வெள்ளை மாளிகையின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்ப்பெல், ஆஸ்பென் செக்யூரிட்டி ஃபோரம் (Aspen Security Forum) நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். பிறகு வாஷிங்டன்னில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம், ``இந்த 21-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியமான உறவு நாடாக இருக்கிறது. இது பற்றிய உங்களது பார்வை என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கேம்ப்பெல், " கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான ஆழமான, பலமான இத்தகைய இரு தரப்பு உறவை இதுவரை கண்டதில்லை. இந்தியா அமெரிக்காவுக்கு நட்பு நாடல்ல, இன்னொரு பெரிய சக்தி.
அமெரிக்கா, நாட்டு மக்களுடனான உறவை மேலும் பலப்படுத்த, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் மற்ற பிரச்னைகளுக்கான தீர்வுக்காக திறம்பட வேலைசெய்ய, தன்னுடைய திறனை முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால், இந்தியா ஒரு தனித்துவமான தன்மையைக்கொண்டு சிறந்து விளங்குகிறது. இந்தியா, அமெரிக்காவுக்கு நட்பு நாடாக மட்டும் இருக்க முடியாது. இந்தியா சுதந்திரமான, சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும் எனும் ஆசையைக் கொண்டிருக்கிறது. அது இன்னொரு பெரிய சக்தி. ஆனால், எங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஒவ்வோர் அரங்கிலும் வளர்கிறது .
இரு நாட்டு அதிகாரத்துவங்களிலும் பல தடைகள் உள்ளன. பல சவால்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த உறவு, சில குறிக்கோள்களைக்கொண்டது என நம்புகிறேன். விண்வெளி, கல்வி, காலநிலை, தொழில்நுட்பம், ஆகியவற்றை ஒரே திசையில் எடுத்துச் செல்லும் வகையில், ஒன்றாகச் செயல்படுகிறோம்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு, சீனாவின் மீதுள்ள பதற்றத்தால் கட்டமைக்கப்பட்டதல்ல. அது இரு சமூகங்களின் இடையேயான ஆழமான புரிதல். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவுடன் பாதுகாப்பை (Quad) அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது பற்றிப் பேசுகையில், உண்மையில் இந்தியர்கள் இரு தரப்பாக இருந்தனர். ஆனால் பைடன், பிரதமர் மோடியிடம் பலமுறை நேரடி வேண்டுகோள் விடுத்தபோது, இது அவர்களின் நலன்களுக்கு ஏற்றதாக அமையும் என்று முடிவுசெய்தனர்.

கோவிட் -19 தடுப்பூசி விநியோகம், கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் கல்வி ஆகியவற்றில் அமெரிக்கா தனது இந்தியக் கூட்டாளிகளுடன் மிகவும் ஆக்கபூர்வமாகச் செயல்படுகிறது. அதோடு ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீஸ் 2023-ம் ஆண்டில் ஒரு பெரிய குவாட் கூட்டத்துக்கு எங்களை அழைத்திருக்கிறார் எனபதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது தென்கிழக்கு ஆசியா மட்டுமல்லாமல் இந்தோ பசிபிக் பகுதிகளிலும், எங்கள் ஒருங்கிணைப்பை அதிகமாக்கும்.
Quadrilateral Security Dialogue என்பது நான்கு நாடுகளைக்கொண்ட ஒரு பாதுகாப்புக்குழு. இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. நான் இந்த குவாட் ஓர் அதிகாரபூர்வமற்ற இடமாகவே இருக்கும் என்று எண்ணினேன். ஆனால், இது பல தகவல் தொழில்நுட்ப வழிகளைக் கொண்டிருக்கிறது. இது இந்த நான்கு ஜனநாயக நாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், இன்னும் பலமாகவும் ஆழமாகவும் விளங்கும்" என்றார்.