சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

மலையாளத்தில் ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், அடுத்து இளமைத் துள்ளலான காதல் கதையை இயக்குகிறார்.

இன்பாக்ஸ்

சத்தீஸ்கர் முதமைச்சர் பூபேஷ் பாகலை, தங்களது கனவு நாயகனாகவே நேசிக்கிறார்கள் தமிழக விவசாயிகள். இவரை நேரில் சந்தித்துப் பாராட்ட, தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல மாவட்ட விவசாயிகள் சத்தீஸ்கர் சென்றனர். பூபேஷ் பாகலுக்கு அன்புப் பரிசாக, பண்ருட்டி பலாப்பழம், அரியலூர் அச்சுவெல்லம், பெரம்பலூர் முந்திரி, கடலூர்க் கரும்பு ஆகியவற்றை வழங்கினார்கள். ‘`இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் இதுவரை விவசாயிகளுக்குச் செய்திடாத பல நன்மைகளை இவர் செய்திருக்கிறார். சத்தீஸ்கர் விவசாயிகளுக்கு ஏக்கருக்குப் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை, ஒரு டன் கரும்பிற்கு 3,550 ரூபாய் கொள்முதல் விலை, நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு 2,540 ரூபாய் கொள்முதல் விலை வழங்கி வருகிறார்’’ என நெகிழ்கிறார்கள் பூபேஷ் பாகலின் தமிழக ஃபார்மர்ஸ் ஃபேன்கள். உழவின் தோழர்!

இன்பாக்ஸ்

தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்கள் பெற்று வருகிறார் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாத்திமா பீவி. `இம்மாத இறுதியில் இந்தூரில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள ரயிலில் செல்வது கஷ்டமாக இருக்கும். விமானத்தில் செல்ல உதவுங்கள்' என்று பலரிடம் கேட்டும் உதவி கிடைக்காத நிலையில் மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவர் உடனே சிறப்பு நிதியிலிருந்து ரூ. 20,000 வழங்கி பாத்திமா பீவியை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். வென்று வரட்டும்!

இன்பாக்ஸ்

கனவுகளை நோக்கிப் பயணிப்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான். ஆனால், பல தோல்விகளுக்குப் பிறகு அதை சாதிப்பது வெகு சிலர் மட்டுமே. அப்படி ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ராம்சங்கர். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவரின் கனவு. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அதற்காக தொடர் முயற்சிகளை எடுத்தார். 29 முறை அவர் எடுத்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியைக் கொடுத்தன. ராம்சங்கர் தளரவில்லை. கஜினி முகமதுக்கே டஃப் கொடுக்கும் விதமாக, 30-வது முயற்சியில் இறங்கினார். இந்த முறை வெற்றியும் பெற்றுவிட்டார். இந்திய கடலோரக் காவல்படையில், முதல் தலைமுறை ராணுவ வீரராக இணையவுள்ளார் ராம். இதனால் மொத்தக் குடும்பமும் ஹேப்பி அண்ணாச்சி. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..!

இன்பாக்ஸ்

சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலைக் காதலித்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ முடிவு செய்து, மும்பை பாந்த்ராவில் கடற்கரையோரத்தில் 4 படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர். வீட்டின் மாத வாடகை மட்டும் 10 லட்சம் ரூபாய். சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் அதியாவிடம், ‘`காதலனை எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்’’ என்று கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார். விழுந்தது விக்கெட்!

இன்பாக்ஸ்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் முதல் குளிர்பானங்கள் வரை இங்கு தடை செய்யப்பட்டுள்ளன. 5 லிட்டர் குடிநீர் கேன் மட்டுமே விற்பனை செய்கிறார்கள். குடிநீர்த் தேவைக்காக மாவட்டம் முழுவதும் 68 வாட்டர் ஏ.டி.எம்களை நிறுவியிருக்கிறது மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில், ஒரு லிட்டர் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் சந்தைகளுக்கு அறிமுகமாகியிருக்கிறது. கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்தால் 30 ரூபாய் கொடுத்துவிடுவார்கள். வரவேற்கவேண்டிய முயற்சி!

டைரக்‌ஷனில் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தியில் அவர் `ஓ சாத்தி சால்' படத்தையடுத்து லைகா தயாரிப்பில் ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்குவார் என்றார்கள். ஆனால், அதில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இந்திப் படத்திற்கு முன்னதாக முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்குகிறார். காதல் கதை என்கிறார்கள். குறுகிய காலத்தில் இதை எடுத்து முடிக்க பிளான் இருக்கிறதாம். அப்பாவை எப்போ இயக்குவீங்க?

