சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்தடுத்து படம் இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டதைப் போல சௌந்தர்யா ரஜினியும் மீண்டும் டைரக்‌ஷன் பக்கம் வருகிறார்

இன்பாக்ஸ்

நடிகை அன்னா பென்னும், அவர் சகோதரியும் ஒரே மாதிரியாக கையில் seven என்று டாட்டூ குத்தியுள்ளனர். `சகோதரியுடன் சேர்ந்து டாட்டூ போட வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்துவந்தது. அது இன்றுதான் நிறைவேறியது' என மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அப்லோடு செய்தார் அன்னா பென். '7 என்பது நீங்கள் பிறந்த தேதியா, எதற்காக 7 என்ற எழுத்தைப் பச்சை குத்தினீர்கள்?' என ரசிகர்கள் கேள்வி கேட்டு கமென்ட்களைத் தெறிக்கவிட்டுள்ளனர். அன்னாவிடமிருந்து பதில் இல்லை. வாட் டாட்டூ?

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் அன்புக்கொடி நல்லதம்பி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் ‘சமூக விஞ்ஞானி கலைவாணர்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். கலைவாணரின் மிக மிக அரிதான புகைப்படங்களுடன் அவரைப்பற்றிய மேலதிக தகவல்களுடன் வெளிவந்திருக்கிறது. நாட்டுக்கு சேதி சொல்ல...

செங்கல்பட்டை அடுத்து நடிகர் சங்கத் தலைவர் நாசரின் சிறு பண்ணை வீடு ஒன்று இருக்கிறது. பயணங்களில் அவர் சேகரித்த விதவிதமான பாறைத் துண்டுகள், சிதைந்த ஓவியங்கள், சிதைந்த சிற்பங்கள், வேறு தோற்றம் காட்டும் வேர்கள் எனப் பெரும் சேகரிப்பை அங்கே வைத்திருக்கிறார். இயற்கை பொக்கிஷம்!

அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்ட சர்ச்சைக்குப் பிறகு, இளையராஜா குறித்துப் பெரிதாக தகவல் ஏதும் வராமல் இருந்தது. இந்த நிலையில் ஜூன் 2-ம் தேதி, அவரது 80-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுமார் 50,000-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்துவருகின்றனர். இதில் யுவன்சங்கர் ராஜா, ஆண்ட்ரியா, கார்த்திக், மனோ, உஷா உதுப், ஸ்வேதா ஆகியோர் கலந்துகொண்டு இசை விருந்து படைக்க உள்ளனர். அங்கே எதுவும் பேசி சர்ச்சையைக் கிளப்பாம இருக்கணும்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்தடுத்து படம் இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டதைப் போல சௌந்தர்யா ரஜினியும் மீண்டும் டைரக்‌ஷன் பக்கம் வருகிறார். ‘வேலையில்லா பட்டதாரி 2’-ஐ இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த ஆண்டில் ‘பொன்னியின் செல்வன்’ சீசன் ஒன்று வெப்சீரிஸை ‘புதுவெள்ளம்’ என்ற பெயரில் தொடங்கினார். இப்போது அதைத் தள்ளிவைத்துவிட்டு அசோக் செல்வன் நடிப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார். வருக வருக!

இன்பாக்ஸ்

செல்வராகவனின் `நானே வருவேன்' படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. படத்திற்கான கதையை தனுஷ் எழுதியிருக்கிறார். சமீபத்தில் போஸ்ட் புரொடக்‌ஷனின் போதும் கதையைச் சிலாகித்த செல்வா, உடனே தனுஷைக் கூப்பிட்டு ``பிரமாதமான கதைடா தம்பி'' எனப் பாராட்டியதுடன் அடுத்தடுத்து கதைகள் எழுதவும் சொல்லியிருக்கிறார். தம்பியுடையார்...!

இன்பாக்ஸ்

உள்ளூர் கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்படும் பாரம்பர்ய கலைப்பொருள்கள் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு, ‘ஒரு ரயில் நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தினை அறிவித்து, ரயில் நிலையங்களில் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கு அமைத்துச் செயல்படுத்திவருகிறது. அதன்படி திருச்சி கோட்டத்தில் தஞ்சாவூர் ரயில் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், முதலில் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பர்யமிக்க பொருளான நெட்டி வேலைப்பாட்டுப் பொருளுக்கான கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியிலும் விற்பனை அளவிலும் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மைக்கான விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் உயர்வதாக கைவினைக்கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். மகிழ்ச்சி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ஊர்கூடித் தேர் இழுத்துப் பார்த்திருப்போம். ஆனால், ஊரே சேர்ந்து தேரைத் தூக்கிச் செல்லும் திருவிழா கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள முடியனூர் கிராம திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்த் திருவிழாவில், ஊர் மக்கள் ஒன்றுகூடித் தேரைச் சுமந்து செல்கின்றனர். அதனால் இதற்கு ‘தூக்குத்தேர் திருவிழா’ என்று பெயர். 500 மூங்கில் கழிகளைக் கொண்டு சுமார் 61 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டத் தேரை ஊர் மக்கள் ஒன்றுகூடி தங்கள் தோளில் தூக்கிக்கொண்டு ஊர்வலம் வந்தனர். இந்தத் தேருக்குச் சக்கரம் கிடையாது. வித்தியாசமான இந்தத் தூக்குத்தேர்த் திருவிழாவைப் பல்வேறு பகுதி மக்கள் நேரில் கண்டுகளித்தனர். சுகமான சுமை!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 103 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பணிபுரியும் 9 ஆசிரியைகள் தங்களது சொந்தச் செலவில் அனைத்து மாணவர்களுக்கும் பால் பாயசத்துடன் கிடாக்கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர். “கொரோனாத் தாக்குதல் காலகட்டத்துல மாணவர்கள் ஒருவிதமான உற்சாகமின்மைக்கு ஆளாகியிருந்தாங்க. இப்போதான் மாணவர்கள் முகத்துல பழைய உற்சாகத்தைப் பார்க்க முடியுது. ஆண்டு இறுதித்தேர்வு முடிஞ்சு, கோடை விடுமுறை விடப்படற நேரத்துல அவங்களுக்குக் கறி விருந்து வைக்க, ஆசிரியைகள் பேசி முடிவெடுத்தோம். நாங்களே பிள்ளைகளுக்குப் பரிமாறினது சந்தோஷமா இருக்கு” என்றனர் ஆசிரியைகள். மணக்கட்டும் மாண்பு!

இன்பாக்ஸ்

மைசூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் அரியவகை உயிரினங்களில் 8 வயதான வெள்ளைப் புலி தாராவும் ஒன்று‌. ராக்கி என்ற ஆண் புலியுடன் இணை சேர்க்கப்பட்ட தாரா, அண்மையில் 3 குட்டிகளை ஈன்றிருக்கிறாள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 3 குட்டிகளும் தாயுடன் கொஞ்சி விளையாடிவருகின்றன. தாயின் அரவணைப்பையும் குட்டிகளின் செல்லக் குறும்புகளையும் வீடியோவாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுவருகிறது. பார்வையாளர்கள் இதை நேரில் ரசிக்கவும் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர். ‘அல்பினோ’ எனப்படும் வெள்ளை நிறப் புலியான தாராவிற்குப் பிறந்த மூன்று குட்டிகளும் இயல்பான புலிகளின் வண்ணத்தில் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புலி வம்சம்!

இன்பாக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் ஜெயராமன். இவர், திருநெல்வேலி மாவட்டம் வி.எம். சத்திரம் அருகிலுள்ள முதலாளி நகரில் புதிய வீடு கட்டியுள்ளார். தன்னிடம் 10-ம் வகுப்பு பயிலும் தமிழ்வழிக் கல்வியின் முதல் ரேங்க் மாணவியான பாலபேச்சியம்மாள், ஆங்கில வழிக் கல்வியின் முதல் ரேங்க் மாணவியான ஜெபா ஆகியோரைச் சிறப்பு விருந்தினராக அழைத்து அவர்களை வைத்தே புதுமனை புகுவிழா நடத்தினார். இரு மாணவிகளுக்கும் சிறப்பு விருந்து வைத்து நினைவுப் பரிசும், புத்தாடையும் வழங்கியிருக்கிறார். “மாணவர்கள் இல்லாவிட்டால் எங்களைப் போன்ற ஆசிரியர்கள் இல்லை. எனக்கு ஆசிரியர் பணி தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போதே, சொந்த வீடு கட்டினால் இப்படித்தான் திறக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அது இப்போது நனவாகியிருக்கிறது” என்றார். சிறந்த சொல் - செயல்!