சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

சிறைக்கைதியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கர்நாடகா செல்லுங்கள்

இன்பாக்ஸ்

கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் காந்தி அங்கு செல்லும்போதெல்லாம் நெகிழ்ச்சியான சென்டிமென்ட் சம்பவங்களுக்கு கியாரன்டி. சமீபத்தில் வயநாடு சென்றபோது, சோனியா காந்திக்குப் பிரசவம் பார்த்து ராகுலை முதலில் தொட்டுத் தூக்கிய செவிலியர் ராஜம்மாவைச் சந்தித்தது, முதியோர் இல்லத்தில் ஓண சாத்யா விருந்து சாப்பிட்டது, குழந்தையுடன் பேசுவது போன்ற சம்பவங்கள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. அதற்கு பி.ஜே.பி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், “ராகுல் எப்போது கேரளா வந்தாலும் ராஜம்மாவைப் பார்ப்பது, குழந்தைகளிடம் பேசுவது என அதே ஸ்க்ரிப்ட்தான் ஓடுகிறது. இது என்ன உங்கள் அரசியல் சுற்றுலாவா? வயநாட்டு மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டது மக்களின் குரலாக ஒலிக்கவே! இனியாவது ஸ்க்ரிப்டை மாற்றி அவர்களுக்கு உண்மையாக ஏதாவது செய்யுங்கள்” என்று கூறியுள்ளனர். ஜிகிட்டயும் சொல்லுங்க!

இன்பாக்ஸ்

பழம்பெரும் நடிகை ரேகா, பேசும் மரமாக மாறியிருக்கிறார். சல்மான் கான் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது பகுதி அடுத்த மாதம் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் புரொமோ விளம்பரத்தில் வரும் பேசும் மரத்திற்கு ரேகா வாய்ஸ் கொடுத்துள்ளார். சல்மான் கான் காட்டில் நடந்துகொண்டிருப்பார். அப்போது மரம் ஒன்று சத்தம் போடும். அந்த மரத்துடன் சல்மான் பேச ஆரம்பித்துவிடுவார். விஷ்வசன் மரம் என்று பெயரிடப்பட்டுள்ள அம்மரத்திற்குத்தான் ரேகா வாய்ஸ் கொடுத்திருக்கிறார். ``சல்மானுடன் சேர்ந்து பணியாற்றுவது எப்போதும் மகிழ்ச்சியளிப்பது. இது எனக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது'' என்கிறார் ரேகா. சல்மானுடன் 88-ம் ஆண்டு `பிவி ஹோ தோ அசி' என்ற படத்தில் ரேகா இணைந்து நடித்திருந்தார். மரக்க முடியுமா?

சிறைக்கைதியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கர்நாடகா செல்லுங்கள். `ஒரு நாள் முதல்வர்' போல `ஒரு நாள் கைதி' என்ற திட்டத்தை பெலகாவியிலுள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலையில் அறிமுகம் செய்ய உள்ளனர். ஒரு நாள் சிறையில் இருக்க 500 ரூபாய் கட்டணம். கைதிக்கான சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகள் செய்யும் வேலைகள் ஆகியவை வழங்கப்படும். குற்றச் செயல்களுக்காகச் சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் போலவே அவர்களும் நடத்தப்படுவார்கள். ``ஒரு நாள் சிறையில் இருந்தால், சிறைக்குள் வருமளவுக்குத் தப்பு செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் வரும். குற்றங்களைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்'' என்கிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள். ஷாப்பிங் போற திட்டம் இருக்கா?

அரசியல் என்ட்ரிக்கு முற்றுப்புள்ளி வைத்து ரஜினி ஏமாற்றம் தந்தபோதிலும், வேலூர் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் குறையாமல் இருக்கிறார்கள். மக்கள் மன்றம் கலைக்கப்பட்டதால், நற்பணி மன்றம் மூலமாக மீண்டும் 90’ஸ் கெட்டப்புக்குத் திரும்பியிருக்கிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றப் பெயர்ப்பலகைத் திறப்பு விழாவை விரைவில் கொண்டாடவும் திட்டமிட்டிருக்கிறார்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ரசிகர்களுக்கு அந்த நேரத்தில் தள்ளுவண்டிக் கடை, டீக்கடை போன்ற சுயதொழில் அமைத்துக்கொடுக்கவும் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. மறுபடி முதல்ல இருந்து...

இன்பாக்ஸ்

ஸ்ரீவித்யாவைப் பார்ப்பதற்காக ஷேவ் பண்ணாத தாடியுடன் சென்னை நாரத கான சபாவின் பெரிய கேட்டைத் திறந்தபடி தமிழ் சினிமாவுக்குள் ரஜினிகாந்த் என்ட்ரியான ‘அபூர்வ ராகங்கள்’ காட்சியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க மாட்டார்கள். கண்ணில் பட்ட ஒரு சிறுமியை அழைத்து, ஒரு கடிதத்தைக் கொடுத்து ஸ்ரீவித்யாவிடம் கொடுக்கச் சொல்வார் ரஜினி. ரஜினிக்கு மட்டுமல்ல, அந்தச் சிறுமிக்கும் ‘அபூர்வ ராகங்கள்’ முதல் படம். குழந்தைப் பருவத்திலேயே சினிமாவுக்குள் வந்துவிட்டாலும் பிறகு குணச்சித்திர நடிகையாகவும் பெயர் வாங்கிய நடிகை சித்ராதான் அவர். மலையாளத்திலும் முதல் படத்திலேயே ஹீரோயினாக, அதுவும் மோகன்லாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம் எனச் சேர்த்து தென்னிந்திய மொழிகளில் சுமார் 200 படங்கள் வரை நடித்தவர், திருமணத்துக்குப் பிறகு திரையுலகிலிருந்து விலகினார். கடந்த மே 21 அவரது பிறந்த நாள். ‘21-ம் நூற்றாண்டு, வருஷமும் 21. நான் பிறந்த தேதியும் 21. இந்த வருஷம் எனக்கு ஸ்பெஷல் இல்ல!’ என அப்போது ஆச்சரியமாக் கேட்டார். அதே 21-ம் நூற்றாண்டு, 21-ம் வருடம் இன்னொரு 21-ம் தேதி (ஆகஸ்ட்) அவருக்குக் கடைசி நாளாகவும் அமைந்துவிட்டது. RIP Chithra!

