சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

ஐஸ்வர்யா லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா லட்சுமி

படம்: கிரண் சா

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு பிப்ரவரியில் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்குமிடையே சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் சிவா, ‘மாவீர’னை முடித்துவிட்டு உடனடியாகக் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் பங்கேற்கிறார். மார்ச்சில் அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதில் சிவாவின் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இது இந்திய ராணுவம் தொடர்பான கதை என்கிறார்கள். சிவா, முதன்முறையாக ஆர்மி கதையில் நடிப்பதால், தனக்கு நெருக்கமான ராணுவ அதிகாரிகளிடம் ஆலோசனைகள் கேட்டுவருவதாகவும் தகவல். ஒன்மேன் ஆர்மி!

இன்பாக்ஸ்

ஐஸ்வர்யா லட்சுமிக்கு ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’க்குப் பிறகு படங்கள் ஒப்பந்தமாவது அதிகமாகிவிட்டது. திருவனந்தபுரத்திற்கும் சென்னைக்கும் பறந்துகொண்டிருந்தவர் கிழக்குக் கடற்கரைச் சாலையிலேயே வீடு வாங்கிக் குடியேறப்போகிறார். பொங்கலுக்குப் பிறகு நிரந்தரமாக சென்னைவாசியாக மாறப்போகிறார். ஆறு படங்களில் ஒப்பந்தம் ஆனபிறகு, சென்னையில் இருக்கலாம் என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. மலையாளத்தில் அவர் நடித்துப் பெரும் வெற்றிபெற்ற `மாயநதி’ தமிழில் ரீமேக் ஆவதால் உற்சாகமாக இருக்கிறார் லட்சுமி. மாயாஜால் வருவீங்களா பூங்குழலி?!

அஜித்தின் ‘துணிவு’ வெளியானதும், சபரிமலைக்குச் சென்று தன் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார் இயக்குநர் அ.வினோத். அடுத்து அவர் கமலை இயக்குவார் என்கிறார்கள். இதற்கிடையே அவர் தனுஷிற்கும் ஒரு லைனைச் சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கிறார். ‘துணிவு’க்கான வரவேற்பில் மகிழ்ந்த தனுஷ், ‘‘நீங்க எப்போ அழைத்தாலும் வந்துவிடுவேன். அதற்கேற்ற மாதிரி என் கமிட்மென்ட்களை மாற்றிக்கொள்கிறேன்’’ என வினோத்திடம் சொன்னதாகத் தகவல். துணிவே தந்திரம்!

இன்பாக்ஸ்

ஊட்டியில் பல வருடங்களுக்குப் பின் தற்போது கடுமையான உறைபனி வாட்டி வதைக்கிறது. அவலாஞ்சி போன்ற இடங்களில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸைத் தொட்டிருக்கிறது குளிர். இன்னும் சில இடங்களில் நீர் உறைந்து பனிக்கட்டி ஆகியிருக்கிறது. பனியில் இருந்து தப்பிக்க மாலை 6 மணிக்கெல்லாம் ஊரடங்கிவிடுகிறது. ஆனால், ‘ஆரஞ்சு கோல்டு’ எனப்படும் ஊட்டி கேரட் அறுவடையில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கொட்டும் பனியிலும் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை பணியாற்றிவருகிறார்கள். ஸ்வெட்டர், ஜெர்க்கின் போன்றவற்றுக்குக் கட்டுப்படாத உறைபனி குளிரைச் சமாளிக்க தொழிலாளர்கள் இரண்டு மூன்று கோணிப்பைகளை இடையில் உடுத்தி போர்வையாகவும் பயன்படுத்திச் சமாளித்துவருகின்றனர். உடல் உறையும் பனியில் இவர்களின் உயிர்ச் சூட்டைத் தக்கவைத்திருக்கும் அரணாக இருக்கின்றன கோணிப்பைகள். விவசாயத் தங்கங்கள்!

இன்பாக்ஸ்

உலகின் மிக நீண்ட தூரம் ஆற்றில் செல்லும் சொகுசுக் கப்பலான எம்.வி கங்கா விலாஸ் தன் முதல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. வாரணாசியில் கிளம்பி கங்கையின் வழியே பயணம் செய்து வங்க தேசத்தையும் தாண்டிச் சென்று அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் சென்றடைகிறது இந்தக் கப்பல். 3,200 கி.மீ தூரத்துக்கு 51 நாள்கள் பயணம் செய்யும் இந்த சொகுசுக் கப்பலில் அதிகபட்சம் 36 பேர் பயணம் செய்யலாம். பயணச் செலவு ரூ. 20 லட்சத்துக்கு மேல் ஆகும் என்பதால் வெளிநாட்டினரே இதை விரும்புகின்றனர். பாரம்பரியச் சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள் என ஐம்பது முக்கியமான இடங்களுக்குச் செல்வதால், ஐரோப்பிய மக்களால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாவாக இது இருக்கிறது. மிதக்கும் சொர்க்கம்!

