
சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி திருமணம் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் நடந்தது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் வரை அசத்தியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது வாழ்க்கை வரலாறு ‘ஸ்ரீதேவி - தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்' என்ற பெயரில் புத்தகமாக வெளிவரவிருக்கிறது. புத்தகத்தில் போனி கபூர், “ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை எழுதியிருக்கிறார் தீரஜ்குமார். ஸ்ரீதேவி, தனது கலையை திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார். அதேசமயம், அவர் ஒரு தனிமை விரும்பி'' எனச் சொல்லியிருக்கிறார். மயிலு சரிதம்!

விஜய் - லோகேஷ் கனகராஜ் காம்போவில் `லியோ' படப்பிடிப்பு காஷ்மீரில் மும்முரமாக நடந்துவருகிறது. அங்கே இப்போது கடுங்குளிர் நிலவுகிறது என்றும், குளிரைத் தாங்கமுடியாமல் த்ரிஷா சென்னை திரும்பிவிட்டார் என்றும் கோடம்பாக்கத்தில் தகவல்கள் பரவின. விசாரித்தால், த்ரிஷா சென்னை வந்தது உண்மை. ஆனால், தவிர்க்க முடியாத சொந்த வேலை காரணமாக சென்னை வந்தார் என்றும், மறுநாளே காஷ்மீர் பறந்துவிட்டார் என்றும் தகவல். கூல் த்ரிஷ்..!

சூப்பர் ஹீரோ சினிமாக்கள்தான் ஹிட் கொடுக்கிறது என்ற அதீத நம்பிக்கை உண்ணி முகுந்தனை ஆட்டிப்படைக்கிறதாம். ‘மின்னல் முரளி’ படத்தில் ஸ்பைடர் மேன் போன்று அதிரடித்ததால் அந்தப் படம் ஹிட் ஆனது. ‘மாளிகப்புறம்’ படம் 100 கோடி வசூலைத் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்தது. அடுத்ததாக 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘கந்தர்வ ஜூனியர்’ என்ற படத்தில் கந்தர்வனாக நடிக்கிறார் உண்ணி முகுந்தன். திடீரென பூமிக்கு வரும் கந்தர்வன் செய்யும் சேட்டைகளை மையமாக வைத்து காமெடியாகத் தயாராகிறதாம் இந்தப் படம். சேட்டன் சேட்டைகள்!

சல்மான் கானும் ஆலியா பட்டும் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிப்பதாக இருந்தது. படத்திற்கு `இஷ்ஹல்லா' என்று பெயர்கூட வைத்துவிட்டனர். அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த மூன்று மாதங்கள் இடத்தேர்வும் நடந்துகொண்டிருந்தது. ஆலியா பட் சல்மான் கானுடன் நடிக்கப்போகிறோம் என்ற ஆசையில் இருந்தார். ஆனால் சல்மானுக்கும் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால், இந்தப் படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் சல்மான் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வட போச்சே?!

