
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது டோலிவுட்டில் முன்னணி நாயகியாக மாறிவிட்டார், ராஷ்மிகா மந்தனா.
* பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலிப் குமாரின் பூர்வீக வீடு தற்போதைய பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு ஒரு பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ட்விட்டரில் திலிப் குமாரின் பூர்வீக வீட்டின் படங்களைப் பதிவிட்டிருந்தார். திலிப் குமாரின் பழைய நினைவுகள் மீண்டெழ, அவர் ட்விட்டரில் பெஷாவர் நகரவாசிகளிடம், “அந்த வீட்டின் புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்” எனக் கேட்டிருந்தார். பலரும் அந்த வீட்டின் புகைப்படங்களைப் பதிவு செய்திருந்தனர். இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் புலம்பெயர்ந்த சிலரும் தங்கள் பூர்வீக வீடுகளின் முகவரிகளைத் தெரிவித்து அந்த வீடுகளின் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நினைவில் காடுள்ள மிருகம்!
* ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக், பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் ‘மைதான்’, மல்டிலிங்குவல் படமான ‘கொட்டேஷன் கேங்’ உள்ளிட்ட படங்கள் பிரியாமணி வசம். தற்போது, ‘சயனைடு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படவிருக்கும் இப்படம் ஐந்து மொழிகளில் உருவாகிறது. அதில் தென்னிந்திய மொழிகளில் அனைத்திலும் பிரியாமணியும் இந்தி வெர்ஷனில் யாஷ்பால் ஷர்மாவும் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றனர். முத்தழகு பிஸி!
* கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது டோலிவுட்டில் முன்னணி நாயகியாக மாறிவிட்டார், ராஷ்மிகா மந்தனா. இவரைத் தொடர்ந்து, அந்த பார்முலாவைப் பிடித்து தெலுங்கு சினிமாவில் நடித்துவருகிறார், நபா நடேஷ். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படத்திற்கு முதல் சாய்ஸ் ராஷ்மிகா என்றால், அடுத்த கிரேடில் இருக்கும் ஹீரோக்களின் படங்களில் நடிக்க நபாவுக்குத்தான் முன்னுரிமையாம். விரைவில் கோலிவுட்டிலும் என்ட்ரியாவார் போலத் தெரிகிறது. வெல்கம் டு கோலிவுட் !
* தூர்தர்ஷனில் வெளியான ‘சக்திமான்’ தொடர் தற்போது ஓடிடியிலும் மறு ஒளிபரப்பாகிவருகிறது. சக்திமானாக வந்த முகேஷ் கண்ணா, அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ‘சக்திமான்’ என்னும் பெயரில் மூன்று பாகங்களில் சினிமா எடுக்கவிருக்கிறார்களாம். இதுவரை சின்னத்திரையில் மட்டுமே இருந்த சக்திமான், இனி பெரிய திரையிலும் வரவிருக்கிறது. ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் ஷாருக் கானின் ரா ஒன் போன்ற படங்களை விட சக்திமான் பிரமாண்டமாக இருக்கும் என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார் முகேஷ் கண்ணா. முதல் பாகத்துக்கான ஷூட்டிங் 2021ம் ஆண்டு ஆரம்பிக்கிறதாம். சக்தி சக்தி சக்திமான்!

* லாக்டௌனில் எல்லோரும் புத்தகம் படிக்க, படம் பார்க்க எனச் செலவிட்டால், பிரியங்கா சோப்ரா தன் சுயசரிதையையே எழுதி முடித்திருக்கிறார். ‘‘20 ஆண்டுகளாகத் திரைத்துறையில் மக்களுக்கு பிரபலமான முகமாக இருந்தாலும், இன்னும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் நிறையவே முடிக்க வேண்டியதிருக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தகத்துக்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறேன்’’ என்கிறார் பிரியங்கா. ‘பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ் Unfinished’ என அவரது புத்தகத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார். பிரியங்களுடன் பிரியங்கா!
* ‘நிலம் எங்கள் உரிமை’ என உலகெங்கிலும் மண்மீட்புக்கான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. “இந்தக் கொடுமையோடு நாங்கள் வாழந்து தொலைய வேண்டும். உங்களுக்கு இது நிச்சயம் புரியாது. வளர்ச்சி என்னும் பெயரில் உங்கள் வீட்டையும் வரலாற்றையும் அழித்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்” என அந்த சூட்டின தேசத்தின் பூர்வகுடியான சேத் கார்டினல் டாஜிங்ஹௌஸ் கேட்டபோது ஒருகணம், ‘எட்டுவழிச் சாலை வேண்டாம்’ எனப் போராடிய சேலம் மக்கள் நினைவுக்கு வந்தார்கள். நாகரிகம் எனச் சொல்லி, வளர்ந்த சமூகம் என மார்தட்டிக்கொண்டு வளர்ச்சியின் பெயரால் சுகத்தினை அனுபவிக்கும் நம் எல்லோரையும் நோக்கியே பேசியிருக்கிறார் சேத். தங்கள் வீடு இருந்த இடத்தில் இப்போது இந்தச் சாலை இருக்கிறது என அந்தத் திறப்பு விழாவில் பேசிவிட்டு, தன் நீண்ட ஜடையை வெட்டி சாலையில் போட்டுவிட்டுச் சென்றார் சேத். அவரின் வீடு இருந்த ஒரு பிடி மண் மட்டுமே தற்போது அவருக்குச் சொந்தம். இது யாருக்கான வளர்ச்சி?
*“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? சினம் கொண்ட சிங்கத்தைப் பார்த்து தோற்று ஓடும்” என்கிற நம்பியார் எம்ஜிஆர் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. கொரோனா எனப் புரளி, அப்படியொன்று இல்லவே இல்லை, 15 பேருக்குத்தான் இருக்கிறது விரைவில் பூஜ்ஜியமாகிவிடும் போன்ற குட்டிக்கதைகளை சொல்லிக்கொண்டே இருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்தியாவெல்லாம் உண்மையான எண்களையா வெளியிட்டுக்கொண்டிருக்கிறது’ எனத் தன்னுடைய சமீபத்திய விவாத மேடையில் கூட ட்ரம்ப் அவரது நண்பர் மோடியை செல்லமாகச் சீண்டியிருந்தார். தற்போது, ட்ரம்ப், அவரின் மனைவி என ட்ரம்ப் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி ருக்கும் ட்ரம்ப் இன்னும் சில நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தேர்தல் காலம் என்பதால், கடும் சோகத்தில் இருக்கிறாராம் ட்ரம்ப். எல்லா நோயும் குணமாகி வருக!