Published:Updated:

“பாலின உணர்வு நிலையை நாம் பேச வேண்டும்!”

ஐஸ்வர்யா - கார்த்திக் குர்னானி
பிரீமியம் ஸ்டோரி
News
ஐஸ்வர்யா - கார்த்திக் குர்னானி

படிச்சவங்களுக்கே இதுகுறித்த சரியான புரிதல் இல்லாதப்போ என்னைப் போன்ற முதல் தலைமுறைப் பட்டதாரி வீடுகளில் சொல்லவே வேணாம்.

“தன்பாலின ஈர்ப்பு என்ற ஒன்று இருப்பது கல்லூரி சேர்ற வரை எனக்குத் தெரியாது. சொல்லமுடியாத அவமானங்களை தினந்தினம் சந்திச்சிருக்கேன். இதுபற்றிய புரிதல் முழுசா ஏற்பட்ட பிறகும்கூட என் அடையாளத்தை மத்தவங்க கிட்ட வெளிப்படுத்துறதுல அவ்வளவு தயக்கம். ஒருவழியா தயக்கத்தை உடைச்சு என் நெருங்கிய நண்பன் கிட்ட சொன்னேன். அவன் கேட்ட முதல் கேள்வி ‘இப்படியே இருப்பியா? இல்ல, மாறிடுவியா.’ பாருங்க, தன்பாலின ஈர்ப்பு பற்றின நம்மளோட புரிதல் இவ்வளவுதான்.”

உணர்ச்சி ததும்பப் பேசுகிறார் கார்த்திக் குர்னானி. சமீபத்தில், LGBTQ மாணவர்களை உள்ளடக்கிய ஒரு ‘Inclusive club’ தொடங்கியிருக்கிறது சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி. ஓர் அரசுக் கல்வி நிறுவனம் இதுபோன்ற முன்னெடுப்பை மேற்கொள்வது இந்தியாவில் இதுவே முதல்முறை. அதன் முக்கியச் செயற்பாட்டாளராகப் பணியாற்றிவருகிறார் 24 வயதேயான கார்த்திக்.

அமைப்பின் பொறுப்பாளர் ஐஸ்வர்யாவின் கதை சற்று வித்தியாசமானது. ‘‘பிறப்பால் நான் ஒரு பெண். இப்போ நான் ஒரு ‘Gender Fluid’ நபர். அதாவது ஆண்களின் வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவர். ஆனா, திருநம்பி கிடையாது. எங்களை ‘Tom Boys’னு சொல்வாங்க. தன்பாலின ஈர்ப்பு பற்றி இருக்கிற புரிதல்கூட எங்களைப் பற்றி யாருக்கும் இல்லை. என் வீட்ல ஆண் பிள்ளை இல்லாததால, என்னைப் பையன் மாதிரி வளர்க்க எந்த எதிர்ப்பும் காட்டல.”

“பாலின உணர்வு நிலையை நாம் பேச வேண்டும்!”

இந்த இருவரைப் போல பலரும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த முக்கிய காரணமாக இருப்பவர்கள் ராஹெல் ஜெனிஃபர் மற்றும் சக்திதேவி. கல்லூரியின் சமூகப்பணித் துறையில் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றிவரும் இவர்கள்தான் ‘Inclusive club’-க்கான தொடக்கப் புள்ளி.

‘‘மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலனுக்குத்தான் நாங்க முதலில் பணியாற்றிவந்தோம். LGBTQ சமூகத்தினரை உள்ளடக்கிய ஓர் அமைப்பைத் தொடங்கும் யோசனை வெகுகாலமாகவே இருந்தது. இதைப் புரிந்துகொண்ட கல்லூரி முதல்வரும் துறைத் தலைவரும் முழு ஆதரவை எங்களுக்கு அளித்தனர். சமூகப்பணித் துறையின் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றிவருகிறார்கள்” எனத் தொடங்குகிறார் ஜெனிஃபர்.

