Published:Updated:

`அநாவசிய கருத்து!' - உ.பி சம்பவம் தொடர்பாக ஐ.நா அதிகாரி வெளியிட்ட கருத்துக்கு இந்தியா பதில்

ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்
ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்

அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையை விரைவில் கொடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவ உதவிகள், சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூர் ஆகிய கிராமங்களில் இரண்டு பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஐ.நா-வின் இந்திய ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட கருத்தை, அநாவசியமான கருத்து என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

உ.பி-யில் நடந்த சம்பவத்தை அடுத்து எழுந்த எதிர்ப்புக் குரல்கள் பல. அந்த வரிசையில், ஐ.நா-வின் இந்திய ஒருங்கிணைப்பாளர் ரெனடா லோக்-டெஸ்ஸாலியனும் (Renata Lok-Dessallien) கருத்து தெரிவித்துள்ளார். "ஹத்ராஸ் மற்றும் பல்ராம்பூரில் நடந்த சம்பவங்கள், பின்தங்கிய சமூகங்களில் பெண்கள் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு இன்றளவும் ஆளாகின்றனர் என்பதைக் குறிக்கின்றது" என்று கூறியிருந்தார் ரெனடா.

மேலும் அவர், "இந்திய சமூகத்தில் இருக்கும் இதுபோன்ற அவலங்களையும் ஆண்களின் வன்முறை நடத்தைகளையும் சரிசெய்ய வழி செய்ய வேண்டும்" என்றார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனையை விரைவில் கொடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மருத்துவ உதவிகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். சமூகத்தில் இருக்கும் பிரிவினைகள், ஆண்களின் செயல்களால் ஏற்படும் அவலங்கள் ஆகியவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

ஐ.நா தலைமையிடம்/ Indian Flag at United Nations Headquarters
ஐ.நா தலைமையிடம்/ Indian Flag at United Nations Headquarters

இதைத் தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ரெனடா லோக்-டெஸ்ஸாலியனின் கருத்தை அநாவசியமானது என்றும், அவர் இதுபோன்ற சம்பவங்களை இந்தியா கவனத்துடன் எதிர்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பதில் கூறியுள்ளது. விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் எல்லோரும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். அதனால் எல்லோருக்கும் உரிய நீதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு 'நடந்தது பாலியல் வன்கொடுமை அல்ல' என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு