
லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து இயக்கவுள்ள ‘விஜய் 67'ல் வில்லனாக நடிக்க அர்ஜுனிடம் கேட்டுவருகிறார்கள். லோகேஷ் ‘மாநகரம்' படத்திற்காக முதலில் அர்ஜுனிடம்தான் பேசினார்.

திருமணத்திற்கு முன்னர் கமிட் ஆன படங்களில் மட்டுமே இப்போது நடித்துவருகிறார் நயன்தாரா. மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் நடித்த ‘கோல்டு' இம்மாதம் ரிலீஸ். தவிர, தமிழில் இரண்டு ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே அட்லீ இயக்கத்தில் ஷாரூக் கானுடன் நடித்துவரும் ‘ஜவான்' படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் நடக்கிறது. பனையூரில் இதற்கென செட் போட்டுள்ளனர். டெடிகேஷன்!
சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா அமெரிக்காவில் ஒரு மாத கோர்ஸ் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளுக்காகவே தம்பதியின் அமெரிக்கப் பயணமும் நடந்திருக்கிறது. மேற்கொண்டு சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் அவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தொடரப் போவதாகச் சொல்கிறார்கள். படிப்பு முக்கியம்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயோபிக் விரைவில் எடுக்கப்படவிருக்கிறது. இதற்கு யோகி ஒப்புதல் கொடுத்துவிட்டார். யோகி வேடத்தில் போஜ்புரி நடிகரும், பா.ஜ.க-வின் எம்.பி-யுமான ரவி கிஷன் நடிக்கவிருக்கிறார். யோகி மடாதிபதியாக இருந்த காலத்தில் இருந்து வாழ்க்கை வரலாறு தொடங்குவதாக ரவி கிஷன் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது. அவார்டு ‘வாங்கிடும்’!
ஆர்யா சத்தம் போடாமல் ஒரு சாதனையை இப்போது லண்டனில் மேற்கொண்டுவருகிறார். இந்த மாதம் 25-ம் தேதி வரை லண்டனிலிருந்து மூன்று நாடுகளுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறார். இது போட்டியில்லை. ஆனால் சாகசப்பயணமாக இது அங்கே இளைஞர்களால் கவனம் பெறுகிறது. நிஜ ஹீரோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கோலோச்சியவர், தங்கத்தட்டில் சாப்பிட்டவர் எனப் புகழப்படும் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு திரைக்கு வருகிறது. ஒரு பக்கம், ஏ.எல்.விஜய் மேற்பார்வையில் ‘லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு' என்ற பெயரில் வெப்சீரிஸ் உருவாகிறது. இன்னொரு பக்கம் எம்.கே.டி.யின் கதையை மணிரத்னம் தயாரிக்க, வசந்த் சாய் இயக்க உள்ளார் என்கிறார்கள். சூப்பர்ஸ்டார் சரித்திரம்!


தேனி மாவட்டத்தில் 2,500 மைக்செட் உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சங்கங்களும் உண்டு. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், அந்தப் பொருள்களைப் பாதுகாக்கும் விதமாக ஆண்டுக்கு ஒரு முறை இங்கு ஒலிபெருக்கிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தொந்தரவு இல்லாத பகுதியில் ஒன்றுகூடி போட்டியை நடத்துவார்கள். சமீபத்தில் கம்பம் நகர ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போட்டி நடந்தது. அதில் 100 பேர் கலந்துகொண்டனர். முதல் பரிசு பெற்ற மைக்செட் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. யாருடைய ஒலிபெருக்கியில் பாடல்கள் பிசிரில்லாமல் தெளிவாக அதிக சத்தத்துடன் ஒலிபரப்பாகிறது என்பதை வைத்தே வெற்றி முடிவு செய்யப்படுகிறது. வெரைட்டி காட்டுறாங்களே!
லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து இயக்கவுள்ள ‘விஜய் 67'ல் வில்லனாக நடிக்க அர்ஜுனிடம் கேட்டுவருகிறார்கள். லோகேஷ் ‘மாநகரம்' படத்திற்காக முதலில் அர்ஜுனிடம்தான் பேசினார். அது நடக்காமல்போனது. ‘மாஸ்டர்' படத்திற்காக விஜய்சேதுபதி ரோலுக்கு முதலில் அர்ஜுனிடம்தான் பேசினார். ‘ஹீரோவிடம் முரட்டு அடிவாங்க வைத்து விடுவார்களோ' எனத் தயங்கி அந்த கேரக்டரை அர்ஜுன் தவிர்த்தார். இப்போது மூன்றாவது முறை லோகேஷ் கேட்டிருப்பதால் அர்ஜுன் கிரீன் சிக்னல் கொடுத்துவிடுவார் என்கிறார்கள். ஆக்ஷன் கிங்ஸ்!

குடும்பத்துக்கு நேரம் செலவழிக்காமல் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார் பூஜா ஹெக்டே. இப்போது அமெரிக்கா பறந்திருக்கிறார். இந்தியில் நடித்துவரும் சல்மான்கான், ரன்வீர் சிங் படங்களின் ஷூட்டிங்கிற்கு பிரேக் கிடைத்ததில், இந்த ட்ரிப் சாத்தியமாகியிருக்கிறது. இரண்டு வாரங்கள் அங்கே ரிலாக்ஸ் ட்ரிப்பில் இருக்கும் அவர், லோகேஷ் - விஜய்யின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருவதாகத் தகவல். உலகம் சுற்றும் வாலிபி!

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவரது மாற்றுத்திறனாளி மகளான தங்க மாரியம்மாள், அரசுக் கல்லூரியில் படித்துவருகிறார். இவரது வீட்டிலிருந்து அந்த ஊரின் முக்கிய சாலைக்குச் செல்லும் வழி மோசமாக இருந்ததால் கல்லூரி செல்ல சிரமப்பட்டு வந்தார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் இதற்காக தங்க மாரியம்மாள் மனு கொடுக்க, இப்போது அவர் வீட்டிலிருந்து அப்பகுதியின் முக்கிய சாலை இணைப்பு வரை ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தங்க மாரியம்மாள் இனி கல்லூரி செல்வதில் சிரமம் இருக்காது. மகிழ்ச்சி!

கோவை மக்களுக்குத் தேநீர் மீது எப்போதும் ஓர் அலாதி காதல் உண்டு. இப்போதும் ஏராளமான கோவையன்ஸ், டீ குடிப்பதற்காகவே பைக்கை முறுக்கி ஊட்டி செல்வது சகஜம். அதனாலேயே கோவையில் டிஸைன் டிஸைனான டீக்கடைகள் முளைத்துக்கொண்டே இருக்கும். கேரளா பார்டர் என்பதால், நாயர் டீக்கடைகள் இல்லாத ஏரியாக்களே இல்லை. ஆனால், சமீபகாலமாக அவர்களுக்கு சவால்விடும் அளவுக்கு, ராஜஸ்தானியர்களின் டீக்கடைகள் அதிகரித்துள்ளன. ஒரு பெரிய டேபிள்... அதில் அடுப்பு, பாத்திரங்கள், டம்ளர் ஆகியவற்றுடன் டீ மாஸ்டர் சம்மணம் போட்டு அமர்ந்துகொள்கிறார். 10 ரூபாய்க்கு இஞ்சி, ஏலக்காய், டீத்தூள், சர்க்கரை தூவி அவர்கள் போட்டுத்தரும் ஸ்பெஷல் மசாலா டீக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. Tea for Life..!



கேரள மாநிலம் தேக்கடியைச் சேர்ந்த சுமேஷ் சோமன், தமிழக வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். காடுகள்மீது தீராக்காதல் கொண்டிருக்கும் இவர், எந்த ஊருக்குச் சென்றாலும் வனத்துறைப் பணியாளர்களுடன் வனநடை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். வனநடையில் காணும் இயற்கைக் காட்சிகளை அழகிய ஓவியமாகத் தீட்டி, காடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். நீலகிரியில் மாவட்ட வன அதிகாரியாக இருந்த இவர், நீலகிரியின் அருவிகளையும் அணைகளையும் நினைவில் நிறுத்தி ஓவியமாக வரைந்து ஆச்சரியப்பட வைக்கிறார். கானகம் போற்றுதும்!