இன்பாக்ஸ்

அமெரிக்காவில் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ஷாருக் கான் மகள் சுஹானா, 2019-ம் ஆண்டு குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். விரைவில் பாலிவுட்டில் நுழையலாம் என்று சொல்லப்பட்ட சூழலில், அவரை ஷாருக் கானுக்கு மிகவும் நெருக்கமான கரண் ஜோகர்தான் அறிமுகப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இப்போது சோயா அக்தர் இயக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் சுஹானா நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. Archie காமிக் கதையை வைத்து எடுக்கப்படும் இந்த சீரிஸில் ஹீரோயினாக சுஹானா அறிமுகமாகிறார். மீண்டும் பாலிவுட்டில் ஒரு வாரிசு!

ஹைதராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஹரிதாஸ்பூர் கிராமம். 300-க்கும் குறைவான மக்களே வசிக்கும் இந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் ஒட்டுமொத்த கிராமமும் விழாக் கோலம் பூண்டுவிடுகிறது. ஊரே ஒன்றுதிரண்டு கிராமத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கிறது. பெண் குழந்தை பிறந்துள்ளதை மேளதாளத்துடன் வீடு வீடாகச் சென்று அறிவித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனர். பிறந்த பெண் குழந்தையின் பெயரில் `சுகன்யா சம்ருதி யோஜனா' திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்கி, கிராம நிர்வாகத்தின் சார்பில் 1,000 ரூபாய் வைப்புத்தொகையும் செலுத்துகின்றனர். ``பெண் குழந்தைகளின் பிறப்பைச் சோகமான நிகழ்வாகப் பார்க்காமல், அதை தெய்வத்தின் வரவாகக் கருதி ஊர்கூடித் திருவிழா எடுக்கிறோம். சமூகத்தில் பெண் குழந்தைகள் மரியாதைக்குரியவர்களாகவும், மதிக்கப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும்'' என்கின்றனர் கிராம மக்கள். இந்த ஆண்டு தெலங்கானா 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இந்த கிராமத்தைப் பற்றிப் பாடம் இருக்கிறது. எல்லோருக்குமான பாடம்.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் திருமணம் முறிந்துவிட்டது. டயானாவே விபத்தில் இறந்துவிட்டார். டயானாவின் இரண்டு மகன்களுக்குமே திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்துவிட்டன. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ்-டயானா திருமணத்தில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட கேக் ஒன்று இன்னும் பத்திரமாக இருக்கிறது. அரச குடும்ப முத்திரையுடன் அட்டகாசமாக இருக்கும் இந்த கேக்கை, எலிசபெத் மகாராணியின் பணியாளரான மோயா ஸ்மித் கெடாமல் பாதுகாத்து வைத்திருந்தார். இப்போது அது 19 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. எல்லாம் போக மிச்சம்!

இன்பாக்ஸ்

மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான `அம்மா' அமைப்பின் கூட்டம் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. அதில் கலந்துகொண்ட நடிகர்கள் யாரும் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தனர். நெருக்கமாக அமர்ந்து குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். ``கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், கூலித் தொழிலாளர்களுக்குக்கூட அபராதம் விதிக்கிறது அரசு. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கூட்டம் கூடிய நடிகர், நடிகைகள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'' என எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதனால் சிறிய அளவிலாவது அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாராகி வருகிறது. அலறும் அம்மா!

காரைக்கால் பேருந்து நிலையத்தின் முகப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் மலர் அலங்காரத்தை யாரோ ஒருவர் கண்டபடி சிதைத்துக்கொண்டிருந்தார். அவ்வழியே காரில் சென்ற புதுவை முன்னாள் அமைச்சரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான நாஜிம் அதைப் பார்த்துப் பதறி இறங்கிப் போய்த் தடுத்தார். விசாரித்தபோது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவரை போலீஸிடம் ஒப்படைத்துவிட்டு, அருகிலிருந்த பூக்கடையில் மாலை வாங்கிவரச் செய்த நாஜிம், அதை ராஜீவ் காந்தியின் படத்துக்குச் சூட்டிவிட்டுச் சென்றார். நல்ல விஷயம்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் பசு அக்கறை தெரிந்த விஷயம்தான். இதில் எல்லோரையும்விட ஒரு படி மேலே போயிருக்கிறார், மத்தியப் பிரதேச சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் டாங். `தேர்தலில் நிற்பவர்கள் கட்டாயம் பசு வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்காதவர்களின் வேட்புமனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்பதே அவர் சொல்லும் ஐடியா. `மற்றவர்கள் பசு வளர்க்க முடியும். அரசு ஊழியர்களால் முடியாது. அதனால் அவர்கள் பசு வளர்ப்பு நிதியாக மாதம் 500 ரூபாய் கொடுக்கலாம்' என இன்னொரு பரிந்துரையும் கொடுத்திருக்கிறார். அப்புறம் மாடு ஓட்டு போடணும்னு சொல்வாங்களோ?