இன்பாக்ஸ்

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தால் என்னாகும்? பரந்த மனத்துடன் உறுப்பு தானம் செய்துவிட்டு இங்கேயே இறுதிச்சடங்கு செய்துவிடுகிறார்கள் சிலர். இந்த ஆண்டு பிறந்த இரண்டே வாரங்களில் இப்படி உறுப்பு தானம் செய்த இரண்டாவது நபர் ஆகியிருக்கிறார், 67 வயது தெரசா மரியா ஃபெர்னாண்டஸ். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண்மணி, மும்பையில் பேருந்தில் பயணம் செய்யும்போது தவறிவிழுந்து மூளைச்சாவு அடைந்தார். அவர் மகனும் மகளும் இனி அம்மா மீள மாட்டார் என்பதை உணர்ந்ததும், அவரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் எலும்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர். இறுதிச்சடங்கையும் மும்பையில் செய்தனர். நெஞ்சிருக்கும் வரை!

இன்பாக்ஸ்

கரூர் மாவட்டம் செம்பிநத்தம் அருகில் உள்ள நாயக்கனூரைச் சேர்ந்தவர் பூமிராஜ். கடந்த 2011-ம் ஆண்டு இவர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு, பூமிராஜுக்கும், குடும்பத்தினருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், அப்போது கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ்.காமராஜ், பூமிராஜுக்கு ஆறுதல் சொல்லியதோடு, தனது முதல் மாத சம்பளமான ரூ. 50,000 அந்தக் குடும்பத்துக்கு வழங்கினார். அதன்பிறகும் அந்தக் குடும்பத்துக்கு அவ்வப்போது உதவி வந்தவர், தற்போது பதவியில் இல்லாதபோதும், பூமிராஜின் மகள் சின்னமயில் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார். நல்லார் ஒருவர் உளரேல்!

இன்பாக்ஸ்

தனது சொந்த ஊரான தேனியில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளில் கவிஞர் வைரமுத்து கலந்துகொள்வது வழக்கம். குறிப்பாக தனது புத்தக அறிமுக விழாக்களை சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் நடத்திவிடுவார். அந்த வகையில் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் மதுரை அருகே பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் கைரேகைச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதிய ‘ஆகோள்’ நாவலை இயக்குநர் பாரதிராஜா அண்மையில் வெளியிட்டார். அதன் அறிமுக நிகழ்வு தேனியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கபிலன், ‘‘முதல்முறையாக அப்பா எங்களை காரில் தேனி அழைத்துவந்து செருப்பு அணியாமல் மண்ணில் இறங்கச் சொல்லி ‘இதுதான் உங்கள் மண்’ என்றார். மண்ணின் பெருமைகளை எங்களிடம் கூறுவார். நான் ஆஸ்திரேலியாவில் படித்தபோதிலும், நம் மண்ணின் வீர வரலாற்றை நாவலாக எழுதக் காரணமாக அமைந்தது அதுதான்’’ எனக் கூறி நெகிழ்ந்தார். மண்ணின் மைந்தர்!

முனிராஜ்
முனிராஜ்
தினேஷ்குமார்
தினேஷ்குமார்

உலகின் எந்த மூலையில் பணியாற்றினாலும் தமிழர்கள் தங்களது தனித்துவமான செயல்பட்டால் கவனம் ஈர்ப்பார்கள். அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிராஜ், தினேஷ்குமார் ஆகியோர் ஐ.பி.எஸ் அதிகாரிகளாகப் பணியாற்றிவருகின்றனர். தீரன் அதிகாரம் படத்தில் வருவதைப்போல, சத்தமே இல்லாமல் பல சம்பவங்களைச் செய்த முனிராஜ் சமீபத்தில்தான் மிகவும் சென்ஸிட்டிவான அயோத்தியின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். பிரபல தாதா விகேஸ் தூபே என்கவுன்டரில் துடிப்பாகச் செயல்பட்ட தினேஷ்குமார், காசியாபாத் டி.சி.பியாகப் பணியாற்றி வருகிறார். இருவரையும் டி.ஐ.ஜியாக புரமோட் செய்து அழகு பார்த்திருக்கிறது அந்த மாநில அரசு. சிங்கம்... சிங்கம்..!