சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

சமந்தா, பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
News
சமந்தா, பூஜா ஹெக்டே

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்துள்ளது. கடல் உள்வாங்கியதால் நிலப்பரப்பாக மாறியிருக்கிறது

இன்பாக்ஸ்

தீபக் சஹார் தன் நெடுநாள் காதலியான ஜெயா பரத்வாஜைக் கரம்பிடித்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தின்போது ஜெயாவைத் திருமணம் செய்ய விரும்பி மோதிரத்தை நீட்டினார். சமூக வலைதளங்களில் படு வைரலான சம்பவம் அது. சென்னை அணியால் 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாலும், காயம் காரணமாக தீபக் சஹார் இந்த சீசனில் ஆடவில்லை. அப்படியே கிரிக்கெட்டுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு திருமண செக்மென்டை முடித்துவிட ஜாலியாகக் கிளம்பிவிட்டார். டெல்லியின் ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடந்த வரவேற்பில் ஒட்டுமொத்த சென்னை அணியுடன், சுரேஷ் ரெய்னாவும் கலந்துகொண்டார். தோனியும் கோலியும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்கிற செய்திகளையெல்லாம் மீறி தீபக்கின் சகோதரி மல்தி திருமணம் குறித்து போட்ட ட்வீட் வைரலாகியிருக்கிறது. `ஏற்கெனவே காயத்தில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறாய். உலகக் கோப்பை வேறு வர இருக்கிறது. தேனிலவின் போது முதுகை கவனித்துக்கொள்' என ட்வீட் செய்திருக்கிறார் மாலதி. அன்பா? குறும்பா?

இன்பாக்ஸ்

பெரும் பணக்காரர்கள் பூமியை விட்டுப் பிற கிரகங்களுக்குச் சென்று வாழ்வது குறித்துப் பேசிக்கொண்டிருக்க, பில் கேட்ஸ் மட்டும் விதிவிலக்காய் இந்தப் பூமியை நாம் இன்னும் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று எழுதிவருகிறார். கடந்த ஆண்டு How to Avoid a Climate Disaster என்கிற புத்தகத்தின் மூலம், இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பூமியைக் காக்க என்ன செய்ய வேண்டும் என எழுதியவர், இந்த முறை How to Prevent the Next Pandemic என்ற புத்தகத்தில் அடுத்து ஒரு பெருந்தொற்று நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என எழுதியிருக்கிறார். பில் கேட்ஸ் பற்றி சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால் இருக்கும் பெரும் பணக்காரர்களில் புவி குறித்தும், நோய்கள் குறித்தும் எழுதிக்கொண்டிருக்கும் பில் கேட்ஸின் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் அவசியமானதே. காலத்தின் தேவை!

இன்பாக்ஸ்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை நாகார்ஜுனா நடத்திவந்தார். 6வது சீசனை நாகார்ஜுனாவுக்கு பதில் சமந்தா நடத்த இருக்கிறார். இதனால் ஷோவிற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறுகிறது. இதற்குமுன் பிக்பாஸ் 4வது சீசனின் சிறப்பு எபிசோடை சமந்தா நடத்தினார். வெல்கம் டூ சின்னத்திரை!

இன்பாக்ஸ்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்துள்ளது. கடல் உள்வாங்கியதால் நிலப்பரப்பாக மாறியிருக்கிறது. அதற்கான சான்றுகள் இன்று வரையிலும் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள், தொல்லுயிரிகளின் எச்சங்கள் இன்றுவரையிலும் கிடைக்கின்றன. குறிப்பாக சாத்தனூர் கிராமத்தில் கல் மரங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சமீபத்தில் சாத்தனூர் கிராம ஓடைப் பகுதியில் ஆமை வடிவிலான பெரிய கல் படிமம் ஒன்று பாதி புதையுண்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான `அமோனைட்ஸ்' எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள் கடந்த மாதம் இங்கு கண்டறியப்பட்டன. படிமப் புதையல்!

இன்பாக்ஸ்

விஜய் தேவரகொண்டாவுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தை புரி ஜெகன்நாத் இயக்குகிறார். `JGM' (ஜன கண மன) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது, சமந்தாவுடன் `குஷி' என்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய் தேவரகொண்டா. பூஜாவோ ரன்வீர் சிங்குடன் ஒரு படம், சல்மான் கானுடன் ஒரு படம் என பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். பூஜா சமீபமாக நடித்த படங்கள் எதுவும் வரவேற்பு பெறவில்லை என்பது வருத்தமே! சீக்கிரம் ஒரு ஹிட் கொடுங்க!

