பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

எப்போது முடிவுக்கு வரும் வருமான வரி வலைதளச் சிக்கல்கள்?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

''வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதில்லை’’ எனப் பலரும் புலம்புவதை சமீப காலமாகக் கேட்டுவருகிறோம். இன்ஃபோசிஸ் நிறுவனம் தயார் செய்து தந்த புதிய வருமான வரி வலைதளத்தில் என்ன பிரச்னை என வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள் சிலரிடம் கேட்டோம். மணிவேதம்.காம் நிறுவனத்தின் நிறுவனர் லலிதா ஜெயபாலனுடன் முதலில் பேசினோம்.

எப்போது முடிவுக்கு  வரும் வருமான வரி வலைதளச் சிக்கல்கள்?

“கடந்த ஜூன் மாதத்திலிருந்து புதிய வருமான வரி வலைதளத்துக்குள் நுழைவதில் ஆரம்பித்து, வலைதளத்தைப் பயன்படுத்துவதில் ஏகப்பட்ட பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வருமான வரித் தாக்கல் செய்பவர்களின், கடந்த ஓராண்டுக்கான அனைத்து விவரங்களை இன்றுவரை டவுன்லோடு செய்ய முடியவில்லை. ‘Prefill data form’ என்று சொல்லப்படுகிற, வருமான வரித் தாக்கல் செய்பவரின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், பழைய வலைதளத்தில் ரெடிமேடாக இருக்கும். அதைக் கொண்டு எளிதாக வருமான வரியைத் தாக்கல் செய்யலாம். ஆனால், இந்தப் புதிய வலைதளத்தில், அந்த விண்ணப்பமானது 20% விவரங்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இதர 80% விவரங்களைத் தாக்கல் செய்பவர் ஒவ்வொரு விவரங்களாக உள்ளிட வேண்டியுள்ளது.

அடுத்ததாக, இந்தப் புதிய வலைதளத்தில் ‘Tax Credit Form 26AS’-ல் வருமான வரி செலுத்துவோருடைய சம்பளம் மட்டும் அல்லாமல் அனைத்து விதமான வருமான விவரங்களுக்கு உண்டான டி.டி.எஸ் விவரங்கள் ரெடிமேடாக இருக்கின்றன. ஆனால், முழுமையாக இல்லை. இதனால் வரி செலுத்துவோரின் அனைத்து டி.டி.எஸ் விவரங்களையும் தனித்தனியாக உள்ளீடு செய்ய வேண்டியிருக்கிறது. அனைத்து விவரங்களும் ரெடிமேடாக இருந்தால்தான், ஐ.டி.ஆர் ஃபைலிங்கின்போது, அடுத்தடுத்த கட்டத்துக்கு நம்மால் எளிதாகச் செல்ல முடியும்.

லலிதா ஜெயபாலன், சதீஷ்குமார், சச்சின் மாலி
லலிதா ஜெயபாலன், சதீஷ்குமார், சச்சின் மாலி

கடந்த வருடத்தில் ஊரடங்குக் காலத்தில் பங்குச் சந்தையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு டிவிடெண்ட் வருமானம் வந்திருக்கிறது. ஒரு பங்கு பரிவர்த்தனை விவரங்களைக்கூட விட்டுவிடாமல் ஃபைல் செய்ய வேண்டும் என நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால், முதலீட்டு விவரங்கள் அனைத்தும் ரெடிமேடாக இல்லாததால், ஒவ்வொன்றாக ஃபைல் செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. ITR-1 என்றால் ஃபைல் செய்ய அதிகபட்சம் ஒரு மணி நேரம் எடுக்கிறது. பழைய வலை தளத்தில் இதைவிடக் குறைவான நேரம்தான் ஆகும். ITR-2 என்றால் பழைய வலைதளத்தில் இரண்டு மணி நேரம் செலவாகும். ஆனால், இப்போது ஆறு மணி நேரம் ஆகிறது. அவ்வளவு நேரம் செலவானாலும் முழுமையாகத் தாக்கல் செய்ய முடியவில்லை.

