சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

மிதாலி ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிதாலி ராஜ்

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முகமது மன்சூர் நியமனம் செய்யப்பட்டிருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்பாக்ஸ்

`புஷ்பா' வெளியாகி ஆறு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், புஷ்பாவின் ஃபையர் இன்னும் குறைந்தபாடில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான வார்னர் உட்பட பலர் `புஷ்பா' வெளியான சமயத்தில், படத்தின் பன்ச் வசனங்களைப் பேசி சின்னச் சின்ன வீடியோக்களாக வெளிட்டு வந்தனர். கடந்த வாரம் நடந்த திரைப்பட விருது நிகழ்ச்சி ஒன்றில், ``உங்களை அதிகம் ஊக்குவித்த சமீபத்திய பாடல் அல்லது படம் எது'' என ஒரு நிருபர் கேட்க, ``ஊ சொல்றியா மாமா பாடல்'' என ஜாலியாக பதில் சொன்னார் சல்மான் கான். சல்லு பாயின் பதிலை சமந்தாவும் தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். WWE மல்யுத்த வீரரான சௌரவ் குர்ஜார் கடந்த வாரம் WWE அரங்குக்குள் நடந்த ஒரு சண்டையில் புஷ்பா ஸ்டைலில் தாடியைத் தேய்த்துவிட்டு எதிரியை அடித்திருக்கிறார். அதை அல்லு அர்ஜுனை டேக் செய்து ட்வீட்டும் செய்திருந்தார். புஷ்பா படத்தின் அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கிறது. கெத்து!

இன்பாக்ஸ்

1992-ம் ஆண்டு `தீவானா' படத்தின் மூலம் அறிமுகமானார் ஷாருக் கான். அதிலிருந்து 2018 வரை அவர் படங்கள் வெளிவராத ஆண்டு இல்லை. 2018-க்குப் பிறகு நான்கு வருடங்கள் இடைவெளியாகிவிட்டது. காரணம், பயங்கர ப்ளாக்பஸ்டராகும் என நினைத்து அவர் நடித்த `ஜீரோ' படம் படுதோல்வியை சந்தித்ததுதான். அதற்குப் பிறகு, பல மொழி இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு அவர் ஓகே செய்து நடித்துள்ள மூன்று படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகின்றன. 2023 ஜனவரியில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் `பதான்', ஜூன் மாதத்தில் அட்லி இயக்கத்தில் `ஜவான்', டிசம்பரில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் `டங்கி' என அடுத்த வருடம் ஷாருக் ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட் காத்திருக்கிறது. பழைய பன்னீர்செல்வமா வரணும்!

இன்பாக்ஸ்

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முகமது மன்சூர் நியமனம் செய்யப்பட்டிருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இவர் ஏற்கெனவே காரைக்காலில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது, மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்து, அரசு நிலங்களில் தனியார் ஆக்கிரமிப்புகளைத் துணிச்சலாக அகற்றியவர். இவர் புதுச்சேரிச் சுற்றுலாத் துறை இயக்குநராக இருந்தபோது காரைக்கால் கடற்கரையில் நடைபாதைகள், சீகல்ஸ் ஹோட்டல், அலையாத்திக் காடுகள், ஹைமாஸ் விளக்குகள் என ஜொலிக்கச் செய்தார். காரைக்கால் அம்மையார் திருக்குளம், திருநள்ளாறு கோயில் நகரத்திட்டம் போன்றவற்றின் வடிவமைப்புப் பிதாமகரும் இவரே. வருக வருக!

இன்பாக்ஸ்

கரீனா கபூர், கரிஷ்மா கபூர், மலைகா அரோரா, அம்ரிதா ஆகியோர் பங்கேற்கும் ஓ.டி.டி ரியாலிட்டி ஷோ ஒன்றை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. வேலைக்குச் செல்லும் நான்கு பெண்கள் வசிக்கும் ஒரு வீட்டில் என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து கட்ஸ் (Guts) என்ற பெயரில் இது தயாரிக்கப்படவிருக்கிறது. லண்டன், பாரீஸ், நியூயார்க், சிங்கப்பூரில் ஷூட்டிங் நடக்கும். கட்ஸ் என்ற பெயரில் கரீனா கபூர் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை வைத்திருக்கிறார். அதிலும் இவர்கள் நான்கு பேர் பிரதானமாக இருக்கின்றனர். அந்தப் பெயரையே ஷோவிற்கும் வைத்துவிட்டனர். அதிரடி சிஸ்டர்ஸ்!

