Published:Updated:

இன்பாக்ஸ்

மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாளவிகா மோகனன்

சிறுநீரகம் பழுதாகி உடல்நிலை மோசமடைந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்திருக்கிறது

‘தங்கலான்’ படத்தில் நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மாளவிகா மோகனன். படத்திற்காக சிலம்பம் கற்றுவருகிறார். ஒரு மாத பயிற்சியில் ஓரளவு தேறிவிட்டாராம். ‘‘தமிழில் என் திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ‘தங்கலான்’ பீரியட் பிலிம் என்பதால் நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்தப் படம் எனக்கு பெரிய பெயரைக் கொடுக்கும்’’ என தன் நட்பு வட்டத்தில் பெருமை பொங்கச் சொல்லிவருகிறார் மாளவிகா. இனி இன்ஸ்டா தெறிக்கும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘விஜய் 67’ படத்திற்காக வட இந்தியாவில் லொக்கேஷன் பார்த்து வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு வருகிறார் அவர். இதில் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறார் விஜய். பிப்ரவரிக்குள் படப்பிடிப்பிற்கு கிளம்ப உள்ளதால், படத்திற்கான பாடல்களையும் முன்னதாக ரெடி செய்கின்றனர். மாஸ்டர் யூனிவர்ஸ்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இளையராஜா மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து தூரமாக இருப்பார். அதற்கு நேர் எதிராக யுவன் எல்லோரிடமும் நெருக்கமாகப் பழகுகிறார். இது போக அனிருத், சிவகார்த்திகேயன் இவர்களோடு இரு வாரத்திற்கு ஒருமுறையாவது சென்னையை விட்டு அவுட்டிங் போய்விடுகிறார். மலேஷியாவில் நடக்கப்போகும் யுவன் மியூசிக் நைட்டில் அனிருத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவும் சம்மதித்துவிட்டாராம். இரண்டு பிஸியான இசையமைப்பாளர்கள் இவ்வளவு விட்டுக்கொடுத்து நண்பர்களாக இருப்பது, தமிழ் சினிமாவின் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. இசைத் தோழமை!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் டப்பிங், கிராபிக்ஸ், எடிட்டிங் வேலைகள் மட்டும் பாக்கி இருக்கின்றன. அவை முடுக்கிவிடப்பட்டு வேக வேகமாக நடந்தேறிவருகின்றன. இரண்டாவது பாகத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமின் நடிப்புதான் ஓங்கி நிற்பதாக செய்தி நிலவுகிறது. க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பிரமாண்டமாய் வந்திருக்கிறதாம். இதன் வேலைகள் எல்லாம் முடிந்து முதல் பிரதி பார்த்தபிறகுதான் கமல் பட வேலைகளை ஆரம்பிக்கிறார் மணிரத்னம். நாயகன் மீண்டும்...

இன்பாக்ஸ்

ஸ்ருதி ஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகாவைக் காதலித்து வருகிறார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் வாழ்ந்துவருகிறார்கள். கூகுள் டூடுல் மூலம் புகழ்பெற்ற நவீன ஓவியரான சாந்தனு, கத்தார் உலகக்கோப்பைக்காகப் படம் பிடிக்கப்பட்ட ஃபிஃபா ஆந்தமில் பங்குபெற்ற இந்தியர்களில் ஒருவர். கத்தார் அனுபவங்களைச் சொல்லி சிலிர்க்கிறார் சாந்தனு. நல்ல செய்தி சொல்லுங்க!

இன்பாக்ஸ்

‘ரோஷாக்’ பட வெற்றிவிழாவின்போது இயக்குநர் ஆஷிப் அலிக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்தார் மம்மூட்டி. அதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஆஷிப் அலி. அதன் விலை 11 லட்சம் ரூபாய். படம் வெற்றிபெற்றதும் ரோலக்ஸ் வாட்ச் வேண்டும் என மம்மூட்டியிடம் முன்கூட்டியே கேட்டுப் பரிசை வாங்கியிருக்கிறாராம் ஆஷிப் அலி. ரோலக்ஸ்னா வேற லெவல்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, ரஜினியை உயிராய் நேசிக்கும் வீடற்ற ஏழை ரசிகர்கள் 5 பேருக்கு கான்க்ரீட் வீடுகளைத் தனது சொந்தச் செலவில் கட்டிக்கொடுக்கிறார். ஒவ்வொரு வீடும் தலா ரூ.2 லட்சம் மதிப்புடையது. இந்த இல்லங்களுக்கு ‘ரஜினியின் அன்பு இல்லம்’ என்று பெயர் வைத்திருக்கிறார் சோளிங்கர் ரவி. அதேபோல, நலிவுற்ற ஏழை ரசிகர்கள் 10 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்பொருள் அங்காடிகளையும் அமைத்துக்கொடுக்கிறார். இவற்றின் திறப்பு விழா, தைப்பொங்கலில் நடக்கவிருக்கிறது. அன்பு பரவட்டும்!

இன்பாக்ஸ்

சிறுநீரகம் பழுதாகி உடல்நிலை மோசமடைந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்திருக்கிறது. தந்தைக்காக தன் சிறுநீரகத்தை தானமாக அளித்த லாலுவின் மகள் ரோஹிணியை கட்சி வித்தியாசம் பார்க்காமல் எல்லோரும் வாழ்த்தியுள்ளனர். லாலுவை எப்போதும் கடுமையாக விமர்சிக்கும் பா.ஜ.க-வினரும் இதில் அடக்கம். ‘‘எல்லா மகள்களும் ரோஹிணி போல இருக்க வேண்டும். எதிர்காலத் தலைமுறைகளுக்கு ரோஹிணி ஒரு ரோல்மாடல்’’ என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நெகிழ்ந்து வாழ்த்தியிருக்கிறார். மகளதிகாரம்!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர் காவல் துறையில் விரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் அமலா. தேசிய அளவில் நடைபெற்ற விரல் ரேகை நிபுணர் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழக காவல் துறைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். பல மாநிலங்களைச் சேர்ந்த 236 பேர் தேர்வு எழுதிய நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார் அமலா. டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் அழைத்துப் பாராட்டியதில் நெகிழ்ந்திருக்கிறார் அமலா. தடய சாதனை!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் வித்தியாசமாக ஒரு நிகழ்வை நடத்த விரும்பினார், நெல்லை மாவட்ட சார் ஆட்சியர் கோகுல். காரணம், அவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தன்னைப் போன்றவர்களை மகிழ்விக்க நினைத்த அவர், பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த 200 மாணவர்களைச் சிறப்புக் காட்சியில் ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்க்க ஏற்பாடு செய்தார். மாணவர்களுடன் கோகுலும் அமர்ந்து படம் பார்த்தார். பார்வையற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், திரையில் காட்சிகளாக விரியும் இடங்களில் ஒலி வடிவில் அந்தக் காட்சிகளை விவரிக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “நாங்களும் பொன்னி நதியை உணர்வால் புரிந்துகொண்டோம்” என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். பொன்னி நதியின் ஓசை!