சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
இளையராஜா

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் முதன்மை ஆயுதங்களாகக் கையில் எடுத்திருப்பது முகக்கவசத்தையும் தடுப்பூசிகளையும்தான்

கொரோனா நேரத்தில் வருமானம் குறைந்ததால், வீடு வாங்குவோருக்கு பத்திரப்பதிவில் கட்டணச் சலுகை அறிவித்தது மகாராஷ்டிரா அரசு. இதைத் தொடர்ந்து பணக்காரர்கள் பலரும் காஸ்ட்லி வீடுகளை வாங்கிக் குவிக்கிறார்கள். அந்தேரி பகுதியில் 31 கோடி ரூபாய்க்கு அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கியிருக்கிறார் அமிதாப். இதற்கான பத்திரப்பதிவில் அவர் 96 லட்ச ரூபாய் மிச்சம் செய்திருக்கிறார். இதே அப்பார்ட்மென்டில் சன்னி லியோனும் வீடு வாங்கியிருக்கிறார். காசு கொட்டுது போல!

உலகப் புகழ்பெற்ற 'ஃப்ரெண்ட்ஸ்' டிவி தொடர் முடிந்து 17 ஆண்டுகளான நிலையில், அதில் நடித்தவர்களின் ரீயூனியன் ஷோ கடந்த மே 27-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. 104 நிமிடங்கள் ஓடும் அந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில், நடிகர், நடிகையர், ஒட்டுமொத்த படக்குழு கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை நினைவுகூர்ந்தனர். பல செலிபிரிட்டிகள் அந்த ஷோ குறித்த தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். சீனாவில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்த ஸ்ட்ரீமிங் தளங்கள் அனைத்துமே ஒரு சிலர் கலந்துகொண்ட காட்சிகளை சென்சார் செய்து தூக்கியிருக்கின்றன. கொரியாவைச் சேர்ந்த BTS பேண்ட் பேசிய உரையாடல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. கொரியா போர் குறித்தும், முக்கியமாக அதில் தென் கொரியா சந்தித்த இழப்புகள் குறித்தும் அவர்கள் பேசியதுதான் காரணமாம். ஏனென்றால், அந்தப் போரில் சீனா, வடகொரியாப் பக்கம் நின்றது. அதேபோல் சீனாவில் ரெட் கார்டு போடப்பட்ட பாடகர் லேடி காகா, ஜஸ்டின் பீபர் வரும் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. ரொம்பத் தப்புங்க சீனா!

சிறு செடியாக வளரத் தொடங்கிய அமேசான் நிறுவனம் இன்று விருட்சமாக வளர்ந்து உலகின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இதன் சி.இ.ஓ-வான ஜெஃப் பெஸாஸ் வரும் ஜூலை 5-ம் தேதி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். புதிய சி.இ.ஓ-வாக ஆண்டி ஜாஸ்ஸி பொறுப்பேற்கவுள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜூலை 5-ம் தேதிதான் ஜெஃப் பெஸாஸ் அமேசான் நிறுவனத்தை நிறுவினார். அதே சென்டிமென்ட் தேதியில் அவர் விலகுகிறார். அடுத்த பயோபிக் ரெடி!

எதையும் வித்தியாசமாகச் செய்யும் இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளனின் லேட்டஸ்ட் படமான 'Old' டிரெய்லர்தான் கடந்த வார வைரல். ஆன்லைனில் கண்டுபிடித்த ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்கிறது ஒரு குடும்பம். சில மணி நேரத்தில் அவர்கள் முதுமை அடையத் தொடங்குகிறார்கள். அவர்களின் வாழ்நாள் ஒரு நாளாக மாறிவிடுகிறது. அவர்கள் இந்தச் சிக்கலிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். 23 வித்தியாச மனிதர்களின் குணநலன்களைக் கொண்டவர், எளிதில் உடையும் எலும்புகளைக் கொண்டவர் என ஷியாமளனின் படைப்புகளில் வரும் மனிதர்கள் எப்போதும் விசித்திரமானவர்கள். மரண வெயிட்டிங்.

பெரியவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் வெகுவாக பாதித்திருக்கிறது கொரோனாச் சூழல். நேபாளம், கானா, உகாண்டா போன்ற ஏழை நாடுகளில் மூன்றில் ஒரு குழந்தை இந்த நாள்களில் குழந்தைத் தொழிலாளராக மாற்றப்பட்டிருக்கிறது. `கடன் சுமையால் சில நேபாளக் குழந்தைகள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்' என்கிறது ஓர் ஆய்வு. பள்ளி நேரத்துக்குப் பின்னர், கானாவில் இருக்கும் குழந்தைகள் தங்கச் சுரங்கங்களில் வேலைக்குச் செல்கிறார்கள். ஐந்து மணி நேரத்துக்கும் மேல் கல் உடைப்பதற்கு இவர்கள் பெறும் கூலி, 240 ரூபாய். 'பள்ளிகள் ஆரம்பித்த பின்னரும், 80 கோடி குழந்தைகள் இன்னும் பள்ளிக்குத் திரும்பவில்லை' எனக் கடந்த மாதம் அறிவித்தது யுனிசெஃப். பல நாடுகளில் பள்ளிகள் திறக்க இன்னும் சில காலம் ஆகும் என்பதால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்பதுதான் அவலம். பிஞ்சுகளைப் பிடுங்காதீர்கள்!

