
பாலிவுட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவோடு ஆமீர் கான் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன.

கமல்ஹாசன் தன் யாத்திரையில் கலந்துகொண்டற்காக அவருக்கு ஒரு புலிப் புகைப்படத்தைப் பரிசளித்தார் ராகுல் காந்தி. அந்தப் புகைப்படத்தை எடுத்தது, பிரியங்காவின் 21 வயது மகன் ரைஹான் ராஜீவ் வதேரா. எட்டு வயதிலிருந்து போட்டோகிராபராக இருக்கும் ரைஹான், கடந்த ஆண்டு ஒரு புகைப்படக் கண்காட்சியும் நடத்தினார். ராந்தாம்பூர் புலிகள் சரணாலயம் அவருக்கு மிகவும் பிடித்த இடம். பலமுறை அங்கு சென்று புலிகளைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் ஒரு புகைப்படம்தான் கமலுக்குக் கொடுத்தது. புலிக்குப் பிறந்தது...

நீண்ட இடைவெளிக்குப் பின் கவுண்டமணி கதாநாயகனாகக் களமிறங்கும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ படத்தை பிப்ரவரியில் தொடங்குகின்றனர். வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்’ கொடுத்த பாடத்தினால் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் கவுண்டமணி. இயக்குநரை அழைத்து, ‘‘பில்டப் சீன்களில் கவனம் செலுத்தாமல், திரைக்கதையை நன்றாகக் கொண்டு வாருங்கள்’’ எனக் கேட்டிருக்கிறார். படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பது சிவகார்த்திகேயனா, சந்தானமா என்பது சஸ்பென்ஸாக நீடிக்கிறது. கவுண்டர் மகான் ரிட்டன்ஸ்!

ராஜ்கிரண் நடித்த ‘பவர் பாண்டி’க்குப் பின் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கினார் தனுஷ். அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் என்று பலரும் இணைந்தனர். சில வாரங்கள் படப்பிடிப்பும் நடந்தது. அதன்பிறகு சில காரணங்களால் அந்தப் படம் நின்றுபோனது. இந்நிலையில் மீண்டும் அந்தப் படத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். கெஸ்ட் ரோல் இருக்கா?!

பாலிவுட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவோடு ஆமீர் கான் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அவரை அணுகியிருக்கின்றனர். கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்து எடுக்கவிருக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். அவருடன் இப்படத்தில் ஆமீரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆமீர் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை. சஞ்சய் தத் மாதிரி பவர் வில்லனா?
`தேசத்தின் நலனுக்காகவும் மகிழ்ச்சிக்காகவுமே நீங்கள் யாத்திரை போகிறீர்கள். ராமரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நிச்சயம் உண்டு' என்று ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறார், அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயத்தின் தலைமைப் பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ். ராகுலின் பாரத் ஜேடோ யாத்திரை உத்தரப் பிரதேசம் வழியாகச் சென்றபோது இந்த வாழ்த்து வந்தது. ராமர் கோயில் அறக்கட்டளைச் செயலாளர், பொருளாளர் என்று பலரும் ராகுலுக்கு வாழ்த்து சொல்ல, வி.ஹெச்.பி அமைப்பு, ‘‘ராகுலின் யாத்திரையை பிரதமரோ, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளோ எதிர்க்கவில்லை'' என்றது. விளைவு, அமித் ஷாவில் ஆரம்பித்து பலரும் ராகுலைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். பா.ஜ.க மட்டும்தான் எதிர்க்கிறதோ!

நீலகிரியில் வாழ்ந்துவரும் பழங்குடிகளான கோத்தர்கள், இன்றளவும் பண்டைய வாழ்வியல் முறைகளைப் போற்றிப் பாதுகாத்துவருகின்றனர். மூதாதையர்களான ஐனோர், அம்னோர் மற்றும் கம்பட்ராயரைக் குல தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர் இவர்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் குலதெய்வக் கோயில் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுகிறார்கள். விழா நடைபெறும் நாள்களில் மேலாடை அணிவதைத் தவிர்த்து போர்வையை மட்டுமே போர்த்திக்கொள்வர். கோயிலுக்கு சேவை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ‘ஆட்டாஸ் குப்பாஸ்' எனும் அரச வேடம் தரித்து வந்து மக்களுடன் நடனமாடி காட்சி தந்த பிறகே அனைவரும் மேலாடை அணிவார்கள். ஆதி காலத்தில் இலைதழைகளை ஆடையாக உடுத்தியிருந்ததை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் வகையில், விழாவின் இறுதி நாளில் சிறுவர்களை இலைதழைகளை ஆடையாக உடுத்தச் செய்வார்கள். மரபு... மாண்பு!


