Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் பஞ்சு அருணாசலம், ரஜினியின் திரைவாழ்க்கையில் பல முக்கியமான படங்களைக் கொடுத்துத் திருப்பத்தை ஏற்படுத்தியவர்.

மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ போல, சுந்தர் சி.க்கு ‘சங்கமித்ரா.’ சில ஆண்டுகளுக்கு முன்னர் கான் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ பற்றிக் கோலாகமாக அறிவித்தனர். பட்ஜெட் காரணமாக படம் டேக் ஆஃப் ஆகாமலேயே போனது. இப்போது ‘பாகுபலி’, ‘பொன்னியின் செல்வன்’ என வரலாற்றுப் படங்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததனால் தன் கனவுப் படத்தை மீண்டும் கொண்டு வர நினைக்கிறார் சுந்தர் சி. இதற்காக லைகா உட்பட பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல். வரலாறு முக்கியம்!

இன்பாக்ஸ்

பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து சினிமாவில் என்ட்ரி ஆகின்றனர். அந்த வகையில் ரவீனா டாண்டன் மகள் ராஷாவும் தன் அம்மாவின் வழியில் பாலிவுட்டில் நடிக்கவிருக்கிறார். அஜய்தேவ்கன் உறவினர் ஆமான் தேவ்கனும் இதே படத்தில் அறிமுகமாகிறார். 17 வயதாகும் ராஷா நடிக்க இருக்கும் படத்தில் அஜய்தேவ்கனும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். ‘அசப்பில் அம்மா மாதிரியே இருக்கிறார் ராஷா’ என்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள். ராஷாவும் ஒரு ரவுண்டு வரட்டும்!

இந்தியாவில் யானை – மனித முரண்பாடு அதிகம் நடக்கும் பகுதியாகக் கோவை இருக்கிறது. முக்கியமாக ஆனைக்கட்டி மலைப்பகுதி, கர்நாடகா – கேரளா – தமிழ்நாடு யானைகளின் வலசைப் பாதையாகும். ஆனால் அந்தப் பகுதி கான்கிரீட் காடாக மாறி வருகிறது. புற்றீசல் போல முளைத்திருக்கும் ரிசார்ட்கள் தொடங்கி பெரும்பாலான கட்டடங்களில், மின்வேலி, தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கும். இது பிரச்னையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. அதே ஆனைக்கட்டிப் பகுதியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் அமைந்துள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இங்கு மின்வேலியோ, தடுப்புச் சுவர்களோ இல்லை. இதனால் யானைகள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகக் கடந்து செல்லும். இதுவரை அங்கு எந்தப் பிரச்னையும் ஏற்பட்டதில்லை. காடு யானைகளின் உரிமை!

இன்பாக்ஸ்

படுகர் இனத்தைச் சேர்ந்த சாய் பல்லவி, தங்களின் குல தெய்வமான கோத்தகிரி ஹெத்தையம்மன் திருவிழாவில் சில நாள்களுக்கு முன்பு பங்கேற்றார். உறவுகள்சூழ படுகர்களின் பாரம்பர்ய வெண்ணிற உடையில் வெள்ளி ஆபரணங்களுடன் சாய் பல்லவி தோன்றிய புகைப்படங்கள் வைரலாகின. குறிப்பாக, மருத்துவம் பயின்றுவரும் சகோதரி சாய் பூஜாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், ‘‘அச்சு அசலா உங்க மாதிரியே இருக்காங்க. சாய் பூஜாவின் சினிமா என்ட்ரி எப்போது’’ என இப்போது நச்சரித்து வருகிறார்கள். ரௌடி பேபி 2?!

