சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் ஜூன் 27 அன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

மூன்று விஜய் படங்களுக்குப் பின்னர், டக்கென பாலிவுட்டில் தரையிறங்கினார் அட்லி. ஷாருக்கானுடன் ஐபிஎல் மைதானங்களிலும் அவரைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், படத்தைப் பற்றிய அப்டேட் வருவேனா என அடம்பிடித்தது. ஷாருக் கானோ அட்லிக்கு முன் ராஜ்குமார் ஹிரானி படத்தை முடித்துவிட்டுதான், இந்தப் படத்திற்கு வருவார் என்றனர். இப்போது ஷாரூக் கான் - அட்லி படத்தைப் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக கோலிவுட்டில் பரவத் தொடங்கியிருக்கின்றன. ஷாரூக் கானுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார் நயன்தாரா. ரஹ்மான் இசை. அபுதாபியில் இரண்டு மாதம் செட் அமைக்க கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் பணிகள் ஆரம்பமாகவிருக்கின்றன. செப்டம்பர் மாதம் ஷாருக் கானுக்கு ‘ஆக்‌ஷன்’ சொல்லவிருக்கிறார் அட்லி. வாழ்த்துகள் ப்ரோ!

ஒரு இயக்குநருடன் வேலை செய்யும்போது தனக்கும் அவர்களுக்கும் செட்டாகிறது என்று தெரிந்தால், ‘இன்னொரு படம் வொர்க் பண்ணுவோம்’ என்று சொல்வது தனுஷின் வழக்கம். அப்படிதான் ‘மாரி’ கேரக்டர் பிடித்துப்போக ‘மாரி 2’க்கான கதையை பாலாஜி மோகனிடம் எழுதச் சொல்லி நடித்தார். அதே போல, ‘ஜகமே தந்திரம்’ படத்தின் சுருளி கேரக்டர் பிடித்துப்போக ‘இதனுடைய சீக்வெல் எழுதுங்க கார்த்திக்’ எனச் சொல்லியிருக்கிறார் தனுஷ். ஆனால் வேறொரு கதை சொல்லி அவரை இம்ப்ரஸ் செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். விரைவில் அறிவிப்பு வரும். வெயிட்டிங்!

‘பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்கும் வகையில், கேரள பள்ளிப் பாடப் புத்தகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள சொற்கள் மற்றும் பத்திகள் மறுஆய்வு செய்யப்பட்டு நீக்கப்படும். பாலின சமத்துவம் மற்றும் சமஉரிமையை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்த முன்னெடுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பினராயி விஜயனின் ட்வீட்டைப் பகிர்ந்து, இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தி.மு.க எம்.பி கனிமொழி பதிவிட்டிருந்தது கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது! அண்ணன் கவனிப்பாரா..!

கடந்த நுாற்றாண்டில் உலகளவிலான, ‘டாப் - 50’ நன்கொடையாளர்கள் பட்டியலை ‘ஹுருன்’ மற்றும் எடெல்கிவ் ஃபவுண்டேஷன்’ வெளியிட்டுள்ளன. டாடா குழுமத்தின் நிறுவனரான ஜாம்ஷெட் டாடா தனது வாழ்நாளில் ரூ.7.55 லட்சம் கோடி நன்கொடை வழங்கியிருப்பதன் மூலம் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பில்கேட்ஸ், மெலின்டா இருவரும் இணைந்து ரூ.5.52 லட்சம் கோடி, வாரன் பபெட் ரூ.2.77 லட்சம் கோடி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்னொரு இந்தியரான விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, ரூ.1.63 லட்சம் கோடி நன்கொடை அளித்துள்ளார். பட்டியலில் உள்ள 50 பேரும் ஒட்டுமொத்தமாக வழங்கிய நன்கொடை மொத்தம் ரூ.61.57 லட்சம் கோடி. நன்கொடை நல்லது.

#ValimaiUpdate என்பது எல்லைகள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும் அப்டேட் போர்டுடன் ஒருவர் சென்றுவிட்டார். யுவன் ஷங்கர் ராஜா மட்டும்தான் அவ்வப்போது காகத்திற்கு சாதம் வைப்பது போல், குட்டி குட்டியாக அப்டேட்டுகளை இறக்கிக்கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த சமீபத்திய அப்டேட், ‘படத்தில் ஒரு அம்மா பாடல் இருக்கிறது’ என்பதுதான். படத்தில் நாயகியாக நடிக்கும் ஹூமா குரோஷியின் வேடம் என்ன என்பதுதான் எங்களுக்குக் கிடைத்த #valimaiUpdate. காவல்துறை அதிகாரியான இந்த கேரக்டருக்கு முன்னர் அஜித்துடன் நடிக்காத நடிகையாக இருக்க வேண்டும் என யோசித்து ஹூமாவை டிக் செய்திருக்கிறார்கள். தீரன், நேர்கொண்ட பார்வை போல், ஹூமாவின் காட்சிகளும் படத்தில் குறைவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். பர்ஸ்ட் லுக் எப்போ?

