
தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ளது ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில். இங்குள்ள கலைநயமிக்க கல் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘சகுந்தலம்’ என இரு படங்கள் மட்டுமே சமந்தாவின் வசமிருந்தன. சமீபமாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு பைலிங்குவல் படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘தி பேமிலி மேன்’ இரண்டாவது சீசனில் நடித்த பிறகு, இந்தியா முழுக்க நன்கு பரிச்சயமாகிவிட்டார் சமந்தா. இதைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸில் பெரிய சம்பளத்திற்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். பாலிவுட்டில் இருந்தும் ஆஃபர்கள் வரத் தொடங்கியுள்ளன. பல்லாவரம் டு பாலிவுட்..!

`அய்யப்பனும் கோசியும்' படத்தில் வந்த ‘கலக்காத்த சந்தனமேரம் வெகு வேகா பூத்திருக்கு’ என்ற பாடல் மூலம் கேரளா முழுவதும் பிரபலமானவர் பழங்குடி பாடகி நஞ்சியம்மாள். அந்தப் பாடல் தமிழ்நாட்டிலும் வைரலானது. நஞ்சியம்மாள் பாட்டி தமிழ்நாடு – கேரளா எல்லையான அட்டப்பாடி அருகே வசித்து வருகிறார். அந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு நஞ்சியம்மாளை கோலிவுட்டுக்கு அழைத்து வந்துள்ளது. `சீன் நம்பர் 62' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் நஞ்சியம்மாள் ஒரு பாட்டு பாடியுள்ளார். கலக்குங்க பாட்டி!
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமான கார் மோதியதில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். எதிர்க்கட்சிகள் போலவே இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தார், ஆளும் பா.ஜ.க-வின் எம்.பி வருண் காந்தி. இதைத் தொடர்ந்து பா.ஜ.க தேசிய செயற்குழுவிலிருந்து வருண் காந்தியும், அவர் அம்மா மேனகா காந்தியும் நீக்கப்பட்டுள்ளனர். அதன்பின் வருண் காந்தி, கடந்த 1980-களில் வாஜ்பாய் பேசிய ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். `விவசாயிகளை மிரட்டிப் பார்க்காதீர்கள்' என்று அந்த வீடியோவில் அரசை எச்சரிக்கிறார் வாஜ்பாய். `பரந்த இதயமுள்ள தலைவரின் அறிவுபூர்வமான வார்த்தைகள்' என்று அதைக் குறிப்பிட்டு மறைமுகமாக மோடியை கிண்டல் செய்திருக்கிறார் வருண் காந்தி. உள்குத்து!


தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ளது ஸ்ரீவெங்கடாஜலபதி கோயில். இங்குள்ள கலைநயமிக்க கல் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். அக்டோபர் 10-ம் தேதி, மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளைத் தொடக்கிவைக்க வந்தார், தூத்துக்குடி எம்.பி கனிமொழி. அவருக்கு, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி, கனிமொழி, அவரின் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பழைய கறுப்புவெள்ளைப் புகைப்படத்தைக் கொடுத்தார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. ஆச்சர்ய முகத்துடன் அந்தப் படத்தைப் பார்த்த கனிமொழி, நன்றி சொல்லி வாங்கி வைத்துக்கொண்டார். கருவறை வாசனை!

ஆயுத பூஜை நாளில் புதுக்கோட்டை - விராலிமலை சாலையில் சித்தன்னவாசலில் உள்ள மைல்கல்லுக்கு வாழை மரம், தோரணங்கள் கட்டி, படையல் போட்டு, சிறப்புப் பூஜைகள் செய்து சாலைப் பணியாளர்கள் வழிபட்டனர். ‘`எங்களை வாழ வைக்கிறது இந்தச் சாலைகள்தான். அதனால, ஆயுத பூஜையின் போது வருஷம் தவறாமல் பூஜை போட்டுவிடுவோம். இப்படி பூஜை செய்றதால, வேலை செய்கிறபோது கையில, கால்ல அரிவாளோ, மம்பட்டியோ வெட்டாதுன்னு நம்பிக்கை’’ என்று கூறி பிரசாதங்களைச் சாலையில் செல்பவர்களுக்குக் கொடுத்து நெகிழ வைத்தனர் சாலைப் பணியாளர்கள். சாலை போற்றுதும்!

சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சீர்காழியை அடுத்த நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர். இவர் ஸ்மார்ட் டி.வி, ஸ்பீக்கர், மோடம் ஆகியவற்றைத் தனது சொந்தச் செலவில் வாங்கி, மூன்று சக்கர சைக்கிளில் அவற்றைப் பொருத்தி கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறார். மாணவர்களை ஏதாவது ஒரு இடத்தில் கூட்டி, கல்வித் தொலைக்காட்சியைப் பார்க்க வைக்கிறார். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும் செய்கிறார். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இருந்த சூழலில், சீனிவாசனின் சைக்கிள் டி.வி கிராமங்களை நோக்கிப் பயணம் செய்தது. போலாம் ரைட்!

கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் லண்டனில் போய் செட்டிலாகிவிட்டார் நடிகை சோனம் கபூர். தன் லண்டன் வீட்டை அழகாக அலங்கரித்து அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் செம வைரல். லண்டனுக்கும் மும்பைக்கும் பறந்துகொண்டிருக்கும் சோனம், பொழுதுபோகாத நேரங்களில் அலமாரியில் இருக்கும் தன் பழைய புகைப்படங்களை எடுத்து ஷேர் செய்து ரசிகர்களை நாஸ்டால்ஜியா நினைவுகளில் மூழ்கடிக்கிறார். சோகமில்லை சோனம்!
தெலுங்கில் இப்போதைய டிரெண்டே ‘பேன் இந்தியா’ படங்கள்தான். ‘பாகுபலி’க்குப் பிறகு, பிரபாஸின் படம் இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனும் ‘புஷ்பா’ படத்தின் மூலம் இந்தியா முழுக்கப் பல மொழிகளில் களமிறங்கவிருக்கிறார். அடுத்ததாக, மகேஷ்பாபு இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ‘எப்போ இந்திப் படம் பண்ணுவீங்க?’ என்று கேட்டதற்கு, ‘`சரியான நேரத்தில் சரியான படத்தில் இந்தியில் அறிமுகமாக நினைத்தேன். அதற்கான நேரம் வந்துவிட்டது. அடுத்ததாக, ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதன் மூலம் எல்லா மொழிகளிலும் என்னைப் பார்க்கலாம்’’ எனக் கூறியிருக்கிறார். ஜெய் ராஜமெளலி!

முதல் உலகப்போரில், பிரிட்டிஷ் படையில் அதிக அளவில் இந்தியர்களும் பங்கேற்றுப் போரிட்டனர். இந்தப் போரில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களைப் போற்றும் வகையிலும் முதல் உலகப் போர் வெற்றியின் அடையாளச் சின்னமாகவும் பச்சாம்பேட்டை சாலையில் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அப்போதைய ஆங்கிலேய அரசின் சார்பில் திவான் பகதூர் கிருஷ்ணமாச்சாரியார், இதைக் கட்டினார். இதை 10.8.1922 அன்று திவான் பகதூர் டி.தேசிகாச்சாரியார் திறந்துவைத்தார். கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த நுழைவு வாயில் நினைவுச் சின்னம், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடையத் தொடங்கியது. இதைப் புனரமைக்க வேண்டுமென்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நினைவுச்சின்னம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், வரலாற்று முக்கியத்துவம் கருதி, திருச்சி சிவா எம்.பி-யின் கோரிக்கையை ஏற்று இதைப் புனரமைக்கத் தொல்லியல் துறை முன்வந்துள்ளது. சிறப்பு!.

இந்தியில் வுமன் சென்ட்ரிக் படங்களாகத் தேடி நடிக்கும் டாப்ஸிக்கு ஹாலிவுட் வாய்ப்புகளும் தேடி வருகின்றன. ஆனால், ‘`இந்தியப் பெண் கேரக்டரில் நடிக்க ஆள் தேவை என்று வந்தால் நான் நிராகரித்துவிடுவேன். வெறும் அலங்காரப் பதுமையாக வந்துபோவதில் விருப்பமில்லை. சில நிமிடங்கள் வந்தாலும், முக்கியமான கேரக்டராக இருக்க வேண்டும். ஹாலிவுட்டில் சில டைரக்டர்களுக்கு நான் வெறித்தனமான ரசிகை. அவர்கள் கூப்பிட்டால் போய் நடிப்பேன்’’ என்று நிபந்தனைகளைப் பட்டியலிடுகிறார் டாப்ஸி. ஸ்ட்ரிக்ட்டு!

மேற்குத் தொடர்ச்சி மலையின் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்துக்குச் சுற்றுலா செல்ல வேண்டுமானால், நான்கு சக்கர வாகனம் இருந்தால் மட்டுமே முடியும். அத்துடன் வனத்துறையின் அனுமதியும் தேவை. ஆனால் இப்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக வனத்துறை மூலமாகவே வாகனம் இயக்கப்படுகிறது. இதில் செல்வதற்கு முன் அனுமதி தேவையில்லை. மணிமுத்தாறு பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், இதில் ஏறிச் செல்லலாம். பெரியவர்களுக்கு ரூ.350, குழந்தைகளுக்கு ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வனத்துறையின் இந்தச் சுற்றுலா ஏற்பாட்டுக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மலையின் அழகு மனதுக்கு நிறைவு!

தனக்குப் பிடித்த அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், அவர்களை மீண்டும் பிடித்து இழுத்து வந்துவிடுவார் மோடி. அந்த வகையில், பிரதமரின் புதிய ஆலோசகராக அக்டோபர் 12-ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார் அமித் கரே. புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரக் காரணமாக இருந்த இவர், ஜே.என்.யூ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் முக்கியப் பங்காற்றினார். பீகாரில் கால்நடைத் தீவன ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததன் மூலம் புகழ்பெற்றவர் அமித் கரே. உயர்கல்வித்துறைச் செயலாளராக இருந்து, அடிக்கடி மோடியின் பார்வையில் பட்டதால், இப்போது ஆலோசகர் பதவி கிடைத்துள்ளது. இரண்டு ஆண்டுகள் இவர் பிரதமர் அலுவலகத்தில் பணியில் இருப்பார். வழக்கமான விஷயம்தான்!