கட்டுரைகள்
Published:Updated:

இந்தியா - சீனா ராணுவ மோதல்: எல்லையில் நடந்தது என்ன?

இந்தியா - சீனா ராணுவ மோதல்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா - சீனா ராணுவ மோதல்

இந்த மோதலில் நமது ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை. யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.

இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கிடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதல், டெல்லி அரசியலைத் தகிக்கவைத்திருக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கின்றன. சீரியஸாகிக் கொண்டுவரும் இந்த விவகாரத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தும் சூடு தணியவில்லை.

அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதிக்கு அருகே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சீன ராணுவத்தினர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தவும், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் காயமடைந்த நிலையில், பிரச்னை ஏற்பட்ட அந்தப் பகுதியிலிருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியிருக்கின்றன.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இந்தியா-சீன ராணுவ மோதலை பா.ஜ.க அரசு வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும், சீனாவுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘சீனாவின் செயலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று மத்திய அரசு கடுமையான தொனியில் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியது. அதேபோல, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி, ‘‘மோதலுக்கு என்ன காரணம்... துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா அல்லது கல்வான் சம்பவம்போல நடந்ததா... எத்தனை வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்... அவர்களின் நிலை என்ன... இது குறித்து நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் தேவை” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அதன் பிறகுதான், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். ‘‘இந்த மோதலில் நமது ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை. யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை. இந்திய ராணுவத்தினர் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால், சீன ராணுவத்தினர் திரும்பிச் சென்றனர். மோதலுக்குப் பிறகு, டிசம்பர் 11-ம் தேதி இந்திய ராணுவ கமாண்டர், சீன ராணுவ கமாண்டர் இருவரும் இணைந்து கொடி சந்திப்புக் கூட்டம் நடத்தினர். அதில், அமைதியை நிலைநாட்டும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த விவகாரம் சீன வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது” என்றார் ராஜ்நாத் சிங். ஆனாலும், விவாதம் நடத்த வேண்டுமென்ற தங்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்தியா - சீனா ராணுவ மோதல்:
எல்லையில் நடந்தது என்ன?

இந்த விவகாரம் குறித்து, ஐ.நா-வும் பேசியிருக்கிறது. ஐ.நா-வின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளரான ஸ்டீபன் துஜரிக், ‘‘இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை வளரக் கூடாது; எல்லையில் நடக்கும் பதற்றத்தைத் தணிக்க இரு தரப்புக்கும் ஐ.நா அழைப்பு விடுக்கிறது” என்றிருக்கிறார்.

கடந்த 2020-ல், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில், 41 சீன வீரர்கள் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின. எல்லை மீறி நடந்த இந்த மோதல் காரணமாக, அந்தச் சமயம் சீனாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவுவிழாவில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. ஒலிம்பிக் போட்டிகளும் தூர்தர்ஷனில் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை.

‘‘மோதல் குறித்து அவையில் விளக்கமளித்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சிகளின் குரலைக் கேட்க வேண்டும். உண்மை எதுவென்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தியா - சீனா மோதல் குறித்து விவாதியுங்கள்” என எதிர்க்கட்சிகள் கேட்டும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கல்வான் துயரச் சம்பவம்போல, மற்றொரு துயரச் சம்பவம் இந்தியா - சீனா எல்லையில் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதுதான் அனைவரது அக்கறையும்!