இன்னொரு முக்கியமான பிரச்னை, வரிக் கணக்கீட்டில் புதிய வலைதளம் ஒரு சிலருக்கு தவறான வரித் தொகையைத் தெரியப்படுத்துகிறது. அதாவது, நாம் போடும் கணக்கை விடக் குறைவான வரியை இந்த வலைதளம் தெரியப்படுத்து கிறது. அதன்படி, நாம் வரிப்பணத்தைச் செலுத்தினால், அசஸ்மென்ட் அலுவலர் நிச்சயமாக வரி செலுத்துபவர்களைக் கேள்வி கேட்க அதிக வாய்ப்புள்ளது. அந்த நிலையில், வரித் தாக்கல் நடவடிக்கைகள் தள்ளிப்போகும். பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து வலைதளத்தை உருவாக்கியிருப்பதாக இன்ஃபோசிஸ் சொல்கிறது. இவ்வளவு பிரச்னைகளுடன் வருமான வரி வலைதளத்தை இயக்கத்துக்குக் கொண்டு வந்ததற்கான காரணம்தான் புரியவில்லை” என்றார் அவர்.

இது குறித்து ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம். “புதிய வலைதளம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஏதாவது பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் உருவான பிரச்னைகளை எப்படியோ சமாளித்து விட்டோம். ஆனால், பிரச்னை முழுமையாகத் தீர்ந்த பாடில்லை. முக்கியமான சில ஆப்ஷன்கள் இன்னும் இந்த வலைதளத்தில் தீராமலே இருக்கிறது. இப்படித் தொழில்நுட்பக் கோளாறுகள் அதிகம் உள்ள இந்த வலைதளத்தை பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், எப்படி சரியாக வேலையைச் செய்து முடிக்க முடியும்? ஏனெனில், வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதி நெருங்கும்போது ஒரே நாளில் 50 லட்சம் பயனாளர்கள் வருமான வரித்தாக்கல் செய்வார்கள். அப்போது இந்த வலைதளம் தாக்குப் பிடிக்குமா அல்லது மறுபடியும் தொழில்நுட்பக் கோளாறுகளில் சிக்குமா என்கிற சந்தேகம் இப்போதே வருகிறது.

இவ்வளவு பிரச்னைக்கும் காரணம், வலைதளத்தை உருவாக்கிய பிறகு, அதைச் சோதித்துப் பார்க்காமல், அவசர அவசரமாக இயக்கத்துக்கு கொண்டு வந்ததுதான். ஒரு வலைதளம் இயக்கத்தில் இருக்கும்போது அதில் இருக்கும் குறைகளைச் சரிசெய்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

எப்போது முடிவுக்கு  வரும் வருமான வரி வலைதளச் சிக்கல்கள்?

புதிய வலைதளத்தில் வரி செலுத்துவோருக்கு பொருந்தா விட்டாலும் கூடுதல் அட்ட வணைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஆர் ஃபைலிங்கின் போது இந்த அட்டவணைகள் கட்டாயமாகத் தோன்றுகின்றன, அவற்றை நீக்க முடியாயதபடி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. வரி செலுத்துவோர் அந்த அட்டவணையில் பூஜ்ஜியங் களைக் கட்டாயமாகக் குறிப் பிட்டால் மட்டுமே அடுத்தடுத்த கட்டத்துக்கு நம்மால் நகர முடிகிறது.

ஐ.டி.ஆர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, இ-சரி பார்ப்பு கட்டாயமான செயல் முறை ஆகும். இந்த செயல் முறைக்கு ஓ.டி.பி சரியான நேரத்தில் பெறப்படாதது மற்றும் ஓ.டி.பி கிடைத்தால், அது ஏற்றுக் கொள்ளப்படாதது பெரும் பிரச்னையாக இருக்கிறது. சில நேரங்களில், ஓ.டி.பி-யைப் பதிவு செய்த பிறகும் பயனாளர்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லாமல் இருப்பது என பல்வேறு பிரச்னைகள் புதிய வலைதளத்தில் விடாது கருப்பு மாதிரி பிரச்னைகள் துரத்து கின்றன.