இன்பாக்ஸ்

மலையாளத்தில் ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், அடுத்து இளமைத் துள்ளலான காதல் கதையை இயக்குகிறார். அதில் விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சயை அறிமுகப்படுத்தினால், படம் வேற லெவலில் இருக்கும் என்று எண்ணி விஜய்யிடம் பேசியிருக்கிறார். விஜய்யும் ‘நீங்கள் சஞ்சயிடமே கேட்டுப்பாருங்கள்’ எனச் சொல்லவும், சென்னை பறந்து வந்து விஜய்யின் மகனைச் சந்தித்திருக்கிறார் இயக்குநர். சஞ்சய், ‘நடிக்கும் ஆசை இல்லை. டைரக்‌ஷனில்தான் ஆர்வம்’ என்றதில், ஏமாற்றமாகித் திரும்பியிருக்கிறார் புத்திரன். அட!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் தவில் வித்வான் நாகராஜன். இவர் ஆலங்குடிச் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த சில வருடங்களாக இலவசமாக தவில், நாதஸ்வரம் வாசிப்புப் பயிற்சிகளை அளித்துவருகிறார். இவரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள், விடுமுறை நாள்களில் கச்சேரிகளில் கலந்துகொண்டு குருவை நெகிழ வைக்கின்றனர். விடுமுறை என்றாலே செல்போனில் அடிமையாகிக் கிடக்கும் மாணவர்களுக்கு மத்தியில், தவில், நாதஸ்வரக் கலைகளைக் கற்றுக்கொண்டு, நிகழ்ச்சிகள் நடத்திவரும் மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. மண்மணம்!

இன்பாக்ஸ்

சோழப் பேரரசை இன்றளவும் பெருமை கொள்ளச் செய்யும் பேரரசி செம்பியன் மாதேவி. அரியலூர் அருகே உள்ள செம்பியக்குடி கிராமத்தில் ஒவ்வொரு சித்திரை மாத கேட்டை நட்சத்திரத்திலும் செம்பியன் மாதேவிக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த முறை உள்ளூர் மக்களும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த வரலாற்று ஆய்வாளர்களும் சேர்ந்து 1,112வது பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது அப்பகுதியினரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. சோழர் காலத்தில் கட்டடக்கலை, நீர் ஆதாரங்களை வலுப்படுத்திய விதம் குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் சிறப்புரையாற்றினார்கள். வரலாறு முக்கியம்!

ஆம்பூர் பிரியாணி, ஆளைத் தூக்கும் அளவுக்கு கமகமக்கும். இதை ருசிக்கவே நாக்கிற்குக் கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள், அசைவப் பிரியர்கள். இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளித் திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியிலிருக்கும் அனைத்து பிரியாணிக் கடைகளையும் ஒன்றுசேர்த்து, மே மாதத்தில் 3 நாள்கள் பிரியாணித் திருவிழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம். மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணித் திருவிழா கொண்டாடப்படும் என அறிவித்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ‘‘மக்கள் குஷியும், கும்மாளமுமாகக் கூடி ஆளுக்கொரு பிடி எடுத்துச் சாப்பிட ரெடியா?’’ எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார். இன்னிக்கு ஒரு பிடி!

மலையாளப் புத்தாண்டான விஷூ தினத்தில் கைநீட்டம் என்ற பெயரில் காசு கொடுக்கும் வழக்கம் கேரளத்தில் உள்ளது. இதற்காக நடிகரும் பா.ஜ.க ராஜ்ய சபா எம்.பி-யுமான சுரேஷ்கோபி ரிசர்வ் வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் புதிய நோட்டுகளைப் பெற்றார். கொச்சி தேவசம் போர்டுக்கு உட்பட்ட வடக்குநாதர் கோயிலுக்கு வருபவர்களுக்குக் கைநீட்டம் கொடுக்க ஆயிரம் ஒரு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்திருக்கிறார். தனிநபர்களிடம் பணம் வாங்கி பக்தர்களுக்குக் கைநீட்டம் கொடுக்கக்கூடாது என தேவசம் போர்டு அதை மறுத்தது. அசராத சுரேஷ் கோபி பொது இடங்களில் எதிர்ப்பட்டவர்களுக்குக் கைநீட்டமாகப் பணம் கொடுத்திருக்கிறார். அப்போது பொதுமக்கள் சிலர் அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டுப் பணம் வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாதங்களுக்கு முன்பு புத்தூர் பகுதியில் சென்றபோது ‘நான் எம்.பி. நீங்கள் சல்யூட் அடிக்கலாம்’ என போலீஸாரிடம் கூறி சர்ச்சையில் சிக்கினார். ‘நாம என்ன செய்தாலும் அது சர்ச்சை ஆகிவிடுகிறதே’ என சஞ்சலத்தில் இருக்கிறார் சுரேஷ்கோபி. சர்ச்சைகோபி!

இன்பாக்ஸ்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅபிராமி உடனாய ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான ஆயுஷ்யோக திருமணங்கள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இப்போது கோயிலைச் சுற்றித் திரியும் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகள், கடைகளில் வைத்துள்ள பொருள்களைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடுகின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படும் அவதிக்கு அளவேயில்லை. அட்டகாசம் செய்யும் இந்தக் குரங்குகளை வனத்துறையினர் அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சேட்டைக்காரங்க!