சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
சமந்தா

இந்த வருடம் முதல் அதிக படங்கள் தயாரித்து நடித்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா.

நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியுடனான காதலை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் ரகுல் ப்ரீத் சிங். புத்தாண்டில், ‘இந்த வருஷம் இவர்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்' என்று வதந்திகள் கிளம்பிவிட்டன. ‘‘நான் வெளிப்படையானவள். கல்யாணம் என்றால், அதை முதலில் சொல்கிற ஆளாக நான்தான் இருப்பேன். கைவசம் இருக்கும் பத்து படங்களை முடிப்பதில்தான் என் கவனம் இருக்கிறது. நேரம் வரும்போது திருமணம் நடக்கும்'' என்கிறார் ரகுல். கடமை முக்கியம்!

இன்பாக்ஸ்

டென்னிஸ் அரங்கில் ‘ஜோக்கர்' என அழைக்கப்படும் ஜோக்கோவிச் தான் சமீபத்திய வைரல். தடுப்பூசிகளின் மேல் நம்பிக்கையில்லாத ஜோக்கோவிச், ஆஸ்திரேலிய ஓப்பன் தொடருக்கு ஆயத்தமாகி வந்தார். நடப்பு சாம்பியனான அவர் இந்த முறை தொடரில் பங்கேற்க ‘தடுப்பூசிக்கு விலக்கு' அளித்திருந்தது டென்னிஸ் ஆஸ்திரேலியா. ஆனால், பங்கேற்க வந்தவரின் விசாவை ரத்து செய்திருக்கிறது அரசு. ஜோக்கோவிச்சின் தாய்மண்ணான செர்பியா நாடு இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், ‘மனதளவில் சக்தி வாய்ந்தவர்கள் விஷமிருக்கும் உணவைக்கூட அமிர்தமாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள்', ‘மனிதர்களின் எனர்ஜிக்கு ஏற்ப தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகள் நகரும்' என்றெல்லாம் பேசிய ஜோக்கரின் பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. ஓ மை ஜோக்கர்!

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கோவை அரசியல் பரபரப்பாக பேசப்பட்டது. பரபரப்பு அரசியலுக்கு மட்டுமல்ல, பரபரப்பாக இயங்கி வரும் அரசியல்வாதிகள் ஓய்வு கொள்ளவும் கோவையைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். இதமான க்ளைமேட் கொண்ட கோவையில் ஆயுர்வேத மற்றும் புத்துணர்வு சிகிச்சை மையங்கள் பெருகிவிட்டன. தொடர்ந்து பயணம், ஓய்வில்லாமல் இருப்பவர்களுக்கு உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளை சரி செய்து புத்துணர்ச்சி கொடுக்கின்றன. இதனால் ஓ.பி.எஸ், சீமான், எல்.முருகன், வானதி சீனிவாசன் போன்ற பல அரசியல் தலைவர்கள் மற்றும் வி.வி.ஐ.பிகள் இந்த புத்துணர்வு சிகிச்சை மையங்களில் ரீசார்ஜ் செய்து கொள்கின்றனர். மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இன்பாக்ஸ்

இந்த வருடம் முதல் அதிக படங்கள் தயாரித்து நடித்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா. ரௌடி பிக்சர்ஸுக்கான கதை கேட்கும் வேலையில் அவரும் விக்னேஷ் சிவனும் சேர்ந்தே உட்காருகிறார்கள். சென்னை எழும்பூரில் இருக்கும் விக்கி-நயன் ஆபீஸ் புதுமுக இயக்குநர்களின் வருகையில் கலகலப்பாகி இருக்கிறது. வெல்கம்!

இன்றைய தேதிக்கு படுபிஸியாக இருக்கும் நடிகை சமந்தாதான். ‘பேமிலிமேன் 2'வில் நடித்த பிற்பாடு அவருக்குத் தொட்டது எல்லாம் துலங்குகிறது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு பிஸியாகிவிட்டார். ஏராளமான விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். சோலோ ஆட்டங்களுக்கு ஒரு கோடி, இரண்டு நாட்கள் கால்ஷூட் என ரெடியாகி இருக்கிறார். புஷ்பா புண்ணியம்!

