சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

ரகுல் ப்ரீத் சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ரகுல் ப்ரீத் சிங்

அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளது.

பெமெக்ஸ் என்ற மெக்ஸிகோவின் அரசு சார் எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமாக மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் எண்ணெய்க் குழாயில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. நீலக்கடலில் ஆரஞ்சு வண்ணத்தில் வட்டமாகத் தீ கொழுந்துவிட்டு எரியும் காட்சி வீடியோவாகப் பகிரப்பட்டது. படகுகளில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். ‘eye of fire’ பெயரிட்டு, அந்தக் காணொலியை இணையத்தில் தீப்பிடிக்க வைத்தனர் நெட்டிசன்கள்! தீயா வேலை செய்றாங்க!

இன்பாக்ஸ்

அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளது. 15 ஆண்டு மணவாழ்வை முறித்துக்கொண்டாலும், தங்கள் ஒரே மகனை இருவரும் இணைந்து வளர்க்கப்போவதாகக் கூறியுள்ளனர். படத் தயாரிப்பு, அறக்கட்டளைப் பணிகளை இணைந்தே மேற்கொள்வார்களாம். அமீர் கான் ஏற்கெனவே ஒருமுறை விவாகரத்து செய்தவர். அந்த நேரத்தில் மிகவும் மனம் உடைந்து போயிருந்ததாகவும், நடிகர் சல்மான் கான் தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும் பிற்காலத்தில் மனம் திறந்தார் அமீர் கான். ஆறுதல் அடைக அமீர்!

இன்பாக்ஸ்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் பயங்கர பிஸியாக இருக்கிறார், நடிகை ராஷி கண்ணா. தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’, ஆர்யாவுடன் ‘அரண்மனை 3’, ஜீவாவுடன் ‘மேதாவி’, கார்த்தியுடன் ‘சர்தார்’ ஆகியவை கைவசம் இருக்கின்றன. டோலிவுட்டில் நாகசைதன்யாவுடன் ‘தேங்க் யூ’, மலையாளத்தில் பிரித்விராஜுடன் ‘அந்தாதுன்’ ரீமேக்கான ‘பிரம்மம்’, இந்தியில் ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் - டிகே இயக்கும் சீரிஸ் என ராஷியின் வசம் பல புராஜெக்ட்கள் உள்ளன. கைராஷி கண்ணா!

இன்பாக்ஸ்

மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் என முன்னணித் தெலுங்கு நடிகர்களுடன் நடித்துத் தனது மார்க்கெட்டை உயர்த்திய ரகுல் ப்ரீத் சிங், இப்போது முழுக்க கவனம் செலுத்துவது பாலிவுட்டில். அதற்காக உடலைப் படு ஃபிட்டாக வைத்திருக்கிறார். ‘அட்டாக்’, ‘மே டே’ ஆகிய படங்கள் கையிலிருக்க, அக்‌ஷய் குமாருடன் ‘ராட்சசன்’ இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். படத்திற்கு ‘மிஷன் சின்ட்ரல்லா’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். வில்லன் கோன் ஹே?

‘அண்ணாத்த’, ‘விஸ்வாசம்’, ‘வீரம்’ போன்ற பல திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி, சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், பல்லடத்திற்கு வந்துள்ளார். அங்கு கனகராஜ் என்னும் விவசாயியின் வங்கிக் கணக்கு முன்னறிவிப்பின்றிக் கடனுக்காக முடக்கப்பட்டதால், மருத்துவச் செலவுக்குப் பணம் எடுக்க முடியாமல் இறந்துபோயிருக்கிறார். இதற்காக விவசாயிகளைத் திரட்டி வங்கி முன் போராட்டம் நடத்திய வெற்றி, மாவட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதனைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இப்போது கனகராஜ் பெயரிலிருந்த ரூ.1.5 லட்சம் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ததோடு, அவருடைய பெண் குழந்தைகள் இருவரின் கல்விச் செலவுகளையும் அரசு ஏற்கும் என மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார். போராடாமல் தீர்வு இல்லை!

பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் ‘பாகுபலி’யில் வரும் சிவகாமி கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதிய மூன்று நாவல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தக் கதைகளை வைத்து ஆறு சீசன்கள் கொண்ட பிரமாண்ட வெப்சீரிஸ் தயாரிக்க நெட்ஃபிளிக்ஸ் களமிறங்கியுள்ளது. இதில், சிவகாமியாக நடிக்க `மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்த வாமிக்கா கப்பி ஒப்பந்தமாகியுள்ளார். இது வேற ராஜமாதா!

மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெக்தீப் டங்கருக்கும் மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், சட்டமன்றத்தில் கவர்னர் உரையாற்றும் நேரம் வந்தது. சட்டமன்றத்தில் வரவேற்ற மம்தாவிடம் இயல்பாகச் சிரித்துப் பேசிய கவர்னர், தன் வேலையில் படு ஸ்ட்ரிக்டாக இருந்தார். 18 பக்க உரையில் பல விஷயங்களில் தனக்கு முரண்பாடு இருப்பதாகச் சொல்லி, முதல் பாராவையும் கடைசி பாராவையும் மட்டுமே வாசித்தார். நான்கே நிமிடங்களில் கவர்னர் உரை முடிந்துவிட்டது. மாநில அரசு தயாரித்துத் தரும் உரையில் அதிருப்தி இருந்தால், கவர்னர்கள் இப்படிச் செய்வதுண்டு. எல்லாப்பக்கமும் கவர்னர் தொல்லை!

பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் சரவணன், மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெயரில் அஞ்சல் அலுவலகத்தில் ரூ. 1,000 டெபாசிட் செய்து கொடுக்கிறார். மாணவர்களின் பெற்றோர் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து ரூ. 10,000 வரை பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் அந்தப் பள்ளியில் பலரும் விரும்பிச் சேர்கிறார்கள். நல்லாசிரியர்!

இன்பாக்ஸ்

இந்திய சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது, ஹிர்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த ‘க்ரிஷ்’ வரிசைதான். கடந்த 2006-ல் வெளியான முதல் பாகத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு பாகங்கள் வெளிவந்தன. ‘க்ரிஷ்’ படம் வெளிவந்து 15 வருடங்கள் நிறைவடைந்துட்டதை அடுத்து, ‘க்ரிஷ் 4’ படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என்று ஹ்ரித்திக் சிக்னல் கொடுத்துள்ளார். இம்முறை வில்லன் Mr. கொரோனா!

இன்பாக்ஸ்

கரூர் மாவட்டம் ஆரியூர் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆய்வு செய்ய கலெக்டர் பிரபுசங்கர் சென்றார். அப்போது, அங்கே கையில் மனுவோடு ஒரு பெரியவர் தயங்கி நிற்பதைப் பார்த்தார். அவரை அழைத்து விசாரித்தார். ‘பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட என் வீடு மூன்று ஆண்டுகளாகியும் முடித்துத் தரப்படவில்லை’ என்று முனியாண்டி என்ற அந்த முதியவர் சொன்னார். உடனடியாக அந்த முதியவரை அழைத்துக்கொண்டு ராமநாதபுரம் கிராமத்தில் இருக்கும் அவரின் வீட்டுக்குச் சென்றார் கலெக்டர். ‘இன்னும் 10 நாள்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். மறுபடியும் நான் இங்கே வருவேன்’ என்று அதிகாரிகளிடம் உத்தரவிட்டு, முனியாண்டியை நெகிழவைத்தார். சபாஷ் கலெக்டர்!

இன்பாக்ஸ்

ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் தொழிற்சாலை, ஒரு கோடி கார்களை இதுவரை உருவாக்கியுள்ளது. அங்கு தயாரிக்கப்பட்ட கோடியாவது காரில் ‘வாழ்த்துகள்’ என்று கையெழுத்துப் போட்டு, அதை வழியனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ‘முதல்வர் கையெழுத்துப் போட்ட கார் விற்பனைக்கு எங்கு போகும்? என்ன விலை?’ என்று சில அமைச்சர்களே விசாரித்தார்களாம். ‘‘இதை விற்க மாட்டோம். நினைவுப் பொருளாக தொழிற்சாலையில் பாதுகாக்கப்படும்’’ என்று பதில் வந்ததாம். 23 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உருவான முதல் ஹூண்டாய் சான்ட்ரோ காரை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி வழியனுப்பி வைத்தார். ‘அந்தக் கார் என்ன ஆச்சு?’ என்று முதல்வருடன் வந்த சிலர் விசாரிக்க, இப்போது அது எங்கிருக்கிறது என்று தேடுகிறார்கள். கார்காலம்!

யோகி பாபு அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விளையாடும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலா வரும். தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் கூலாக ஒரு டின்னர் சாப்பிட்டுள்ளார் யோகி பாபு. நெடுநேரம் இருவரும் கலகலப்பாகப் பேசியுள்ளனர். தீவிர முருக பக்தரான யோகி பாபு, நடராஜனுக்கு முருகன் சிலை ஒன்றைப் பரிசளித்துள்ளார். சந்திப்பு படங்களை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நினைத்தாலே இனிக்கும்..!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

கொரோனா களேபரங்களுக்கு மத்தியிலும் திருச்சூர் மாநகராட்சி மேயர் வர்கீஸ், ‘போலீஸ் அதிகாரிகள் எனக்கு சல்யூட் அடிக்க உத்தரவிட வேண்டும்’ என டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியுள்ளார். ‘ஆளுநர், முதல்வருக்கு அடுத்தபடி மேயர்தான் அதிகாரம் படைத்தவர். ஆனால், போலீஸார் என்னை மதிப்பதில்லை. எம்.எல்.ஏ, எம்.பி, உயரதிகாரிகள் என எல்லோருக்கும் சல்யூட் அடிக்கின்றனர். எனக்கும் அடிக்கச் சொல்லுங்க...’ என கேட்டுள்ளார். போலீஸாரோ, ‘மேயருக்கு மாநகராட்சி எல்லைக்குள், அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே சல்யூட் அடிக்க வேண்டும். எல்லா இடங்களிலும் அதைச் செய்ய முடியாது’ என்று பதிலடி கொடுத்துள்ளனர். சல்யூட்டுக்கு சண்டையா?