சித்தார்த் மல்ஹோத்ரா-கியாரா அத்வானி திருமணம் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் நடந்தது. இருவரும் திருமணத்திற்குப் பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். அதற்கு 13.48 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு பாலிவுட் ஜோடியின் திருமணப் புகைப்படத்திற்கும் இந்த அளவுக்கு லைக் கிடைத்தது கிடையாது. கியாராவின் திருமணத்தில் பங்கேற்ற கரண் ஜோகர், ‘புதுமணத்தம்பதிகள் தனது கம்பெனியின் மூன்று படத்தில் நடிக்கவேண்டும்’ என்று ஒப்புதல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். அதோடு திருமண வீடியோவை அமேஸான் பிரைமிற்கு விற்பனை செய்து கியாரா வருமானத்தையும் பார்த்துக்கொண்டார். ஓ.டி.டி ரிலீஸ் எப்போ?
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பணிகள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பிரிவாக தாமஸ் பார்க் பகுதியில் பிரமாண்ட மீடியா டவர் அமைக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி திரை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இதுதான், தெற்கு ஆசியாவின் உயரமான மீடியா டவர் என்று சொல்லப்படுகிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரை ஆண்ட்ராய்டு செயலி மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி செயற்கை நீருற்று, அ, ஆ போன்ற தமிழ் உயிர் எழுத்துகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமும், பாரம்பர்யமும் கலந்த இந்த மீடியா டவர் கோவையின் புதிய அடையாளமாகத் திகழப்போகிறது. டிஜிட்டல் கோவை!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார் கற்பகம் ஐ.ஏ.எஸ். கடந்த மாதம்தான் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்யாம்ளா தேவி பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கெனவே மாவட்ட வருவாய் அலுவலராக அங்கையற்கண்ணி, கோட்டாட்சியராக நிறைமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக லலிதா, மாவட்ட நீதிபதியாக பல்கீஸ், பெரம்பலூர் நகராட்சியின் தலைவராக அம்பிகா, மங்களமேடு டி.எஸ்.பியாக ஜனனி பிரியா ஆகியோர் உள்ளனர். ஆக, பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கியப் பதவிகளின் நாற்காலிகளைப் பெண்களே அலங்கரிக்கின்றனர். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான பெரம்பலூரில், பெண் அதிகாரிகள் உயர்பொறுப்பில் அமர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பெருமைமிகு பெண்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸார் பல்வேறு கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் போதைப் பொருளான கஞ்சா விற்பனையை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்திலேயே முதல்முறையாக கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பாக செல்ஃபி பாயின்ட் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இதைத் திறந்துவைத்தார். அந்த செல்ஃபி பாயின்ட்டில், `கஞ்சா... உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம், நமக்கும் வேண்டாம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் அங்கு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். முன்னுதாரண செல்ஃபி!

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் பிரேம் நசிர். கொரோனா காலத்தில் கம்பம் நகராட்சியில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களைக் கொடைக்கானலுக்கு ஒரு நாள் ட்ரிப் அழைத்துச் சென்றார். கொரோனா காலத்தில் பணி செய்து மன இறுக்கத்தில் இருந்தவர்களை மகிழ்வித்த இவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் உள்ள 25 பேர், தேனி மாவட்ட காது கேளாதோர் சங்கத்தைச் சேர்ந்த 20 பேர் உட்பட மொத்தம் 60 பேரைத் தேர்வு செய்து ஒரு நாள் சுற்றுலாப் பயணமாகக் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்து கூட்டிவந்துள்ளார். அந்த மனசுதான் சார்!

தென்காசி மாவட்டம் உருவான மூன்று வருடங்களில் ஐந்தாவது ஆட்சியராக துரை.ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார். உடையாம்புளி கிராமத்தின் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற அவரது காரை, அந்த கிராமத்தைச் சேர்ந்த காசியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி மறித்துள்ளார். அவரை அரசியல்வாதி என நினைத்துக்கொண்ட காசியம்மாள், ‘யப்பா... எனக்கு ஒரு சேலை வாங்கிக் குடுத்துட்டுப் போ” என்று கேட்டுள்ளார். பதறிப்போன அதிகாரிகள் அந்த மூதாட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். அதற்குள் காரை விட்டுக் கீழிறங்கிய கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், தனது பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அந்த மூதாட்டிக்குக் கொடுத்துள்ளார். அதை வாங்க மறுத்த மூதாட்டி, “பணம் வேண்டாம்... சேலை வாங்கித் தந்தால் போதும்” எனக் கறார் காட்டியதால் கிராம நிர்வாக அலுவலரை அழைத்து பணத்தைக் கொடுத்து சேலை வாங்கி வரச் சொல்லி, வழங்கியுள்ளார். தான் சேலை கேட்டது கலெக்டரிடம் என்பதைத் தாமதமாக அறிந்துகொண்ட மூதாட்டி காசியம்மாள், அவரை வாயார வாழ்த்தியிருக்கிறார். தாயுள்ளம்!