‘‘தீண்டாமையை எடுத்துப்போம். அதனால ஒரு மொத்தக் குடும்பமும் இந்தச் சமூகத்தால புறக்கணிக்கப்படுது. ஆனால், தன்பாலின உணர்வுள்ளவர்களின் நிலை அதைவிடக் கொடுமையானது. தங்களை வெளிப்படுத்த நினைப்பவர்கள் குடும்பத்தாலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கான வெளியை யாரும் அளிப்பதில்லை. பாலினமும் அதுகுறித்த சமத்துவமும் பேசப்படற அளவுக்கு பாலின உணர்வுநிலையைப் பற்றி இங்கு யாருமே பேசுவதில்லை. தயக்கங்களை உடைத்தெறிந்து எல்லோரும் ஒன்று என உணர்த்தவே இந்த கிளப்” என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசுகிறார் சக்தி தேவி. ‘‘இன்று விவகாரத்துக்கான காரணங்களாகப் பலதும் கூறப்பட்டாலும், தனிநபரின் பாலின உணர்வு நிலை இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பு மூலம் நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதற்காகவே எங்களிடம் வந்து தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. அவர்கள் தம்மை வெளிப்படுத்த நம்மீதான நம்பிக்கை மிகவும் முக்கியம். தொடர் பேச்சுவார்த்தைகள் மூலமே இது சாத்தியமாகும். அப்படி தன் அடையாளத்தை எங்களிடம் முதலில் வெளிப்படுத்தியவர் கார்த்திக்’’ என்கிறார் சக்திதேவி.

அதை ஆமோதிக்கும் கார்த்திக், ‘‘படிச்சவங்களுக்கே இதுகுறித்த சரியான புரிதல் இல்லாதப்போ என்னைப் போன்ற முதல் தலைமுறைப் பட்டதாரி வீடுகளில் சொல்லவே வேணாம். மற்ற ஆண்களைப் போல நான் இல்லாததைக் கவனிச்ச என் பெற்றோர், என்னைக் குணப்படுத்துவதாத் சொல்லி பல கோயில்களுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. முதுகலைப் படிப்பில் சேர்ந்து இவங்க இருவரையும் சந்திக்கறவரை ஒவ்வொரு நொடியும் மத்தவங்ககிட்ட நடிச்சிக்கிட்டு இருந்திருக்கேன்னு இப்போதான் தோணுது’’ என்கிறார்.

மீண்டும் தொடர்கிறார் ஐஸ்வர்யா. ‘‘ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ள அமைப்புகள் சிலவற்றில் பாலின உள்ளடக்கம் இருந்தாலும் அவை முழுமூச்சாகச் செயல்பட்டு வருவதாகத் தெரியவில்லை. அப்படிப் பார்த்தால், இதற்காகச் செயல்பட்டுவரும் முதல் அரசுக் கல்வி நிறுவனம் எங்களுடையதுதான். இதுபற்றிய புரிதலை பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வரும் நாள்களில் இதுபற்றி அறிவுசார் கூட்டங்கள், திரைப்படத் திருவிழா எனப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. எங்களின் தொடர்முயற்சியால் திருநங்கை ஒருவர் எங்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணியமர்த்தப்பெற்றிருக்கிறார். கல்லூரியில் சேர்ந்த புதிதில் புடவை எனக்குக் கட்டாய ஆடையாக அறிவுறுத்தப்பட்டது. புடவை அணிவது என் தன்னம்பிக்கையை மொத்தமாகக் குலைக்கும் ஒன்று. அப்போது நான் நானாக இருக்க முடியாது. இன்று, எனக்கான ஆடையை சுதந்திரமாக அணிந்து என்னை வெளிப்படுத்த நான் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இம்மாற்றத்தை மொத்தச் சமூகத்திற்கும் ஏற்படுத்த எங்களால் முடிந்த தொடக்கப் புள்ளியே இது” ஐஸ்வர்யாவின் வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை.