
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் அடுத்தடுத்து விருதுகளை அள்ளிக் குவித்துவருகிறது.

பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘உப்பென்னா’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்தத் தெலுங்குப் படம் தற்போது மீண்டுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த வாரம் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பான ‘உப்பென்னா’ திரைப்படம், தெலுங்கில் ஒளிபரப்பான ‘மாஸ்டர்’ திரைப்படத்தைப் பின்னுக்குத்தள்ளி. டி.ஆர்.பி ரேஸில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. புதுமுகங்கள் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து, (விஜய்சேதுபதியும் வில்லனாக அறிமுகமானார்) இவ்வாறு சாதனை படைப்பது இதுவே முதல்முறை என்கிறது டோலிவுட் வட்டாரம். சூப்பர் ஜி... சூப்பர் ஜி!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் அடுத்தடுத்து விருதுகளை அள்ளிக் குவித்துவருகிறது. நியூயார்க்கில் நடைபெற்ற புதுமுக இயக்குநர்களின் படைப்புகளுக்கான திரைவிழாவில் பங்குபெற்று சிறந்த திரைப்படத்திற்கான விருதினைத் தட்டிச் சென்றுள்ளது. மேலும், அமெரிக்காவின் பிரபல திரை விமர்சகரான ரிச்சர்ட் பிராடி இப்படத்தினை சிலாகித்து அந்நாட்டின் பிரபல வார இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கூழாங்கல்... சைஸுல மட்டும் தான் சிறுசு!
கடந்த 1939-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ராபின்சன் குருசோ என்பவர் தன் நண்பர்களுடன் கடற்பயணம் மேற்கொண்டபோது, இத்தாலியின் கடற்பரப்பில் இளஞ்சிவப்பு மணல் கொண்ட புடெல்லி தீவிற்குச் சென்றுள்ளனர். பின்னர், நண்பர்கள் அந்தத் தீவை விட்டு வெளியேறிவிட ராபின்சன் அத்தீவைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கடந்த 32 ஆண்டுகளாக அத்தீவிலேயே தனியாளாகத் தங்கி மிகவும் சுத்தமாகப் பராமரித்து வந்துள்ளார். தற்போது தேசியப் பூங்கா அதிகாரிகள் கொடுக்கும் நெருக்கடிகளால் தனது 81வது வயதில் புடெல்லி தீவினை விட்டு வெளியேற முடிவுசெய்துள்ளார். கிரேட் சல்யூட் ரியல் ஹீரோ!
தமிழில் அசுர வெற்றியைப் பதித்த ‘அசுரன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ திரைப்படம் வரும் மே 14-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ``படம் கண்டிப்பாக தியேட்டர் ரிலீஸ்தான்!’’ எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார் வெங்கி மாமா. வா நாரப்பா வா... தியேட்டருக்கு வா!
இரண்டு பெண்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிறார்கள். ‘`எங்களை இணைந்து வாழ விடாமல் இருவரின் பெற்றோரும் தொந்தரவு செய்கிறார்கள். எங்களுக்கு அவர்களிடமிருந்து பாதுகாப்பு கொடுங்கள்’’ என சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவர்களின் பெற்றோரை ‘உளவியல் நிபுணரிடம் சென்று உங்கள் பெண்களின் வாழ்க்கைமுறை பற்றித் தெளிவு பெறுங்கள்’ என ஆலோசனை சொல்கிறார். அத்துடன் நின்றுவிடவில்லை அவர். ‘`ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வது பற்றி நானும் ஓர் உளவியல் நிபுணரிடம் சென்று தெரிந்துகொள்ளப் போகிறேன். அப்போதுதான் என் இதயத்திலிருந்து என்னால் உத்தரவு பிறப்பிக்க முடியும்’’ என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்திருக்கிறார். கற்றுக்கொடுக்கும் முன்னோடி!

