தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

அமலா பால்
பிரீமியம் ஸ்டோரி
News
அமலா பால்

மலையாளத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். சமீபத்தில் வெளியான ‘டீச்சர்’, ஓ.டி.டி-யில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் த்ரில்லர் ஜானரில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருக்கிறார்.

இன்பாக்ஸ்

முதுமலைப் புலிகள் காப்பகத்தில் முதல்முறையாக வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு அண்மையில் நடத்தப்பட்டது. வனத்துறையினர், தன்னார்வலர்கள், வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் இரண்டு நாள்களாக காடு, மலைகளில் தேடி அலைந்து 175 வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் மிகமிக அரிதாகவே தென்படும் ‘Yellowjack Sailer’, மாநில வண்ணத்துப்பூச்சியான ‘தமிழ் யேமன்’ (Tamil Yeoman) முதல் உள்ளூர்ப் பழங்குடிகளால் ‘நீலகிரிப் புலி’ (Nilgiri Tiger) வரை மனம் மயக்கும் வண்ணத்துப்பூச்சி இனங்களைக் கண்டு ஆய்வாளர்களே ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்‌. வனவளத்தின் வண்ணக் குறியீடு!

இன்பாக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கார் டிரைவரான விஜயகுமார், பழைய குற்றால அருவிக்கு சவாரி சென்றுள்ளார். காரை நிறுத்திவிட்டு குளிக்கும் இடத்திற்கு வந்தபோது தண்ணீரில் சிறுமி ஒருவர் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து துணிச்சலாக இறங்கி சிறுமியைக் காப்பாற்றியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் தன் குடும்பத்துடன் அருவிக்குக் குளிக்க வந்துள்ளார். அவரின் 4 வயதுக் குழந்தை ஹரிணி மட்டும் தனியாக அருவியின் ஓரத்தில் நின்று குளித்துக் கொண்டிருந்தபோது, நீர்வரத்து அதிகரித்ததன் விளைவாக தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆபத்தான பாறைகளுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் விஜயகுமார் காப்பாற்றியுள்ளார். சிறுமியைக் காப்பாற்றிய விஜயகுமாரை அனைவரும் பாராட்டியதுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இங்கு சீசன் காலங்களில் மட்டுமன்றி, சுற்றுலாப் பயணிகள் வரும் எல்லா நாள்களிலும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தன்னலமற்ற வீரன்!

சுற்றுலாத் தலமான மூணாறு பகுதியைச் சுற்றி வரும் காட்டு யானையான படையப்பா, வாகனங்களை வழிமறித்து பயம் காட்டுவது, சாலையோரக் கடைகளில் இளநீர் குடிப்பது, மக்காச்சோளம், அன்னாச்சிப் பழங்கள் உண்பது என எதையும் விட்டு வைப்பதில்லை. சமீபத்தில் வட்டக்காடு எஸ்டேட் குடியிருப்புப் பகுதி மாரியம்மன் கோயில் திருவிழாவில் புகுந்தது. கோயிலில் கட்டப்பட்டிருந்த வாழையையும், அன்னதானத்திற்காக வைத்திருந்த அரிசியையும் தின்றுவிட்டுச் சென்றது. என்னதான் விரட்டினாலும் படையப்பா மீண்டும் மீண்டும் மூணாறு பகுதிக்கு வந்து சேட்டையைத் தொடர்கிறான் என வனத்துறையினர் சலித்துக்கொள்கின்றனர். ஆனால் படையப்பாவின் சேட்டைகளை வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டு ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. படையப்பா ரீ ரிலீஸ்!

இன்பாக்ஸ்

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் நடிகராகியிருக்கிறார் ராஜீவ் மேனன். மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘ஹரிகிருஷ்ணன்ஸ்’ படத்தில் நடித்தவர், அதன்பின் இப்போது வெற்றிமாறனின் ‘விடுதலை’யில் நடித்திருக்கிறார். ‘‘படத்துல சி.பி.ஐ அதிகாரி ரோல் ஒண்ணு இருக்கு. நீங்க நடிச்சா பொருத்தமாக இருக்கும்’’ என வெற்றிமாறன் கேட்டதும், உடனே நடித்துக்கொடுத்திருக்கிறார் ராஜீவ் மேனன். ஆபீசர் சாய்ஸ்!

இன்பாக்ஸ்

டான் சுகேஷ் சந்திரசேகர் வழக்கு சர்ச்சையால், பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் பலரும் ஜாக்குலின் பெர்னாண்டஸை ஒதுக்கி வைத்திருந்தனர். அதோடு அவர் வெளிநாடு செல்லவும் விசாரணை ஏஜென்சி தடைவிதித்துள்ளது. இதனால் வீட்டில் முடங்கிக் கிடந்த ஜாக்குலின், சமீபத்தில் வெளியான ‘சர்க்கஸ்’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவருக்குப் புதிய வாய்ப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. சோனு சூட் தனது ‘பதேஹ்’ படத்தில் ஜாக்குலினுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார். மீண்டு(ம்) வாங்க ஜாக்குலின்!

இன்பாக்ஸ்

மலையாளத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். சமீபத்தில் வெளியான ‘டீச்சர்’, ஓ.டி.டி-யில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் த்ரில்லர் ஜானரில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருக்கிறார். இடையே இந்தியில் கமிட் ஆன கைதி ரீமேக்கான அஜய் தேவ்கானின் ‘போலா’ படத்தின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதற்காக வாரணாசி சென்று வந்தவர், படப்பிடிப்பு இடைவெளியில் ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று பக்தியில் மனதைக் கரைத்திருக்கிறார். தமிழ்ச் சங்கமம் பார்த்தீங்களா?

1940 காலகட்டக் கதையான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. தனுஷுடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உட்பட பலரும் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர். இதில் சிவராஜ்குமாரின் தம்பியாக நடிக்கிறார் தனுஷ். வரும் பிப்ரவரி மாதத்தில்தான் சிவராஜ்குமார் படப்பிடிப்பில் இணைகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தூத்துக்குடி, குற்றாலத்தில் படமாக்க உள்ளனர். கேப்டன் அண்ணா!