இப்போது இந்தியில் கவனம் செலுத்திவருகிறார் ரகுல்ப்ரீத் சிங். தமிழில் சிவாவின் ‘அயலான்’ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டவர், கமலின் ‘இந்தியன் 2’ மீண்டும் எப்போது தொடங்கினாலும் வந்துவிடுகிறேன் என உறுதியளத்துள்ளார். ஃபிட்னஸ் ஃப்ரீக்கான ரகுலுக்கு ஆங்கிலத்தில் பிடிக்காத வார்த்தை டயட். ‘eat healthy’ என்பதுதான் அவரது பாலிஸி. சிறப்பு!

இன்பாக்ஸ்

பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் டாப்சி நடித்திருக்கிறார். இதற்காக கிரிக்கெட் வீரர் ஒருவரின் உதவியோடு கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் முழுக்கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக பல படங்களைத் தவிர்த்தார் டாப்சி. மிதாலி ராஜ் சமீபத்தில் ஓய்வுபெற்றிருக்கும் நிலையில், ஜூலை 15-ம் தேதி `சபாஷ் மித்து' ரிலீஸாகிறது. சபாஷ் டாப்சி!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர் மாவட்டம் நாடியம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பிரேம் செல்வன். ஊரின் தூய்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைத் தன் சொந்தச் செலவில் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரண்டு நாள்கள் சுற்றுலா அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தியிருக்கிறார் இவர். இந்தச் செயலை மொத்த கிராமமே நெகிழ்ந்து பாராட்டுகிறது. நல்லமனசு!

இன்பாக்ஸ்

கோவைக்கும் மேம்பாலங்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் பாலங்கள் கட்டித் திறந்தாலும், உடனே பஞ்சாயத்துகளும் எழவே செய்கின்றன. ஏற்கெனவே காந்திபுரம் மேம்பாலத்தைத் தற்கொலைப் பாலம் என்று கலாய்ப்பார்கள் கோவை வாசிகள். அந்தப் பாலம் கட்டப்பட்ட விதம் குறித்த சர்ச்சைகளுக்கு அடுத்து, தற்போது திருச்சி சாலையில் கட்டப்பட்ட பாலமும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. பாலம் பயன்பாட்டுக்கு வந்த இரண்டு வாரங்களிலேயே இருவர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து மேம்பாலத்தில் வேகத்தடை அமைத்துள்ளனர். “உலகத்துலயே மேம்பாலத்துல ஸ்பீடு பிரேக்கர் போட்ட ஒரே குரூப்பு நம்ம ஆளுகதான்” என்று மக்கள் கலாய்த்து வருகின்றனர். எந்த விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும். கொங்குனாலே பஞ்சாயத்துதான்!

இன்பாக்ஸ்

நெல்லை மாவட்டம் கீழபாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் விக்டர். இவர் சென்னையில் சுயதொழில் செய்துவருகிறார். அவர் மனைவி சுமித்ரா. இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ஆரா தமிழினி, இரண்டு வயதில் அஷ்ரா மகிழினி என இரு மகள்கள் உள்ளனர். இரு குழந்தைகளுக்கும் `சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றைப் பெற்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். ஜான் விக்டரிடம் பேசியபோது, ``நானும் என் மனைவியும் சாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்துகொண்டோம். அதனால் எங்களின் குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதம் அற்றவர் எனச் சான்று வாங்க முடிவு செய்தோம். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் பேசிவிட்டு, வருவாய்த்துறையில் முறைப்படி மனு அளித்தேன். அவர்கள் இப்படிச் சான்று கொடுத்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் முதல்முறையாக இந்தச் சான்று வாங்கியதால் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் வாழ்த்தியது நெகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். மாத்தி யோசி!

இன்பாக்ஸ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியின் மைதானத்தில் ஒரு மரம்கூட இல்லாததால், வெயில் வாட்டியெடுத்திருக்கிறது. இந்நிலையில் பொதுநல அமைப்புகள் நன்கொடையாக வழங்கிய மரக்கன்றுகளை, இங்கு பயிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் நான்கே நாள்களில் நட்டு சாதனை படைத்துள்ளார்கள். விளையும் பயிர்கள்!

`மாமன்னன்’ படத்தோடு உதயநிதி நடிப்பதை நிறுத்திக்கொண்டு கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார் எனச் சொல்லப்பட்டது. அதனால் படங்களுக்காகக் கதை கேட்பதை அவர் நிறுத்தியிருந்தார். இப்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார். புதிதாக அவருக்குக் கதை சொல்லப்போகும் பட்டியலில் கௌதம் மேனனும் சேர்ந்திருக்கிறாராம். எ லவ் ஸ்டோரி!