கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

வட இந்திய ஊடகங்களில் ஒய் ப்ளஸ் பாதுகாப்புடன் வலம்வந்துகொண்டிருக்கிறார் கங்கனா.

* பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி பயங்கர ஹிட்டான படம் ‘முந்தானை முடிச்சு.’ இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் கழித்து இப்போதைய சூழலுக்குத் தகுந்தாற்போல் ரீமேக்காக இருக்கிறது. அதில் சசிகுமார் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் என எல்லாமே பாக்யராஜ்தான். இயக்குநர் யார் என்பதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். முருங்கைக்காய் இருக்கா?

* பொய் சொல்வதால், சிலர் அரசியலில் ஈடுபடுகிறார்களா, அல்லது, அரசியலில் ஈடுபவதால் பொய் சொல்கிறார்களா என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. நாளொரு சர்ச்சையும் பொழுதொரு புகாருமென வட இந்திய ஊடகங்களில் ஒய் ப்ளஸ் பாதுகாப்புடன் வலம்வந்துகொண்டிருக்கிறார் கங்கனா. பா.ஜ.க சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்த காரணத்தினால் மட்டுமே, சிவசேனாவுக்கு மகாராஷ்டிர மாநிலத் தேர்தலில் வாக்களித்ததாகப் பேட்டியளித்திருந்தார் கங்கனா. ஆனால், கங்கனாவின் தொகுதியில் பா.ஜ.கதான் போட்டியிட்டது, சிவசேனா போட்டியிடவேயில்லை என்பதை நிரூபித்து கங்கனாவை டிரோல் செய்துவருகின்றனர் நெட்டிசன்ஸ். அந்தப்பக்கம் போனாலே அப்படித்தான்!

இன்பாக்ஸ்

*நாளுக்கு நாள் நாம் உருவாக்கும் டேட்டா என்பது கணக்கில் வைத்துக்கொள்ள முடியாத அளவு பல மடங்கு அதிகரித்துவருகிறது. இந்த டேட்டாவை ஒழுங்காக சேமித்துப் பாதுகாப்பது டெக் நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பெரிய சவாலாக இருந்துவருகிறது. இவற்றை டேட்டா சென்டர்களில் அன்டார்ட்டிகா போன்ற இடங்களில் வைத்து டெக் நிறுவனங்கள் பாதுகாப்பது வழக்கம். இதில் ஒரு முயற்சியாக 2018-ல் மைக்ரோசாப்ட் ஒரு முழு டேட்டா சென்டரைக் கடலுக்குள் மூழ்கடித்தது. 864 சர்வர்களும், 27.6 பெட்டாபைட்ஸ் அளவிலான டேட்டாவைக் கொண்ட இந்த டேட்டா சென்டர் இப்போது சில நாள்களுக்கு முன்பு வெளியில் எடுக்கப்பட்டது. 117 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த இந்த டேட்டா சென்டருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. தங்களது இந்த முயற்சி வெற்றிகரமானது என அறிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட். இதனால் வருங்காலத்தில் நம் டேட்டா பலவும் கடலுக்கு அடியில்தான் இருக்கப்போகின்றன. மூழ்கப்போறோம்னு குறியீட்டுரீதியில் சொல்றாங்க!

* இந்தியா என்பது சாதியச் சமூகம் என்பதை சில கசப்பான சம்பவங்கள் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. கேரளாவின் வட்டாவட பஞ்சாயத்திலிருக்கும் முடி திருத்துபவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு முடி வெட்ட மாட்டோம் எனக் கூறியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பல ஆண்டுக்காலமாய் இந்த அவல நிலை தொடர்ந்தாலும், கொரோனாச் சூழலில் இதற்காக வேறு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்வது பொருளாதாரச் சூழலில் கடினமானது எனக் கோரிக்கை எழுந்தது. இதற்கு முடிவுகட்டும் விதமாக கேரள அரசாங்கமே, தற்போது அங்கு அனைவருக்கும் பொதுவான முடி திருத்தும் மையங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதேபோல், ஆதிக்கத்திமிர் கொண்டு முடி திருத்தும் கடைகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்திருக்கிறது கேரள அரசு. சாதியை மற, மனிதனை நினை!

இன்பாக்ஸ்

* லாக்டெளனில் ஜெய், பாரதிராஜா ஆகியோரை வைத்து கொரோனா பின்னணியில் ஒரு படத்தை இயக்கி முடித்த சுசீந்திரன், தற்போது இரண்டாவது படத்தை இயக்கிவருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் ஜெய்யும் தெலுங்கு வெர்ஷனில் ஆதியும் நடிக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்துகொண்டிருக்கிறது. இது தவிர, சிம்புவிடம் கிராமத்துக் கதை ஒன்றைச் சொல்லி ஓகே செய்திருக்கிறார், இயக்குநர் சுசீந்திரன். சைக்கோ படத்தயாரிப்பாளரின் அடுத்த படம் இது என்பதால், பெரிய தொகைக்கு சிம்புவை புக் செய்திருக்கிறார்களாம். நியூஸ் மட்டும்தான் வருது!

இன்பாக்ஸ்

* தமிழிலும் தெலுங்கிலும் ஒருசேர ரீமேக்கிற்கு தயாராகிவருகிறது ஆயுஷ்மான் குரானா நடித்த அந்தாதுன். தமிழில் பிரசாந்தைத் தவிர பிற நடிகர்கள் இன்னும் முடிவாகாத நிலையில், தெலுங்கில் நாயகிகள் வரை முடிவாகி விட்டனர். தபு வேடத்தில் தமன்னாவும் ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கவிருக்கிறார்கள். எக்ஸ்பிரஸ் ராஜா, கிருஷ்ணா அர்ஜுனாயுதம் போன்ற படங்களை இயக்கிய மேர்லபகா காந்தி தெலுங்கு வெர்ஷனை இயக்குகிறார். அந்தாதுன்லு!

இன்பாக்ஸ்

* காமெடிக்கும் அமேசான் ப்ரைமுக்கும் காத தூரம் போலிருக்கிறது. கடந்த வாரம், காமிக்ஸ்தான், ‘செம காமெடிப்பா’ என அவர்கள் செய்த காமெடிக்கே புண்ணாகிப்போன ரசிகர்களின் காயம் ஆறுவதற்குள் அடுத்த காமெடியை இறக்கியிருக்கிறார்கள். ‘டைம் என்ன பாஸ்’ என்னும் பெயரில் சிட்காம் ஒன்றை பரத், பிரியா பவானிசங்கர், ரோபோ சங்கர் எனப் பெரிய படையுடன் வெளியிட்டிருக்கிறார்கள். தொடரைக்கூடப் பொறுத்துக் கொண்ட பார்வையாளர்களால், தொடரில் வரும் சிரிப்பு சத்தத்தைப் பொறுத்துக்கொள்ளவே முடிய வில்லையாம். கோபம் வருவது போல் காமெடி செய்வதை அமேசான் ப்ரைம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அழுகுரலுடன் போராடிவருகின்றனர் நெட்டிசன்ஸ். அழுகை வருது!