சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷ்மிகா மந்தனா

`அட்ரங்கி ரே' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாரா அலிகானுக்குத் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது கனவாம்.

ராஷ்மிகா மந்தனாவிற்கு விஜய்யோடு நடிக்க வேண்டும் என்பது பெரும் கனவு. இப்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ``விஜய் சார் நம்ம `புஷ்பா' படத்தைப் பார்த்துவிட்டாரா?’' என விஜய்யின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ``அவர் ஜோடியா நடிக்கணும்னா கால்ஷிட், பேமன்ட் எல்லாம் அடுத்த விஷயம்'' என்கிறார் ராஷ்மிகா. ராஷ் வெயிட்டிங்!

இன்பாக்ஸ்

சமூக வலைதளங்களில் நேரத்தை விரயமாக்கும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு மத்தியில், அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி 3 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப் பெற்றிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி ஸ்வேகா. 9-ம் வகுப்பில் டீச்சர் சொல்லிக் கொடுத்த ‘ஜெனிட்டிக்ஸ்’ பாடம் புரியாமல்போக, அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் லேண்டர் என்னும் லெக்சரரின் வீடியோவை யூடியூபில் பார்த்துள்ளார் ஸ்வேகா. அதில் கவரப்பட்டவர் வெளிநாட்டில் போய் கல்லூரிப் படிப்பைப் படிக்க வேண்டுமென தினமும் நேரம் ஒதுக்கி அதற்கான தகுதியை இன்டர்நெட் உதவியுடன் வளர்த்து வந்துள்ளார். அதன் பலனாய் உலகின் டாப் 10 பல்கலைக்கழகங்களில் ஒன்றான அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு பட்டப்படிப்பு படிப்பதற்கு ரூ.3 கோடிக்கான ஸ்காலர்ஷிப் ஸ்வேகாவிற்கு சமீபத்தில் கிடைத்திருக்கிறது. இதுதானா தொலைதூரக் கல்வி!

இசையுலகில் புகழ்பெற்று விளங்கியவர் காருகுறிச்சி அருணாசலம். நாகஸ்வர இசையின் மூலம் உலகப் பிரபலமானவர். ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், அருணாசலத்தை நேரில் அழைத்துப் பாராட்டி வெள்ளி நாகஸ்வரத்தைப் பரிசாக அளித்தார். அருணாசலம் பிறந்தது நெல்லை மாவட்டம் காருகுறிச்சி என்றாலும், அவர் வாழ்நாள் இறுதிவரை வசித்தது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்தான். அவரது மறைவுக்குப் பிறகு கோவில்பட்டி - கடலையூர் சாலையில் அரசு கொடுத்த நிலத்தில், அவரது குடும்பத்தினர் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளனர். அருணாசலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது வெள்ளி நாகஸ்வரத்திற்கு டிசம்பர் 21-ம் தேதி பூஜையும், சிறப்பு நாகஸ்வர இசை நிகழ்ச்சியும் நடந்தன. ‘கோவில்பட்டியில் இசைக்கல்லூரி அமைக்க வேண்டும்’ என அருணாசலத்தின் பேரன் பெரிய நாயகம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். நாதம் எழட்டும்!

கேரள யானைகளுக்கு இந்த ஆண்டும் சோதனைக் காலம். கடந்த ஆண்டு கர்ப்பிணி காட்டு யானை நாட்டு வெடியால் பாதிக்கப்பட்டு, ஆற்றில் நின்றபடியே உயிரிழந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம். மற்ற மாநிலங்களைவிட கேரளாவில் வளர்ப்பு யானைகள் அதிகம். கோயில் நிர்வாகங்கள் மட்டுமல்லாமல், தனியாரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக யானைகளை வளர்த்துவருகின்றனர். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோயில் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக யானைகளுக்கு வாக்கிங் போன்ற அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படவில்லை. 2021-ம் ஆண்டில் மட்டும் 29 வளர்ப்பு யானைகள் உயிரிழந்துள்ளன. மக்களிடம் பேரன்பைப் பெற்ற, மங்கலம்குன்னு கர்ணன், ராமசந்திரன் உள்ளிட்ட யானைகளும் உயிரிழந்துள்ளதால் கடவுளின் தேசம் சோகத்தில் மூழ்கியுள்ளது. வனவிலங்கு ஆர்வலர்களோ, “யானைகள் காட்டில்தான் இருக்க வேண்டும். இந்தச் சூழல் யானைகளுக்கு எப்போதும் சரிவராது. இனியாவது யானைகளுக்கு விடுதலை கொடுங்கள்” என்று கூறிவருகின்றனர். விலங்குகளுக்கு வேண்டும் விடுதலை!

