
ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்கா, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
பூஜா ஹெக்டே, விரைவில் விஜய் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்தியில் ரன்வீர்சிங்கின் ‘சர்க்கஸ்’ படத்திற்குச் செல்கிறார். தவிர, தெலுங்கில் சிரஞ்சீவி, பிரபாஸுடன் பூஜா நடித்து வந்த படங்களும் ரிலீஸை நோக்கிப் பாய்ந்துவருகின்றன. சமீபத்தில் சென்னைக் கிழக்குக்கடற்கரைச் சாலையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடந்தபோது, ‘`என் முதல் படம் ‘முகமூடி’ ஷூட்டும் இதே ஸ்பாட்டில்தான் நடந்தது’’ எனச் சொல்லிச் சிலிர்த்திருக்கிறார் பூஜா. வெயிட்டிங்!
அஜித்தின் ‘வலிமை’ வில்லன் கார்த்திகேயாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பல வருடங்களாகக் காதலித்து வந்த தனது கல்லூரித் தோழி லோஹிதாவையே கரம்பிடித்திருக்கிறார். ஹைதராபாத்தில் நடந்த திருமணத்துக்கு அஜித் வருவார் எனத் தெலுங்குப் பட உலகினர் எதிர்பார்த்தனர். ஆனால், அஜித் கார்த்திகேயாவை போனில் அழைத்து வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார். புதுமணத் தம்பதியினரை ‘வலிமை’ ரிலீஸிற்கு முன்னரே தன் வீட்டிற்கு அழைத்து, தன் கைப்பட பிரியாணி செய்து கொடுக்கவிருக்கிறாராம். தல பிரியாணி!


எழுத்தாளர் துரை குணா எழுதி, விவாதத்தை உருவாக்கி வழக்குகளைச் சந்தித்த ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற குறுநாவலை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி கார்த்திகேயன் திரைப்படமாகத் தயாரிக்கிறார். ‘அம்பு நாடு ஒம்பது குப்பம்’ என்ற பெயரில் புதுமுக இயக்குநர் ராஜாஜி இயக்குகிறார். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட எல்லைக் கிராமங்களில் நடந்த பல உண்மைச் சம்பவங்களைப் பதிவு செய்யும் இப்படத்திற்கு புதுக்கோட்டை மண் சார்ந்த இசையை அந்தோணி தாசன் வழங்கவுள்ளார். ஓவியம் உயிர்பெறட்டும்!
ஷர்பத் குலா. ஆப்கன் அகதிகளின் துயர அடையாளமாக இருப்பவர். இவர் 12 வயதுச் சிறுமியாக பாகிஸ்தானில் அகதிகள் முகாம் ஒன்றில் இருந்தபோது, ஸ்டீவ் மெக்கரி என்பவர் புகைப்படம் எடுத்தார். பச்சை விழியும் முகத்தில் படிந்த துயரமுமாக இவரின் புகைப்படம் ‘நேஷனல் ஜியாக்ரபிக்’ இதழில் வெளியானது. ‘ஆப்கன் பெண்’ என்னும் பெயருடன் உலகில் அதிகம் பேரால் அடையாளம் காணப்பட்ட புகைப்படமாகவும், ‘நேஷனல் ஜியாக்ரபிக்’ இதழின் அதிகம் புகழ்பெற்ற அட்டைப்படமாகவும் அது ஆனது. இந்தப் புகைப்படத்தால் அவர் சங்கடங்களையும் சந்தித்தார். பாகிஸ்தானில் போலிக் குடியுரிமை அட்டை வாங்கி வசிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். ஆப்கன் அரசு அவரை வரவேற்று புது வீடு கொடுத்தது. இப்போது மீண்டும் தாலிபன்கள் ஆட்சி வந்ததும், தன் உயிருக்கு ஆபத்து என்று வெளிநாடுகளில் அடைக்கலம் கேட்டார். இத்தாலி அவரைப் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. 49 வயதில் தன் மூன்று மகள்களுடன் இத்தாலியில் புது வாழ்வைத் தொடங்குகிறார் குலா. நிம்மதி நிலவட்டும்!


ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்கா, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இதை கடந்த 2012-ம் ஆண்டு திறந்து வைத்தார். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இப்பூங்கா. வண்ணத்துப்பூச்சிகள் வருகைக்காக இங்கு சின்யா, டிரைக்டரி, பென்டாஸ், கொன்றை, மேரி கோல்டு பூச்செடிகள், செண்பக மரம், மகிழ மரம் என்று பல்வேறு வகைத் தாவரங்கள் உள்ளன. இந்த நிலையில் நம் கை அசைவுக்கு ஏற்ப சிறகுகளை விரிக்கும் எலெக்ட்ரிக் தேனீக்கள், நீல மயில் அழகன் மற்றும் இச்சை மஞ்சள் அழகி இனங்களைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வண்ணத்துப்பூச்சிகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஓ பட்டர்பிளை பட்டர்பிளை!
