
பா.இரஞ்சித் தொடர்ந்து நாவல்களைப் படமாக்கும், தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நண்பர்களிடம் சினிமாவாக மாற்றத்தக்க நாவல்களின் பட்டியலைக் கேட்டிருக்கிறார்

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான கொக்கலிக்கட்டை ஆட்டத்தை வேலூர் மாவட்டத்தில் இன்றளவும் ஆரவாரமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அம்மன் கோயில் திருவிழாக்களில், காப்புக்கட்டிய நாள் முதல் விரதமிருந்து இரவு நேரங்களில் இந்த ஆட்டத்தைப் பயிற்சி எடுக்கிறார்கள். 2 அடி முதல் 10 அடி உயரக்கட்டையைக் காலில் கட்டிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண விஷயமில்லை. கொக்கின் கால்களைப் போன்று தனித்துவமாகச் செதுக்கப்படும் செங்குத்தான கட்டையின் மேற்பகுதியில் ஏறி நிற்க, கட்டையுடன் காலைத் துணியால் கட்டுகிறார்கள். மேள தாளத்துக்கு ஏற்ப ஆட்டக்காரர்கள் ஆடுவார்கள். கொண்டாட்ட நடனம்!
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் விளைந்த ஏலம், கிராம்பு உள்ளிட்ட வாசனை திரவியங்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வசதியாக போடியநாயக்கனூரிலிருந்து தேனி, உசிலம்பட்டி வழியாக மதுரைக்கு சரக்கு ரயில் விடப்பட்டது. அதுவே பின்பு பயணிகள் ரயிலாக மாறி அப்பகுதி மக்களுக்குப் பயன்பட்டது. 2010-ல் அகல ரயில்பாதைப் பணிக்காக ரயில் நிறுத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்காததால் மீண்டும் தங்கள் பகுதிக்கு ரயில் வராதோ என்று மக்கள் நினைத்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளின் தொடர் அழுத்தத்தினால், கடந்த 26-ம் தேதி முதற்கட்டமாக மதுரையிலிருந்து தேனி வரை ரயில் விடப்பட்டது. இதைத் தேனி மாவட்ட மக்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள். மலைகளினூடே...!

தஞ்சாவூரின் புராதன சின்னங்களில் தனித்துவமிக்கது, ராஜப்பா பூங்காவில் அமைந்துள்ள 130 அடி உயரம் கொண்ட மணிக்கூண்டு. 1883-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி முடிசூடியதை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட இதைக் கட்டுவதற்காக, அப்போதைய மராட்டிய ராணி நிதி கொடுத்ததால், ராணிஸ் டவர் எனவும் அழைக்கப்படுகிறது. முதலாம் உலகப் போரில் கலந்துகொண்டு உயிர் நீத்த தஞ்சையைச் சேர்ந்த நான்கு பேர் குறித்த கல்வெட்டும் இங்கு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 2.36 கோடி செலவில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது மணிக்கூண்டு. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி இசைத்து ஓயும்போது, திருக்குறள் மற்றும் அதற்குரிய பொருளும் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது. ஒலிக்கட்டும் குறள்!
மம்மூட்டியால் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர், செகுத்தான் லாசர். 2014-ல் `தி லாஸ்ட் சப்பர்' படம் மூலம் நடிக்கத் தொடங்கியவர், சிறியதும் பெரியதுமாக 26 படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 6 அடி 4 இஞ்ச் உயரமும் 114 கிலோ எடையும் கொண்ட லாசரின் இயற்பெயர் ஹரிபிரசாந்த் வர்மா. கத்தாரில் ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் ஐ.டி ஊழியராக உள்ளார். ``சினிமாவுக்காக வேலையை விட வேண்டாம் என மம்மூட்டி ஆலோசனை கூறியதை அப்படியே கடைப்பிடிக்கிறேன். கத்தாரிலும் என்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்'' என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் லாசர். பாசக்கார சேட்டன்!

முன்பெல்லாம் கதை கேட்பதற்காகத் தனது வீட்டிலேயே அலுவலகம் ஒன்றை வைத்திருந்த நயன்தாரா, சமீபகாலமாக அண்ணா சாலையில் உள்ள கிளப் ஹவுஸ் ஒன்றில்தான் கதைகளைக் கேட்கிறார். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அவரிடம் கதை சொல்ல விரும்பும் அறிமுக இயக்குநர்களுக்கு அங்குதான் அப்பாயின்மென்ட் கொடுக்கிறார். காஸ்ட்லி கதைகள்!

