Published:Updated:

இன்பாக்ஸ்

ஷாருக்கான், தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாருக்கான், தீபிகா படுகோன்

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகம் இருக்கின்றன. அரிய விலங்கான இவை சமீபகாலமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துவருகிறது.

பிரபாஸ்
பிரபாஸ்

தான் நடிக்கும் படங்களின் கடைசி நாள் படப்பிடிப்பில் எல்லோருக்கும் விருந்து வைப்பது பிரபாஸுக்குப் பிடித்தமான ஒன்று. பிரபாஸ் வீட்டு விருந்தோம்பல் பற்றி, ‘`அது மகாராஜா வீட்டு விருந்தோம்பல் போல இருக்கும். டைனிங் டேபிளின் மீது முப்பதுக்கும் அதிகமான உணவு வகைகள் பிரமிப்பூட்டும். அத்தனையையும் நேர்த்தியாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்’’ என பாலிவுட் சேனல் ஒன்றில் நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார் தமன்னா. பிரியாணி செய்யத் தெரியுமா?

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிப்பதைவிட பயணங்களில் பொழுதைக் கழிப்பதுதான் பிரணவுக்கு ரொம்பப் பிடிக்குமாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் `ஹிருதயம்' படத்தில் நடித்தபிறகு வேறு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. ஹிருதயம் நூறு நாள் கடந்து ஓடியது. கடந்த வாரம் காதலர் தினக் கொண்டாட்டத்தின்போது அது ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் உற்சாகமான பிரணவ், பயணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய படத்துக்குக் கதை கேட்கத் தொடங்கியுள்ளார். ஜூனியர் லால் ஆன் தி ஸ்டேஜ்!

பிரணவ்
பிரணவ்

வெற்றிமாறனின் `விடுதலை'யை முடித்துக் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. இந்தியில் `ஜவான்' படத்தை முடித்துவிட்டு, தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்த ரெடியாகி வருகிறார். அதில் `ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' ஆறுமுகக்குமார் இயக்கத்தில் வடிவேலுடன் நடிக்கும் படத்திற்காக விரைவில் மலேசியா பறக்கிறார். தவிர, சுந்தர்.சியின் `அரண்மனை-4' மற்றும் `ஆரஞ்சு மிட்டாய்' பிஜு விஸ்வநாத் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். நான் ரொம்ப பிஸி!

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகம் இருக்கின்றன. அரிய விலங்கான இவை சமீபகாலமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்துவருகிறது. வார இறுதி நாள்களில் வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தக் குரங்குகளுக்கு உணவுப் பொருள்களைக் கொடுத்துப் பழக்கிவிடுகின்றனர். இதனால் குரங்குகள் மற்ற நாள்களிலும் உணவைத் தேடி மக்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக வனத்துறை 200 குரங்குகளை இடமாற்றம் செய்யவுள்ளது. உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து, அவற்றை அடர் வனப்பகுதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வன உயிரிகள் காப்போம்!

சிங்கவால் குரங்கு
சிங்கவால் குரங்கு

தீபிகா படுகோன் பாலிவுட்டில் தன் பயணத்தை ஷாருக்கானின் `ஓம் சாந்தி ஓம்' படத்தில்தான் ஆரம்பித்தார். `சென்னை எக்ஸ்பிரஸ்', `ஹேப்பி நியூ இயர்' படங்களுக்குப் பிறகு `பதான்' அவர்கள் ஜோடி சேர்ந்த நான்காவது படம். இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே அதிக வசூல் குவித்த படமாக அது அமைந்துவிட, தீபிகா மகிழ்ச்சியில் மிதக்கிறார். ``ஷாருக் கானுக்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஷூட்டிங்கில் அவர் அவ்வளவு நிதானம் காட்டினார். பொறுமையோடு இருந்தார். மற்ற நடிகர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது'' என்கிறார் தீபிகா. பாலிவுட் பாட்ஷா!