தஞ்சாவூரில் பெரிய கோயில், அரண்மனை வளாகம், சரஸ்வதி மஹால் நூலகம் போன்ற இடங்களே சுற்றுலாத் தலங்களாக அறியப்பட்டுள்ளன. அவற்றையும் தாண்டி மாநகரில் பல பழைமையான, பாரம்பர்யமிக்க இடங்கள் உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்றே கண்டுகளிப்பதற்காக ‘மரபுநடை’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் சுற்றுலா வளர்ச்சிக் குழுமமும் இணைந்து இதற்கான தயாரிப்பில் இறங்கியுள்ளன. தஞ்சை சிறிய கோட்டை, நால்வர் இல்லம், தேர் நிறுத்தம், அய்யன் குளம், நெற்களஞ்சியம் உள்ளிட்ட 20 பாரம்பர்யமிக்க இடங்களை மேம்படுத்தி, அவற்றின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் தகவல் பலகையும் அமைக்கப்படுகிறது. இந்த மரபுநடை, சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு!
கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் கொரோனா பொது முடக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவித்தார்கள். ‘இல்லம் தேடிக் கல்வித்திட்டம்’ தற்போது இவர்களுக்கு தற்காலிக மறுவாழ்வைக் கொடுத்திருக்கிறது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முயற்சியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கலை பிரசார வாகனம் ஒன்று மாவட்டம் முழுக்கச் செல்கிறது. இல்லம் தேடிக் கல்வி குறித்து இந்தக் கலைஞர்கள் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். கலை பரவட்டும்!
மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் டெல்லி மாநில அரசு அமல்படுத்திவருகிறது. அந்தப் பட்டியலில் இப்போது நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி தேவாலயம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியிலிருந்து வேளாங்கண்ணிக்கு தரிசனம் செய்ய வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். புனிதப் புண்ணியம்!

கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ள கடவூரைச் சுற்றி 32 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சுற்றி இயற்கையே வட்டவடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. அந்த கிராமங்களுக்குச் செல்ல மலைகளின் நடுவே மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. இப்படி கிராமங்களைச் சூழ்ந்து மலைகள் இருப்பது உலக அளவில் இரண்டே இரண்டு இடங்களில்தானாம். ஒன்று, புகழ்பெற்ற இங்கிலாந்துக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த கிராமம், மற்றொன்று இந்தக் கடவூர் பகுதி. இது வறட்சியான பகுதியாக இருந்தாலும், ஏகப்பட்ட ஆச்சர்யங்களும் இங்கு உள்ளன. இந்தியாவில் அதிகம் தேவாங்குகள் இங்குதான் வாழ்கின்றன. தவிர, இங்குள்ள புள்ளமுழுங்கி மலையிலிருந்து ஆண்டு முழுக்க ஜில்லென்ற தண்ணீர் தரும் வாழறும்பு அருவி என்ற சுனையும் உள்ளது. அதையொட்டி, கடவூர் ஜமீனால் கட்டப்பட்ட ஒலி வீடு ஒன்றும் உள்ளது. இங்குதான் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் தம்பி ஊமைத்துரை, ஆங்கிலேயருக்குத் தெரியாமல் சில காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாராம். இப்படி தனித்துவமாக விளங்கும் கடவூர் மலைப்பகுதியை சுற்றுலாதலமாக அறிவிக்குமாறு இங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சிறப்பு!
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தன் குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணமாக தமிழகம் வந்திருந்தார். ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபட்ட பின் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘வேளாண் சட்டம் பற்றி யாரும் கேட்டுவிடக்கூடாது’ என்பதில் உஷரானவர், ‘`அரசியல் சம்பந்தமாகப் பேச விரும்பவில்லை. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். நாடு முழுவதும் கொரோனாத் தொற்று நீங்கி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டிக்கொண்டேன்’’ என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார். மறுநாள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். உஷாரு!