இன்பாக்ஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இந்நிலையில், அதில் ஒரு பாடல் சேர்த்தால் கமர்ஷியல் மதிப்பு கூடுமெனக் கருதி, மலேசியா சென்றுள்ளனர். அங்கே அவருக்கு ஏற்பட்ட விபத்துக்குப் பின் விஜய் ஆண்டனி சென்னை திரும்பிவிட்டார். இப்போது ஓய்வில் இருக்கும் விஜய் ஆண்டனியை, காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளுமாறு அவரின் நண்பர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே, விரைவில் அவர் வெளிநாடு பறக்கலாம். ஆல் இஸ் வெல்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மேல உளூர் மற்றும் கும்பகோணம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கிக் கருவி, நவீன கேமரா, ஸ்மார்ட் டி.வி உள்ளிட்ட வானிலையை அறியக்கூடிய 28 கருவிகள் வானியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பூமி, நிலா, கோள்களின் அமைப்பு, அவை சுற்றி வருதல் என அனைத்தையும் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த வானியல் ஆய்வகத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்று வந்த உணர்வு மாணவர்களுக்கு உண்டாகும் என ஆசிரியர்கள் பரவசத்துடன் தெரிவிக்கின்றனர். பள்ளிக்குள் பிரபஞ்சம்!

இன்பாக்ஸ்

புகழ்பெற்ற திரைக்கதையாசிரியர் பஞ்சு அருணாசலம், ரஜினியின் திரைவாழ்க்கையில் பல முக்கியமான படங்களைக் கொடுத்துத் திருப்பத்தை ஏற்படுத்தியவர். அவரின் குடும்பத்தினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினி நினைத்தார். அதற்காக பஞ்சுவோடு சேர்ந்து படங்களில் வேலை செய்த அனுபவங்களை வீடியோவில் பேசிப் பதிவு செய்துகொடுத்திருக்கிறார். இதுவரை அவர் மீடியாவில் பகிராத செய்திகள் அதில் அடங்கியிருக்கிறதாம். நன்றிக்கடன்!

பொதுவாக அரசக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு டீ, காபி, பிஸ்கட், கேக், வடை, பஜ்ஜி போன்றவையே வழங்கப்படுவது வழக்கம். திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், ‘எனக்கு ஜங் ஃபுட்ஸ் புடிக்காது. அது ஆரோக்கியமானதும் இல்லை. அதனால ஆரோக்கியமான உணவுகளையே மீட்டிங்ல கொடுக்கணும்’ எனக் கறார் உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி அதிகாரிகளுடனான கூட்டம், மக்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவற்றில் கலந்துகொள்பவர்களுக்குக் கம்மங்கூழ், கேழ்வரகுக் கூழ், முருங்கை சூப், பாசிப்பயறு, சுண்டல், சிறுதானியங்கள் போன்றவையே கொடுக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் தருவதில்லை. எவர்சில்வர் டம்ளரில்தான் கொடுக்கிறார்கள். கலெக்டரின் இந்தச் செயல்பாடுகளை மாவட்டத்திலுள்ள அதிகாரிகளே வியந்து பார்க்கிறார்கள். ஆரோக்கியமான முன்னெடுப்பு!

இன்பாக்ஸ்

உலகின் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். ‘‘நாங்களும் மனிதர்கள்தான். எங்கள் முழுசக்தியையும் கொடுத்து உழைக்கிறோம். இப்போது வேலைப்பளு தாங்க முடியவில்லை. அதனால் விலகுகிறேன்'' என்று காரணம் சொல்லியிருக்கிறார். கிறிஸ்ட்சர்ச் மசூதி குண்டுவெடிப்பை முதிர்ச்சியுடன் கையாண்டது, கொரோனாவைக் கட்டுப்படுத்தியது போன்றவற்றால் சர்வதேசப் புகழடைந்தவர் ஜெசிந்தா. பதவியில் இருக்கும்போதே குழந்தை பெற்று, அந்தக் குழந்தையுடன் ஐ.நா சபைக்குப் போனவர். ‘அரசியலில் அரிதாக இருக்கும் பெண்களால் அந்த அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லையா' என்ற விவாதத்தை அவரின் விலகல் மீண்டும் எழுப்பியுள்ளது. மனசே ரிலாக்ஸ்!