உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் போரில் இறந்திருக்கின்றனர். உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டாலும், இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிவருகிறது.

இந்த நிலையில, இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா, குறிப்பாக (பிரதமர் நரேந்திர மோடி) முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். உலகளாவிய அரங்கில் இந்தியா மிக முக்கியமானது. இந்தியப் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியா 'உக்ரைனில் போர்' என்று குறிப்பிடாமல் 'உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பு’ என்று கூறிவருவது ஏன்?
சில நேரங்களில் 'இது போருக்கான நேரம் அல்ல' என்று உங்கள் பிரதமரிடமிருந்து சில ஊக்கமளிக்கும் செய்திகள் வருவதை நாங்கள் பார்க்கிறோம். ரஷ்ய எண்ணெயை மலிவு விலையில் வாங்க இந்தியாவுக்கு வாய்ப்பு உக்ரைனியர்களால் கிடைத்திருக்கிறது.

ஆனால், அதற்காக ரஷ்யப் போரால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் எங்கள் மக்கள் இறக்கின்றனர். எங்கள் துன்பத்திலிருந்து நீங்கள் பயனடைகிறீர்கள் என்றால், உங்கள் ஆதரவு, உதவி எல்லாம் எங்களுக்குச் சாதகமாகத்தானே இருக்க வேண்டும்?" என விமர்சித்திருந்தார்.
இதற்கு முன்னர் "ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயில் உக்ரைனின் ரத்தம் இருக்கிறது. இந்தியாவுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயிலும், உக்ரைனிய ரத்தத்தின் பெரும் பகுதி இருக்கிறது" என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.