சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இந்தத் தலைமுறையினர் ஃபேன்டஸியை விரும்புகிறார்கள். எனவே ‘பாபா'வை இப்போது கொண்டு வந்தால் நிச்சயம் வரவேற்பார்கள்

இன்பாக்ஸ்

மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் பற்றி ஒரு டாக்குமென்டரி எடுத்து வைத்திருக்கிறார் கமல். அது, எழுத்தாளர் உயிருடன் இருந்தபோதே வெளிவர வேண்டியது. திடீரென ரங்கராஜன் மறைந்துவிட, இப்போது மீதியையும் நிறைவு செய்துவிட்டார் கமல். இதன் தயாரிப்பு, இயக்கம் என அனைத்தையும் கமலே கவனித்தி ருக்கிறார் என்பது முக்கியமானது. இந்தியன் 2, பிக்பாஸ், கட்சி என மூன்று வேலைகளின் இடையிலும் இந்த வேலையை முடித்திருக்கிறார் கமல். ரங்கராஜ காவியம்!

இன்பாக்ஸ்

‘பிருந்தா' வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் த்ரிஷா. அதன் முதல் சீசனுக்கான கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பையும் இப்போது முடித்துக் கொடுத்துவிட்டார். இதற்கிடையே மலையாளத்தில் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணியின் ‘ராம்' படத்திற்காகவும் த்ரிஷாவிடம் மீண்டும் தேதிகள் கேட்டிருக்கிறார்கள். ஜனவரியில் அதன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் த்ரிஷா. மீண்டும் குந்தவை!

‘காந்தாரா' படத்தைப் பார்த்த பிறகுதான் ரஜினிக்கு ‘பாபா'வை மறுபடியும் ரிலீஸ் பண்ணும் ஐடியா வந்திருக்கிறது. ‘‘இந்தத் தலைமுறையினர் ஃபேன்டஸியை விரும்புகிறார்கள். எனவே ‘பாபா'வை இப்போது கொண்டு வந்தால் நிச்சயம் வரவேற்பார்கள்'' என மகள் சௌந்தர்யாவும் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்தே சுரேஷ் கிருஷ்ணாவிடம் ரஜினி பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். இரண்டெழுத்து மந்திரம்!

இன்பாக்ஸ்

மைசூர் உயிரியல் பூங்காவில் பல விலங்குகளைப் பராமரித்துவருகின்றனர். இவற்றில் ரொம்பவே ஸ்பெஷல், விலங்குகள் பரிமாற்ற முறையில் ஜெர்மனியிலிருந்து பெறப்பட்ட ‘தாபோ’ என்ற பெயர் கொண்ட கொரில்லா. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பரிச்சயமான இந்த கொரில்லாவுக்கு அண்மையில் பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு இதய வடிவில் ‘ஹேப்பி பர்த்டே தாபோ’ என அலங்காரம் செய்தனர். தாபோ விரும்பி உண்ணும் ஆப்பிள், கேரட், வெள்ளரி போன்றவற்றில் பல அடுக்கில் கேக் தயாரித்து விருந்து படைத்தனர். குறும்புத்தனம் கொண்ட கொரில்லா இவற்றை சுவைப்பதைக் கண்டு பூங்கா ஊழியர்கள் அகம் மகிழ்ந்திருக்கிறார்கள். என்ஜாய் தாபோ!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில் இருக்கும் பழைய கலெக்டர் அலுவலகம், பாரம்பரிய அருங்காட்சியமாக மாற்றப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதில் பல்வேறு அறைகள் அமைத்து கலை மற்றும் பண்பாடு, பாரம்பரிய விவசாயம், பழங்காலச் சிலைகள், நூல்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. 7டி தியேட்டர் அமைத்து, பழங்காலத் தமிழர்களின் வரலாறு திரையிடப்பட உள்ளது. பெரிய கோயிலிலிருந்து மியூசியத்திற்குச் செல்வதற்கு ரயில் வசதி செய்யப்படுவது, பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரையில் வரலாறு!