பா.இரஞ்சித் தொடர்ந்து நாவல்களைப் படமாக்கும், தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நண்பர்களிடம் சினிமாவாக மாற்றத்தக்க நாவல்களின் பட்டியலைக் கேட்டிருக்கிறார். சில நாவல்களைத் தேர்வு செய்து அதற்கான உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறார். பெருமாள் முருகனின் ‘சேத்துமான்’ படமாக்கப்பட்டதுபோல முயற்சிகள் தொடரும் என்கிறார்கள். படமாகட்டும் புதினங்கள்!

ஷாருக்கான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அபூர்வம். மகன் ஆர்யன் சிறைக்குச் சென்று வந்தபிறகு இதை இன்னும் குறைத்துக்கொண்டுள்ளார். கடைசியாக மும்பையில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் ஏற்பாடு செய்திருந்த பக்ரீத் பார்ட்டியில் கலந்துகொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். ``நான் டி.வி-க்கு அடிமை. அதனால்தான் ஏழையாகிப்போனேன். வீட்டில் எனது அறை, ஆர்யன் அறை, ஆப்ராம் அறை, முன் அறை, ஜிம் என அனைத்துப் பகுதிகளிலும் டிவி இருக்கிறது. எல்லா டிவிகளின் மதிப்பு மட்டும் ரூ. 40 லட்சம் இருக்கும்'' என்று விளையாட்டாகச் சொன்னார். அடேங்கப்பா!

சல்மான் கான் தனது `கபி ஏக் கபி தீவாளி' படத்தைச் சொந்தமாகத் தயாரிக்கிறார். இதை சல்மானின் நெருங்கிய நண்பர் சாஜித் நாடியாவாலா தயாரிப்பதாக இருந்தது. படத்தின் பட்ஜெட்டைப் பார்த்துவிட்டு அவர் பின்வாங்கிவிட்டார். படத்தில் நடிப்பதாக இருந்த ஷ்ரேயாஸ் தல்படே, அர்ஷாதி வர்சி ஆகியோரும் விலக, அவர்களுக்குப் பதில் தனது மைத்துனர் ஆயுஷ் சர்மா மற்றும் சகீர் இக்பால் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்தார் சல்மான். இப்போது அவர்களும் வெளியேறிவிட்டனர். இப்படத்தில் அறிமுகமாக இருந்த நடிகை ஷெஹ்னாஸ் கில்லும் இதில் நடிக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கிறார். இதனால் சல்மான் கடும் மன உளைச்சலில் இருக்கிறார். என்னமோ நடக்குது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு முக்கியப் பொழுதுபோக்கு, பாகுபலி யானையைப் பார்ப்பது. பெயருக்கேற்ற பிரமாண்டத்துடன் இருக்கும் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை, மேட்டுப்பாளையத்தின் சந்து பொந்துகளில் சாதாரணமாக உலாவும். இவ்வளவு பெரிய யானை ஊருக்குள் வரும்போது மக்கள் பயப்படுவது இயல்புதான். இதனால், கடந்த ஆண்டு அந்த யானையைப் பிடிக்க வனத்துறை ஸ்கெட்ச் போட்டது. “எனக்கா ஸ்கெட்ச் போடறீங்க... எஸ்கேப்” என்று காட்டுப்பக்கம் போன பாகுபலி ஓராண்டுக்கு வெளியில் தலை காட்டவில்லை. இரண்டு வாரங்களாக, மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறது பாகுபலி. இந்த முறை மக்கள் பயம் குறைந்து அதை ரசிக்கத் தொடங்கிவிட்டனர். சமீபத்தில் தெருநாய் ஒன்று குரைத்தபடி துரத்த, தலை தெறிக்க ஓடியது பாகுபலி. “எப்பா... இவன் பார்க்கத்தான் பெருசா இருக்கான். குழந்தை மனசு” என தினசரி பாகுபலியை நேரில் பார்த்து சமூக வலைதளங்களில் ஸ்டேட்ஸ் போட்டு வருகின்றனர். பாகுபலிய நல்லா பார்த்துக்கோங்க மக்கா..!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கடந்த 2020 பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். ஆனால், அருங்காட்சியகம் அமைக்க சரியான இடம் அமையவில்லை. இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சங்கர் கணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து, ஆதிச்சநல்லூர் திருச்செந்தூர் மெயின் ரோடு அருகில் இருக்கும் தங்களது 5.5 ஏக்கர் நிலத்தை அருங்காட்சியகம் அமைக்க இலவசமாகத் தருவதாகக் கூறினர். இதையடுத்து, மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜிடம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் அந்த நிலத்திற்கான பத்திரத்தை வழங்கினர். மண் பேசும் வரலாறு!