அமெரிக்க வாழ் தமிழர்கள், தமிழ்நாடு அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள 92 அரசுப் பள்ளிகளில், 107 தன்னார்வ ஆசிரியர்களை நியமித்துள்ளனர். அவர்கள் மூலம் கற்றல் குறைபாடுடைய மாணவர் களுக்குக் கற்றல் மேம்பாட்டுப் பயிற்சியும், ஆளுமைத்திறன் பயிற்சியையும் வழங்கிவருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக, அமெரிக்காவில் மூன்று நாள்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி 14 கோடி ரூபாய் நிதி திரட்டி யுள்ளனர். இதை வைப்புத் தொகையாக வைத்து, அதிலிருந்து பெறப்படும் நிதி மூலம், மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர். கடல் தாண்டி வரும் கல்வியுதவி!

தமிழ் சினிமா இசை உலகில் அனிருத் தன்னை ஒரு பிராண்டாக நிலைநிறுத்திவருகிறார். `யார் இருந்தாலும் இல்லையென்றாலும் அனிருத் படத்தில் இருக்கணும்' என அவரை முதலில் கமிட் செய்துவிடுகிறார்கள். அவர் தொட்டதெல்லாம் சூப்பர் ஹிட்டாகிறது. `இந்தியன் 2', `ரஜினி 169', `திருச்சிற்றம்பலம்', அஜித் - விக்னேஷ் சிவன் படம் என தமிழில் வரிசையாகப் படங்கள், ஷாரூக் கான் - அட்லி இந்திப் படம், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் படம், விஜய் தேவரகொண்டா படம் என டோலிவுட்டிலும் மோஸ்ட் வான்டடாக மாறிவிட்டார். அனி இனி பேன் இந்தியா மியூசிக் டைரக்டர். (அனி)ருத்ர தாண்டவம்!

இன்பாக்ஸ்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், முதல்முறையாக 292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும் உடைய, 1,80,000 டன் கொள்ளளவு கொண்ட ‘கேப் ப்ரீஸ்’ என்ற கேப் வகை கப்பலைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இது ஓமன் நாட்டிலிருந்து சுண்ணாம்புக்கல், ஜிப்சத்துடன் வந்தது. ``இதுபோன்ற பெரிய வகைக் கப்பல்களைக் கையாளுவதன் மூலம் சரக்குப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதுடன் உலக அளவில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைக் குறைந்த கட்டணத்தில் செய்ய முடியும்'' என்கிறார், தூத்துக்குடித் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன். சூப்பரு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தஞ்சையைச் சேர்ந்த ராஜேஷ்-பானுப்ரியா தம்பதியின் மகன் அஸ்வின். எட்டாம் வகுப்பு படிக்கும் இவர், வயதுக்கு மீறிய எடை கொண்டவர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல், கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். திருச்செந்தூர் அருகில் உள்ள மணப்பாடு தீவின் கடல் பகுதியிலும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு குளத்திலும் 25 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து பலரையும் வியக்க வைத்துள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாது என்பதுதான் இதில் ஹைலைட். மூச்சுப் பயிற்சி மூலம் சாதிப்பதாகச் சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும்!

இன்பாக்ஸ்

கோவில்பட்டிக் கடலை மிட்டாய்க்கு 2020 ஏப்ரலில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதன் பெருமையை உலக அளவில் எடுத்துச் செல்ல இந்திய அஞ்சல் துறை, கடந்த அக்டோபரில் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டிக் கடலை மிட்டாய் விற்பனையையும் தொடக்கியுள்ளது. இந்தியாவின் எந்த அஞ்சலகத்திலும் ரூ. 390 பணம் செலுத்தி ஆர்டர் செய்தால், கோவில்பட்டியிலிருந்து அடுத்த ஓரிரு நாள்களில் விரைவு அஞ்சல் மூலம் 5 கடலை மிட்டாய்ப் பாக்கெட்டுகள் அடங்கிய ஒரு கிலோ பார்சல் வீட்டுக்கே டெலிவரியாகும். வீட்டில் இருந்தபடியே தபால்காரர்களிடம் ரூ. 390 செலுத்தியும் ஆர்டர் செய்துகொள்ளலாம். ஸ்வீட் போஸ்ட்!

