சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

பாவனா
பிரீமியம் ஸ்டோரி
News
பாவனா

பிற மாநில நடிகர்களை அழைத்து வந்து தமிழ்ப் படத்தில் வெரைட்டி காட்டுவது இதுவரை வழக்கமாக இருந்தது.

இன்பாக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மாநிலத்திலேயே முதல்முறையாக தமிழில் 100 மதிப்பெண் பெற்றவர் இவர்தான். “நம்ம தாய்மொழி தமிழ்தான். பொதுவா இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிற மாணவர்கள் தமிழ்ப்பாடத்துல அதிக ஈடுபாடு இல்லாம இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா, எல்லாப் பாடத்தைப் போல தமிழும் முக்கியம்தான். வாசிப்பு, எழுத்து, புரிதலுடன்கூடிய மனப்பாடம், நினைவுகூர்தல் ஆகியவைதான் அடிப்படை. தமிழ், வெறும் மதிப்பெண்ணுக்கானது மட்டுமல்ல. டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகள்ல தமிழுக்கு முக்கியத்துவம் இருக்கு. பட்டப்படிப்பு முடிச்சவங்ககூட, போட்டித் தேர்வுக்காக தமிழ் தயாரிப்புல திணறிப்போறாங்க. தமிழை நல்லாப் படிச்சா வேலைவாய்ப்பும் உறுதி” என்கிறார் துர்கா. செம்மொழி!

மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் `பொன்னியின் செல்வன்' படத்திற்காகப் போட்டிபோட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் மீண்டும் மீண்டும் செதுக்கிக் கொண்டிருக்கிறார் மணி. ரஹ்மானோ சோழர் கால இசையின் நேர்த்திக்காக லைவ் ரெக்கார்டிங்கும் செய்துகொடுத்திருக்கிறார். தனது அமெரிக்க இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வந்தபின், மிச்சமிருக்கும் பின்னணி இசை வேலையைத் தொடர்வார் என்கிறார்கள். வெயிட்டிங்ல வெறி ஏறுதே!

விதவிதமான கைக்கடிகாரங்கள் சேகரிப்பது சிவகார்த்திகேயனுக்குப் பிடித்த ஹாபி. வீட்டில் வாட்ச் கலெக்‌ஷனே வைத்துள்ளார். வெளிநாட்டுப் படப்பிடிப்புகளுக்குச் சென்றால், அங்கே விரும்பி ஷாப்பிங் செய்வது கைக்கடிகாரங்கள்தான். நல்ல நேரம்!

இன்பாக்ஸ்

பாவனா ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் `என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக ஷூட்டிங் தொடங்கிய வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய `திறமையான நடிகை பாவனாவை மலையாள சினிமா ஐந்து ஆண்டுகளாகத் தவறவிட்டுவிட்டது. மீண்டும் நடிக்க வந்ததற்கு வாழ்த்துகள்' என ரசிகர்கள் பின்னூட்டம் இட்டு வரவேற்றுள்ளனர்.வெல்கம் பேக்!

நான்கு வருடங்களுக்குப் பிறகு அர்ஜுன் மீண்டும் இயக்குநராகியிருக்கிறார். இந்த முறை டோலிவுட்டில். அவரே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படத்தில் விஸ்வக் சென் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா. 2013-ல் அறிமுகமாகியிருந்தாலும் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். மகளுக்காகவே இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கும் அர்ஜுன், பலமான டெக்னிக்கல் டீமுடன் களமிறங்குகிறார். `கே.ஜி.எஃப்' இசையமைப்பாளர் ரவி பஸ்ருர்தான் இந்தப் படத்திற்கும் இசை. தந்தானே தானே...!

இன்பாக்ஸ்

பிற மாநில நடிகர்களை அழைத்து வந்து தமிழ்ப் படத்தில் வெரைட்டி காட்டுவது இதுவரை வழக்கமாக இருந்தது. இப்போது ட்ரெண்ட் மாறி நம்ம ஊர் நடிகர்களை மற்ற மொழிப்படங்களில் நடிக்க அழைக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் செல்லப்பிள்ளையாக சமுத்திரக்கனி மாறியதைப் போல, மலையாள சினிமாவின் செல்லப் பிள்ளையாக குரு சோமசுந்தரம் மாறிவிட்டார். `மின்னல் முரளி' படத்திற்குப் பிறகு, `ஹயா', `சேரா', `சார்லி என்டர்ப்ரைசஸ்', `நாலாம் முறா', `சட்டாம்பி', மோகன்லால் இயக்கும் 3டி படம் என ஏராளமான மலையாளப் படங்கள் அவர் கைவசம் நிறைந்திருக்கின்றன. அடிப்பொலி ஆர்ட்டிஸ்ட்!

