
இந்த வழக்கில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை அமலாக்கப் பிரிவும் கேட்டு வாங்கியிருக்கிறது.
தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, ‘முன்னாள் அமைச்சர்கள்மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில், தமிழக அரசை முந்திக்கொண்டு, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மத்திய அரசு வாள் சுழற்ற ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, உள்ளாட்சித்துறையின் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வருமான வரித்துறை விரித்துள்ள வலையில், சில அதிரடி நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் உயரதிகாரிகளின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் கிடப்பிலிருக்கும் வழக்குகள் குறித்த பேச்சு எழுந்தபோது, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான இடங்களில் நடந்த ரெய்டுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போது சில ஆவணங்கள் பற்றியும் அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம்.

“கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பல இடங்களில் வருமான வரித்துறையினரின் ரெய்டுகள் நடந்தன. சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள வினோத் என்பவர் வீட்டில் ரெய்டு நடந்தபோது, வேலுமணியின் தனிச்செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனும் அங்கு இருந்தார். வினோத்திடம் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேலுமணிக்கு நெருக்கமானவராகக் கூறப்படும் சரவணன் என்பவரின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட ஒரு நோட்புக்கில், வேலுமணி தரப்பினர் தொடர்புடைய பணம் எந்தத் தேதியில், யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு கொடுக்கப்பட்டது ஆகிய விவரங்கள் இருந்தன.
சரவணனிடம் வருமான வரித்துறையினர் விசாரித்தபோது, சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருக்கும் சபேசன் வீட்டில் பணம்வைத்திருப்பதாகச் சொன்னார். உடனடியாக ஆதம்பாக்கத்திலுள்ள சபேசன் வீட்டிலும் ஒரு டீம் ரெய்டு நடத்தி, கணக்கில் வராத 15.9 கோடி ரூபாயைக் கைப்பற்றியது. சரவணன் வீட்டில் கிடைத்த நோட்புக்கில், சுமார் 900 கோடி ரூபாய் பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் சிக்கின. ஆனால், எங்கிருந்தோ வந்த சில அழுத்தங்களால் அந்த நோட்புக்கிலிருந்த கணக்குகளைச் சரிசெய்யும் வேலைகள் சத்தமில்லாமல் நடந்தன. 900 கோடி ரூபாய் பரிமாற்றங்களுக்கான குறிப்புகளைத் திருத்தி, 390 கோடி ரூபாயாகக் குறைத்தார்கள். இப்படி திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்களையே இந்த வழக்கில் ஆதாரமாகவும் சேர்த்தனர்.

அதன் பிறகும் பல மறைமுக அழுத்தங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்தன. குறிப்பாக, சபேசன் மட்டுமே வருமான வரித்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ரெய்டுக்குள்ளான வினோத்தும் சரவணனும் அழைக்கப்படவில்லை. இதற்கு, வருமான வரித்துறையிலிருந்த சில அதிகாரிகளே அப்போது அதிருப்தி தெரிவித்தார்கள். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அத்துடன், இந்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர் ஒருவர் ஆர்.டி.ஐ மூலம் சில விவரங்களைக் கேட்டதற்கும் வருமான வரித்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது. இந்தநிலையில்தான், கடந்த வாரம் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது” என்றவர்கள் அதைப் பற்றியும் விவரித்தார்கள்...
“ஆல்பர்ட், முரளிமோகன், ஜெயராகவன் ஆகிய மூன்று அதிகாரிகள்தான் மேற்கண்ட ரெய்டுகளையும், விசாரணையையும் நடத்தியவர்கள். இவர்களில் ஆல்பர்ட் பதவி உயர்வுபெற்று கொச்சின் செல்லும் முன்பு, சபேசன் ஃபைலில் இறுதி அறிக்கை எழுதியிருக்கிறார். அதில், ‘கடந்த ஐந்தாண்டுகளில் சபேசனின் வருமான மதிப்பு 1.5 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. அவருக்கு எப்படி 390 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை சாத்தியமாகும்? இந்தப் பணம் அமைச்சர் வேலுமணியின் பணம் என்று விசாரணையில் சபேசனும் சொல்லியிருக்கிறார். எனவே, வேலுமணி மீது பினாமி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதை டெல்லி மேலிடத்துக்குச் சிலர் பாஸ் செய்யவும், வேலுமணி மீதான வருமான வரித்துறையின் கிடுக்கிப்பிடியைத் தொடர டெல்லியிலிருந்தும் சிக்னல் வந்துவிட்டது. இதனால், விசாரணையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றார்கள் விலாவாரியாக.
தற்போது சபேசன் எங்கிருக்கிறார் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. மற்றொருபுறம், இந்த வழக்கில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை அமலாக்கப் பிரிவும் கேட்டு வாங்கியிருக்கிறது. இவையெல்லாம் ஒருபக்கம் நடந்தாலும், மேற்கண்ட விவகாரங்கள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஒருவரிடம் ஒரு டீம் கொண்டு சென்றுள்ளது. 2ஜி விவகாரத்தைப் பூதாகரமாக்கியதுபோல, இதையும் பூதாகரமாக்க அந்தத் தலைவர் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். இதில் முக்கியமான பகடைக்காயே சபேசன்தான் என்கிறார்கள் இந்த விவகாரத்தின் உள்விவரமறிந்தவர்கள்!