இன்பாக்ஸ்

நடிப்பிலிருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவித்த ஆமீர் கான், ‘‘அடுத்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். தயாரிக்க மட்டுமே செய்வேன். குடும்பத்தினரோடு கூடுதல் நேரத்தைச் செலவிடப்போகிறேன்'' என்றிருக்கிறார். சமீபத்தில் தன் மகளின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு உற்சாகமாக நடனமாடிய ஆமீர், தன் முன்னாள் மனைவி கிரண் மற்றும் மகன் ஆசாத் ஆகியோருடன் வெளிநாடு போயிருக்கிறார். கிரணை விவாகரத்து செய்துவிட்டாலும் எங்கு சென்றாலும் அவரைத்தான் தன்னுடன் ஆமீர் கான் அழைத்துச் செல்கிறார். ஆச்சர்ய ஆமீர்!

ஓயாமல் தன்னுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த கவர்னர் ஜகதீப் தன்கர் துணை ஜனாதிபதி ஆனதில் நிம்மதி அடைந்தார் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. இப்போது அவருக்குக் கூடுதல் நிம்மதியாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்த போஸ் அங்கு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட ஆனந்த போஸ் அமைதியான மனிதர். அதனால் முன்புபோல சண்டைகள் இருக்காது என்பது மம்தாவுக்கு ஆறுதல். கவிதைகள் மலரட்டும்!

இன்பாக்ஸ்

வெளியூருக்குப் போக பேருந்து நிலையத்துக்குச் செல்வது வழக்கம். ஆனால், படிப்பதற்காக பேருந்து நிலையத்துக்குச் செல்பவர்களை பாளையங்கோட்டையில் மட்டுமே பார்க்க முடியும். இங்குள்ள பேருந்து நிலையத்தின் முதல் மாடியில் குளிர்சாதன வசதியுடன்கூடிய கற்றல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயாராகிறவர் களுக்கான புத்தகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மாற்றுத் திறனாளிகள் சுலபமாக வந்து செல்வதற்கு ஏற்றபடி லிஃப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கற்றல் மையத்தில் அமர்ந்து அங்குள்ள புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். மாநகராட்சியின் பராமரிப்பில் இயங்கும் இந்தக் கற்றல் மையத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார். போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்தும் இளைஞர்கள் இந்த மையத்தைத் தேடிச் சென்று பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். நூலகப் பேருந்து நிலையம்!

இன்பாக்ஸ்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள ராமாலைக் கிராமத்தில் ‘சாலையோரப் பூக்களாக’ தன் நான்கு குழந்தைகளை ஆறுதலாக தேற்றிக் கொண்டிருந்தார் அன்பரசி. பாலாற்றை ஒட்டியிருந்த அவரது ஓட்டுவீடு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாலும், மதுவுக்கு அடிமையான கணவனாலும் அவர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற அவரை பொதுமக்கள் மீட்டிருக்கிறார்கள். இதையடுத்து, அரசு அவருக்கு நிலப்பட்டா வழங்கியது. ஆனாலும், வீடு கட்டப் பணமில்லாததால் அன்பரசியின் நிலை மாறவில்லை. இதையறிந்த சமூக சேவகரும் ஐ.டி ஊழியருமான தினேஷ் சரவணன் என்பவர், அன்பரசிக்கு தென்னங்கீற்றால் வேயப்பட்ட வீடு அமைத்துக்கொடுத்திருக்கிறார். இப்போது அந்த வீட்டில் வண்ணத்துப் பூச்சிகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அன்பரசியின் குழந்தைகள். அன்பாலே கட்டிய வீடு!

இன்பாக்ஸ்

இந்தியாவிலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் ‘விரு' (VIRU) தகவல் மற்றும் குறைதீர் சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணிற்கு ‘Hi' என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் ‘விரு' சேவையுடன் தொடர்புகொள்ள முடியும். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை சேவைகள், நிலவுடமை ஆவண சேவைகள், இணையவழி சான்றிதழ் சேவைகள் என அனைத்தையும் பயன்படுத்தலாம். தங்களுக்குத் தேவையான சேவையின் ஆங்கில வரிசை எழுத்தை உள்ளீடு செய்து பயனாளர்கள் பயன்பெறலாம். இது 24 மணி நேர சேவை. ‘‘இதனால் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை மாறும்'' என்கிறார் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி. உள்ளங்கைக்குள் அரசாங்கம்!