இன்பாக்ஸ்

`சினிமா எடுப்பதுகூட பெரிய விஷயமல்ல... அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் பெரும்பாடு' என்கின்றனர் தயாரிப்பாளர்கள். சிபிராஜ், தான்யா நடிப்பில் உருவான `மாயோன்' திரைப்படம் ஜூன் 24-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில், 12 அடி நீளத்தில் பாம்பின் மீது சயனித்த நிலையில் மாயோன் கிருஷ்ணன் சிலை இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்புக்காக உருவாக்கப்பட்ட மாயோன் கிருஷ்ணன் சிலை, தமிழகம் முழுவதும் படத்தின் புரொமோஷனுக்காகக் கொண்டு செல்லப்பட்டுவருகிறது. அதன்படி திண்டுக்கல் வந்த மாயோன் கிருஷ்ணன் சிலை, நகரின் முக்கியப் பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது. படக்குழுவே எதிர்பாராத வகையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கிருஷ்ணனை வழிபட்டுச் சென்றனர். இதனால் படக்குழு செம்ம ஹேப்பி. எதையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

நடிகர் சங்கக் கட்டடத்தை 2024 பொங்கலுக்குள் கட்டிமுடித்து திறப்புவிழா நடத்தத் தீர்மானித்துள்ளனர். முக்கிய நடிகர்களிடமும் ஒரு குறிப்பிட்ட தொகை அன்பளிப்பாகப் பெற்றும், மீதியை வங்கியில் கடனாகப் பெற்றும் முடிக்க எல்லா ஏற்பாடும் நடக்கிறது. நாசரும் கார்த்தியும் இதற்கென தீவிரமாகக் களத்தில் குதித்துவிட்டார்கள். ரஜினி, கமல், உதயநிதி ஆகியோர் பக்கபலமாக இருப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். நடக்கட்டும்!

இன்பாக்ஸ்

காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஜூலையில் தொடங்குகிறது. இம்முறை நிகழ்ச்சி ஓ.டி.டி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பாகவிருக்கிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்ச்சியில் சுஷ்மிதா சென் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொள்ளப்போவதாகச் செய்தி வெளியாக, அப்படி ஒரு திட்டம் இல்லை என்று கரண் ஜோஹர் அவசரமாக மறுத்துள்ளார். ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகிய இருவரையும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க ஏற்கெனவே நடந்த முயற்சி தோல்வியைத் தழுவியது. சர்ச்சை வித் கரண்!

கடவுளின் தேசமான கேரளாவில் யானைகளுக்குத் தனி மரியாதை உண்டு. கோயில் தேவஸ்தானங்கள், தனியார் தரப்பில் ஏராளமான வளர்ப்பு யானைகள் உள்ளன. குருவாயூர்க் கோயில் தேவஸ்தானத்தில் புன்னத்தூர் கொட்டா என்ற யானை முகாம் உள்ளது. பிரமாண்டமாக இருக்கும் இதன் 47 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக சி.ஆர்.லிஜூமோல் என்கிற பெண் அந்த யானைகள் முகாமின் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். யானைப் பாகன்கள் குடும்பத்திலிருந்து வந்த அவர், உதவியாளராகத் தொடங்கி பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். 44 யானைகள், 150 ஊழியர்களுக்கு லிஜூ தான் பாஸ். “சிறு வயதில் இருந்தே யானைகளுக்கு உணவு கொடுக்க விருப்பப்படுவேன். இப்போது மொத்தப் பொறுப்பும் கிடைத்திருக்கிறது. இதைவிட வேற என்ன வேண்டும் சாரே?” என்று சிலாகிக்கிறார் லிஜூ. பட்டைய கிளப்புங்க மேடம்..!

இன்பாக்ஸ்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மலேசிய தொழில் அதிபர்கள் சார்பில் மலேசிய நாட்டின் மனிதவள அமைச்சர் டத்தோ  எம்.சரவணனுக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரவணன், ``தமிழகத்திற்கு வரும்போது பாய் வீட்டு பிரியாணி ரசித்து சாப்பிடுவேன். கடந்த முறை வந்தபோது தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள ராஜகிரியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டு பிரியாணி சாப்பிட்டேன். அருமையாக இருந்தது. தற்போதும் அதே மனநிலையுடன்தான் வந்துள்ளேன். எப்போது நிகழ்ச்சி முடியும், பிரியாணி சாப்பிடலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார். இதைக் கேட்டு அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது. நிகழ்ச்சியில் பரோட்டா, இடியாப்பம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் பேசியதைக் கேட்டுவிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசர அவசரமாக ஹோட்டலுக்குச் சென்று பிரியாணி வாங்கி வந்து உபசரித்தனர். பிரியாணி பவர்!

நாஞ்சில் நாடன் நாவல் எழுதி 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கவனமெல்லாம் கட்டுரைகளில் மையம் கொண்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் 18 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. `அச்சமேன் மானுடவா?' என்ற தலைப்பில் கவிதைத்தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. `நாஞ்சில் நாட்டு உணவு' என 20 ஆண்டுகளாக எழுதிவரும் நூலும் இதில் அடக்கம். கூடவே கனடா நாட்டின் இலக்கிய அமைப்புக்காக கடந்த 16 மாதங்களாக மாதம் ஒரு வகுப்பு எனும் வகையில் கம்பராமாயணமும் சொல்கிறார். மண்மணம்!

இன்பாக்ஸ்

கும்பகோணம் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ரமேஷ். சமீபத்தில் இவர் மகள் திருமணம் நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழில் உறவினர்கள் பெயருடன் சேர்த்து, ஊராட்சியில் உள்ள 900 குடும்பங்களைச் சேர்ந்த தம்பதிகள் பெயரையும் சேர்த்து அச்சடித்துள்ளார். இதனால் ஊர் மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர். சாதி, மதம் கடந்த ரமேஷின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. விக்ரமன் சார் படம்!