கொரோனாப் பரவலைத் தடுப்பதற்காக அரசு வாரா வாரம் கொரோனாத் தடுப்பூசி முகாமை நடத்திவருகிறது. கும்பகோணத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சோடா கிருஷ்ணமூர்த்தி என்பவர் மடத்துத் தெருவும், காமாட்சி ஜோசியர் தெருவும் சந்திக்கின்ற இடமான முச்சந்தியில் ‘முச்சந்தி முகாம்’ என்ற பெயரில் கொரோனாத் தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறார். மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நடத்தப்படும் இந்த முகாமிற்கான செலவுகளை சோடா கிருஷ்ணமூர்த்தி ஏற்றுச் செய்துவருகிறார். 100 நாள்களைக் கடந்து நடைபெற்றுவரும் இந்த முகாமில் இதுவரை 25,000 பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த முச்சந்தி!

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ‘வணக்கம்டா மாப்ள’ என்ற திரைப்படம் நேரடியாக சன் டி.வி-யில் வெளியானது. தற்போது, சத்தமே இல்லாமல் ஒரு வெப் சீரிஸிற்கான படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவிருக்கும் இதன் நாயகி, ஹன்சிகா. இதற்கிடையில் ஜெயம் ரவிக்குக் கதை சொல்லி ஓ.கே செய்துவிட்டாராம். இந்த வெப் சீரிஸ் வேலைகள் முடிந்தவுடன், படம் ஆரம்பமாகிவிடும். வாங்க... வாங்க..!

`அட்ரங்கி ரே' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாரா அலிகானுக்குத் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது கனவாம். தனுஷ் மீடியாவில் `தன்னுடைய பெட்டர் ஆன் ஸ்க்ரீன் ஜோடி சோனம் கபூர் தான்' என்று சொன்னதை சிலர் திரித்து விட்டதில் ஏக அப்செட்டாம். ``உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். நாங்கள் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். விரைவில் தனுஷோடு தமிழில் நடித்தாலும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை'' என்று சிரிக்கிறார். என்னமோ திட்டம் இருக்கு!

இன்பாக்ஸ்

நெல்லைச்சதி வழக்கில் கைதாகி சிறைசென்று சித்திரவதை அனுபவித்து, ரத்தமும் சதையும் கிழிந்து தொங்கியபோதிலும் உறுதியுடன் அதை எதிர்கொண்டு யாரையும் காட்டிக்கொடுக்க மறுத்தவர்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு. மற்றொருவர், நெல்லையைச் சேர்ந்த வாத்தியார் ஜேக்கப். ஆசிரியராக இருந்ததால் ஜேக்கப்புக்கு ‘வாத்தியார்’ என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டுவிட்டது. கடைசி வரையிலும் காவல்துறையினர் அடித்த அடிகளின் பாதிப்புகளைக் கால்களில் சுமந்தபடியே வாழ்ந்த அவர் டிசம்பர் 21-ம் தேதி தன் 96-வது வயதில் மரணமடைந்துவிட்டார். 130-க்கும் அதிகமான நூல்களை எழுதி வரலாற்றுச் சாட்சியமாக விளங்கிய வாத்தியார் ஜேக்கப்புக்கு அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் நிச்சயம் இடம் இருக்கும். செவ்வணக்கம் தோழர்!

பத்தாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியிருக்கிறார்கள் துல்கர் சல்மான் - அமால் சோபியா தம்பதி. ‘வாழ்க்கை என்பது பாய்மரக் கப்பலில் ஒன்றாகப் பயணிப்பது போன்றது. திசையில்லாத எங்களைக் காற்றுதான் வழிநடத்துகிறது. நாங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு எதிரில் வரும் பேரலைகளைக் கடந்து செல்கிறோம்’ என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் துல்கர் சல்மான். அந்தப் பதிவின் கீழ் ‘இக்காவுக்கும் இத்தாவுக்கும் வாழ்த்துகள்’ என ரசிகர்கள் கமென்ட் குவிய, நெகிழ்ந்துபோயிருக்கிறார் துல்கர் சல்மான். அடிப்பொலி!

ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் போனில் அழைத்து `ஜெய்பீம்' படத்துக்காக வாழ்த்து மழை பொழிந்து விட்டாராம். ``சினிமாவை நேசித்து சினிமாவாகவே வாழும் அவர் வியந்து வாழ்த்தியது விருது வாங்கிய உணர்வைக் கொடுத்தது. பொறுப்புகள் கூடுது'' என்கிறார் ஞானவேல். அனுராக் காஷ்யப்பின் குருநாதர் ராம் கோபால் வர்மா இயக்கிய `ரத்த சரித்திரம்' படத்துக்கு தமிழுக்கான வசனம் எழுதியவர்தான் ஞானவேல் என்பது கூடுதல் தகவல். செம!

மும்பையில் பால் ஆஷா டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு ஏழைக்குழந்தைகளின் நலனுக்காகப் பாடுபட்டுவருகிறது. இந்த அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ருதிஹாசன் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். ஆன்லைனில் ஏலம் விட்டு நிதிதிரட்டுவதற்காக ஸ்ருதி தனது ஆடைகளைத் தொண்டு நிறுவனத்திற்குக் கொடுத்து உதவியிருக்கிறார். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஆடைகளை ஆன்லைனில் எடுத்துக்கொள்ளலாம் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார். ஸ்ருதியின் தாராள மனதைத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சுனில் அரோரா வெகுவாகப் புகழ்ந்துள்ளார். உடுக்கை உதவி!