
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ சினிமா டைட்டிலைக் கடன் வாங்கி, மலையாளத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது

கரீனா கபூர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சிறிது காலம் நடிப்புக்கு பிரேக் விட்டிருந்தார். இப்போது இரண்டாவது மகனுக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு தாயாக தன் மகனுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முடித்துவிட்டதால் மீண்டும் மேக்கப் போட முடிவு செய்துள்ளார். சுஜோய் கோஷ் இயக்கும் படத்தில் கரீனா நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் மேற்கு வங்கத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. எதிர்பாராத விதமாக தனது முன்னாள் கணவரைக் கொலை செய்துவிட்டு, அக்கொலையை மறைக்க முயலும் சிங்கிள் மதராக கரீனா இதில் நடிக்கிறார். வெல்கம் பேக்!

தொடர்ச்சியாக தன்னை ட்விட்டரில் டேக் செய்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்திருக்கிறார், முதல்வர் மம்தா பானர்ஜி. ``தினம் ஏதாவது ட்வீட்டில் டேக் செய்து என்னை எரிச்சலூட்டுகிறார். ஏழைகளுக்காக அரசு நடத்தும் மா கேன்டீன்களுக்கு எங்கிருந்து முட்டையும் அரிசியும் வருகின்றன எனக் கேட்கிறார். தினமும், தாஜ் பெங்கால் ஹோட்டலிலிருந்து அவர் வாங்கும் உணவுக்கு எவ்வளவு செலவு ஆகிறது என நான் கேட்கவா? அதற்கான பில் என்னிடம் இருக்கிறது'' என்று கொதித்தார் மம்தா. மாநில அரசு அதிகாரிகளுடன் நடத்தும் கூட்டங்களிலும், ``கவர்னர் உங்களுக்கு ஏதாவது போன் செய்கிறாரா? அவரைப் பொருட்படுத்தாதீர்கள்'' என்று உறுதி கொடுக்கிறார். ஏட்டிக்குப் போட்டி!

தொழிலதிபர் மனைவியை மிரட்டி200 கோடி பணம் பறித்த சுகேஷ் சந்திரசேகரிடம் நெருக்கமாக இருந்து சர்ச்சையில் சிக்கியதால், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்தியாவை விட்டு வெளியில் செல்ல முடியாமல் இருக்கிறார். இப்பிரச்னையால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த ஜாக்குலின், அக்ஷய் குமாருடன் நடிக்கும் `ராம் சேது' படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ஷூட்டிங் முடிந்தவுடன் அக்ஷய் குமாரைத் தனியாகச் சந்தித்துத் தனது கவலையைச் சொல்லி அழுதிருக்கிறார். தான் அனுபவித்த போலீஸ் விசாரணைகள் குறித்துச் சொல்லி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். யூனிட்டே ஜாக்குலினுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறது. அன்பே துணை!
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ சினிமா டைட்டிலைக் கடன் வாங்கி, மலையாளத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது. செஞ்சுரி விஷன்ஸ் என்ற பேனரில் `அவெஞ்சர்ஸ்' என்ற படத்தைத் தயாரிக்கிறார்கள். போலீஸ் எஸ்.ஐ மார்ட்டினை கொடூரமாகக் கொலை செய்து, தலையை போலீஸ் ஸ்டேஷன் முன்பு கட்டித் தொங்கவிட்டுள்ளார்கள். அந்தக் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதுதான் கதையே. ஸ்பைடர்மேன் பாணியில் `மின்னல் முரளி' என்ற சூப்பர் ஹீரோ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, மலையாள சினிமா ஹாலிவுட் பாணியில் பயணிப்பதாகக் கிண்டலடிக்கிறார்கள் ரசிகர்கள். பார்ட் 2 வருமா?
தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் பழைய கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டடம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடம் 121 ஆண்டுகள் பழைமையானது. செங்கல் வெளியே தெரியும்படி சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட இதனைப் பின்னாளில் சுண்ணாம்புப் பூச்சு செய்து மாற்றியமைத்தனர். ஏற்கெனவே அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வந்த இக்கட்டடம், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி மதிப்பில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது. செங்கல் வெளியே தெரியும்படி பழைய வடிவமைப்பில் மாற்றியமைக்கப்படும் இதில், தஞ்சாவூரின் சிறப்புகளை விளக்கும் 3டி தியேட்டர், கலைக்கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுமாம். பழையன போற்றுவோம்!


நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பனைமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - ராஜாத்தி தம்பதி. இவர்களின் மூத்த மகனான 20 வயது நிரம்பிய நவநீதகிருஷ்ணன், மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். இரண்டாவது மகன் பரத்துக்கும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் உள்ளன. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன் சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். இதன் காரணமாக அவருக்கு இப்போது கை கால்கள் செயலிழந்துவிட்டன. மூன்று பேரையும் பராமரிக்கும் ராஜாத்தி, எந்த வேலைக்கும் போக முடியாமல் தவிக்கிறார். இந்தக் குடும்பத்தின் அவலநிலையை அறிந்த நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், அதிகாரிகள் சகிதம் அந்த வீட்டுக்குச் சென்றார். அந்தக் குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அந்த இடத்தில் ரூ.2.1 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையும் வழங்கினார். ராஜேந்திரனுக்கு மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையும் வழங்கியவர், விபத்தில் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், அவர்கள் மகன்கள் இருவர் என மூவருக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த திடீர் உதவியால், அந்தக் குடும்பமே நெகிழ்ந்துபோயிருக்கிறது. நெகிழ்வான நிகழ்வு!
தஞ்சை ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படமும் செப்பேடும் மக்களின் கவனத்தை வசீகரிக்கிறது. 1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை இன்றுவரை போற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவேகானந்தர், இந்தியா திரும்பியதும் தமிழ்நாடு வந்தார். ரயிலில் பயணம் மேற்கொண்ட அவர், பிப்ரவரி 3-ம் தேதி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் உரையாற்றினார். அதன் 125-ம் ஆண்டைப் போற்றும் விதமாக, தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தின் ஏற்பாட்டில் இந்த பிப்ரவரி 3-ம் தேதி சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படமும் அவரது தஞ்சை விஜயம் குறித்த தகவல்கள் அடங்கிய செப்பேடும் அமைக்கப்பட்டுள்ளன. மகான்!

`மகிழ்ச்சி' என்பதை ஒரு பாடமாகப் படிக்கும் வாய்ப்பு இந்தியாவிலேயே முதல்முறையாக மத்தியப்பிரதேச மாநிலப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இது ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்படுகிறது. ராஜ்ய ஆனந்த் சன்ஸ்தான் என்ற மாநில அரசின் துறை இதற்கான பாடநூல்களை உருவாக்குகிறது. குடும்ப உறவு, சமூக உறவு, சுற்றுச்சூழல் ஆகியவை இதில் பாடங்களாக இருக்குமாம். மகிழ்ச்சிக்காகத் தனித் துறை வைத்திருக்கும் ஒரே மாநிலமாகவும் மத்தியப்பிரதேசம் திகழ்கிறது. மகிழ்ச்சி!
புதுச்சேரி உழவர்கரை நகராட்சியின் முன்னாள் கவுன்சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை தொகுதி கமிட்டி உறுப்பினராகவும் இருக்கும் தேவசகாயம் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக காலில் செருப்பு அணிவதில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான இவர், தேர்தல் பிரசாரமோ, கட்சிக் கூட்டமோ அல்லது மக்கள் பிரச்னையோ, எங்கு சென்றாலும் செருப்பை அணிவதில்லை. ``உரிமையின் அடையாளமாக இருந்த செருப்பு ஒருகட்டத்தில் தகுதியின் அடையாளமாக மாறிவிட்டது. அதனால் நான் செருப்பு அணிவதை நிறுத்திவிட்டேன்” என்கிறார் தேவசகாயம். மாண்புமிகு தோழர்!
கோவை வெள்ளலூர்க் குளம் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்படாத குப்பைக் கிடங்காகவே காட்சியளித்தது. கடந்த சில ஆண்டுகளாக தன்னார்வலர்கள் செய்த களப்பணி அதை மீண்டும் இயற்கைப் பாதைக்கு அழைத்து வந்துள்ளது. குப்பைகளை அகற்றி, குளத்துக்குத் தண்ணீர் வரவைத்து, கரைப்பகுதியில் குறுங்காடு அமைத்தனர். இப்போது சூழல்விரும்பிகளின் ஃபேவரிட் ஸ்பாட்டாக மாறியுள்ளளது. விதவிதமான பறவைகள் கண்களைக் கவர்கின்றன. இங்கு 83 வகை பட்டாம்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் மொத்தப் பட்டியலில் 25 சதவிகிதம் ஆகும். ‘‘காடுகளில் மட்டுமே இத்தனை வகை பட்டாம்பூச்சிகளைக் காண முடியும். சதுப்பு நிலத்தில் இவ்வளவு பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பது மிகவும் அரிதானது’’ என்று சூழல் ஆர்வலர்கள் வியக்கின்றனர். பட்டாம்பூச்சிகள் பரவட்டும்..!