இன்பாக்ஸ்

“கொரோனாவிலிருந்து மக்கள் விரைவில் மீள வேண்டும். 90’ஸ் கிட்ஸுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்துவைத்திருக்கும் விநோத வழிபாடு, ராணிப்பேட்டை அருகே நடந்திருக்கிறது. பன்னீர்தாங்கல் கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயில் வளாகத்தில், ஜூன் 24-ம் தேதி பந்தக்கால் நட்டு, வாழை, மாவிலைத் தோரணம் கட்டிய கிராம மக்கள், அங்குள்ள வேப்ப மரத்திற்கு முகூர்த்தப் புடவையும், அரச மரத்திற்கு வேட்டியும் கட்டி மணமக்களை ஜோடிப்பதுபோல் அலங்கரித்தனர். பின்னர், இருத்தரப்பினர் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். ஊர்ப் பெரியவரான பெருமாள் என்பவர் வேப்ப மரத்தில் தாலி கட்டினார். வெகு விமரிசையாக நடந்த இந்தத் திருமணத்தில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மொய் செய்தனர். குறிப்பாக, திருமணம் ஆகாத 90’ஸ் கிட்ஸ் இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டு திருமணமான மரங்களையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். நடக்கும்யா... நம்புங்க!

இன்பாக்ஸ்

ஜூன் 25 - 38 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வலிமையான மேற்கிந்தியத் தீவுகள் அணியிடமிருந்து தட்டிப்பறித்த தினம். அதற்கு முக்கியக் காரணம் அன்றைய கேப்டன் கபில்தேவ். சமீபத்தில் ஐ.சி.சி, அந்நாளின் ஸ்பெஷல் மொமண்ட்ஸை வீடியோவாக வெளியிட்டு கபில்தேவ் உள்ளிட்ட அணியினரை மகிழ்வித்தது. ‘‘க்ளைவ் லாயிட் முன் இந்த இந்திய அணி மண்டியிட்டுவிடும் என்று எல்லோரும் காதுபடப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘நாம் நேர்மையாக உழைப்போம். நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றிவிடலாம்’ என்று மனதினுள் உறுதியாக நம்பினேன். கனவுபோல வெற்றி நிகழ்ந்தது’’ என்று அந்நாளை நினைவுகூர்ந்தார் கபில்தேவ். சீக்கிரம் பயோபிக்கை வெளியே விடுங்க மக்கா!

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் ஜூன் 27 அன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. 2.0 கலை இயக்குநர் முத்துராஜ்தான் பிரமாண்டமான செட் போட்டுக் கொடுத்திருக்கிறார். புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தான் மணமகன். ரோஹித்தின் அப்பா தாமோதரன் டி.என்.பி.எல்லில் ஆடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர். தன் வீட்டில் நடக்கும் பெரிய விசேஷத்தை சென்னையில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தார் ஷங்கர். கொரோனா காலம் என்பதால்தான் ஊருக்கு வெளியே சிம்பிளாக சில முக்கியமானவர்களை மட்டும் அழைத்து நடத்தி முடித்திருக்கிறார். கொரோனா காலம் முடிந்தவுடன் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தத் திட்டமாம். பிரமாண்டம் அமைத்த மேடை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூம்பூம் மாடுகளை வைத்து வாழும் சுமார் 50 குடும்பங்கள் வசித்துவருகின்றன. கொரோனா ஊரடங்கில், இவர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட பசியால் வாடும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். இதனை அறிந்த திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் அந்தக் குடும்பங்களை நேரில் சந்தித்து, அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் வழங்கியதோடு, தொடர்ந்து உதவுவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார். ``எங்களைப் பார்த்தாலே போலீஸ்காரங்க துரத்துவாங்க. பயந்து ஓடுவோம். இப்ப எங்களைத் தேடி வந்து உதவி பண்ணியிருக்காரு எஸ்.பி ஐயா” என நெகிழ்ந் திருக்கிறார்கள் அம்மக்கள். மகிழ்ச்சி!