இன்பாக்ஸ்

மனநலம் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் திரிபவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி சோமசுந்தரத்தின் முயற்சியில், இதுபோன்றவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் உன்னத சேவை இப்பகுதியில் நடைபெற்றது. காவல்துறையினர், நம்பிக்கை மனநலம் காப்பகம் அமைப்பினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் ஆகியோர் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம், மருந்தீஸ்வரர் கோயில், வேதாரண்யம் சாலை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு கேட்பாரற்ற நிலையில் சுற்றித் திரிந்த 10 பேர் மீட்கப்பட்டனர். ‘‘இவங்களுக்கு முடிவெட்டி குளிக்க வச்சி, நல்ல உடை, உணவுகள் வழங்க ஏற்பாடு செஞ்சிருக்கோம். முதல்கட்டமா இதையெயெல்லாம் செஞ்சாலே இவங்க புத்துணர்வு அடைஞ்சி, மனநிலை மாறவும் வாய்ப்பிருக்கு. இனிமே இவங்க மனநலக் காப்பகத்துலதான் இருப்பாங்க'’ என்கிறார் டி.எஸ்.பி சோமசுந்தரம். அந்த மனசுதான் சார் கடவுள்!

‘ப்ரோ டாடி' படத்தில் நடிகர் பிருத்விராஜுக்கு அம்மாவாக நடிக்கிறார் மீனா. ‘த்ரிஷ்யம் 2' படத்துக்குப் பிறகு மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் மீனாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ‘2022-ல் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி கொரோனா' என மீனா அதை எளிதாக எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால், ‘ப்ரோ டாடி' டீம் அதை எளிதாகக் கடந்துபோகமுடியவில்லை. படம் ஜனவரி 26-ல் ரிலீஸ் ஆகும் நிலையில் ‘‘பட புரமோஷனுக்கு மீனா இல்லாமல் இருந்தால் நல்லாவா இருக்கும்'' என வருத்தத்தில் இருக்கிறார்கள். மறுபடியும் மொதல்ல இருந்தா?

இன்பாக்ஸ்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் தற்போது வரை நூற்றாண்டுகளைக் கடந்து கொண்டாடப்பட்டு வரும் ஊட்டி கோடை விழா, கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டது. இந்த ஆண்டு எப்படியாவது கோடை விழா நடத்தப்படும் என்ற நம்பிக்கையில், மே மாத மலர்க் கண்காட்சிக்கான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியை நம்பிக்கையுடன் துவக்கியிருக்கிறார்கள் பூங்கா ஊழியர்கள். ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மட்டும் பேன்சி, பெட்டுன்யா, சால்வியா உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட வண்ண மலர் ரகங்களில் சுமார் 5 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நம்பிக்கை பலனளிப்பதும் வீணாவதும் கொரோனா கையில் இருக்கிறது. அத்தனை கண்டபின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்!

வேலூரில் வாகனத்தில் பயணித்தபடி இசை நிகழ்ச்சி நடத்திவரும் பார்வையற்ற தம்பதி ரமேஷ் - புவனா. மாலை நேரத்தில் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இவர்களின் கச்சேரி மக்களிடம் கவனம் ஈர்க்கும். கொரோனா காலம் இவர்களின் வாழ்வையும் புரட்டிப் போட்டது. வருமானம் குறைந்ததால், இருவரையும் கச்சேரிக் குழுவினர் மூன்று மாதங்களுக்கு முன்பு அணைக்கட்டு அருகேயுள்ள வரதலம்பட்டு காட்டுப் பகுதியில் இறக்கி விட்டுச் சென்றனர். உணவின்றித் தவித்த இவர்களை கிராம மக்கள் மீட்டு அடைக்கலம் கொடுத்தனர். இருவரின் உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அணைக்கட்டு தாசில்தார் பழனிக்குத் தகவல் கொடுத்தனர். தாசில்தார் தலைமையிலான குழுவினர் இவர்களுக்கு சிகிச்சை அளித்து, வாணியம்பாடி கருணை இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். ஏழ்மையிலும் மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய வரதலம்பட்டு கிராம மக்களுக்குப் பாராட்டு குவிகிறது. மாண்புமிகு மனிதம்!

இன்பாக்ஸ்

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த வாரம் நெல்லை வந்திருந்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கல்லூரி மாணவர் விடுதிக்குச் சென்ற அவர், மாணவர்களிடம் உணவின் தரம் பற்றிக் கேட்டதுடன், அங்கேயே அமர்ந்து மாணவர்களுடன் விடுதி உணவை சாப்பிடத் தொடங்கினார். அமைச்சருக்காக விருந்தினர் மாளிகையில் ஸ்பெஷல் உணவு தயாராகியிருந்தாலும், அவர் மாணவர்களுடன் சாப்பிட்டுவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார். ‘‘அரசியல்வாதிகள், அதிகாரிகள் எனப் பலரும் எங்களிடம் குறைகளைக் கேட்பார்களே தவிர உடன் அமர்ந்து சாப்பிட்டதில்லை. அமைச்சர் சிவசங்கர் வித்தியாசமானவர்'' என்று மாணவர்கள் நெகிழ்கிறார்கள். வரவேற்புக்குரிய மாற்றம்!