ஷாருக்கான், தீபிகா படுகோன்
ஷாருக்கான், தீபிகா படுகோன்

கமலின் ‘இந்தியன் 2’-ல் இப்போது முழுக் கவனமும் செலுத்தி வருகிறார் ஷங்கர். இதற்கு முன்னர் அவர் ஒரே சமயத்தில் ராம்சரண் படத்தையும் இதையும் மாறி மாறி கவனித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் ராம்சரண் படத்தின் நாயகி கியாரா அத்வானிக்குத் திருமணம் நடந்திருக்கிறது. கியாரா விடுமுறையில் உள்ளதால், ஷங்கருக்கு சின்னதொரு பிரேக் கிடைத்திருக்கிறது. அந்தத் தேதிகளில் அவர் ‘இந்தியன் 2’-க்குள் வந்துவிட்டார். திருப்பதி, கடப்பாவைத் தொடர்ந்து இப்போது சென்னையில் தொடர்ந்து சில வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள்.தாத்தா கமிங்!

தென்காசி வெல்கம் காலனியில் ஷேக் சாகுல்ஹமீது என்பவர் தனது வீட்டை சரிந்து கிடக்கும் அட்டைப் பெட்டி போலக் கட்டியுள்ளார். வளைகுடா நாட்டில் வசிக்கும் அவருக்காக ஜூபேர் நைனார் என்ற கட்டடக்கலை வல்லுநர் கட்டியுள்ள இந்த வீட்டைக் கட்டுவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்துள்ளது. மூன்று படுக்கை அறை கொண்ட இந்த வித்தியாசமான வீட்டைப் பார்ப்பதற்குத் தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் வீட்டின் முன்பாக நின்று செல்ஃபி எடுத்து வருவதால் அதை `வெல்கம் காலனி செல்ஃபி பாயின்ட்’ என்றே மக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். ட்ரெண்டிங்ல இருக்காங்க!

தென்காசி
தென்காசி

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மூணாறு அருகே ராஜமலையில் மட்டும் 894 வரையாடுகள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள மொத்த வரையாடுகளில் 50 சதவிகிதம். இது வரையாடுகளின் பிரசவ காலம் என்பதால் மூணாறு இரவிகுளம் தேசியப் பூங்காவிற்கு உட்பட்ட ராஜமலை சுற்றுலாப் பகுதிகள் மார்ச் வரை மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் தொந்தரவு இல்லாத அமைதியான சூழலில் பிரசவ காலம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே வரையாடுகள் 47 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளதாகவும், மார்ச் மாத முடிவுக்குள் 200 குட்டிகள் வரை ஈன்றெடுக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஹவ் க்யூட்..!

இன்பாக்ஸ்

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மாதிரி ரயில் பெட்டி, ரயில் நிலையத்தின் நுழைவு வாயில், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் இடம், நடைமேடை, சுமை தூக்குதல், சுமை இழுத்துச் செல்லுதல், உணவகம், காத்திருப்போர் அறை, பார்சல் சேவை உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டன. ஸ்டேஷன் மாஸ்டர், கண்காணிப்பாளர், பயணச்சீட்டு தருபவர், சுமை தூக்குபவர், நடைமேடையை சுத்தம் செய்பவர், ரயில்வே போலீஸ், கொடி அசைப்பவர், பயணச்சீட்டுப் பரிசோதகர், பயணிகள் என மாணவர்களே பல கதாபாத்திரங்களில் நடித்தனர். ரயில் குறித்த அறிவிப்புகளையும் மாணவர்களே பேசினர். ரயில் நிலையம் குறித்தும் ரயில் சேவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்குவதற்காகவே இது அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கிய தாஸ்.பள்ளிக்கூட ஜங்ஷன்!

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவும், கற்கும் திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்று வரும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ``இதேபோல் நீங்களும் அதிக மதிப்பெண்கள் பெற்றால், உங்களுக்கும் தங்க மோதிரம் உண்டு'' என மற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.ஆசிரிய தங்கங்கள்!

தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி
தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்தைத் தேர்வு செய்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். காவல் நிலையத்தின் அணுகுமுறை, வழக்குகளை விரைந்து முடித்தது உள்ளிட்ட பல காரணிகளை வைத்து இந்த விருதினை வழங்கியுள்ளனர். சமீபத்தில்தான் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் வரப்பெற்ற புகார்களை தமிழகத்திலேயே விரைவாக விசாரித்ததற்காக முசிறி டி.எஸ்.பி யாஸ்மினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இந்நிலையில் விருது கிடைத்திருப்பது காக்கிகளை உற்சாகமடைய வைத்திருக்கிறது. பட்டையக் கிளப்புங்க!