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கர் கட்டடங்களுக்கு கான்கிரீட் போடும் ஒப்பந்ததாரர். இவரின் மனைவி முத்துலெட்சுமி. இவர்களுக்கு ரஞ்சித்குமார், பானுப்பிரியா என இரண்டு பிள்ளைகள். தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் ரஞ்சித்குமாரும் ஒருவர். ரஞ்சித் உயிரிழந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார் முத்துலெட்சுமி. ‘திரும்பவும் நான் உங்க வயித்துல வந்து பொறப்பேன்மா... கவலைப்படாதீங்க' என கனவில் வந்து சொன்னாராம் ரஞ்சித். இந்த நிலையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுள்ளார் முத்துலெட்சுமி. அந்தக் குழந்தைக்கு ‘சாய் ரஞ்சினி’ எனப் பெயரிட்டுள்ளனர். “பெண் குழந்தையாப் பிறந்தாலும், ரஞ்சித்தைப் போல இந்த ரஞ்சினியை வளர்ப்பேன்” என்கிறார் முத்துலெட்சுமி. மீண்டும் பிறந்த மகிழ்ச்சி!
கமல் தனது ராஜ்கமல் அலுவலகத்தில் காபி ஸ்பேஸ் ஒன்றை அமைத்து, ‘kamera cafe’ எனப் பெயர் வைத்திருக்கிறார். ‘களத்தூர் கண்ணம்மா’ முதல் ‘விஸ்வரூபம்’ வரை அவர் நடித்த படங்களின் புகைப்படங்கள் கறுப்புவெள்ளையில் அங்கு அலங்கரிக்கின்றன. காபி வித் கலைஞானி!

ஊட்டி மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து நீலகிரியில் அரசு நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றார். அதன்படி, வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உள்ள போர் நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிவப்பு நிற ஸ்வெட்டருடன் வேட்டி சட்டையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினை ராணுவ ஜீப்பில் அமரவைத்த கமாண்டென்ட் மோகன், ஓட்டுநர் இருக்கையில் திடீரென உட்கார்ந்து, முதல்வருக்காக ஜீப் ஓட்டி அழைத்துச் சென்றார். ராணுவப் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் ஒருவர் முதல்வருக்கு ஜீப் ஓட்டிய நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தின்போது உடனடியாக வந்து மீட்புப்பணிகளைச் செய்த காரணத்துக்காக இந்த மரியாதை எனச் சொல்லப்படுகிறது. முதல் மரியாதை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பாரம்பரிய நெல் திருவிழா, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக இன்றைய தலைமுறையினரை! மாட்டு வண்டியில் அமைக்கப்பட்ட விதை நெல் பாதுகாப்புக் கோட்டை பேரணியைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட குதிரைவால் சம்பா, குருவிக்கார், குழிவெடிச்சான், பூங்கார், மடுமுழுங்கி, வரப்பு குண்டைஞ்சான், வாளான், குடவாலை, கல்லுண்டைச் சம்பா, கொத்தமல்லி சம்பா, குருவிக்கார், சிவப்பு, கவுனி, கறுப்பு கவுனி உள்ளிட்ட 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பார்த்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குநர் சசிகுமார் உள்ளிட்டவர்கள் வியந்து போனார்கள். ‘பாரம்பர்ய நெல் ரகங்கள் மீட்பில் பெரும் சேவையாற்றிய, மறைந்த நெல் ஜெயராமன் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கப்போகிறேன். இதில் நெல் ஜெயராமனாக நான் நடிக்கப்போகிறேன்’’ என இயக்குநர் சசிகுமார் தெரிவித்தார். சூப்பர்!

கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பாவின் பதவி கடந்த மாதம் பறிக்கப்பட்டது. இவர் 2013-ல் துணை முதல்வராகவும் இருந்தவர். இவர்மீது வழக்குப்பதிவு செயப்பட்டுள்ள நிலையில், சில நாள்களுக்கு முன் மகனுடன் திடீரென மதுரைக்கு வந்தார். மீனாட்சியம்மனை வழிபட்டவர், பின்பு தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பரிகார பூஜை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை மதுரையிலுள்ள அவருடைய ஒரே ஆதரவாளர் பா.ஜ.க முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் செய்திருந்தார். பாவம் போக்க...!