நம் மக்கள் உடல்நலத்தில் எடுத்துக்கொள்ளும் அக்கறையை மனநலத்தில் எடுத்துக்கொள்வதில்லை. மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்க வந்துள்ளது ‘மாயன் இன்னேட் ஹீலர்ஸ்’ என்னும் செயலி. இதைத் தனது நண்பர் பிரணவ் பத்மசந்திரனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் ‘தரமணி’ பட நடிகர் வசந்த் ரவி. இவரு ரியல் ஹீரோ சார்!

2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் படை வீரர்களுள் ஒருவர், மேஜர் விபூதி சங்கர். திருமணமான 11 மாதங்களிலேயே தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். தற்போது கடும் பயிற்சிக்குப் பின் அவர் மனைவி நிகிதா கவுலும் மத்திய ரிசர்வ் படையில் இணைந்துள்ளார். ``இதுதான் உங்கள் கணவருக்குக் கொடுக்கும் சிறந்த புகழாரம்'’ என்று அவரைப் பாராட்டி வருகின்றனர். சல்யூட்!

கடந்த ஆண்டு முதல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெறித்தனமான எதிர்பார்ப்பில் இருக்கும் பக்கா ஓ.டி.டி சரக்கு ‘நவரசா.’ 2021 கிளிம்ப்ஸில் சூர்யா, யோகி பாபு தோன்றி மேலும் ஹைப் ஏற்ற, `சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ட்யூட்' என்று ரசிகர்கள் கோரஸ் பாடியது தமிழில் ட்வீட் போடும் நெட்ஃபிளிக்ஸ் அட்மினிற்கு கேட்டுவிட்டது போல, படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்கிறார்கள். கெட் ரெடி ஃபோக்ஸ்!

இன்பாக்ஸ்

உலகின் ஆகச்சிறந்த போதை என்றால் அது ‘இளையராஜா’வின் இசை எனலாம். அந்த மீளா போதை நம் ஆன்மாவுடன் பின்னிப் பிணைந்தது என்பதற்கு உதாரணம் இந்த நிகழ்வு. மலேசியாவில் இளையராஜா ரசிகர் ஒருவர், தான் இறந்த பின் இளையராஜாவின் பாடலைப் பாடி இறுதி மரியாதை செலுத்துமாறு தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் யார், எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை. சமீபத்தில் அவர் இறந்துபோக, நண்பர்கள் கூடி நின்று ‘இளமை எனும் பூங்காற்று’ பாடலைப் பாடி நீள்துயிலுக்கு வழியனுப்பினர். சொர்க்கத்திலும் பூங்காற்று ஒலிக்கட்டும்!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் முதன்மை ஆயுதங்களாகக் கையில் எடுத்திருப்பது முகக்கவசத்தையும் தடுப்பூசிகளையும்தான். தனது நாட்டில் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தி அமெரிக்கா Mask-Free Zone ஆக அறிவித்துள்ளது. அதேபோல், தற்போது தென் கொரியாவும் மக்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் மாஸ்க் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 5 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் செப்டம்பர் மாதத்திற்குள் 70% பேருக்குத் தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்த அரசு முடிவுசெய்துள்ளதாம். ஜி... நம்ம ஜனத்தொகை என்னன்னு தெரியுமா?

ஹாலிவுட்டின் எம்.ஜி.எம் (Metro Goldwyn Mayer) நிறுவனத்தை அமேசான் கைப்பற்றியதுதான் கடந்த வார வைரல் டாபிக். ஹாலிவுட்டின் பல டிரெண்ட்செட்டிங் படங்களைத் தன்வசம் வைத்துள்ள எம்.ஜி.எம்-ன் ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ், க்ரீட், டாம்ப் ரைடர் உட்பட 4,000 படங்களும், 17,000 டி.வி. நிகழ்ச்சிகளும் இனி அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும். இதற்காக அமேசான் கொடுத்த தொகை 8.4 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் எவ்வளவு என்று கணக்கு போட்டுப் பார்த்துக்கோங்க பாஸ்! ஆமாப்பே... 8 பில்லியன் டாலர்!

பிரபாஸுக்குக் கடைசியாக ரிலீஸான ‘சாஹோ’ சுமாராகப் போனாலும்கூட அடுத்தடுத்த படங்களில் விட்டதைப் பிடிப்போம் என்று விறுவிறுப்பாக முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துவருகிறார். பிரபாஸின் ரசிகர்களில் ஒருவர் ட்விட்டரில் ‘மிஷன் இம்பாசிபிள் 7ல் பிரபாஸ் நடிக்கிறாரா?’ என்று இயக்குநரை டேக் செய்து கேட்க, “நோ” சொல்லிவிட்டார் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரி. இருப்பினும், ‘சலார்’ படத்தை ஆங்கிலத்திலும் வெளியிட படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லி!

எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அறந்தாங்கி நிஷா, கொரோனாத் தடுப்பூசி போட வந்தபோது சின்னக் குழந்தை போல அதகளப்படுத்திவிட்டார். நிஷாவுக்கு ஊசி போடுவதென்றால் அவ்வளவு பயமாம். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், பலரும் அறிவுறுத்தவே தடுப்பு ஊசி போடும் முடிவுக்கு ஒருவழியாக வந்தார். மே 28-ம் தேதி திருச்சி கலையரங்கத்தில் நடந்த தடுப்பூசி முகாமுக்கு வந்தவர் ஊசி போட அமர்ந்தார். நர்ஸ் ஊசி போட வரும்போது இவர் கையை இழுக்க, முகத்தைத் திருப்பச் சொன்னால் நர்ஸ் முகத்தைப் பார்த்துக் கதற, இதைப் பார்த்து அங்கிருந்த நர்ஸ்கள் சிரிக்க, ஊசி போடும் இடமே ஒரே களேபரமானது. கடைசியில் ஒருவழியாக ஊசி போட்ட பிறகுதான் அந்த ஏரியாவே அமைதியானது. வலிக்கும்ல!

கொரோனாப் பரவலைத் தடுக்க நீலகிரி பழங்குடிகள் பல முயற்சிகளைச் செய்கிறார்கள். கூடலூர் கோடமூலா பழங்குடி மக்கள், தங்கள் கிராமத்திற்குள் வரும் அனைத்துப் பாதைகளிலும் பூத்த மூங்கில் மற்றும் முட்செடிகளை வெட்டி சாய்த்து வருகின்றனர். இதைத் தாண்டி ஊருக்குள் வெளியாட்கள் யாரும் வரக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிக்கின்றனர். ``காய்கறி வண்டிகூட இங்க வரக்கூடாது'' என மிரட்சியுடன் தெரிவித்து ஓடுகின்றனர் இந்த கிராம மக்கள். இவர்களைப் பார்த்து அக்கம்பக்க கிராமத்தினரும் இதே உத்தியைக் கையாள்கின்றனர். இதனால் நோய் கண்டறியும் பணிக்கு வரும் சுகாதாரத் துறையினர்தான் தவிக்கிறார்கள். பயம் பொல்லாதது!

இந்தக் கொரோனா நாட்களில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பொது இடங்களுக்கு அதிகம் வருவதில்லை. அவர் சார்பாக மகன் துரை வைகோ நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம், சத்திரப்பட்டி, படந்தால், சாத்தூர் ஆகிய 5 இடங்களில் 'கொரோனாப் பேரிடர் விழிப்புணர்வுத் தகவல் மையங்கள்' அமைத்துள்ளார் துரை. மருத்துவரின் கண்காணிப்பில் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன இந்த மையங்கள். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்வது, தடுப்பூசி போடுவது எனப் பரபரப்பாக இயங்கும் மகனைப் பார்த்து வைகோவே உணர்ச்சிவசப்பட்டுப்போகிறாராம். இளைய புயல்!

இன்பாக்ஸ்

உலகளவில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பட வரிசை ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.’ இதன் ஒன்பதாவது பாகம் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி ஐந்தே நாள்களில் ரூ.1,184 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் கொரோனாத் தாக்கம் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டால் ஜூன் மாதம் படம் வெளியாகலாம். ஆனால், ஏற்கெனவே பைரசியில் படம் பிச்சுக்கிட்டுப் போகிறது. அட... பாவத்த!

கொரோனா காலத்திலும் திரை ரசிகர்கள் அப்டேட்டிற்காக தவமாய் தவமிருந்து வருகின்றனர். ஆனால், கொரோனா அலைகள் ஓயும் வரை “நோ அப்டேட்” என்று சரமாரியாக அப்டேட்களை அள்ளிக்கொட்டிய போனி கபூர் ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டார். ‘டாக்டர்’ அப்டேட்டிற்கும் கவுன்ட்டரை மூடியது கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ். அதேபோல், தற்போது ‘மாநாடு’ சிங்கிளுக்கும் ‘கொரோனா ஓயும் வரை கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்..!’ என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். இதுவும் கடந்து போகும்!

கரிசல் கதைகளின் பிதாமகன் மறைந்த கி.ராஜநாராயணனுக்குச் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. ஓவியர் சந்ரு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குருவனம் என்ற ஓவிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைத்துள்ளார். இங்கு இலக்கிய ஆளுமைகள், சமூகத் தொண்டாற்றியவர்கள் என சுமார் 600 பேரின் சிலைகள் ஒரே இடத்தில் வைக்கப்படவுள்ளன. மறைந்த வரலாற்று ஆய்வாளரான தொ.பரமசிவன் சிலை இங்கு ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள நிலையில், கி.ரா-வின் சிலையையும் ஓவியர் சந்ரு அங்கு நிறுவியுள்ளார். சிலையாய் நிலைத்திருப்பார்!