விருதுநகர் ரயில் நிலையத்தில் பசுமையைக் காக்க கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தப் பணத்தை செலவு செய்துவருகிறார் ஆட்டோ டிரைவர் நாகராஜ். குளுகுளு நிழல் தரும் பூவரசு, நாவல் மரங்களுடன் விருதுநகர் ரயில் நிலையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் நட்டுப் பராமரித்துவருகிறார் நாகராஜ். ஆட்டோ டிரைவர் நாகராஜின் இந்த முயற்சிக்கு ரயில்வே அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளித்துவருகின்றனர். தோட்டத்தை அழகுறப் பராமரித்து நாகராஜ் செய்யும் சேவையை அங்கீகரித்து, ‘பராமரிப்புப் பலகை’ வைத்து நன்றி தெரிவித்துள்ளது தெற்கு ரயில்வே. சேவைக்கு சல்யூட்!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே தங்கம்மாபட்டியில் வண்டி கருப்பணசாமி கோயில் உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனங்கள் ஓடவேண்டும் என வேண்டிக்கொண்டு இங்கு நேர்த்திக்கடனாக ஆடுகளை வெட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். திண்டுக்கல் காவல்துறை வாகன ஓட்டுநர்கள் மொத்தமாகச் சேர்ந்து 20 ஆடுகள் வெட்டி இங்கு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி, இந்த ஆண்டு கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க வடமதுரை காவல் நிலைய போலீஸார் சார்பில் கருப்பணசாமிக்குக் கிடா வெட்டி வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்புப் பூஜையில் கலந்து கொண்ட போலீஸார் அனைவருக்கும் கறி விருந்தும் வழங்கப்பட்டது. கிடாயின் கருணை மனு வந்துச்சா?!
ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில், காயத்துடன் மீட்கப்பட்ட ஒரு புலிக்குட்டிக்குப் பாதுகாப்பு அரண் அமைத்துப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. குட்டியிலேயே தாயைப் பிரிந்ததால், அதற்கு வேட்டைப் பயிற்சி வழங்கி மீண்டும் காட்டில் விட முடிவு செய்திருந்தனர். ஆனால், திடீரென அந்தப் புலியின் பற்களில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து புலிக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். தற்போது புலி மெல்ல மெல்ல மீண்டுவருவதால் மீண்டும் வேட்டைப் பயிற்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். அதற்கு இப்போது கோழி, முயல், பன்றி போன்றவற்றின் இறைச்சி கொடுக்கப்பட்டுவருகிறது. அதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தால் காட்டில் விட முடியாது. எனவே, மான்களைப் பிடித்து புலிக்கு இரையாக அரணில் விடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறை முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுமதி கேட்டுக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது வேட்டை கற்கும் வாரிசு புலி!
தீவிர அரசியலில் இறங்கப்போகிறார் பிரகாஷ்ராஜ். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரை நெருக்கத்தில் வைத்து ஆலோசனைகள் பெறுகிறார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்குக் கண்டிப்பாக சந்திரசேகர ராவ் சீட் கொடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். அவருக்கான தொகுதியைக்கூட முதல்வர் தேர்வு செய்துவிட்டதாகக் கேள்வி. அதனால் படங்களைத் தேர்ந்தெடுத்துத்தான் ஒப்புக்கொள்கிறார் பிரகாஷ். ட்விட்டர்ல கேள்வி கேட்டவர் பார்லிமென்ட்ல கேட்பாரு!

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக வாரந்தோறும் கரும்புச்சர்க்கரை அனுப்பி வைக்கப்படுகிறது. ரசாயனம் எதுவும் கலக்காமல் விவசாயிகள் உற்பத்தி செய்யும் இந்தக் கரும்புச்சர்க்கரையை 2020 அக்டோபர் மாதத்திலிருந்து பழநி தேவஸ்தான அதிகாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்து வருகின்றனர். பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காகக் கொண்டு செல்வதால் விவசாயிகளும் தூய்மையாக சர்க்கரையைத் தயாரித்து எடுத்து வருகின்றனர். இப்போது பழநியில் அதிரசம், சர்க்கரைப் பொங்கல் தயாரிக்க தரமான உருண்டை வெல்லமும் இங்கிருந்து போகிறது. கவுந்தப்பாடி மண்ணின் வளமும், பவானி ஆற்று நீரும்தான் கரும்புச்சர்க்கரையின் தரத்துக்கும், ருசிக்கும் காரணம் என்கிறார்கள் விவசாயிகள். பிரசாத ருசி!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவியேற்றார். டி.ஒய்.சந்திரசூட். ‘‘அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து நீங்கள் சீக்கிரம் வீட்டுக்கு வருவதில்லை, எங்களுடன் நேரம் செலவிடுவதில்லை’’ என்று அவரின் இரு மகள்களும் வருத்தப்பட்டனர். சந்திரசூட் தன் இரு மகள்களையும் ஒருநாள் உச்ச நீதிமன்றத்துக்கு வரவழைத்து, தன் பணிச்சுமையை நேரில் பார்க்கச் சொல்லியிருக்கிறார். மாற்றுத் திறனாளிகளான இருவரும் வீல் சேரில் வந்து அப்பாவின் பணிகளைப் பார்த்தது நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, ‘‘வேலைகள் இருக்கும்தான். ஆனாலும் எங்களுக்கு நேரம் கொடுங்கள்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள் இருவரும். மகள்கள் அதிகாரம்!