பசுக்களின் பாதுகாப்புக்காக மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்க இருக்கிறது மத்தியப் பிரதேச அரசு. மாநிலம் முழுக்க அரசு நடத்தி வரும் 1,300 பசுப் பாதுகாப்பு மையங்களில் 2,60,000 பசுக்கள் உள்ளன. இவற்றைப் பராமரிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.160 கோடி தேவை. ஆனால், அரசு ஒதுக்கியது ரூ.60 கோடி மட்டுமே! மக்களிடம் நன்கொடை தருமாறு வேண்டுகோள் விடுத்தது அரசு. வாட்ஸ்அப் குழுக்களில் பசுப் பாதுகாப்புக்காகப் பொங்கும் பலரும், அதற்காக நன்கொடை தரத் தயாராக இல்லை. வேறு வழியின்றி, மதுபானங்களுக்குக் கூடுதல் வரி விதித்தும், உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் சேவைகளுக்கு அதிக வரி விதித்தும் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க இருக்கிறார்கள். வரி குறைஞ்சாதான் ஆச்சரியம்!
ஊட்டி மக்களிடம் வாசிப்பை மேம்படுத்தக் களமிறங்கியுள்ளது ஆர்வலர்கள் குழு ஒன்று. மக்கள் கூடும் பொது இடங்களில் ‘ஒன் டூ லைப்ரரி’ என்ற பெயரில் கண்ணாடிக் கதவுகளுடன் சிறிய பெட்டி ஒன்றைப் பொருத்தி அதனுள் சில புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். புத்தகம் தேவைப்படுவோர் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் புத்தகங்களைக் கொடையாகக் கொடுக்க விரும்புவோரும் அந்தப் பெட்டிகளில் புத்தகங்களை வைத்துவிட்டுச் செல்லலாம். ‘`ஊட்டி கலெக்டர் ஆபீஸ், லவ்டேல் பேருந்து நிறுத்தம், ஊட்டி பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகப் பெட்டிகளில் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்குப் புத்தகப் பரிமாற்றம் நடைபெற்றுவருகிறது’’ என்கிறார், அந்தக் குழுவில் ஒருவரான மாதவன். மேலும் சில இடங்களில் இதே மாதிரியான புத்தகப் பெட்டிகளை வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். கற்றுக்கொள்... கற்பி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள படிக்காசுவைத்தான் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ். 60 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் இந்த ஊர்ப் பள்ளியில் 2 ஆண்டுக்கு முன்பு 16 ஆக இருந்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கையை தற்போது 27 ஆக உயர்த்தியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நூற்பாலைகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்துவருகிறார்கள். இவர்களின் குழந்தைகள், பள்ளி செல்லாமல் இருப்பதை கவனித்த ஜெயக்குமார் ஞானராஜ், அவர்களில் 6 மாணவர்களை இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார். மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்தால் 6,500 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், 1,000 ரூபாய் ஊக்கத் தொகை, பள்ளிக்கு வந்துசெல்ல ஆட்டோ என தனது ஊதியத்திலிருந்து செலவு செய்துவருகிறார். கூடவே கணினி மற்றும் இந்தி ஆசிரியைகளை நியமித்து தனது சொந்தச் செலவில் அவர்களுக்கு ஊதியம் அளித்து வருகிறார். ``அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை 100 ஆக உயர்த்துவதே என் லட்சியம்” என்கிறார் ஜெயகுமார் ஞானராஜ். ரோல்மாடல்!

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வேலூர் மாநகருக்குக் குடிநீர் வழங்கும் கூட்டுக்குடிநீர்க் குழாய்கள் கடுமையாக சேதமடைந்தன. ‘வெள்ளம் வடிந்தபிறகுதான் சீரமைப்புப் பணிகள் நடைபெறும். அதுவரை குடிநீர் விநியோகம் இருக்காது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடைமழையிலும் குடிநீருக்காக ஏங்கிய வேலூர் மக்களுக்கு வரப்பிரசாதமாக கொட்டும் அருவி தாகம் தீர்க்கிறது. சத்துவாச்சாரி மலைத் தொடரிலிருக்கும் ‘கப் அண்ட் சாசர்’ என்ற சிறிய அருவிக்கு நூற்றுக்கணக்கான ஊற்றுகளிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்துவருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டம் வருவதற்கு முன், இந்த அருவியிலிருந்துதான் தண்ணீர் எடுத்து, சுமார் 25,000 வீடுகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கூட்டுக்குடிநீர்த் திட்டத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்த விநியோகம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. குளோரின் மூலம் சுத்திகரித்து, சுத்தமான ஊற்றுநீரை பல பகுதிகளுக்கு 24 மணி நேரமும் விநியோகித்துவருகிறார்கள் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள். நீரதிகாரம்!