லட்சத்தீவு புதிய நிர்வாகி பிரஃபுல் படேல் கொண்டுவந்துள்ள புதிய சட்டங்களை எதிர்த்து கேரளத்தைச் சேர்ந்த பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். லட்சத்தீவைச் சேர்ந்த மாடலும், இயக்குநருமான ஆயிஷா சுல்தானா ஒரு டி.வி விவாதத்தில், ‘லட்சத்தீவில் கொரோனாப் பரவலுக்கு மத்திய அரசு காரணம்’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தினர். கேரள ஐகோர்ட்டில் கடந்த 25-ம் தேதி முன்ஜாமீன் பெற்ற ஆயிஷா, “டி.வி விவாதத்தில் என் வாய்தவறி விழுந்த வார்த்தை அது. எதிர்ப்பவர்களின் குரலை இல்லாமல் ஆக்க ஒரு தரப்பு முயல்கிறது!” என ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். வார்த்தைகள் வலிமையுள்ளவை!

இன்பாக்ஸ்

‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தில், ஒரு பன் சாப்பிடுவதற்கு எட்டு ஷூக்களுக்கு பாலீஷ் போட்ட ராக்கி பாய், இரண்டாம் பாகத்தில் ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்க மூன்று போலீஸ் ஜீப்புகளைத் தூக்கியடித்தார். இவ்வளவு பில்டப் தரப்படும் ராக்கியைக் காண ரசிகர்கள் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். முதலில் ஜூலை 16-ம் தேதி படம் வெளியாகுமென்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த படக்குழு, தற்போது நீண்டு வரும் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், முதல் பாகம் அமேசான் ப்ரைம் ஓடிடி திரை வரிசையில் நம்பர் 1 வந்ததால் இரண்டாம் பாகத்தையும் அமேசானே நல்ல விலைக்கு டீல் பேசியுள்ளது. சலாம் ராக்கி பாய்!

இன்பாக்ஸ்

விஜய் பிறந்தநாளன்று வெறித்தனமாக வந்திறங்கியது ‘பீஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக். கூடவே சில கேள்விக்குறிகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. ‘விஜய் கையில் வைத்திருப்பது ஷாட் கன் (Shot Gun). அதுக்கு எதுக்கு திமிங்கலம் 8x ஸ்கோப்’ என்று நமது பப்ஜி ப்ரோ பிளேயர் போர் வீரர்கள் கேள்வி கேட்டனர். ஆனால், ‘அது சாதாரணமான ஷாட் கன் கிடையாது. 12 போர் பம்ப் ஆக்ஷன் கன் (12 BORE - Pump Action Gun)’ என்று துப்பாக்கி வல்லுநர்களே குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அப்புறம் என்னப்பா, பஞ்சாயத்து ஓவர்... கிளம்புங்க!

கடந்த ஆண்டு கொரோனாத் தொற்றிலும் ரிலையன்ஸ் நிறுவனம் பல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது. அதில் கூகுள் நிறுவனமும் ஒன்று. இந்தக் கூட்டணியில் மலிவு விலை ஆண்ட்ராய்டு போன் ஒன்று விரைவில் அறிமுகமாகும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ‘ஜியோ போன் நெக்ஸ்ட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த போன் செப்டம்பர் 10-ம் தேதி இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வரும் என சமீபத்தில் அறிவித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. சுமார் 2,500 ரூபாய் வரை இதன் விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணுல காட்டுங்க!

சீனாவின் உய்குர் இஸ்லாமிய சிறுபான்மையினரை படாதபாடு படுத்திவருகிறது சீன அரசாங்கம். இதற்குக் கண்டனக்குரல்கள் உலகம் முழுக்கவே அதிகரித்துவருகின்றன. அதை எதிர்கொள்ள பழைய டெக்னிக் ஒன்றைக் கையிலெடுத்திருக்கிறது சீனா. உய்குர் மக்களைக் கொண்டே ‘நாங்கள் மகிழ்வுடன் இருக்கிறோம்’ என வீடியோக்களை அப்லோடு செய்ய வைத்திருக்கிறார்கள். சொல்லி வைத்ததுபோல் பதிவேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வீடியோக்களில் ஒரே வரிகளை ‘மானே தேனே’ போட்டுப் பேசியிருக்கிறார்கள் இம்மக்கள். போராடுபவர்களுக்குத்தான் பல்வேறு முகங்கள் இருக்கும். சர்வாதிகாரத்துக்கு என்றுமே ஒரே முகம்தான். கொண்டைய மறைங்க பாஸ்!