனட்டைவிட அதிக VFX ஷாட்ஸ் இருக்கும் என்கிறார் நோலன். வித்தைக்காரர்!

  • ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சாலஞ்ச் வரிசையில் தற்போது பிரபலங்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் மற்றுமொரு சேலஞ்ச் #2020Challenge. இந்த ஆண்டின் ஆறு மாதங்களை கொரோனா விழுங்கிவிட்டதால், பிரபலங்கள் வெளியிடும் ஆண்டு காலண்டர் போட்டோஷூட்கள் எப்படியிருக்கும் என்பதுதான் இதன் ஐடியா. ஹாலிவுட் நடிகை ரீஸ் விதர்ஸ்பூன் இதில் பங்கெடுக்க, ‘எங்ககிட்டவும் சீப்பு இருக்குல்ல’ என ஆஜரானார் எல்லா வுட்டிலும் நடிக்கும் பிரியங்கா சோப்ரா. ஹல்க் நாயகன் மார்க் ரஃப்பலோ, ஆன்னா ஹாத்தவே, ட்ரூ பேரிமோர், சார்லஸ் தீரோன் என பலர் இந்தப் புகைப்பட வைபவத்தில் சிறப்பித்திருக்கிறார்கள். ஜாலியா இருக்கீங்க!

  • இந்தக் கொரோனா சீசனில் ரிலீஸுக்குக் காத்திருக்கும் இன்னொரு படம் ஜெயம் ரவியின் ‘பூமி.’ பொன்னியின் செல்வனில் ஒரு ஷெட்யூல் மட்டுமே முடித்திருப்பதால், லாக்டௌன் முடிந்ததும் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகத்துக்குத் தயாராகி வருகிறாராம். அதோடு அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களிலும் நடிக்கவிருக்கிறார். ட்விஸ்ட் என்னவென்றால், இரண்டு படங்களுமே அறிமுக இயக்குநர்கள்தான். அட்லி, முருகதாஸின் தயாரிப்பு நிறுவனங்களுக்குத்தான் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் ஜெயம் ரவி. எல்லாம் ஜெயம் மயம்.

இன்பாக்ஸ்
  • மார்ட்டின் சர்கஸியிலிருந்து மணிரத்னம் வரை ஓடிடி பக்கம் சினிமா மொத்தமாய் வந்துவிட்டது. தமன்னா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், வித்யா பாலன் என நடிகைகளும் தற்போது ஓடிடி வசம்தான். ஏற்கெனவே ஏ.எல்.விஜய் இயக்கும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் மேகா ஆகாஷ், தற்போது கௌதம் மேனனின் அடுத்த வெப் சீரிஸிலும் நடிக்கவிருக்கிறாராம். வாய்ஸ் ஓவர்லயே முடிஞ்சுடுமே!

  • மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் உலகம் முழுக்கவே ஒலித்துக்கொண்டிருக்க, சீனா மட்டும் வழக்கம்போல், ‘தன் வழி கொலை வழி’ எனச் சென்றுகொண்டிருக்கிறது. ஓர் ஆண்டுக்கு இரண்டாயிரம் நபர்களை மரண தண்டனை என்னும் பெயரால் பலி கொடுக்கிறது சீனா. அதிலும், அரசியல் காரணங்களுக்காக அங்கு மரண தண்டனைகள் நிகழ்த்தப்படுவது கொடூரத்தின் உச்சம். 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் நிர்பந்தத்தால், வுவாவே மொபைல் நிறுவனரின் மகளை கனடா அரசு கைது செய்தது. இந்த இரண்டு ஆண்டுகளில், நான்கு கனடிய குடிமக்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக மரண தண்டனை விதித்திருக்கிறது சீனா. சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் தேசமிது என மரண தண்டனைகள் குறித்துக் கருத்து தெரிவித்திருக்கிறார் வெளியுறவுத் துறை அதிகாரியான வாங். ஹிட்லர் கதை நினைவிருக்கட்டும்.