
விழாவின் முதல் படமாக, இயக்குநர் பிஜுக்குமார் தாமோதரனின் `வெயில் மரங்கள்’ மலையாளப் படம் திரையிடப்பட்டது.
தமிழ் ஸ்டூடியோ ஒருங்கிணைத்த ‘சென்னை சுயாதீன திரைப்பட விழா’ (Independent Film Festival Chennai) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் வெகுஜன சினிமாக்களில் பேசப்படாத பல விஷயங்கள் காத்திரமாகவும் ஆழமாகவும் முன்வைக்கப்பட்டன.

சுற்றுச்சூழல்தான் இந்த ஆண்டுக்கான மையக்கருத்து என்பதால் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் துணிகளில் வரையப்பட்ட ஓவியங்கள், பேப்பர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோரணங்கள் விழா அரங்கின் முகப்பை அலங்கரித்தன.
விழாவின் முதல் படமாக, இயக்குநர் பிஜுக்குமார் தாமோதரனின் `வெயில் மரங்கள்’ மலையாளப் படம் திரையிடப்பட்டது. இயற்கைப் பேரிடரால் பாதிப்புக்குள்ளாகி கேரளத்திலிருந்து இமாச்சலப்பிரதேசத்திற்குக் குடிபெயரும் ஒரு தலித் குடும்பத்தைப் பற்றிய படம். திரையிடலுக்குப் பின் ‘இன்றைய மலையாள சினிமா’ என்ற தலைப்பில் `கும்பளங்கி நைட்ஸ்’ படத்தின் இயக்குநர் மது.சி.நாராயணன் உரையாடினார்.

“மலையாள சினிமாக்கள் அனைத்தும் உண்மைக்கு நெருக்கமாகத் தெரிவதற்கு என்ன காரணம்?” என்ற கேள்விக்கு, “மலையாள சினிமா மட்டுமல்ல, எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் கதை எந்த அளவுக்கு நேர்மையாக, நிஜத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறதோ, அந்த அளவுக்குப் படமும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்” என்றார். மறைந்த இயக்குநர் அருண்மொழி நினைவாக 35 வருடங்களுக்கு முன் அவர் எடுத்த ‘நில மோசடி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. குணப்படுத்த முடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு படைப்பாளி மேற்கொள்ளும் ஒரு திட்டமில்லாத பயணத்தைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இயக்குநர் பரத்ராஜின் ‘விண்டோ சீட்’ என்னும் சினிமா பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் படைப்பாக இருந்தது.

சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகள் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. LGBTQIA சார்ந்த கதைகளைப் பேசிய ‘Queer lens’ படைப்பு, பாலினச் சிறுபான்மையினர் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ‘சுயாதீன சினிமாவிற்கான ஒரு வழிகாட்டி’ என்ற தலைப்பில் பேராசிரியர் சிவக்குமார் மோகனன், ‘உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை’ என்ற, இலங்கை இயக்குநர் பிரசன்னா விதானகே, ‘சினிமாவில் பிம்பங்களின் கூட்டமைப்பு’ என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் ஜி.பி.கிருஷ்ணாவின் மாஸ்டர் கிளாஸ் மற்றும் சுற்றுச்சூழல் சினிமாக்கள், அரசியல் சினிமாக்கள் குறித்த குழு உரையாடல், பார்வையாளர்களுக்குப் புதிய வெளிச்சங்களை அளித்தன.
இறுதிப்படமாகத் திரையிடப்பட்ட பிரசன்ன விதானகேவின் ‘Gaadi’ படம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தித்திப்பு, உறையூர் எலி உள்ளிட்ட தமிழ்க் குறும்படங்களும் திரையிடப்பட்டன. இறுதிநாள் நாடகக் கலைஞர் பகுவின் திணைநிலவாசிகள் சார்பில் ‘மா ஸ்கொயர்’ என்ற சமகால அரசியலைப் பிரதிபலிக்கும் நாடகம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சிறந்த படங்களுக்கான விருதுகளை இயக்குநர் மிஷ்கின் வழங்கினார்.

வணிக சினிமாக்களைத் தாண்டி நம்பிக்கையூட்டும் மாற்று சினிமாக்களுக்கான கனவுகள் பார்வையாளர்களின் கண்களில் சுடர்விட்டன.