புதிய வலைதளத்தில் இன்ஸ் டன்ட் ‘e-Pan’ தேவைப்படும் போது, அதை உடனுக்குடன் டவுன்லோடு செய்ய முடிய வில்லை. ‘Error’ மெசேஜ் காட்டு கிறது. மேலும், மேல் முறையீட்டு ஆவணங்கள் (Appeals) எதையும் தாக்கல் செய்ய முடியவில்லை. பழைய வருமான வரி வலை தளத்தில் இருந்து, வரிதாரர்களின் அனைத்து விவரங்களையும் புதிய வலைதளத்துக்கு இவர்கள் மாற்றவில்லை எனத் தெரிகிறது. இதனால், அந்த விவரங்களை இந்த வலைதளத்திலிருந்து டவுன் லோடு செய்ய முடியவில்லை; பார்க்கவும் முடியவில்லை.

மேலும், இந்தப் புதிய வலை தளத்தில் ITR-5, ITR-6 மற்றும் ITR-7 விண்ணப்பங்கள் இன்னும் வழங்கப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது, டிசம்பர் 31-ம் தேதியை வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி தேதியாகவும், ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கான கடைசி தேதியாக 2022-ம் ஆண்டின் பிப்ரவரி 15-ம் தேதியை கடைசி தேதியாகவும் அறிவித்துவிட்டது மத்திய அரசு. அதற்குள்ளாவது புதிய வலைதளத்தில் உள்ள பிரச்னைகள் சரிசெய்யப்படுமா?” என்கிற கேள்வியுடன் முடித்தார் அவர்.

என்.ஐ கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் சச்சின் மாலி, “இந்தப் புதிய வலைதளம் பயனாளர்களுக்குப் பயன்படுத்த எளிதாக இல்லை. மிகவும் டெக்னிக்கலாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வருமான வரி சட்டதிட்டங்களை நன்கு அறிந்த வர்களால் மட்டுமே இதைக் கையாள முடியும். இதில் இருக்கும் சின்னச் சின்ன விஷயங்களில்கூட சிக்கல் இருப்பதைப் பார்க்கும்போது, டி.சி.எஸ் நிறுவனம் உருவாக்கி, நடைமுறையில் இருந்த பழைய வருமான வரி வலைதளம் எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்றுகிறது. அதில் வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களும் இருந்தது. பிழைகள் உருவாக வில்லை.

2019-லிருந்து இந்த வலைதளத்தை உருவாக்க, இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு அரசாங்கம் அவகாசம் கொடுத்திருந்ததும், அதை அறைகுறையாக தயார் செய்து, அவசர அவசரமாக வெளியிட்டிருப்பது போலவே தெரிகிறது. இந்த வலைதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால், சம்பளதாரர்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தங்களின் ‘Form 16’ படிவத்தில் இருக்கும் விவரங்களை ஒருமுறைக்கு இரண்டு முறை சரிபார்த்த பிறகு, ஐ.டி.ஆர் ஃபைல் செய்வது நல்லது. மேலும், வருமான வரி வலைதளம் குறித்த விவரங்களைப் புரிந்துகொள்ள சிரமம் இருந்தால், வரித் துறை நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது. ஏனெனில், டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, ஐ.டிஆர் ஃபைல் செய்ய வேண்டுமெனில், ‘தாமதக் கட்டணம்’ வசூலிக்கப்படும். வருட வருமானம் ரூ.5 லட்சத்துக்குக் கீழ் எனில், 1,000 ரூபாயும், ரூ.5 லட்சத்துக்கு மேல் எனில், 10,000 ரூபாயும் தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதனால் சம்பள தாரர்கள் முடிந்தவரை கடைசி தேதிக்குள் வரி தாக்கல் செய்துவிடுவது நல்லது” என்றார் தெளிவாக.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களே, உஷார்!