இன்பாக்ஸ்

பின்லாந்து நாட்டில் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை உலக அளவில் வயது மூத்தோருக்கான தடகளப் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு உடற்கல்வி ஆசிரியரான 80 வயது சுப்பிரமணி, போல்வால்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக வயது மூத்தோருக்கான தடகளப் போட்டிகளில் சாதனை படைத்துவருகிறார். 2019-ல் மலேசியாவில் நடந்த ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வசதியின்றி கடன் பெற்றுச் சென்ற தனக்கு பின்லாந்து சென்று திரும்புவதற்கான செலவைத் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்கிறார். உதவுமா அரசு?

இன்பாக்ஸ்

விதார்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் வேலூர் அருகேயுள்ள பூட்டுத்தாக்கு அழகுமலையில் நடக்கிறது. யோகிபாபுவைப் பார்ப்பதற்காக குடும்பம் குடும்பமாக மக்கள் இங்கு வருகிறார்கள். ஷூட்டிங் பிரேக்கில் புன்முறுவலுடன் அவர்களைக் கூப்பிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார் யோகிபாபு. சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோயில், ரத்தினகிரி பாலமுருகன் கோயில், செங்காநத்தம் மலையிலுள்ள குகைக்கோயில் என்று பல இடங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் யோகிபாபுவைப் பார்த்து ஜெர்க் ஆகிறார்கள். பக்திமான்!

இன்பாக்ஸ்

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமீபத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்கச் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது `18 சுக்காம்பட்டி' கிராமத்தில் வரவேற்ற கிராம நிர்வாக அலுவலரைப் பார்த்து, அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார். அவர் வேறு யாருமல்ல, நகைச்சுவை நடிகர் ராமர்தான். அவரிடமும் அப்பகுதி வளர்ச்சிக்குச் செய்ய வேண்டியவை குறித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ``சென்னை எனக்கு செட்டாகவில்லை. அதனால் ஷூட்டிங்குக்கு விடுமுறை நாள்களில் மட்டும் செல்கிறேன். மற்ற நாள்களில் ஊரில் பணி செய்து நல்ல வி.ஏ.ஓ என்று பெயரெடுக்க ஆசைப்படுகிறேன்'' என்று சொன்னாராம் ராமர். சிரிப்பு வி.ஏ.ஓ!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர்ப் பகுதியில் அடிக்கடி தலை காட்டும் சாமியார் ஒருவரை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். கைலாசாவில் செட்டிலான நித்யானந்தா ரிட்டன் ஆகிவிட்டாரோ என்பதுதான் ஆச்சரியத்துக்குக் காரணம். இவர் நித்யானந்தா இல்லை; அவர் சாயலில் உள்ள பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இவர், கோவை மற்றும் நீலகிரியில் ஆசிரமம் நடத்திவருகிறார். தஞ்சாவூரில் புதிய ஆசிரமம் தொடங்குவதற்காக இடம் பார்த்துவருகிறார். ``நித்யானந்தா இங்கு இல்லாத குறையை பாஸ்கரானந்தா தீர்ப்பதாக ஆசி வாங்க வரும் பலரும் பரவசத்துடன் சொல்கிறார்கள்'' என சாமியாருடன் வரும் சீடர்கள் கண் சிமிட்டிச் சொல்கின்றனர். ரைட்டு!

பூமணி, ஈரோடு தமிழன்பன், இமையம் போன்ற எழுத்தாளர்களுக்கு சென்னையில் சிறப்பான வீடுகள் கிடைக்க, சிரமத்தில் இருக்கும் சில எழுத்தாளர்கள் தங்களுக்கும் வீடு வேண்டும் எனக் கனிவுடன் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம் என ஆலாசனையில் இறங்கியிருக்கிறதாம் அரசு. மேலும் சில எழுத்தாளர்களுக்கு அரசின் கருணை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலை குடியிருக்கும் வீடு!

`கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் நடிக்கும்போதே கீர்த்தனா பார்த்திபனுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புக்கள் வந்தன. `கடல்' படத்தில் அவரை ஹீரோயின் ஆக்க மணிரத்னமே கேட்டுப் பார்த்தார். மறுத்துவிட்டு திருமணம் செய்துகொண்டு ஒதுங்கியவர், இப்போது அப்பா பார்த்திபனின் `இரவின் நிழல்' வரை வேலை பார்த்துவிட்டு படம் டைரக்ட் செய்யப்போகிறார். முதல் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் அல்லது பார்த்திபன் தயாரிக்கலாம். வெயிட்டிங்!