கடந்த வார இந்தியா டிரெண்டிங் #IStandWithSiddharth தான். ஆரம்பம் முதலே பா.ஜ.க அரசின் செயல்களை விமர்சித்து வந்த நடிகர் சித்தார்த் சமீபத்தில் கொரோனாத் தடுப்பூசி குறித்தும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் ட்வீட் தட்ட, பொங்கி எழுந்தது தாமரை வட்டாரம். சித்தார்த்மீது போலீஸ் புகார் தரப் பட்டுள்ள நிலையில், இணையத்தில் சித்தார்த்தின் தொலைபேசி எண்ணைக் கசிய விட்டு, பலரும் கொலை மிரட்டலும், குடும்பத்தாருக்கு பாலியல் அச்சுறுத்தலும் கொடுத் துள்ளனர். இதனை பகிரங்கமாகத் தெரிவித்த சித்தார்த்துக்கு பெருங் கூட்டம் இணைந்து ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டியுள்ளது. செஞ்சுருவோம்!
கொரோனா இரண்டாவது அலை புதுப்புது உச்சம் தொட்டுவருகிறது. இதனால் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களின் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. இதனால் மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. தற்போது அமேசான் நிறுவனமும் இந்தியாவிற்கு முதல்கட்டமாக 100 Medtronic PB980 வகை ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து உதவிகளைச் செய்யவும் தயார் என்றுள்ளது அமேசான். நன்றி!
கர்நாடக உணவு அமைச்சர் உமேஷ் கட்டி விபரீதமான சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார். ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ள கர்நாடகாவில், நிலைமையை சமாளிக்க இரண்டு கிலோ அரிசியும், மூன்று கிலோ கோதுமை அல்லது கேழ்வரகும் தரப்படுகிறது. ‘`இது எப்படிப் போதும்? நாங்கள் வாழ்வதா, சாவதா?’’ என விவசாயிகள் சங்கப் பிரமுகர் ஒருவர் அமைச்சரிடம் போன் செய்து கோபமாகக் கேட்டார். ‘`செத்துப் போயிடுங்க. அதுதான் நல்லது’’ என அமைச்சர் பதில் சொன்னார். ஷாக்கான அந்தப் பிரமுகர் அந்த உரையாடலை வெளியிட, மாநிலமே கொந்தளித்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல் முதல்வர் எடியூரப்பா வரை எல்லோரும் கண்டித்தபிறகு அமைச்சர் உமேஷ் கட்டி மன்னிப்பு கேட்டார். ‘`அவர் என் கோபத்தைத் தூண்டிவிட்டார். அதனால்தான் அப்படிச் சொன்னேன்’’ என விளக்கமும் கொடுத்திருக்கிறார். இரக்கம் இல்லாத கூட்டம்!
கொரோனா விவகாரத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடுகிறார் ராகுல் காந்தி. இதனால், காங்கிரஸில் இவ்வளவு காலம் இருந்துவந்த ஒரு பிரச்னை தீர்ந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் இணைந்து, ‘கட்சிக்கு நிரந்தரமாக ஒரு தலைவர் வேண்டும்’ எனக் கடிதம் எழுதி போர்க்கொடி உயர்த்தினார்கள். ராகுல் காந்தி ஒரு தலைவராக சரியாகச் செயல்படவில்லை என்பதால் எழுந்த விரக்தியின் வெளிப்பாடு இது. இப்போது அவர்களில் பலருக்கு ராகுல்மீது நம்பிக்கை வந்திருக்கிறது. கபில்சிபல், வீரப்ப மொய்லி, சந்தீப் தீட்சித், பிரித்விராஜ் சவான் எனப் பல தலைவர்கள், ‘`ராகுல் பக்குவமான தலைவராக உருவெடுத்துவிட்டார்’’ எனப் புகழ்கிறார்கள். செகண்ட் இன்னிங்க்ஸ்!
கொரோனா காரணமாக உலகெங்கும் பல விஷயங்கள் நின்றுபோய்விட்டாலும், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சாகசக்காரர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த ஆண்டுக்கான சீசனில் 394 பேருக்கு எவரெஸ்ட் செல்ல பர்மிட் கொடுத்திருக்கிறது நேபாள அரசு. இதுவரை இல்லாத அதிகபட்சம் இது. ‘`நாட்டுக்கு வருமானம் தரும் ஒரு விஷயத்தை எப்படித் தவிர்க்க முடியும்?’’ என்பது நேபாள அரசின் கேள்வி. கடந்த ஆண்டு எவரெஸ்ட் அடிவார முகாமில் செய்யப்பட்ட பரிசோதனையில் பலருக்குக் கொரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கேயும் ட்ராபிக்கா?
இளம்வயதினருக்கும் கொரொனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஃபைஸர் நிறுவனம் தனது கொரோனாத் தடுப்பூசியைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பரிசோதனை நடத்திவருகிறது. ஏற்கெனவே இந்தத் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்குப் போடுவதற்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துவிட்டது. 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளிடம் நடத்தப்படும் பரிசோதனை ஜூலை மாதம் முடியுமாம். ‘`இந்தப் பரிசோதனை நல்லபடி நடந்து முடிந்துள்ளது. இதேபோல ஐந்து வயதுக்கும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி தயாரித்துள்ளோம். செப்டம்பர் மாதத்தில் அதுவும் ரெடியாகிவிடும்’’ என நம்பிக்கை தந்துள்ளது ஃபைஸர் நிறுவனம். சீக்கிரம் விரட்டுவோம் வைரஸை!

பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு இருப்பதைப்போலவே திரிபுராவிலும் இருக்கிறது. இரவு நேர முகூர்த்த அடிப்படையில் அங்கு திருமணங்கள் நடைபெறுவதால், பலரும் தவிக்கிறார்கள். சமீபத்தில் தலைநகர் அகர்தலாவில் இரவு 10 மணியையும் கடந்து ஒரு திருமணம் நடைபெற, மாவட்ட கலெக்டர் சைலேஷ் குமார் யாதவ் அங்கு சென்று பலரையும் பிடித்துத் தள்ளினார். சிலரை அடிக்கவும் செய்தார். திருமண கோஷ்டியினரை சுமார் இரண்டு மணி நேரம் சிறை வைத்தார். அதன்பின் போலீஸார்தான் அவர்களை மீட்டு, திருமணத்தை நடத்தச் செய்தனர். ‘`இரவு 11.30க்கு நல்ல முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தில் திருமணம் செய்ய நினைத்தோம். இந்தப் பிரச்னையால் அந்த நேரத்தில் திருமணம் நடக்கவில்லை. எங்கள் வாழ்வின் மிக மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டிய ஒருநாள், இவ்வளவு மோசமான நாளாகிவிட்டது’’ என்று கலங்குகிறார் மண மகளின் அம்மா. பெரும் எதிர்ப்பு எழுந்தபிறகு மறுநாள் வருத்தம் தெரிவித்தார் கலெக்டர். அவர்மீது இப்போது விசாரணை நடக்கிறது. பாவம் அந்த ஜோடி!

இந்தியாவில் கொரோனாத் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்க, ஐபிஎல் போட்டிகளும் தொடர்ந்து நடந்துகொண்டே வருகின்றது. அதில் கலந்துகொண்ட வீரர்கலும் தொடர்ந்து வெளியேரி வருகிறார்கள். இந்த ஆண்டுஐபிஎல் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான டக் அவுட்டில் போட்டியை விமர்சிக்கும் நபராகக் களமிறங்கியிருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு ஒரு பிட்காயினை தானம் செய்ய முன்வந்திருக்கிறார் அவர். 1 பிட்காயினை வைத்து என்ன செய்வது என்கிறீர்களா? ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு 40 லட்ச ரூபாய்! அந்த நல்ல மனசு இருக்கே!

பொய் சொல்லி சிக்கிக் கொள்வது அரசியல்வாதி களுக்குப் புதிதல்ல. சிக்கிக்கொண்டாலும், ‘அப்படி எதுவும் நடக்கலையே’ எனச் சமாளிக்கும் கலை எல்லோருக்கும் எளிதாய் வருவதில்லை. இந்த லிஸ்ட்டில் புதிதாய் சிக்கியிருப்பவர் பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன். இந்தூரில் 6,000 கட்டில்களைக் கொண்ட கோவிட் மையத்தை RSS கட்டியிருக்கிறது என ட்வீட் செய்தார் வானதி. இணையவாசிகள் கும்பலாக வந்து, ‘அது உங்கள் RSS அல்ல, Radha Soami Satsang’ என நக்கல் அடித்தனர். ‘`நான் எங்கள் RSS கட்டியது என்று சொல்லவில்லை, அங்கு எங்கள் RSS தன்னார்வலர்கள் உதவுகிறார்கள் என்றுதான் சொன்னேன்’’ எனக் குட்டியாக பல்ட்டியடித்தார்.இது வேற ரமணாவாம்
உலகெங்கும் கொரோனாவுக்கு மருத்துவர்கள் சொல்லும் எளிய மருந்துகள் இரண்டுதான். ஒன்று விலகி இருப்பது, இன்னொன்று மாஸ்க் அணிவது. ஆனால், இந்த இரண்டையும் செய்வதிலேயே மக்களுக்கு அவ்வளவு பிரச்னை. நம் நாட்டைப் போலவே தாய்லாந்தில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கும் பழக்கம் உண்டு. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தாய்லாந்தின் பிரதமர் மாஸ்க் அணியவில்லை. அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாக, பிரதமருக்கு 6,000 பாத், (14,000 ரூபாய்) அபராதம் விதித்திருக்கிறார் அந்நாட்டின் ஜனாதிபதி. சட்டம் தன் கடமையைச் செய்யும்.
எல்லோருக்கும் அயர்ன்மேனாக அறிமுகமாகிய ராபர்ட் டௌனி ஜூனியர் தற்போது மீண்டும் ஃபேன்டஸி ஜானர் பக்கம் ஒதுங்கவிருக்கிறார். ஒரு சின்ன ட்விஸ்ட், மார்வெல் நிறுவனத்தின் அயர்ன்மேன் டிசி பக்கம் சென்றிருக்கிறார். டிசியின் புதிய சீரிஸான ஸ்வீட் டூத்தை தயாரிக்கிறார்கள் ராபர்ட்டும், அவரின் மனைவி சூசனும். நெட்பிளிக்ஸில் வெளியாகவிருக்கும் இந்த சீரிஸ், காட்டில் வளரும் ஒரு விசித்திரக் குழந்தையைப் பற்றியது. மார்வெல் ரசிகர்கள் மொத்தமாய்க் கூடி டீசருக்கு, ‘இதெல்லாம் நியாயமில்லை சாரே’ என கமென்ட் போட்டுவருகிறார்கள். வெயிட்டு!